SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
30 மார்ச் 2025
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
விசாகப்பட்டிணத்தில் இன்று (மார்ச்30) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 24 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டெல்லி அணிக்கு முதல் வெற்றிய அசுதோஷ் ஷர்மா பெற்றுக் கொடுத்த நிலையில் இந்த போட்டியில் ஸ்டார்க், குல்தீப் இருவரும் பெற்றுக் கொடுத்தனர். 2 வெற்றிகளுடன் டெல்லி அணி 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் 1.320 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. அடுத்தடுத்து 2 தோல்விகளால் சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் மைனஸ் 0.871 நிகர ரன்ரேட்டில் 7வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசையை உருக்குலைத்து 3.4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்ஷெல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார். அசராத ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதுக்கு இணையான இடத்தில் இருக்கிறார்.
பேட்டிங்கில் எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு 40 வயதுக்கு மேலான டூப்பிளசிஸ் இந்த சீசனில் முதல் அரைசதத்தை தனக்கே உரிய ஸ்டைலில் பதிவு செய்தார். மற்ற வகையில் டெல்லி பேட்டர்கள் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை.

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸை சிதைத்த ஸ்டார்க்
சன்ரைசர்ஸ் அணி என்றாலே அதிரடி ஆட்டம், பெரிய ஸ்கோர், சிக்ஸர், பவுண்டரி பறக்கும் ஆட்டம் என்ற எதிர்பார்ப்புடன் தான் பேட்டர்கள் களமிறங்கினர். ஆனால், மிட்ஷெல் ஸ்டார்க் அனைத்து நினைப்புகளையும் தவிடுபொடியாக்கினார். முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா சோம்பேறித்தனமாக ஓடி ரன்அவுட் ஆகினார்.
அடுத்துவந்த இஷான் கிஷனின் பலவீனத்தை நன்கு அறிந்த ஸ்டார்க் டீப் ஸ்குயரில் பீல்டரை நிறுத்தி சிறிது ஆப்சைடு விலக்கி ஷார்ட் பந்துவீசினார். சொல்லிவைத்தார்போல், இஷான் கிஷன் 2 ரன்னில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டார்க் வீசிய அதே ஓவரில் வந்தவேகத்தில் நிதிஷ் குமார் ரெட்டி தேவையின்றி மிட்ஆன் திசையில் தூக்கி அடித்து படேலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.
ஓரளவுக்கு அதிரடியாக ஆடி வந்த டிராவிஸ் ஹெட்டும் நிலைக்கவில்லை. ஹெட் 22 ரன்கள் சேர்த்தநிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச்கொடுத்துவெளியேறினார். 5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சன்ரைசர்ஸ் அணியின் பலமே டாப்ஆர்டர்தான் அந்த 4 பேட்டர்களும் பெவிலியன் சென்றபின் ஆட்டத்தில் என்ன ஸ்வாரஸ்யம் இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் எண்ணினர்.
ஆட்டத்தை மாற்றிய அனிகேத் வர்மா

பட மூலாதாரம், Getty Images
ஆனால், 5வது விக்கெட்டுக்கு கிளாசன், அனிகேத் வர்மா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்தது. கடந்த போட்டியிலும் அதிரடியாக ஆடிய அனிகேத் வர்மா, இந்த ஆட்டத்திலும் கிடைத்த வாய்ப்பை வெளுத்து வாங்கினார். பவர்பளேயில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது.
அனிகேத் வர்மா, கிளாசன் இருவரும் அதிரடிக்கு மாறியபின், டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 9.1ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை எட்டியது. இருவரும் டெல்லி பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி என ஓடவிட்டனர். சர்வதேச அனுபவமே இல்லாத அனிகேத் வர்மா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இருவரும் அணியை பெரிய ஸ்கோரை நோக்கி நகர்த்திய நிலையில் மோகித் சர்மா பந்துவீச்சில் 32 ரன்கள் சேர்த்தநிலையில் கிளாசன் விக்கெட்டை இழந்தார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அதிரடி ஆட்டம் மட்டும் போதுமா?

பட மூலாதாரம், Getty Images
அடுத்துவந்த அபினவ் மனோகர்(4), கேப்டன் கம்மின்ஸ்(2) இருவரும் ஆங்கர்ரோல் எடுத்து விளையாட வேண்டும் என நினைக்கவில்லை, வந்தவுடன் பெரிய ஷாட்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்து தேவையின்றி விக்கெட்டுகளை இழந்தனர். இருவரின் விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் சாய்த்தார்.
விக்கெட் ஒருபுறம் வீழ்ந்தாலும் அனிகேத் வர்மா தனுது பேட்டால், டெல்லி பந்துவீச்சாளர்களை பந்துவீச்சை துவைத்து எடுத்தார். குல்தீப் யாதவ் வீசிய கூக்ளி பந்துவீச்சை சிக்ஸருக்கு அனிகேத் வர்மா விரட்டும்போது, பவுண்டரிஎல்லையில் மெக்ரூக்கால் அருமையாக கேட்ச் பிடிக்கப்பட்டார்.
அனிகேத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் ஹர்சல் படேல்(5), இம்பாக்ட் ப்ளேயராக வந்த முல்டர்(9) ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இன்னும் 8 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் அதை விளையாடக்கூட பேட்டர்கள் இல்லாத நிலையில் சன்ரைசர்ஸ் ஆட்டமிழந்தது. இந்த சீசனில் ஓவர்கள் மீதமிருக்கும்போதே ஆல்அவுட் ஆகிய முதல் அணியாக சன்சைரஸ் மாறியது. ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. டூப்பிளசிஸ், ப்ரேசர் மெக்ருக் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் இருவருமே ஜொலிக்கவில்லை. இந்தஆட்டத்தில் டூப்பிளசிஸ் தனது கிளாசிக் பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மெக்ருக்கிற்கு பந்து பேட்டில் மீட்ஆகவில்லை பெரிய ஷாட்களுக்கு முயன்றும் கிடைக்கவில்லை.
ஆனால், டூப்பிளசிஸ் தனக்கே உரிய ஸ்டைலில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 40 வயதிலும் டூப்பிளசிஸ் ஷாட்கள் ஒவ்வொன்றும் இடிபோல் இறங்கியது. பவர்ப்ளேயில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சை கிழித்தெறிந்த டூப்பிளசிஸ் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் நிலைக்காத டூப்பிளசிஸ் 50 ரன்னில் அன்சாரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். அன்சாரி வீசிய அதே ஓவரின் கடைசிப்பந்தில் மெக்ருக்கும் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
கே.எல்.ராகுல் வந்தவேகத்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து 15 ரன்னில் அன்சாரி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு அபிஷேக் போரெல்(34), ஸ்டெப்ஸ்(21)இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
23 வயதேயான அனிகேத் வர்மா யார்?

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணி தோற்றாலும் இரு முத்துக்களை, கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காண்பித்துள்ளது. இளம் பேட்டர் அனிகேத் வர்மா(74), சுழற்பந்துவீச்சாளர் ஜீசான் அன்சாரி ஆகிய இருவரையும் கிரிக்கெட் உலகிற்கு வெளிச்சம்பாய்ச்சிருக்கிறது. கடந்த சீசனில் நிதிஷ்குமார் ரெட்டியை அடையாளப்படுத்திய சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இருவருக்கும் வழங்கிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினர்.
இதில் 23வயதான அனிகேத் வர்மா மத்தியப் பிரதேசம் போபால் நகரைச் சேர்ந்தவர். ஏற்கெனவே ரஜத் பட்டிதார், வெங்கடேஷ் அய்யர் கலக்கிவரும் நிலையில் அனிகேத் ஜொலிக்கிறார். மத்தியப்பிரதேச டி20 லீக்கில் 32 பந்துகளில் சதம் அடித்தவர் அனிகேத் வர்மா. இவரின் பேட்டிங்கைப் பார்த்து மெய்சிலிர்த்து சன்ரைசர்ஸ் அணி அனிகேத் வர்மாவை ஏலத்தில் அடிப்படை விலைக்கு ரூ.30 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால் இவரை சன்ரைசர்ஸ் வாங்கியது போனஸாக அமைந்துள்ளது.
மற்றொரு வீரர் 25வயதான உத்தரப்பிரதேச சுழற்பந்துவீச்சாளர் ஜீஸன் அன்சாரி. உ.பி. அணிக்காக ஒரு டி20 போட்டியில் மட்டுமே அன்சாரி விளையாடியுள்ளார். 2016ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன், ரிஷப் பந்த், சர்பிராஸ் கான், கலீல் அகமதுவுடன் அன்சாரி விளையாடியவர். அவர்கள் மீது பட்ட வெளிச்சம் அன்சாரி மீது இப்போதுதான் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு டி20 லீக்கில் மீரட் மாவ்ரிக்ஸ் அணிக்காக ஆடிய அன்சாரி, 12 இன்னிங்ஸில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருவீரர்களையும் சன்ரைசர்ஸ் அணி கண்டறிந்து இந்திய அணிக்கு அளித்துள்ளது.
அன்சாரியை அடிப்படை விலையான ரூ.40 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்தது. இவர் கிடைத்தது சன்ரைசர்ஸ் அணிக்கு 2வது போனஸாகும். இருவரும் அடுத்துவரும் லீக் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணிக்கு கருப்பு குதிரைகளாக இருப்பார்கள்.
சன்ரைசர்ஸ் சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் அனைவருமே ஒரே சிந்தனையோடு களத்துக்கு வந்ததுதான் ஆட்டத்தில் தோல்விக்கு காரணமாகும். சன்ரைசர்ஸ் அடித்தால் 200 ரன்களுக்க மேல் ஸ்கோர் செய்வது, இல்லாவிட்டால் அனைத்து பேட்டர்களும் பிளாப் ஆவது. இதை ஃபார்முலாவாக வைத்துள்ளது.
டாப்ஆர்டர் பேட்டர் ஒருவர் கூட இன்று மாற்றியோசிக்கவில்லை. விக்கெட்டுகள் மளமளவென சரிந்து வரும் நிலையில், களத்தில் ஆங்கர் ரோல் எடுத்து விளையாட வேண்டும் என்று எந்த பேட்டரும் நினைக்கவில்லை. இதில் அனிகேத் வர்மாதான் விதிவிலக்கு.
சன்ரைசர்ஸ் பேட்டர்கள் அனைவரும் களத்துக்கு வந்து பெரிய ஷாட்களை ஆட வேண்டும், சிக்ஸர், பவுண்டரிகளாக குவிக்கவேண்டும் என்ற நோக்கில் வந்ததுதான் விரைவாக விக்கெட்டுகளை இழக்க காரணம். அனிகேத் வர்மா மட்டும் இல்லாவி்ட்டால் சன்ரைசர்ஸ் அணி மோசமான தோல்வியை சந்தித்திருக்கும்.
சன்ரைசர்ஸ் அணியில் இருக்கும் டாப்ஆர்டர் பேட்டர்கள் மெக்ருக், ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி ஆகிய 4 பேருமே அதிரடிக்கு பெயரெடுத்தவர்கள். இவர்கள் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை சேர்த்துக்கொடுத்து புறப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அணியின் சூழலுக்கு ஏற்ப இவர்களால் ஆடமுடியாதது அணியின் பின்னைடைவுக்கு காரணம்.
அணியின் சூழலைப் பார்த்து எவ்வாறு ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையுள்ள பேட்டர்களை சன்ரைசர்ஸ் ஏலத்தில்வாங்கவில்லை. அந்த அணி அதிரடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேட்டர்களை வாங்கியதுதான் இதுபோன்ற சரிவுக்கு காரணமாகியது.
கடந்த போட்டியில் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் ” நாங்கள் ஆடும் ஆட்டம் சில நேரங்களி்ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும், சிலநேரங்களில் பெரிய தோல்வியையும் சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனால் தயாராக இருக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
அனிகேத்துக்கு புகழாரம்

பட மூலாதாரம், Getty Images
தோல்விக்குப்பின் சன்ரைசர்ஸ் கேப்டன் பாட்கம்மின்ஸ் கூறுகையில் ” அனிகேத் மூலம்தான் ரன்கள் கிடைத்தது. விரைவாகவே முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். மோசமான ஷாட்கள் மட்டுமல்ல ரன்அவுட்டிலும் விக்கெட்டை இழந்தோம்.
இது நடக்கத்தான் செய்யும். இதுதான் எங்கள் எல்லை என்று நான் நினைக்கவில்லை. கடந்த 2 போட்டிகளிலும் அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு சில விஷயங்கள் வித்தியாசமாக அமைந்து முடிவை மாற்றியிருக்கலாம்.
அனிகேத் அதிகம் தெரியாத பேட்டர்தான், ஆனால், இந்த சீசன் அவருக்கு அருமையாக இருக்கப் போகிறது. இவரின் ஆட்டம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. வீரர்கள் தங்களால் முடிந்த முயற்சியை அளித்துள்ளனர், அதிகமாக மாற்றத்தை அளிப்போம் என நினைக்கவேண்டாம்” எனத் தெரிவித்தார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC