Home தேசிய national tamil “சரியாக சாப்பிட்டு, தூங்கி ஒரு மாதம் ஆகிறது” – இரான் மக்கள் பிபிசி செய்தியாளரிடம் பகிர்ந்து...

“சரியாக சாப்பிட்டு, தூங்கி ஒரு மாதம் ஆகிறது” – இரான் மக்கள் பிபிசி செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்டது என்ன?

5
0

SOURCE :- BBC NEWS

பிபிசியின் தலைமை சர்வதேச செய்தியாளர் லைஸ் டூசெட் இரானிலிருந்து அறிக்கை அளிக்கிறார்.

செவ்வாய்க்கிழமையன்று டெஹ்ரான் முழுவதும் கடிகாரங்களில் மணி ஒன்பதை எட்டியபோது, இரானிய புரட்சியின் 47வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் இரவு வானம் ஒலியால் நிறைந்தது.

எங்கள் ஹோட்டல் பால்கனியில் இருந்து கவனித்தபோது, “கடவுள் மிகப் பெரியவர்” என்ற முழக்கங்கள் கூரைகளில் இருந்து, ஜன்னல்களில் இருந்து முழங்கின. வானவேடிக்கைகள் கண்ணைக் கவரும் வண்ணங்களின் கலைக்காட்சியாக ஜொலித்தன.

ஆனால் இந்த ஆண்டு, இந்த வருடாந்திர ஒளி மற்றும் ஒலி வெடிப்பில், ஒரு முரணான குரல் கேட்டது.

நகரத்தின் இருளுக்குள் எங்கோ ஒரு பாதுகாப்பான இடத்திலிருந்து “சர்வாதிகாரிக்கு மரணம்” என்ற முழக்கமும் எழுவதை எங்களால் கேட்க முடிந்தது.

கடந்த மாதம் டெஹ்ரானின் சில தெருக்கள், சதுக்கங்கள், நகரங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநகரங்கள் மற்றும் நகரங்களில் வீசிய அசாதாரணமான போராட்ட அலையின் வியத்தகு எதிரொலி இது. அந்தப் போராட்டங்கள் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையான பலப் பிரயோகத்தால் ஒடுக்கப்பட்டன; பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இரானின் டெஹ்ரானில் (11 பிப்ரவரி 2026) இஸ்லாமியப் புரட்சியின் 47-வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு இரானிய நபர் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணைக்கு அருகில் பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களை ஏந்தியிருக்கிறார்.

பட மூலாதாரம், EPA

வரலாற்றிலேயே மிக நீண்ட டிஜிட்டல் முடக்கங்களில் ஒன்றாக விவரிக்கப்படும் தங்களது முழுமையான இணைய முடக்கத்தை இரான் அதிகாரிகள் மெதுவாக நீக்கி, சிறிய அளவிலான சர்வதேச ஊடகங்களை படிப்படியாகத் திரும்ப அனுமதித்திருக்கும் நிலையில் நாங்கள் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

கடந்த ஜூன் மாதம், இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களும் இடம்பெற்ற இஸ்ரேலுடனான 12 நாள் போரின் இறுதியில் நாங்கள் வந்திருந்தபோது இருந்த மனநிலைக்கும், இப்போதைய மனநிலைக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது.

அந்த கொடிய அழிவு டெஹ்ரானை விட்டு பாதுகாப்பான நகரங்களுக்குத் தப்பிச் சென்றவர்கள் உள்படப் பல குடியிருப்புவாசிகளை அந்தக் கடுமையான தாக்குதல்கள் உலுக்கியிருந்ததுடன் நாட்டின் மீதான அவர்களின் பற்றுதலை உறுதிப்படுத்தியிருந்தது.

இப்போது, அழகான பனி படர்ந்த தமாவந்த் மலையின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் பரந்து விரிந்த மாநகரம், “விடியலின் பத்து நாட்கள்” என்று அழைக்கப்படும் நிகழ்வைக் குறிக்கும் வகையில் கொடிகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1979இல், இந்தக் காலம் ஷாவை (shah) பதவி நீக்கம் செய்த, இரானை முற்றிலும் மாற்றியமைத்த மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளுக்கு இடையே ஒரு தீவிரமான “எதிர்ப்பு அச்சினை” உருவாக்கிய ஒரு வரலாற்றுப் புரட்சியைத் தொடங்கி வைத்தது; இது நீண்ட காலமாக அதன் எதிரிகளால் கண்டிக்கப்பட்டும் எதிர்கொள்ளப்பட்டும் வருகிறது.

இந்த ஆண்டு, மக்களின் பாக்கெட்டுகளை பாதிக்கும் அன்றாடப் பொருட்களின் விலை உயர்வு முதல் கடந்த மாதம் தெருக்களில் ஒலித்த மதகுருமார்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அழைப்புகள் வரையிலான எல்லாவற்றின் மீதான அதிருப்தி மற்றும் எதிர்ப்பால் இந்த நாட்கள் மங்கிப் போயுள்ளன.

ராஜதந்திரம் தோல்வியுற்றால் மேலும் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையால் அதிகரித்துள்ள இந்த உள்நாட்டு அழுத்தங்கள், இப்போது இரானின் முதிர்ந்த மதகுருமார்களின் ஆட்சிக்கு ஈடு இணையற்ற சவாலாக உள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

புதன்கிழமை, இந்த ஆண்டு விழா நிகழ்வுகளின் கடைசி நாளில், தலைநகரம் மற்றும் பிற முக்கிய நகரங்களின் தெருக்களில் அரசாங்கத்தின் மிகவும் விசுவாசமான தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர் – இது போராட்டங்களுக்கு ஒரு அரசியல் பதிலாகும்.

இந்த விடுமுறை நாளில் குடும்பங்கள் ஒரு வெப்பமான குளிர்கால சூரிய ஒளியில் அணிவகுத்துச் சென்றபோது ஒரு திருவிழா சூழல் நிலவியது.

குழந்தைகளும் பெரியவர்களும் இரானிய கொடிகளையும் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயியின் புகைப்படங்களையும் அசைத்து, “அமெரிக்காவுக்கு மரணம்” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்” என்ற தங்களின் முழக்கங்களை எழுப்பினர்.

“எனக்கும் அனைத்து இரானியர்களுக்கும், புரட்சி என்பது வாழ்க்கையின் மறுமலர்ச்சியைக் குறிக்கிறது; நமது சமூகம் மற்றும் நாட்டிற்கும், ஏன் இஸ்லாமிய உலகிற்கும், முழு உலகிற்கும்கூட புதிய உயிர் ஊட்டப்பட்டதாக நான் நம்புகிறேன்,” என்று இந்தப் பேரணியில் பங்கேற்கும் பல பெண்களைப் போலவே நீண்ட கருப்பு நிற ஹிஜாப் அணிந்திருந்த ஓர் இளம் பெண் மகிழ்ச்சியுடன் கூறினார்.

போராட்டங்களைப் பற்றி நான் அவரிடம் கேட்டபோது, “பொருளாதாரச் சூழ்நிலையில் அதிருப்தி அடைந்த மக்கள் போராடினார்கள், அவர்களின் போராட்டம் நியாயமானது,” என்று கூறினார். ஆனால், “கலவரம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் நமது எல்லைகளுக்கு அப்பால் இருந்து உருவான எண்ணங்களைக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் இரானின் டெஹ்ரானில் உள்ள ஆசாதி சதுக்கத்தில் (11 பிப்ரவரி 2026) ஒரு பேரணியில் உரையாற்றுகிறார்.

பட மூலாதாரம், Iranian Presidency/WANA/Handout via REUTERS

டெஹ்ரானின் அடையாளமான ஆசாதி சதுக்கத்தில் உணர்ச்சிவசப்பட்ட ஒரு மாபெரும் கூட்டத்திற்கு முன்னால் ஒரு உயர்ந்த மேடையில் இருந்து பேசிய இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அந்தப் பார்வையைத் தானும் பிரதிபலித்தார்.

அவர் இரானின் விரோதிகளின் (இது பொதுவாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான குறியீட்டுச் சொற்கள்) “தீயநோக்கம் கொண்ட பிரசாரம்” கிளர்ச்சியைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டினார், அதை அவர் கலவரங்கள் என்று குறிப்பிட்டார்.

ஆனால் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சமரசமான போக்கைக் கடைபிடிக்க முயன்ற ஒரு சீர்திருத்தவாதியாகக் கருதப்படும் இந்த உயர் அதிகாரி, அரசாங்கத்தின் குறைபாடுகளுக்காகவும் மன்னிப்பு கேட்டார். “மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

பிரச்னைகளைச் சரிசெய்ய தாங்கள் “சாத்தியமான அனைத்து முயற்சிகளையும்” எடுத்து வருவதாக அவர் கூறினார் – அவரைப் பொறுத்தவரை, இது மிகப்பெரிய நெருக்கடியாக மாறிய டிசம்பர் 28 அன்று கடைக்காரர்களின் வேலைநிறுத்தத்தைத் தூண்டிய நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வை குறிக்கிறது.

இரானின் மதகுரு அமைப்பில், உண்மையான அதிகாரம் 86 வயதான அதி உயர் தலைவரிடமே உள்ளது. அவரும் நீதித்துறையின் தலைவரும் பயங்கரவாதிகள் மற்றும் கலகக்காரர்கள் என்று முத்திரை குத்தப்படுபவர்களுக்கு எந்த கருணையும் காட்டப்படாது என்று சபதம் செய்துள்ளனர்.

இரானின் டெஹ்ரானில் உள்ள ஆசாதி சதுக்கத்தில், இஸ்லாமியப் புரட்சியின் 47-வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு இரானியப் பெண் அயதுல்லா அலி காமனெயியின் புகைப்படத்தை ஏந்தியிருக்கிறார் (11 பிப்ரவரி 2026).

பட மூலாதாரம், EPA

முந்தைய நாள், டெஹ்ரானில் எங்களது முதல் நாளில், இந்த நகரத்தின் மனநிலையை அறிய ஒரு தூறல் நாளில் எங்கெலாப் (புரட்சி) சதுக்கத்திற்குச் சென்றோம்.

இந்தப் பரபரப்பான ரவுண்டானாவை சுற்றியுள்ள கட்டட முகப்புகளில் புன்னகைக்கும் கூட்டத்தின் பிரகாசமான வண்ணங்கள் கொண்ட வானளாவிய சுவரோவியங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆனால் இந்த இடத்தின் மேல் ஒரு இருண்ட மேகம் சூழ்ந்திருப்பது போலத் தோன்றியது.

தங்கள் அன்றாட வேலைகளில் மும்முரமாக இருந்த சில இரானியர்கள் பேச மறுத்துவிட்டனர். இந்த நேரத்தில் ஒரு செய்தியாளரிடம் பேசுவது மிகவும் “ஆபத்தானது” என்று ஒரு பெண் எங்களிடம் கூறினார்.

ஆனால் இன்னும் பலர், “உங்கள் மனதில் உள்ள முக்கிய கவலை என்ன?” என்ற மிக வெளிப்படையான கேள்வியைக் கேட்டபோது, தங்களின் கோபத்தையும் வலியையும் கொட்டுவதற்கு முன்னால் ஒரு நொடியே தயங்கினர்.

இரானின் டெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தில் மக்கள் பொருட்கள் வாங்குகிறார்கள் (9 பிப்ரவரி 2026).

பட மூலாதாரம், Anadolu via Getty Images

இங்கு நடந்த அனைத்திற்கும் பிறகு உணர்ச்சிகள் இன்னும் ரணமாகவும் உணரக் கூடியதாகவும் இருந்தன.

ரஹா உடனடியாக கண்ணீர் விட்டு அழுதார். “நான் சரியாகச் சாப்பிட்டு அல்லது தூங்கி இப்போது ஒரு மாதம் ஆகிறது. என்னைப் பாருங்கள், எனக்கு வயது 32 தான், நான் ஏன் இவ்வளவு சிதைந்து மனச் சோர்வடைந்து காணப்பட வேண்டும்?” என்று அவர் அழுதார்.

“கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன், அவர்கள் கலகக்காரர்கள் என்று அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். ஆனால் மக்கள் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை. அவர்களின் பாவம் என்ன?” என்று அவர் கேட்டார்.

கண்ணாடி அணிந்திருந்த 20 வயது டோரி, சில பெண்களைப் போலவே இப்போது கட்டாய ஹிஜாபை அணிவதில்லை, அவர் “கடந்த மாதம் எப்படி பயங்கரமாக இருந்தது” என்பதைப் பற்றி பேசினார்.

“இணைய இணைப்புகள் மீண்டும் கொடுக்கப்பட்ட பிறகு, மக்கள் தாக்குதலுக்குள்ளான பல பயங்கரமான வீடியோக்களையும் புகைப்படங்களையும் நாங்கள் பார்த்தோம்; அவை எங்களை அழ வைத்தன,” என்று அவர் விளக்கினார்.

இரானின் டெஹ்ரானில் ஒரு தெருவில் இரானியர்கள் போராடுகிறார்கள் (8 ஜனவரி 2026).

பட மூலாதாரம், WANA via REUTERS

தனது கருத்தை அழுத்தமாக முன்வைத்துப் பேசிய ரோஜா-பிங்க் நிறத்திலான ஹிஜாப் அணிந்த 62 வயது அக்தருக்கு இரண்டு கவலைகள் இருந்தன. “எத்தனையோ இளைஞர்கள் கொல்லப்பட்டனர்,” என்று அவர் முதலில் வருந்தினார். பின்னர் தங்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகரித்து வரும் கஷ்டங்கள் குறித்துப் பல இரானியர்களிடம் இருந்து நாங்கள் கேட்கும் வேதனையை அவர் வெளிப்படுத்தினார்.

“சமையல் எண்ணெயின் விலை நான்கு மடங்கு உயர்ந்துவிட்டது; இறைச்சியும் கோழியும் அதே நிலைதான். வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

நாங்கள் பேசிய பலரிடம், இப்போது தலைவர்களுக்கு அவர்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்று கேட்டபோது, “அவர்கள் எங்கள் குரல்களைக் கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று பதிலளித்தனர்.

அவருக்கு அருகில் நின்றிருந்த அவரது 19 வயது நண்பர் அமீர், வெளிப்படையாகவே வருத்தத்தில் இருந்தார். “எனக்கு எங்களது அடிப்படைத் தேவைகளும் சுதந்திரமும் மட்டுமே வேண்டும்.”

ஆனால் நீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறையால் அதிகரித்துள்ள பொருளாதாரத் துயரத்தைத் தணிப்பதுகூட, பல தசாப்தங்களாக நிலவும் சர்வதேசத் தடைகள், இரானின் அணுசக்தி அபிலாஷைகள் மீதான சந்தேகம், அத்துடன் நாள்பட்ட ஊழல் மற்றும் தவறான மேலாண்மை ஆகியவற்றில் சிக்கியுள்ளது.

இரானிய இஸ்லாமியக் குடியரசு இப்போது ஒரு சந்திப்பில் நிற்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த கிளர்ச்சிக்குப் பிறகு அதன் மிக முக்கியமான சோதனைகளை எதிர்கொள்கிறது.

(பிபிசியின் தலைமை சர்வதேச செய்தியாளர் லைஸ் டூசெட், தனது செய்திகள் எதையும் பிபிசியின் பாரசீக சேவையில் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் டெஹ்ரானில் இருந்து தகவல்களை அளிக்கிறார். இந்தக் கட்டுப்பாடுகள் இரானில் இயங்கும் அனைத்து சர்வதேச ஊடக அமைப்புகளுக்கும் பொருந்தும்.)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU