Home தேசிய national tamil டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ மெயின்ஸ் தேர்வு ரத்து – சென்னை தேர்வு மையங்களில் நடந்தது என்ன?

டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ மெயின்ஸ் தேர்வு ரத்து – சென்னை தேர்வு மையங்களில் நடந்தது என்ன?

3
0

SOURCE :- BBC NEWS

டிஎன்பிஎஸ்சி
தொடர்ந்து

பட மூலாதாரம், TNPSC

4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப ‘தொழில்நுட்ப கோளாறு’ காரணமாக சென்னையில் 3 மையங்களில் தேர்வுகள் நடைபெறவில்லை எனவும், தேர்வர்கள் நலனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அரசின் நிர்வாக குளறுபடிகளே இந்த குழப்பத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

டிஎன்பிஎஸ்சி கூறியது என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், “சென்னையில் இன்று 08.022026 நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-II (மற்றும்) IIA பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு(Hall Ticket) விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) மூலம் தகவல் அளிக்கப்படும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கூறியது என்ன?

மையங்களில் என்ன குழப்பம் ஏற்பட்டது என்பது குறித்து தேர்வர்கள் பிபிசி தமிழிடம் பேசிய போது, “காவல்துறையினர் வந்த பின்னர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்” என்று கூறினர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய தேர்வர் ஒருவர், “எங்களுக்கு அரும்பாக்கத்தில்தான் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. பொதுவாக 9 மணிக்கு தேர்வர்கள் அனைவரும் தேர்வு மையத்திற்குள் சென்றுவிட வேண்டும். 9.15க்கு முன்கதவை அடைத்து விடுவார்கள். பின்னர் 9.30க்கு சரியாக தேர்வு தொடங்கிவிடும். தேர்வு மையத்திற்குள் நுழைந்தவுடனேயே அங்கு எந்தெந்த வரிசை எண்கள் எந்தெந்த அறைகளில் உள்ளது என்று தெளிவாக அறிக்கைகள் ஒட்டப்பட்டிருக்கும். அதேபோல தேர்வு கட்டுப்பாட்டாளர்களும் உதவுவார்கள். ஆனால் இன்று உள்ளே இரண்டு இடங்களில் மட்டுமே தேர்வறை குறித்தான அறிக்கை ஒட்டப்பட்டிருந்தது. வழிகாட்டுவதற்கும் யாரும் இல்லை.” என்று கூறினார்.

தங்களுக்கு நுழைவுச் சீட்டில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட போதும், மையத்தில் தங்கள் எண் குறிப்பிடப்படவில்லை என கூறும் அந்த தேர்வர், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதை தான் உணர்ந்ததாக கூறுகிறார். தன்னைப் போன்றே வேறு சில தேர்வர்களுக்கும் தேர்வு எழுத முடியாத நிலையில் இருந்ததை குறிப்பிட்டார்.

மேலும் “நாங்கள் அங்கிருந்து வெளியேறி சாலை மறியலில் ஈடுபடலாம் என முடிவெடுத்தபோது காவல்துறை வாகனம் உள்ளே வந்தது. நிறைய காவலர்களும் தேர்வு மையத்திற்கு வந்தனர். அந்த மையத்தில் எண்கள் ஒதுக்கப்பட்டிருந்தவர்கள் மட்டும் உள்ளே தேர்வெழுத தயாராக அவரவர் அறையில் இருந்தனர். ஆனால் மைக்கில் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனால் நாங்கள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டோம்.” என்றார்.

காவல் துறையினர் அதிகளவில் இருந்ததாக கூறும் அந்த தேர்வர், கூட்டமாக இருந்ததால் உள்ளே யார் வந்தார்கள் , யார் மைக்கில் அறிவித்தார்கள் என்பதை கூட உணர முடியவில்லை என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் , ” டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.” என கூறியுள்ளார்.

“அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன” என்று கூறிய அவர்,

“இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க அரசை வலியுறுத்துகிறேன்,” என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதேபோல இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், ” டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில் அரசின் நிர்வாக குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, எனப் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு ,” தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அலைக்கழித்து, தவிக்க வைத்துள்ள TNPSC நிர்வாகத்திற்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனவும் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU