Home Latest news tamil சமீபத்திய செய்தி சென்னையில் ஏ.ஐ மூலம் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது –...

சென்னையில் ஏ.ஐ மூலம் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது – முக்கிய செய்தி

4
0

SOURCE :- BBC NEWS

ஏ.ஐ., ஏ.ஐ. செயலி, புகைப்படம், சென்னை, குற்றம், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

19 நிமிடங்களுக்கு முன்னர்

மே 24, இன்றைய தமிழ் நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திககளை இங்கே காணலாம்.

ஏ.ஐ. தொழில்நுட்ப செயலி மூலமாக ஆபாச படத்தை உருவாக்கிய சென்னையைச் சேர்ந்த நபரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியின் படி, ஏ.ஐ. தொழில்நுட்ப செயலி மூலம் ஆபாச வீடியோ ஒன்றை தயாரித்து மணிப்பூர் இளம் பெண்ணை மிரட்டிய பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த 28 வயதான ஜோ ரிச்சர்ட் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்து தமிழ் திசை செய்தியின் படி, “மணிப்பூரைச் சேர்ந்த 19 வயது பெண் சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “கடந்தாண்டு முதல் சென்னை சூளைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வீட்டுக்கு செல்ல தினமும் பைக் டாக்ஸியை பயன்படுத்தி வந்தேன். அந்த டாக்ஸியை வியாசர்பாடி , சாலைமா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த ஜோ ரிச்சர்ட் என்பவர் ஓட்டி வந்தார். நாளடைவில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் என்னுடன் தனிமையில் இருக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் நான் சம்மதிக்காததால், ஏ.ஐ. தொழில்நுட்ப செயலி மூலம் எனது முகத்தையும் அவரது முகத்தையும் ஒன்றிணைத்து நாங்கள் இருவரும் தனிமையில் இருப்பது போன்று போலியான ஆபாச வீடியோவை தயார் செய்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் இருந்து அந்த ஆபாச வீடியோவை நீக்க வேண்டும்,” என தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து, சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்க, காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவின் படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர் காவல்துறையினர்.

விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜோ ரிச்சர்ட் மற்றும் புகார் அளித்த அந்த இளம்பெண் 8 மாதங்களாக நண்பர்களாக பழகியுள்ளனர். இந்த சூழலில் அந்த பெண்ணுடன் தனிமையில் இருக்க விரும்பியதாக ரிச்சர்ட் கூறியுள்ளார். ஆனால் அதை அப்பெண் நிராகரித்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஏ.ஐ. தொழில்நுட்ப செயலியைப் பயன்படுத்தி போலி ஆபாச வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு, அந்த பெண்ணை மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ரிச்சர்ட்டை சைபர் கிரைம் காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரின் செல்ஃபோன் மற்றும் லேப்டாப் போன்றவ பறிமுதல் செய்யப்பட்டது,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரவி மோகன், ஆர்த்தி சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிடத் தடை

“தங்களுக்கு இடையிலான பிரச்னை பற்றி அறிக்கை வெளியிட நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது,” என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாகத் தெரிவித்து விவாகரத்து கோரியுள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று ஆர்த்தி அவருடைய தரப்பில் இருந்து மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆர்த்தி ரவி மோகன் விவாகரத்து, முக்கிய செய்திகள், உயர் நீதிமன்றம் தடை,

பட மூலாதாரம், Getty Images

“இதற்கிடையில் ரவி மோகன், பாடகி ஒருவருடன் அண்மையில் திருமண நிகழ்வில் பங்கேற்றதைத் தொடர்ந்து, ஆர்த்தி நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதற்கு பதிலாக ரவி மோகனும் பதில் அறிக்கையை வெளியிட்டார். இவ்வாறு இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு ஒருவர் மீது ஒருவரு குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க அவரின் முன்னாள் மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்தார் ரவி மோகன்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு வெள்ளிக்கிழமை (மே 23) அன்று விசாரணைக்கு வந்தது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துகளையும் தெரிவிக்க மாட்டோம் என்று கூறினார்கள்.

மேலும் இரு தரப்பும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கிவிடுவதாகவும் தெரிவித்தனர்,” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

“மேலும் இருவர் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இரு தரப்பினரும் அவதூறு கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும், எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும் ஏற்கனவே பொதுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துகளை நீக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தினார் நீதிபதி. அவர்கள் இருவர் குறித்தும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடவும், விவாதிக்கவும் தடை விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC