Home தேசிய national tamil கோவையை ஒட்டி கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரமே தென்படாத கிராமம் – 1991ல் என்ன நடந்தது?

கோவையை ஒட்டி கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரமே தென்படாத கிராமம் – 1991ல் என்ன நடந்தது?

8
0

SOURCE :- BBC NEWS

கோயம்புத்தூர், கட்சி அடையாளங்கள், தேர்தல், அரசியல்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

”எனக்கு திருமணமாகி இங்கே வந்து 35 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஊரில் இதுவரை ஒரு கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரம் எதுவும் யாரும் வைத்துப் பார்த்ததில்லை. கட்சி ஆபீஸ் என்று எதுவுமே கிடையாது. வாக்குக் கேட்டு பல கட்சிக்காரர்களும் வருவார்கள். அதைத் தவிர்த்து போஸ்டர் ஓட்டுவது, வேறு பிரச்னை என்றால் ஊர்க்காரர்கள் ஒன்றுசேர்ந்து தடுத்து விடுவார்கள்”.

இது காளப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பூங்கொடி (வயது 60) பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல்.

கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள சோமையம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில்தான் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு ஊர் மக்களால் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கிராம ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளாக இருந்தபோதும் அதை மீறுவதில்லை.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் நடந்த 1991 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஊருக்குள் ஏற்பட்ட மோதலுக்குப் பின் ஊர் மக்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவு இன்றும் பின்பற்றப்படுகிறது.

இதுதொடர்பாக இதுவரை காவல் நிலையத்திலும் எந்தப் புகாரும் வந்ததில்லை என்கின்றனர் காவல்துறையினர்.

கட்சி அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை

கோயம்புத்தூர், கட்சி அடையாளங்கள், தேர்தல், அரசியல்

கோவை மாநகராட்சியின் மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் எல்லைப்பகுதியான இடையர்பாளையம், வடவள்ளி மற்றும் துடியலூர் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது சோமையம்பாளையம் கிராம ஊராட்சி.

கோவையின் புறநகரமாக வளர்ந்து வரும் இந்த ஊராட்சியில் சோமையம்பாளையம், கஸ்தூரி நாயக்கன்பாளையம், காளப்ப நாயக்கன்பாளையம், குப்பநாயக்கன்பாளையம் மற்றும் மருதமலை அடிவாரம் ஆகிய பகுதிகள் உள்ளன.

சோமையம்பாளையம் கிராம ஊராட்சி நிர்வாக அலுவலர் செந்தில்குமார், பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, இந்த ஊராட்சியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 15 ஆயிரம் என மக்கள் தொகை இருந்துள்ளது.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இந்த கிராம ஊராட்சியில் 13,763 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த கிராம ஊராட்சியிலுள்ள பெரிய கிராமம் தான் காளப்பநாயக்கன்பாளையம். ஊராட்சிக்குட்பட்ட 4 வார்டுகள் இந்த கிராமத்தில் அமைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள வாக்காளர்களில் 4,807 பேர், காளப்பநாயக்கன்பாளையத்தில் வசிக்கின்றனர். காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில்தான் சோமையம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகமும் உள்ளது.

இந்த கிராமத்தில் ஓர் ஒழுங்குமுறையை அனைத்து மக்களும் கடைபிடிக்கின்றனர். “கிராமத்துக்குள் கட்சி அலுவலகம் அமைக்கக் கூடாது, கட்சிக் கொடிமரம் நடக்கூடாது, அரசியல் கட்சிகளின் தோரணம், பேனர் கட்டக்கூடாது, போஸ்டர் ஒட்டக்கூடாது, சுவர் விளம்பரம் எழுதக்கூடாது” என்பதுதான் அந்த ஒழுங்குமுறை.

காரணம் என்ன?

கோயம்புத்தூர், கட்சி அடையாளங்கள், தேர்தல், அரசியல்

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சோமையம்பாளையம் கிராம ஊராட்சி முன்னாள் துணைத்தலைவரும், திமுக நிர்வாகியுமான ஆனந்த், ”ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் நடந்த 1991 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, காளப்பநாயக்கன்பாளையத்தில் வெவ்வேறு கட்சியினருக்கு இடையில் மோதல் வெடித்து அடிதடியாகி நிறைய வழக்குகள் பதிவாகின. பல்வேறு சமுதாயத்தினர் வாழும் இந்த கிராமத்தில் அந்த சம்பவத்தால் கசப்பு ஏற்பட்டது. அதன்பின் ஊர் மக்கள் ஒன்றுகூடியே, இனி ஊருக்குள் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், சுவடுகளை அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்தனர்.” என்றார்.

”அது முதல் இப்போது வரை 35 ஆண்டுகளுக்கும் மேலாக, காளப்பநாயக்கன்பாளையத்தில் எந்த கட்சி அலுவலகத்தையும், கட்சிக்கொடி, பேனர், போஸ்டர், தோரணம், சுவர் விளம்பரம் எதையும் மக்கள் அனுமதிப்பதில்லை.” என்கிறார் ஆனந்த்.

காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்துக்குட்பட்ட சாலை மற்றும் வீதிகளில் பிபிசி தமிழ் குழுவினர் சென்று பார்த்தனர். எங்குமே கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரம், பேனர் எதையுமே பார்க்க முடியவில்லை. அதேபோன்று கட்சி அலுவலகங்களும் அங்கு காணப்படவில்லை.

ஆங்காங்கே விளம்பரப் பலகைகள் இருந்தாலும் அவற்றிலும் தனியார் பள்ளி, முதியோர் குடியிருப்பு மற்றும் வணிக விளம்பரங்களே அதிகமாகக் காணப்பட்டன. அரசு மற்றும் தனியார் சுவர்களிலும் அரசியல் விளம்பரங்கள் எதுவுமேயில்லை. அதேநேரத்தில் கட்சி சின்னங்கள், விளம்பரங்கள் கூடாது என்று எங்கேயும் எந்த அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவில்லை.

காளப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பூங்கொடி (வயது 60) பிபிசி குழுவினரிடம் பேசுகையில், ”தேர்தல் வந்தால் இங்கே வீடுவீடாக வாக்குக்கேட்டு பலரும் வருவார்கள். அப்போது நோட்டீஸ் கொடுப்பார்கள். சின்னத்தைக் காண்பிப்பார்கள். வண்டிகளில் வந்து மைக்கில் பேசுவார்கள். ஆனால் கட்சிக்கு ஆபீஸ் என்று எதையும் போட இங்குள்ள மக்கள் அனுமதிப்பதில்லை. இடையில் சிலர் அதற்கு முயற்சி செய்தபோது, ஊர் மக்கள் சேர்ந்து தடுத்துவிட்டனர். எந்த வீட்டுச்சுவரிலும், சாலையிலும் அரசியல் விளம்பரம் செய்ய மக்கள் அனுமதிப்பதில்லை.” என்றார்.

வெளியூரிலிருந்து இங்கே குடிவந்த சிலர், கட்சியில் பெயரெடுக்க வேண்டுமென்று கட்சிக்கொடி நடுவதற்கு முயற்சி எடுத்ததாகவும், அதை ஊர் மக்களே சேர்ந்து எதிர்த்ததால் அவர்கள் தங்களது முயற்சியை கைவிட்டதாகவும் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆனந்த் தெரிவித்தார்.

கோயம்புத்தூர், கட்சி அடையாளங்கள், தேர்தல், அரசியல்

காளப்பநாயக்கபாளையம் எல்லையைத் தாண்டியதும், கணுவாய் சந்திப்புப் பகுதியில் ஏராளமான சுவர் விளம்பரங்கள், கட்சிக்கொடிகள், கட்சி அலுவலகங்கள் அனைத்தும் காணப்பட்டன.

காளப்பநாயக்கன்பாளையத்தில் மட்டுமின்றி, கஸ்தூரிநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம் கிராமங்களிலும் கட்சி அலுவலகங்கள், அரசியல் விளம்பரங்கள் எதையும் பார்க்க முடியவில்லை.

சோமையம்பாளையம் பேருந்து நிறுத்தப்பகுதியில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கிழிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

அதே பகுதியில் கம்பங்கூழ் விற்பனை செய்து வரும் பழனியம்மாள், ”சோமையம்பாளையத்திலும் அரசியல் போஸ்டர்களை ஒட்ட ஊர் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இங்கேயும் எந்த கட்சி அலுவகமும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு, இங்கே சிலர் போஸ்டர் ஒட்டிச்சென்று விட்டனர். மக்கள் கிழித்துவிட்டனர். இங்கேயும் கூட சில நேரங்களில் போஸ்டர் ஒட்டுவது, விளம்பரப் பலகைகள் வைப்பது உண்டு. ஆனால் காளப்பநாயக்கன்பாளையத்தில் இப்போது வரையிலும் மக்கள் எதையுமே சிறிதும் அனுமதிப்பதில்லை.” என்று பிபிசியிடம் கூறினார்.

உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின்போது வெவ்வேறு கட்சியினருக்கும் இடையே பிரசாரங்கள் செய்வதில் கடும் போட்டி இருந்தாலும், இந்த விஷயத்தில் மட்டும் யாருமே விட்டுக் கொடுப்பதில்லை எனறு பிபிசி தமிழிடம் தெரிவித்தார், சோமையம்பாளையம் முன்னாள் கிராம ஊராட்சித் தலைவர் ரங்கராஜ். அதிமுகவைச் சேர்ந்த இவர், கோவை வடக்கு மாவட்ட ஜெ.பேரவை செயலாளராகவுள்ளார்.

”காளப்பநாயக்கன்பாளையத்தில் மட்டுமின்றி, சோமையம்பாளையம், கஸ்தூரி நாயக்கன் பாளையத்திலும் கட்சிக்கொடிகள், ஆபீஸ் எதையும் பார்க்கமுடியாது. இங்கே வாகனங்களில் வந்தும், வீடு வீடாகவும் வாக்குக் கேட்கலாம். நோட்டீஸ் கொடுக்கலாம். தெருமுனை பிரசாரம் செய்யலாம். ஆனால் மற்ற அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளனர்.” என்றார் ரங்கராஜ்.

ஒன்றுபட்டு நிற்கும் அனைத்து அரசியல் கட்சியினர்

கோயம்புத்தூர், கட்சி அடையாளங்கள், தேர்தல், அரசியல்

கிராம ஊராட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சின்னங்களில் யாரும் போட்டியிடுவதில்லை என்றாலும், இந்த கிராம ஊராட்சியின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பதவி வகித்துள்ளனர். அரசியல் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் காளப்பநாயக்கன்பாளையம் ஊர் மக்களின் முடிவை யாரும் எதிர்ப்பதில்லை என்கின்றனர் இவர்கள்.

பிபிசி தமிழிடம் பேசிய லாரி உரிமையாளர் ஓம்சக்தி மணி, ”நான் இந்த கிராமத்துக்கு வந்து 40 ஆண்டுகளாகி விட்டது. அப்போதிலிருந்து பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இங்கே வார்டு உறுப்பினர்களாக மாறிமாறி இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் நிறைய சண்டை, சச்சரவுகளும் நடந்திருக்கின்றன. ஆனால் யாருமே கட்சி ஆபீஸ் அமைக்கவோ, கொடி கட்டவோ தங்கள் கட்சிக்காரர்களை அனுமதிப்பதில்லை.” என்றார்.

”சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியூரிலிருந்து வந்த சிலர் இங்கே அரசியல் விளம்பரம் வைக்க முயற்சி செய்தனர். அப்போது, அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து, நீங்களாக எடுக்காவிட்டால் நாங்களே எடுத்துவிடுவோம் என்று கூறியதால் அவர்களே எடுத்துவிட்டனர். ஊர் மக்களின் வேண்டுகோளை நிராகரித்தால் தங்களுக்குதான் பாதிப்பு என்று அரசியல் கட்சியினரும் அதை மீறுவதில்லை.” என்றார் அவர்.

அரசியல் விளம்பரங்கள், கட்சி அலுவலகங்கள், கட்சிக்கொடிகள் போன்றவற்றை அனுமதிக்காத காளப்பநாயக்கன்பாளையத்தில் தேர்தல் வேளையில் கட்சிகள், வேட்பாளர்களின் பரப்புரை களைகட்டும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒப்பீட்டளவில் காளப்பநாயக்கன்பாளையத்தில் அதிக அளவு வாக்குகள் பதிவாகும் என்கிறார் முன்னாள் கிராம ஊராட்சித் தலைவர் ஆனந்த்.

”கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் இந்த கிராம ஊராட்சி இடம் பெற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள எல்லாத் தேர்தல்களிலுமே, தொகுதி சராசரியை விட காளப்பநாயக்கன்பாளையத்தில் ஒன்றிரண்டு சதவீதம் வாக்குப்பதிவு அதிகமாகத்தான் நடந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பிற தேர்தல்களிலும் இங்குள்ள மக்கள் ஜனநாயகக் கடமையாற்றிவிடுவார்கள்.” என்றார் ஆனந்த்.

சோமையம்பாளையம் கிராம ஊராட்சிப் பகுதி, கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே, இந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரை தயாரிக்கப்பட்டது. ஆனால், விவசாயம் அதிகமாக நடப்பதாலும், 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் பயன்பெற வாய்ப்பு கிடைக்காது என்பதாலும் சோமையம்பாளையத்தை கோவை மாநகராட்சியில் சேர்க்கக்கூடாது என்று கிராம ஊராட்சி நிர்வாகம் அந்த பரிந்துரையை ஏற்க மறுத்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது.

கோவை மாநகராட்சியுடன் இணைந்தால் நிலைமை மாறுமா?

கோயம்புத்தூர், கட்சி அடையாளங்கள், தேர்தல், அரசியல்

கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட கோவை மாஸ்டர் பிளானின்படி, சோமையம்பாளையம் கிராம ஊராட்சியில் 66 சதவீதம் வேளாண்மை மற்றும் குடியிருப்புப் பகுதியாகவும், 33 சதவீதம் பகுதி வணிகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைப் பகுதியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகள் மலைப்பகுதியாகவுள்ளன.

கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையம் மற்றும் குப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகள் மட்டுமே நகரமயமாகிவிட்டதாகக் கூறும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், கிராம ஊராட்சி முழுவதையும் மாநகராட்சியுடன் சேர்ப்பது அவசியமற்றது என்கின்றனர்.

ஆனால் சோமையம்பாளையத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பெயர் கூற விரும்பாத ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒருவர், ”கோவையின் நகரமயமாக்கல் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்ட பகுதிகள் பட்டியலில் (Peri-Urban List) சோமையம்பாளையம் இடம் பெறவில்லை. ஆனால் இதை மாநகராட்சியுடன் இணைக்க முயற்சி நடக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியுடன் இணைந்த வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளே இன்னும் வளர்ச்சியடையவில்லை.” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சோமையம்பாளையம் கிராம ஊராட்சி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் இத்தகைய ஒழுங்குமுறையை தொடர முடியுமா என்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

”சோமையம்பாளையத்தை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்று தெரியவில்லை. அப்படியாகிவிட்டால் அதன்பின்பு நிலைமை என்னவாகும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஊர் மக்கள் ஒன்றாக இருக்கும் வரையிலும் இதனை காப்பாற்ற முடியுமென்று நினைக்கிறோம்.” என்றார் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் ஆனந்த்.

இந்த கிராம ஊராட்சி, வடவள்ளி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியாகவுள்ளது. வடவள்ளி காவல்நிலையம், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே, கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டது.

பிபிசி தமிழிடம் பேசிய வடவள்ளி காவல் ஆய்வாளர் சாரதா, ”நான் சமீபத்தில்தான் இங்கே மாறுதலாகி வந்தேன். தேர்தல் நெருங்கும் நிலையில், இப்போது வரையிலும் காளப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து இதுபோன்று எந்தப் புகாரும் வரவில்லை. அதற்கு முன்பாகவும் பல்வேறு தேர்தல்களிலும் ஊர் மக்கள் கூடி எடுத்ததாக கூறப்படும் முடிவு குறித்து அந்த ஊரிலிருந்து எந்தப் புகாரும் வந்ததில்லை என்றே தெரிகிறது.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU