Home தேசிய national tamil “சுனாமியை விட பெருஞ்சேதம்” – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இரான் போர் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

“சுனாமியை விட பெருஞ்சேதம்” – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இரான் போர் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

19
0

SOURCE :- BBC NEWS

இரான், இந்தியா, வெள்ளம், மத்திய கிழக்கு, இலங்கை

பட மூலாதாரம், AFP via Getty Images

வெள்ளம் தங்கள் கிராமத்தை நாசமாக்கிய பிறகு, இந்திராணி ரவிச்சந்திரனும் அவரது குடும்பத்தினரும், அவர்கள் வீட்டில் இன்னும் சேதமடையாமல் இருக்கும் ஒரு பகுதிக்கு திரும்பி வந்துள்ளனர்.

கடந்த நவம்பரில் இலங்கையை பேரழிவுக்குள்ளாக்கிய தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பலரில் அவர்களும் அடங்குவர்.

புயலின் அளவும், அது ஏற்படுத்திய அழிவும் முன்னெப்போதும் இல்லாதவை.

வெறும் மூன்று நாட்களில், இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளின் சில பகுதிகளில் 500 மி.மீ வரை மழை பெய்தது. இது ஏறக்குறைய இரண்டு மாதங்களின் சராசரி மழைக்குச் சமம். இதனால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் முழு குடியிருப்புகளையும் அடித்துச் சென்றன.

இதனால் ஏற்பட்ட மனித இழப்பு பேரழிவை ஏற்படுத்தியது – 643 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 173 பேர் காணாமல் போயினர்.

கண்டி மாவட்டத்தின் குடுகல்ஹேனா கிராமத்தில், சீறிப்பாயும் வெள்ள நீர் தனது வீட்டின் சில பகுதிகளை அடித்துச் சென்றபோது, இருளில் தானும் தனது குடும்பத்தினரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி ஓடினோம் என்பதை இந்திராணி விவரிக்கிறார்.

தண்ணீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. நாங்கள் அவசரமாக வெளியே ஓடினோம், வீட்டிலிருந்து எதையும் எடுக்கக்கூட எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

“இருள் சூழ்ந்திருந்தது, மழை கொட்டிப் பெய்தது, சரிவுகள் வழுக்கலாக இருந்தன, நாங்கள் ஓடும்போது விஷமுள்ள உயிரினங்கள் மீது மிதித்துவிடுவோமோ என்றும் பயந்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பினோம்.”

“கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற கொடூரமான வெள்ளத்தை நாங்கள் கண்டது இதுவே முதல் முறை,” என்று இந்திராணியின் கணவர் ரவிச்சந்திரன் மேலும் கூறினார்.

இரான், இந்தியா, வெள்ளம், மத்திய கிழக்கு, இலங்கை

பட மூலாதாரம், BBC/ Ranjan Arun Prasad

வரலாற்றில் பதிவானதிலேயே மிகவும் பேரழிவை ஏற்படுத்திய இயற்கை சீற்றங்களில் ஒன்றான, 2004-ஆம் ஆண்டு சுனாமியை விடவும், தற்போதைய வெள்ளப்பெருக்கு இலங்கையில் அதிகப்படியான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“2004-ஆம் ஆண்டு சுனாமியுடன் ஒப்பிடுகையில், மனித உயிர்களின் இழப்பு இம்முறை அந்த அளவுக்கு அதிகமாக இல்லை. ஆனால், உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தைப் பொறுத்தவரை, சுனாமியை விடவும் ‘தித்வா’ (Ditwah) புயல் இன்னும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,” என்று லண்டனில் உள்ள ஓடிஐ குளோபல் இன்ஸ்டிடியூட்டின் கவுரவ மூத்த ஆய்வாளர் டாக்டர் கணேஷன் விக்னராஜா, பிபிசி-யிடம் தெரிவித்தார்.

மூன்று முனை அதிர்ச்சி

2022 முதல் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியாலும் , இந்தப் பேரழிவுகரமான வெள்ளப்பெருக்குகளாலும், தத்தளித்துக் கொண்டிருக்கிறது இலங்கை. இரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரும், உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கமும், இலங்கைக்கு இதைவிட மோசமான ஒரு நேரத்தில் வந்திருக்க முடியாது.

ஒரு காலத்தில் தனது பொருளாதார வளர்ச்சிக்காகவும், மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் உயர் மதிப்பீடுகளுக்காகவும் கொண்டாடப்பட்ட இந்த எழில்மிகு தெற்காசியத் தீவு, மீண்டும் ஒருமுறை மிக மோசமான நெருக்கடியில் சிக்கியுள்ளது.

“இது ஒரு மும்முனை அதிர்ச்சி. முதலில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கு, இப்போது விண்ணை முட்டும் எரிபொருள் விலைகள், பின்னர் சில பகுதிகளில் வரவிருக்கும் வறட்சி,” என்று விக்னராஜா கூறினார்.

கடந்த சில வாரங்களில் மட்டும், குறைந்து வரும் வளங்களை ஈடுசெய்வதற்காக, அரசாங்கம் எரிபொருளைப் பங்கீடு செய்து விலைகளை உயர்த்தவும், நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தவும், மின்சாரக் கட்டணத்தை 40% வரை அதிகரிக்கவும், தண்ணீர் மற்றும் மின்சாரத் துண்டிப்புகளை அமல்படுத்தவும் நேரிட்டது.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு பற்றாக்குறையால் நாடு முழுவதும் மக்கள் பீதியுடன் பொருட்களை வாங்குகின்றனர். இது, 2022-ஆம் ஆண்டில் அந்நியச் செலாவணி தீர்ந்து, அந்நியக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை நினைவூட்டுகிறது. அதன் விளைவாக, சமையல் எரிவாயு, மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குப் பற்றாக்குறையும், 13 மணி நேரம் வரை நீடித்த கடுமையான மின்வெட்டும் ஏற்பட்டது.

அதன் விளைவாக ஏற்பட்ட பரவலான போராட்டங்கள், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்தன.

தற்போது, நாடு மற்றொரு பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க முடியாமல் போகலாம் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.

பண நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசாங்கம், பொருளாதாரத்தை மீண்டும் சீரமைக்க மின்சாரத்திற்கான மானியங்களை நீக்குவது மற்றும் வருமான வரி விகிதங்களை 36% வரை உயர்த்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

இரான், இந்தியா, வெள்ளம், மத்திய கிழக்கு, இலங்கை

பட மூலாதாரம், AFP via Getty Images

தித்வா புயல் தாக்குதல் நடத்தும் வரை, நிலைமை சீரடைந்து வருவதாகத் தோன்றியது.

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய புயல்களில் ஒன்றான இது, 25 மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களையும் 500,000 குடும்பங்களையும் கடுமையாகப் பாதித்து, வாழ்வாதாரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பரந்த பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற முகமைகள் மொத்த சேதத்தை சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடுகின்றன – இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% க்கு சமமாகும்.

ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க இதை நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதாரப் பேரழிவு என்று குறிப்பிட்டார். பேரழிவுக்குப் பிறகு, தங்கள் அன்புக்குரியவர்கள், சொத்துக்கள் மற்றும் வணிகங்களை இழந்தவர்களுக்கு பரந்த அளவிலான நிதியுதவியை அவர் அறிவித்தார்.

இன்னும் நிற்கின்ற வீட்டின் ஒரு பகுதியை பழுதுபார்ப்பதற்காக அரசாங்கம் உறுதியளித்த 50,000 ரூபாய் ($325) உதவியைப் பெற்றதாக இந்திராணியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். சிறு குழந்தைகளைக் கொண்டவர்களுக்கு கூடுதல் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

முற்றிலுமாக அழிக்கப்பட்ட வீடுகளுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் வரை வழங்குவதாகவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என்றும் அது அறிவித்துள்ளது.

இருப்பினும், புயல் தாக்கி பல மாதங்கள் ஆன பிறகும், 1,65,000-க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர். தங்கள் உறவினர்கள், அடைக்கலம் கொடுத்த இடங்களில் அல்லது தற்காலிக முகாம்களில் வசித்து, அரசாங்கம் மாற்று வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் வழங்கும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இப்போது, இரான் போரினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அவர்களின் எதிர்காலத்தை இன்னும் இருண்டதாக ஆக்கியுள்ளது.

கடல் கடந்து உதவிய இந்தியா

புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுக்காகத் தேவைப்படும் நிதியில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே அரசாங்கம் பெற்றுள்ளது – மொத்தமாக சுமார் 750 மில்லியன் டாலர்.

2004 சுனாமியின் தாக்கத்தை இந்தப் புயலின் பேரழிவு விஞ்சியிருந்தபோதிலும், சர்வதேச உதவி உடனடியாகக் கிடைக்கவில்லை. 2004-ல், அந்தப் பேரழிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த நன்கொடையாளர்கள், பில்லியன் கணக்கான டாலர் உதவியை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் இந்த முறை, கிடைத்த பதில் மந்தமாக இருந்தது.

இலங்கையின் மிக நெருங்கிய அண்டை நாடான இந்தியா மட்டுமே உடனடியாகப் பதிலளித்த ஒரே நாடாகும். அது, ‘கடல் கடந்த நண்பன்’ என்று இந்தியில் பொருள்படும் ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் ஒரு விரைவான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணப் பணியைத் தொடங்கியது.

நிவாரணப் பணிகளுக்காக, ஒரு விமானம் தாங்கி கப்பல் உட்பட இரண்டு போர்க்கப்பல்களை அது அனுப்பியது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பலமுறை பறந்து, வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கான மக்களை மீட்டன.

இதற்கு மாறாக, இலங்கையின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவரும், நீண்டகால கூட்டாளியுமான சீனா, 2 மில்லியன் டாலருக்கும் குறைவான உதவியையும் சுமார் 100 டன் பொருட்களையும் வழங்கி, மிகக் குறைந்த அளவிலான ஆதரவையே அளித்தது.

ஜனவரியில், தித்வா புயலால் சேதமடைந்த முக்கிய உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவுமாறு இலங்கை அரசாங்கம் பெய்ஜிங்கிடம் முறைப்படி கோரிக்கை விடுத்தது.

இரான், இந்தியா, வெள்ளம், மத்திய கிழக்கு, இலங்கை போது

பட மூலாதாரம், AFP via Getty Images

வீடுகள் பகுதியளவு சேதமடைந்த பெரும்பாலான மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு, அவர்கள் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், புயலில் தங்கள் வீடுகள் அல்லது வணிகங்களை முழுமையாக இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அது ஒப்புக்கொள்கிறது.

“புதிய வீடுகளைக் கட்டுவதற்கு ஏற்ற மற்றும் பாதுகாப்பான நிலத்தை அடையாளம் காணும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். பகுதிகள் அடையாளம் காணப்பட்டவுடன், அரசாங்கம் உதவியை வழங்கும்,” என்று பேரிடர் மேலாண்மைப் பிரிவின் மூத்த அதிகாரியான கே.ஜி. தர்மதிலகே கூறினார்.

நிவாரணப் பணிகளை அவசர அவசரமாக மேற்கொள்வதை விட, “சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்புவதே” முன்னுரிமை என்றும், அதன் மூலம் புதிய வீடுகளும் வணிகங்களும் எதிர்காலப் பேரிடர்களைத் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கும் என்றும் அதிகாரிகள் வாதிடுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த தர்மதிலகே, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் 80%-க்கும் அதிகமானோர் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கு ஏற்கெனவே நிதியுதவி பெற்றுவிட்டதாக வலியுறுத்தினார்.

இலங்கையின் தற்போதைய அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 7 பில்லியன் டாலராக உள்ளது. திறமையான நிதி மேலாண்மையின் மூலம் வெள்ள நெருக்கடியையும் எரிபொருள் விலை உயர்வையும் அரசாங்கம் சமாளித்துவிடும் என்று விக்னராஜா போன்ற பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

“ஆனால், மத்திய கிழக்கு நெருக்கடியின் விளைவுகள் இன்னும் சில காலம் தொடர்ந்தால், அவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள்,” என்கிறார் அவர்.

ஏற்கெனவே நிதி நிலைமை நெருக்கடியில் உள்ள நிலையில், வளைகுடாப் போரின் காரணமாக அந்நியச் செலாவணி வரவை இழந்துவிடுவோமோ என்றும் அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு, இலங்கை வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களிடமிருந்து, முக்கியமாக வளைகுடா நாடுகளிலிருந்து, சுமார் 7 பில்லியன் டாலர் பணம் அனுப்பப்பட்டது. அந்த நாடுகளில் இதுவரை பெரிய அளவிலான ஆட்குறைப்புகள் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், இலங்கையர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

வளைகுடாப் போரினால் ஏற்படும் மாபெரும் புனரமைப்புப் பணிகளையும் பொருளாதாரச் சவால்களையும் அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதே, இறுதியில் ஜனாதிபதி திஸா நாயக்கவின் தலைமைக்கான ஒரு தீர்க்கமான சோதனையாக அமையக்கூடும்.

கூடுதல் தகவல்கள்: ரஞ்சன் அருண் பிரசாத், பிபிசி தமிழ் சேவை, கண்டி

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU