Home தேசிய national tamil கோவை கூட்டுறவு சங்க மேலாளரிடம் ரூ.16 லட்சம் பறிமுதல்: அரசு மானியம் வழங்க லஞ்சமா? என்ன...

கோவை கூட்டுறவு சங்க மேலாளரிடம் ரூ.16 லட்சம் பறிமுதல்: அரசு மானியம் வழங்க லஞ்சமா? என்ன நடந்தது?

3
0

SOURCE :- BBC NEWS

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்

பட மூலாதாரம், Special arrangement

கோவை அருகிலுள்ள வதம்பச்சேரியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மேலாளரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 89 ஆயிரத்து 950 லஞ்சப் பணத்தைக் கைப்பற்றியதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு தரும் தள்ளுபடி மானியத்தில் இருந்து 3 சதவிகிதம் கமிஷன் வாங்கியதில் இவ்வளவு லஞ்சப் பணம் சேகரிக்கப்பட்டு இருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 14 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களே இருப்பதாகச் சொல்கிறது, தமிழக அரசின் கைத்தறித் துறை இணையதளம். இருப்பினும், தமிழக அரசு கைத்தறித் துறையை தனி ஒரு துறையாக நிர்வகித்து வருகிறது. இந்தத் துறையின் மூலம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்குப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

தள்ளுபடி மானியம் தரும் கைத்தறித்துறை

இவ்வாறு நிறைவேற்றப்படும் திட்டங்களில் ஒன்றுதான் தள்ளுபடி மானியத் திட்டம். கைத்தறி ஆடைகளை விசைத்தறி மற்றும் ஆலை துணிகளுடன் போட்டியிட்டு சந்தையில் விற்பனை செய்ய உதவும் வகையில், கைத்தறி ஆடைகளின் விற்பனைக்கு மாநில அரசு தள்ளுபடி மானியம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டம், தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தால் (கோ-ஆப்டெக்ஸ்) விற்பனை செய்யப்படும் கைத்தறி ஆடைகளை சந்தைப்படுத்தவும் அவற்றின் இருப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

மேற்கண்ட சங்கங்களால் விற்பனை செய்யப்படும் கைத்தறி ஆடைகளின் சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனைக்கு ஆண்டு முழுவதும் 20 விழுக்காடு தள்ளுபடி மானியம் இத்திட்டத்தின் கீழ் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை கூட்டுறவு சங்க மேலாளரிடம் ரூ.16 லட்சம் பறிமுதல்: அரசு மானியம் வழங்க லஞ்சமா? என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

தள்ளுபடி மானியத் திட்டம் பற்றி கைத்தறித்துறை அளித்துள்ள விளக்கத்தின்படி, “பருத்தி ரகங்களுக்கு உருப்படி ஒன்றுக்கு ரூ.100 அல்லது 20 விழுக்காடு, இதில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. அதேபோன்று, பட்டுத் துணிகளுக்கு உருப்படி ஒன்றுக்கு ரூ.200 அல்லது 20 விழுக்காடு, இதில் எது குறைவோ, அது தள்ளுபடி மானியமாக வழங்கப்படுகிறது.”

இதுதவிர, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனையில் வழக்கமாக வழங்கப்படும் 20 விழுக்காடு தள்ளுபடியுடன் கூடுதலாக 10 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடியும் சேர்த்து, 30 விழுக்காடு மானியத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை 139 நாட்களுக்கு வழங்கிட ஒவ்வோர் ஆண்டும் அரசால் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தச் சிறப்புத் தள்ளுபடி மானியத் திட்டத்தின் கீழ் “பருத்தி ஆடை வகைகளுக்கு உருப்படி ஒன்றுக்கு 30 விழுக்காடு அல்லது ரூ.150 மற்றும் பட்டுத் துணி வகைகளுக்கு உருப்படி ஒன்றுக்கு 30 விழுக்காடு அல்லது ரூ.300 இதில் எது குறைவோ அந்தத் தொகை தள்ளுபடி மானியமாக வழங்கப்படுகிறது.”

இவ்வாறு கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் பெருமளவு கமிஷன் வாங்கப்படுவது, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய ஓர் அலுவலரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்

பட மூலாதாரம், Special arrangement

கோவை மாவட்டம் சூலுார் அருகேயுள்ள வதம்பச்சேரியில் ஸ்ரீராமலிங்க சூடாம்பிகா பருத்தி மற்றும் பட்டுக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் உள்ளது.

இதன் மேலாளராக இருப்பவர் சவுண்டப்பன். இவரிடமிருந்து கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று, 15 லட்சத்து 89 ஆயிரத்து 950 ரூபாய் லஞ்சப் பணத்தைக் கைப்பற்றியதாக கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகின்றனர்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திவ்யா, ”எங்களுக்கு கைத்தறி நெசவாளர்கள் யாரிடம் இருந்தும் புகார் வரவில்லை. நம்பத்தகுந்த ஒருவரிடம் இருந்து தகவல் வந்தது.

உடனடியாக மாவட்ட சிறப்பு துணை ஆய்வுக் குழு அதிகாரியுடன் சேர்ந்து, ஏப்ரல் 21 மாலை 3:30 மணியளவில் வதம்பச்சேரியிலுள்ள சங்கக் கட்டடத்தில் திடீர் கூட்டு சோதனை மேற்கொண்டோம். அதில்தான் இவ்வளவு பணம் சிக்கியது” என்றார்.

சரக வாரியாக வசூல் வேட்டை

இந்தத் தொகை எவ்வாறு, எங்கெங்கு, யார் யாரிடம் எவ்வளவு வீதத்தில் வசூலிக்கப்பட்டது, இதன் விவரம் எந்தெந்த மேலதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது என்பது முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின்போது, வெவ்வேறு காகித பார்சல், துணிப்பை, சிறிய பெட்டி எனத் தனித்தனியாக அவற்றின் விவரங்களுடன் பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

உதாரணமாக, MADURAI CIRCLE என்று எழுதப்பட்டிருந்த பேப்பர் பார்சலில் மதுரை சரகத்தில் உள்ள 1 முதல் 21 சங்கங்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட்டு, அவற்றுக்கு நேராக அந்தச் சங்கங்களில் இருந்து 3 சதவிகிதம் கமிஷன் வீதம் எவ்வளவு தொகை பெறப்பட்டது என்ற விவரம் குறிக்கப்பட்டுள்ளது. அதை எண்ணியபோது, 500 ரூபாய் நோட்டுகள் 500 வீதமாக இரண்டரை லட்ச ரூபாய் இருந்ததாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

அதேபோன்று, காஞ்சிபுரம் சரகம் குறிப்பிடப்பட்டிருந்த மஞ்சள் பை பார்சலில் 1 முதல் 32 கூட்டுறவு சங்கங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் 3 சதவிகிதம் வீதமாக வசூலிக்கப்பட்ட தொகையும் எழுதப்பட்டிருந்தது.

அதில், மட்டும் 6 லட்சத்து 82 ஆயிரத்து 388 ரூபாய் இருந்ததாகவும், திருச்சி சரகத்தில் இருந்து 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு இருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை சரகத்தில் வசூலித்த தொகையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் லஞ்சமாக ரூ.15,89,950 வசூலிக்கப்பட்டதாகக் கண்டறிந்த போலீசார் அந்தப் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

தமிழகத்திலுள்ள 18 சரகங்களில் உள்ள கூட்டுறவு நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கங்களுக்கு, தமிழக அரசால் வழங்கப்பட்ட மானியத் தொகையில் இருந்து 3 சதவிகிதம் வீதமாக வசூல் செய்து, அந்தத் தொகையை கோவை கணபதியிலுள்ள பாலாஜி விசைத்தறி சங்கத்தின் மேலாளர் பால்ராஜ் என்பவரிடம் ஒப்படைத்துவிடும்படி தனக்கு, துறையின் கோவை மாவட்ட உதவி இயக்குநர் வெற்றிவேல், மேலாண்மை இயக்குநர் பொம்மையாசாமி ஆகியோர் உத்தரவிட்டதாக சவுண்டப்பன் தெரிவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் காவல் ஆய்வாளர் லதா தகவல் பதிவு செய்துள்ளார்.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்

பட மூலாதாரம், Special arrangement

சாதாரண கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மேலாளரிடம் ஒரே நாளில் 16 லட்ச ரூபாய் அளவுக்கு ரொக்கமாக லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரையே அதிர வைத்துள்ளது.

ஒரே அலுவலரிடம் ஒரே நாளில் இவ்வளவு லஞ்சப் பணம் சிக்கினால், மற்ற துறைகளில் பெரிய அதிகாரிகள் சம்பாதிப்பது எவ்வளவு இருக்குமென்று சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் எழுந்தன.

”என் அனுபவத்தில், இதற்கு முன்பு துணைப் போக்குவரத்து ஆணையர் ஒருவரிடம் இருந்து ரூ.28 லட்சம் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டதே அதிகபட்ச தொகை. அதற்கு அடுத்ததாக இப்போதுதான் இவ்வளவு பெரிய தொகை, அதுவும் சாதாரண கூட்டுறவு சங்க மேலாளரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில் ஒருவருக்கு மட்டும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. யார் யாருக்குத் தொடர்பு இருக்கிறது என்பது பற்றி விசாரித்த பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார் கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா.

கருத்து கூற அச்சப்படும் கைத்தறி நெசவாளர்கள்

கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து இவ்வளவு பெரிய லஞ்சத்தொகை வசூலிக்கப்பட்டு இருந்தும் இதுபற்றி வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிப்பதற்கு, கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகிகள் யாரும் முன் வரவில்லை.

சிறுமுகையைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தின் நிர்வாகி நாகராஜ், ”எங்களுடைய சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் யாருக்கும் எந்த மானியமும் வழங்கப்படுவதில்லை. அதனால் எந்தத் திட்டத்தில் எவ்வளவு கமிஷன் வாங்கப்படுகிறது என்பது பற்றி எதுவும் தெரியாது” என்றார்.

தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாநில செயலாளர் வேலுச்சாமி, ”கைத்தறியை மேம்படுத்த அரசு பலவிதங்களிலும் உதவி செய்கிறது. ஆனால் கைத்தறி ஆடையை உற்பத்தி செய்யாமலேயே உற்பத்தி செய்வதாகக் கணக்கு காண்பித்து மானியம் எடுத்துக் கொள்ளப்படுவதே அதிகம் நடக்கிறது. விசைத்தறியைத் தாண்டி, அதிநவீன விசைத்தறிகள் வந்துவிட்டன. தற்போதுள்ள நிலையில், கைத்தறிகளை வைத்து ஆடை உற்பத்தி செய்வது என்பது மிகவும் குறைந்துவிட்டது” என்றார்.

விசைத்தறிக்கென தனியாக ஒரு துறையை ஏற்படுத்தத் தாங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இல்லாத கைத்தறிக்கு ஒரு துறையை நிர்வகிப்பதே இத்தகைய லஞ்சப் போக்கை அதிகரிக்கிறது என்கிறார் தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி சுரேஷ். லஞ்சப் பணம் சிக்கிய வதம்பச்சேரி, சூலுார் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமியின் சொந்த ஊருக்கு அருகிலுள்ள பகுதியாகும்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அவரிடம் இந்த லஞ்சப் பணம் சிக்கியது பற்றி பிபிசி தமிழ் கேட்டபோது, ”அதையே நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். அந்த சொசைட்டியில் எல்லா கட்சியினரும், எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இதுபோன்று மானியத் தொகையில் லஞ்சம் வாங்குவதாக எந்த கைத்தறி நெசவாளரும் என்னிடம் புகார் தெரிவித்ததில்லை. தற்போது சட்டமன்றம் நடந்து வருவதால் வந்த பிறகு அதுபற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்” என்றார்.

இந்த லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ள கூட்டுறவு சங்க மேலாளர் சவுண்டப்பன், துறையின் கோவை மாவட்ட உதவி இயக்குநர் வெற்றிவேல் கூறியே இதைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து இவருக்கு வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றம் நடந்ததையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கண்டறிந்துள்ளனர். அது தொடர்பாக அலைபேசியையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இதுபற்றி கைத்தறித் துறையின் கோவை மாவட்ட உதவி இயக்குநர் வெற்றிவேலிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பிடித்தது முழுவதும் லஞ்சப் பணமா என்பதே இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் அந்த சொசைட்டியில் அலுவலக ரீதியாக அவ்வளவு பெரிய தொகை இருப்பதற்கும் வாய்ப்பில்லை. நான் கருத்து தெரிவிப்பது விசாரணையைப் பாதிக்கலாம். அதனால் மேல்கட்ட விசாரணை முடிந்த பிறகே, கருத்து தெரிவிக்க முடியும். அதன்படி துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU