SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட்டின் டெஸ்ட் வடிவத்தில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, இந்திய கிரிக்கெட் உலகை மட்டுமல்ல, விளையாட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் கேப்டன் ரோஹித் சர்மா ராஜினாமா செய்த நிலையில், விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுக்கிறது.
அதுவும், ஜூன் மாதம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு இந்தியாவுக்கு இரட்டை அடியாகவே பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மாவைப் போலவே, விராட் கோலியும் இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் 270 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர் விராட் கோலி.
இந்த அறிவிப்பால் தனது ரசிகர்களின் மனம் வருந்தும் என்பது தெரிந்தாலும், “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவது என்பது எனக்கு எளிதானது அல்ல… ஆனால் அது சரியானதாகவே இருக்கும்” என்று பதிவிட்டார்.
விராட்டின் சக கிரிக்கெட் வீரர்கள், முன்னாள்- இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், மூத்த மற்றும் இளம் கிரிக்கெட்டர்கள் உட்பட கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் மட்டுமல்லாது, டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச், கால்பந்து நட்சத்திரம் ஹாரி கேன் என பிற விளையாட்டு துறைகளைச் சேர்ந்த ஜாம்பவான்களும் விராட் கோலியின் கிரிக்கெட் திறமையை போற்றி பதிவிட்டு வருகின்றனர்.
அவரது அறிவிப்புக்கு வருத்தத்துடன் கூடிய விடையனுப்பும் செய்திகள் வந்து குவிகின்றன. இது, கோலி உலகளவில் அனைவரின் விருப்பமான நட்சத்திர வீரராக இருந்தார் என்பதை உணர்த்துகிறது.
விராட்டின் வெற்றிப்பசியும், விளையாட்டு வெறியும்

பட மூலாதாரம், Getty Images
2008ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி வெற்றி பெறச்செய்த கோலி, அப்போதைய தேர்வுக் குழுவின் தலைவரான முன்னாள் இந்திய கேப்டன் திலீப் வெங்சர்க்கரின் ஆதரவைப் பெற்றார். கிரிக்கெட் துறையில் உள்ள மற்றவர்களின் கணிப்புகளையும் தாண்டி சர்வதேச கிரிக்கெட்டில் திலீப் வெங்சர்க்காரின் ஆதரவுடன் விராட் கோலி முன்னிறுத்தப்பட்டார்.
“விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதற்கு மிகவும் இளையவராக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பலர் கருதினார்கள். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து வந்த விராட்டின் வெற்றிப்பசியும், விளையாட்டு வெறியும் உள்ளுக்குள் கனன்றுக் கொண்டிருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது,” என்று கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தை நினைவு கூர்ந்தார் வெங்சர்க்கார்.
விளையாட்டின் மீது வெறித்தனமான ஆர்வம் விராட் கோலிக்கு இருந்தது என்பதற்கு ஒரேயொரு உதாரணம் போதும். டெல்லிக்காக தனது இரண்டாவது ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது விராட்டின் தந்தை எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். டெல்லி அணி நெருக்கடியில் இருந்த நிலையில், தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு வந்து விளையாடிய கோலி 90 ரன்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட்டின் மீது வெறித்தனமான ஆர்வம்
வெங்சர்காரின் ஆதரவுடன் 2009 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விராட் கோலி அறிமுகமானார். தனது 23 வயதில், எம்.எஸ். தோனி தலைமையில் 2011இல் இந்தியா ஒருநாள் போட்டிகளில் உலகக் கோப்பை வென்றது. அப்போது, வெற்றிபெற்ற அணியின் இளைய உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்ற விராட், சில வாரங்களுக்குப் பிறகு, மேற்கிந்தியத் தீவுகளில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது அவரது இடம் நிலைக்குமா என்ற கேள்வி இருந்த நிலையில், அதிரடியான தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஒருசில ஆண்டுகளுக்குள் தனது தலைமுறையின் முன்னணி பேட்ஸ்மேனாக நிலைநிறுத்திய திறமைசாலி விராட் கோலி.
துணிச்சலும், ஊக்கமும் மிக்கவராக இருந்த விராட் கோலியின் உடற்தகுதி அபாரமானது. பிரபலமான கிரிக்கெட்டர்களை எதிர்த்து விளையாடவும் அவர் அச்சப்பட்டதில்லை. விளையாட்டு மைதானத்தில் அவ்வப்போது மோதல்களில் ஈடுபட்டு விமர்சனங்களையும் எதிர்கொண்டவர்.
ஆனால் அவரது மோதல் போக்கு அவரை கிரிக்கெட்டில் முடக்கிவிடவில்லை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் தனது அதிரடியான பாணியில் அபாரமாக ரன்களை குவித்து அனைவராலும் பாராட்டப்பட்டு உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் இந்தியாவுக்காக அதிக இரட்டை சதங்கள் (7) அடித்த இந்திய வீரரான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக அதிக ரன்களை அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அவரது கனவு நாயகரும் முன்னோடியுமான சச்சின் டெண்டுல்கர் 2013இல் ஓய்வு பெற்றார். அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவராக விராட் கோலி உயர்ந்து நட்சத்திர கிரிக்கெட்டராக தனது இடத்தை நிலைப்படுத்திக் கொண்டார். தடுப்பாட்டம் ஆடுவதை வழக்கமாக கொண்டிருந்த இந்திய அணிக்கு கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை புது ரத்தம் பாய்ச்சியது என்றால் அது மிகையாகாது.
எதிரிகளை வீழ்த்தும் மட்டை வீச்சும், அபாரமான ஆளுமையுடன் இணைந்து செயல்படும் பாணியும் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. அவர் எங்கு இருந்தாலும் அந்த இடத்தில் கூட்டம் பெரும்திரளாகக் கூடியது. தான் விளையாடிய எல்லா இடங்களிலும் பிளாக்பஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வருவாயை உறுதி செய்தவர் விராட் கோலி.
விராட் கோலி வெளிப்படையானவர். களத்தில் ஆர்ப்பாட்டமாகவும் ஆளுமையை வெளிப்படுத்துபவராகவும் இருந்தார், ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சற்று தடுமாறிவிட்டாலும், சரியான சமயத்தில் மீண்டுவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
அனுஷ்கா சர்மாவை மணந்த விராட் கோலி
விராட் கோலி திரைப்பட நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டதும், இந்த நாட்டின் பிரபலமான தம்பதிகளில் ஒன்றாக மாறியது அவர்களது ஜோடி. அது ஏற்கனவே பிரபலமாக இருந்த இருவரையும் மேலும் பிரபலமாக்கியது.
விராட் கோலியின் சிறந்த சாதனைகள், குறிப்பாக அவரது தொழில் வாழ்க்கையின் முதல் தசாப்தத்தில், 21ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் இந்தியாவை எடுத்துக்காட்டுகின்றன: இடைவிடாமல் உழைத்து தனது லட்சியத்தை அடைந்தவர், கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவர், உலகின் சிறந்தவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர் என்று இளைஞர்களுக்கான சரியான உதாரணமாக இருப்பவர் விராட் கோலி.
விராட் கோலியின் கிரிக்கெட் சாதனைகள்
அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் கோலியின் சாதனைகள் மகத்தானவை. துரிதமாக ரன் குவிக்கும் விராட், ஒருநாள் போட்டிகளில், டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்காராவுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அதே சமயம், நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய பேட்ஸ்மேன்களில் சிறந்த சராசரியை (57.88) கொண்டுள்ள விராட், ஒருநாள் போட்டிகளில் மிகவும் கடினமான ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடும்போது வெற்றி ஈட்டுவதில் சாமர்த்தியம் மிக்கவர். அவரது 51 சாதனை சதங்களில் பலவும் இதுபோன்ற முயற்சியில் வந்தவை.
டி20 போட்டிகளில், விராட் கோலியின் ரன் குவிப்பும் சதங்களும் அவரை முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வரவில்லை என்ற போதிலும், அபாரமான இன்னிங்ஸ்கள் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
அதிலும் குறிப்பாக 2022 உலகக் கோப்பைப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான உணர்ச்சிமிக்க, துடிப்பான போட்டியில் 82- நாட் அவுட் எடுத்ததைச் சொல்லலாம். மேலும், 2024 இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த விராட்டின் ரன்களே, இந்தியா தொடரை வெல்ல உதவியது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு கட்டத்தில், கோலி கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சராசரியாக 50-க்கும் அதிகமான ரன்ரேட் வைத்திருந்தார் என்பது அவரது திறமையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. அவரது சமகாலத்தவர்களான ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை தாண்டிச் சென்ற விராட் கோலி, பேட்டிங் மேலாதிக்கத்தில் இந்த மூன்று கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் தொடர்ந்து போட்டிப்போட்டுக் கொண்டிருந்தார்.
விராட் கோலி, பேட்டிங் சாதனைகள் அனைத்தையும் முறியடிப்பார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, கோலியின் வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டது. கோவிட் தொடங்கியதிலிருந்து, அவரது ரன் குவிக்கும் வேகம் குறைந்துவிட்டது.
2014 மற்றும் 2019க்கு இடையில், கிரிக்கெட் உலகில் அவர் தடுக்க முடியாதவராக இருந்தார். ஒரு கட்டத்தில் வெறும் 18 மாதங்களில் ஆறு இரட்டை சதங்களை அடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் எடுப்பது குறைந்தது, அவரை மிகவும் மோசமாக பாதித்தது. 2019இல் அதிகபட்சமாக 55-க்கும் அதிகமாக இருந்த சராசரி, பின்னர் 46.75 ஆக சரிந்தது. இந்த காலகட்டத்தில் தான் விராட் கேப்டன் பதவியை இழந்தார்.
தனது டெஸ்ட் வாழ்க்கையை 9,230 ரன்களுடன் முடிக்கும் விராட் கோலி, 19வது இடத்தில் இருக்கிறார். இந்திய வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சுனில் கவாஸ்கரை அடுத்து, நான்காவது இடத்தில் உள்ள விராட் கோலியின் சராசரி ரன்ரேட் 50-க்கும் குறைவாக உள்ளது.
முதல் மூன்று இடங்களில் இருப்பவர்கள் 50-க்கும் மேற்பட்ட சராசரி மற்றும் அதிகமான சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றனர். ஆனால் இந்த அளவுகோலில் மட்டுமே விராட் கோலியை மதிப்பிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை மட்டுப்படுத்திவிடும்.

பட மூலாதாரம், Getty Images
தலைசிறந்த கேப்டனாக, கவாஸ்கர், டெண்டுல்கர் மற்றும் டிராவிட்டை எளிதில் முறியடிக்கக்கூடியவர் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில், கேப்டனாக விராட் வழிநடத்திய 68 போட்டிகளில் 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது, இந்திய சூழலில், மிகப்பெரிய விகிதாச்சாரமாகும்.
விராட் கோலியின் ஆற்றல், மன உறுதி, இலட்சிய உணர்வு, ஆளுமை ஆகியவை இந்திய கிரிக்கெட்டில் “மாற்றத்தை” ஏற்படுத்தியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரெக் சேப்பல் கூறுகிறார். செளரவ் கங்குலி மற்றும் எம்.எஸ். தோனியை விடவும், மிகவும் செல்வாக்கு மிக்க இந்திய கேப்டன் விராட் கோலி என்று சேப்பல் குறிப்பிடுகிறார்.
கோலியுடன் பல ஆண்டுகளாக பணிபுரிந்த முன்னாள் இந்திய கேப்டனும் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, விராட்டைப் பற்றி என்ன சொல்கிறார்?
“தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்த இந்திய அணியை சண்டையிடும் பிரிவாக மாற்றியவர் கோலி. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் விளையாடும்போது,” என்று சாஸ்திரி கூறுகிறார். சாஸ்திரியின் கூற்றுப்படி ஐசிசி மற்றும் ஐபிஎல் கோப்பைகளை வெல்லாதது, விராட்டின் கேப்டன்சி திறனுக்கான குறியீட்டை குறைக்கிறது.
“எப்போதும் வெற்றி பெறுவதற்காகவே விளையாடியவர் விராட் கோலி, வெளிநாடுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேகப்பந்து வீச்சாளர்களைத் தேடி வளர்த்தார், அனைத்து கிரிக்கெட்டர்களும் உயர்ந்த நோக்கத்தையும், சிறந்த உடற்தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.” என்று சாஸ்திரி கூறுகிறார்.
கோலியும் சாஸ்திரியும் இணைந்து பணியாற்றிய ஏழு ஆண்டுகளில், கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் ஐசிசி தரவரிசையில் இந்தியா கிட்டத்தட்ட தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் இருந்தது, இது, அதுவரை நடந்திராத சாதனை ஆகும்.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி
இந்தக் காலகட்டத்தில் மிகவும் பாராட்டத்தக்க மற்றும் குறிப்பிடத்தக்க வெற்றி என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவது 2018 ஆம் ஆண்டில் இந்தியா பெற்ற வெற்றி என்று கூறலாம். இந்தியா, தனது சொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவை முதன்முறையாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தியபோது கிடைத்த வெற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்கமுடியாதது.
2014-15ஆம் ஆண்டுகளில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் 692 ரன்கள் எடுத்து விராட் கோலி பேட்டிங் சாதனை படைத்த இடம் ஆஸ்திரேலியா. 2018ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட் அணிக்கு இருந்துவந்ததாகக் கூறப்பட்ட உளவியல் தடையை உடைத்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என்று விராட் பிரபலமானார்.
2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோலி, தனது மனைவியின் பிரசவத்திற்காக இந்தியா திரும்பியபோது ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடினார், அந்தப் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா விராட் கோலியின் வெற்றிக்களம் என்று சொல்லலாம். 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் சதம் அடித்து, அவர் தனது வெற்றியைத் தொடங்கினார். இருந்தாலும், தொடக்கத்தில் இருந்த அவரது ஃபார்ம் தோல்வியடைந்ததுடன், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்தன் பின்னணி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான அவரது முடிவுக்கு ஆஸ்திரேலியாவில் அவர் விளையாடிய இறுதி போட்டி எவ்வளவு பங்களித்தது என்பது விவாதத்திற்குரியது. தான் தொடர்ந்து பல வருடங்களாக கடுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு வரும் போக்கை விரும்பாததும் அவருடைய ஓய்வு அறிவிப்புக்கு காரணமாக இருக்கலாம்.
குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புவதும் ஒரு காரணமாக இருக்கும். இந்திய கிரிக்கெட்டில் திரைக்குப் பின்னால் நடக்கும் சூழ்ச்சிகள் விராட் கோலியின் ஓய்வு அறிவிப்புக்கு முக்கியமான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகையில், “#269, sign off” என்று குறிப்பாகச் சொல்லி முடித்தார்.
இதன் அர்த்தம் என்ன தெரியுமா? ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான 269வது வீரரான நான், கிரிக்கெட்டின் இந்த வடிவத்தில் விளையாடுவதில் இருந்து ஓய்வுபெறுகிறேன்’. கடந்த ஒன்றரை தசாப்தங்களாக டெஸ்ட் போட்டிகளில் அற்புதமான வீரராக இருந்த 269வது இந்திய கிரிக்கெட்டரின் கிரிக்கெட் சகாப்தம் நிறைவுக்கு வந்துவிட்டது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU