Home தேசிய national tamil கே.எல்.ராகுல் புதிய சாதனை: கடந்த சீசனில் தன்னை திட்டிய லக்னௌ உரிமையாளருக்கு களத்திலேயே பதிலடி

கே.எல்.ராகுல் புதிய சாதனை: கடந்த சீசனில் தன்னை திட்டிய லக்னௌ உரிமையாளருக்கு களத்திலேயே பதிலடி

3
0

SOURCE :- BBC NEWS

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 40-வது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கடந்த சீசனில் மைதானத்திலேயே தன்னைத் திட்டிய லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளர் கோயங்காவுக்கு தனது சிறப்பான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் களத்திலேயே பதிலடி கொடுத்தார். அத்துடன், கே.எல்.ராகுல் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

சிறப்பான தொடக்கத்தை பயன்படுத்த தவறிய லக்னெள

லக்னெள அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மிட்ஷெல் மார்ஷ், மார்க்ரம் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த சீசனில் 5வது முறையாக 50 ரன்களுக்கும் மேல்பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். 87 ரன்கள் சேர்த்த இந்த இணை 10-வது ஓவரில் தான் பிரிந்தது.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

அதிரடியாக ஆடிய மார்க்ரம் 33 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் இருந்து லக்னெளவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அக்ஸர் படேல் பந்துவீசினார், இதனால் பெரிய அளவுக்கு ஷாட்களை மார்க்ரம், மார்ஷால் ஆட முடியவில்லை. அருமையாகப் பந்துவீசிய அஸ்கர் படேல் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 10 ஓவர்களுக்குள் தனது ஸ்பெல்லை முடித்துவிட்டார்.

10 ஓவர்களுக்கு மேல் குல்தீப் யாதவ் 4 ஓவர்களை வீசி லக்னெள பேட்டர்களுக்கு நெருக்கடியளித்தார். இதனால் முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்த லக்னெள அணி அடுத்த 10 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

கடந்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய நிகோலஸ் பூரன் 9 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் போல்டாகினார். டி20 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் 5 முறையாக பூரனை ஸ்டார்க் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

ரிஷப் பந்த் களமிறங்க வேண்டிய இடத்துக்கு வந்த அப்துல் சமது 2 ரன்னில் முகேஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்ஷ் 45 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் ‘க்ளீன் போல்டானார்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

87 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த லக்னெள அணி, அடுத்த 23 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஸ்கோரை உயர்த்தினர். பதோனி 36 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் ஓவரில் போல்டாகினார். கடைசி 2 பந்துகள் இருக்கும் போது களமிறங்கிய ரிஷப் பந்த் முகேஷ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

தொடக்க ஆட்டக்காரர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தை பயன்படுத்த நடுவரிசை பேட்டர்கள் தவறவிட்டனர். வழக்கமாக 4வது இடத்தில் களமிறங்க வேண்டிய ரிஷப் பந்த் ஏன் கடைசி நேரத்தில் களமிறங்கினார் என்பதும் புரியவில்லை. முக்கியமான கட்டத்தில் பரிசோதனை முயற்சி செய்து லக்னெள அணி ஆபத்தில் சிக்கியது.

டெல்லி அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஸ்டார்க், சமீரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். குல்தீப், அக்ஸர் படேல் இருவரும் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும் லக்னெள ரன் ரேட்டை உயரவிடாமல் கட்டுப்படுத்தியதில் இருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.

வேகப்பந்துவீச்சாளர்களும் லக்னெள பேட்டர்களை எளிதாக சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்கவிடவில்லை. லக்னெள பேட்டர்கள் நேற்று 4 சிக்ஸர்களும், 14 பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

கே.எல்.ராகுலின் பதிலடியும் சாதனையும்

கடந்த சீசனில் லக்னெள அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை, அணியின் உரிமையாளர் கோயங்கா மைதானத்திலேயே கடுமையாகப் பேசினார். கே.எல்.ராகுலுக்கு அணியின் உரிமையாளரிடம் இருந்தே கடும் நெருக்கடி வந்தது. ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுலை கழற்றிவிட்ட லக்னெள ரூ.24 கோடி கொடுத்து ரிஷப் பந்தை வாங்கி கேப்டனாக்கியது. ஆனால், கே.எல்.ராகுலை டெல்லி கேபிடல்ஸ் வாங்கி சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.

இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்கு சிறந்த நடுவரிசை, 3வது வீரராகவும் களமிறங்கி அருமையான ஃபினிஷிங் ரோலை கே.எல்.ராகுல் செய்து வருகிறார். இந்த சீசனில் 3வது அரைசதத்தையும் கே.எல்.ராகுல் நேற்று அடித்தார். கடந்த முறை லக்னெளவுக்கு எதிராக டெல்லி மோதிய போது தனக்கு குழந்தை பிறந்திருந்ததால் ராகுல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஆனால், தன்னை ஏலத்தில் நிராகரித்த லக்னெளவை நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தனது பேட்டிங்கால் பழிதீர்த்துவிட்டார். ஒன்டவுனில் களமிறங்கிய ராகுல் 40 பந்துகளில் அரைசதம் அடித்து 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் டெல்லி கேபிடல்ஸ் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

அபிஷேக் போரெலுடன் சேர்ந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப், அக்ஸர் படேலுடன் சேர்ந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் டெல்லி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து லக்னெள உரிமையாளருக்கு பதிலடி கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் கே.எல்.ராகுல் நேற்று 130 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை எட்டினார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் எந்த வீரரும் குறைந்த போட்டிகளில் இந்த அளவு ரன்களை எட்டியதில்லை. டேவிட் வார்னர் 135 போட்டிகளிலும் விராட் கோலி 165 போட்டிகளில் எட்டியதை ராகுல் விரைவாக எட்டி சாதனை படைத்தார்.

அது மட்டுமல்லாமல் இந்திய டி20 அணியில் தொடர்ந்து கே.எல்.ராகுல் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் அதிவிரைவு 5 ஆயிரம் ரன்கள் சாதனை நிச்சயம் தேர்வாளர்களுக்கு பெரிய கேள்வியாக இருக்கும்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

ஆட்டம் முடிந்ததும் களத்திலிருந்து வெளியேறிய லோகேஷ் ராகுலை லக்னௌ அணி உரிமையாளர் கோயங்கா அங்கேயே சென்று பாராட்ட முயன்றார். கோயங்கா மற்றும் அவரது மகன் ஷஸ்வத்துக்கு அவசரஅவசரமாக கைகொடுத்த லோகேஷ் ராகுல், கோயங்கா பேசியதை காதில் வாங்காதது போல் அவசரஅவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

லோகேஷ் ராகுலின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹனுமான் விஹாரி, லக்னௌ உரிமையாளருடன் அவர் கைகுலுக்கியதை ‘Cold Hand Shake’ என்று குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் லோகேஷ் ராகுல் கடந்த ஆண்டு லக்னௌ அணி கேப்டனாக இருந்த போது தோல்விக்காக அவரை கோயங்கா களத்திலேயே கடுமையாக திட்டியதையும், தற்போது அவரை பெரிதாக கண்டுகொள்ளாதது போல் ராகுல் சென்றதையும் ஒப்பிட்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தோல்விக்கு காரணமான ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்தின் தவறான கேப்டன்சி தான் லக்னெளவின் தோல்விக்கு மூலகாரணமானது. லக்னெள ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது, முதலில் பேட் செய்யும் அணி குறைந்தபட்சம் 180 ரன்களுக்கு மேல் அடிக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், லக்னெள அணி 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

இதற்கு முக்கியக் காரணம், தொடக்க வரிசை பேட்டர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தை நடுவரிசை பேட்டர்கள் பயன்படுத்தாததும், நடுவரிசையை மாற்றி அப்துல் சமதை களமிறக்கி, கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிஷப் பந்தின் முடிவும் தான் காரணம். கடந்த 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் அறிமுகத்துக்குப்பின் ரிஷப் பந்த் 7வது வரிசையில் நேற்று தான் களமிறங்கியுள்ளார்.

சிஎஸ்கே அணியில் தோனியைப் போன்று கடைசி நேரத்தில் களமிறங்கி ஃபினிஷிங் டச் செய்ய நினைத்தாரா அல்லது, பரிசோதனை முயற்சியா எனத் தெரியவில்லை.

இதற்கான ரிஷப் பந்த் விளக்கமும் தெளிவாக இல்லை. அவர் கூறுகையில் ” நாங்கள் ஸ்கோரை விரைவாக அதிகரிக்க நினைத்து, அப்துல் சமதை களமிறக்கினோம், விக்கெட் அப்படித்தான் இருந்தது. மில்லர் களமிறங்கிய பின் தேக்கமடைந்துவிட்டோம். எங்களின் சிறந்த பேட்டர்கள் வரிசையை விரைவில் கண்டறிவோம்” என்று விளக்கம் அளித்தார்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

அப்துல் சமதைவிட, ரிஷப் பந்த் மோசமான பேட்டரா, ரிஷப் பந்த் இந்த விக்கெட்டை பயன்படுத்தி அதிரடியாக ஸ்கோர் செய்யமாட்டாரா என்ற கேள்விகளை வர்ணனையாளர்கள் எழுப்பினர். அப்துல் சமது ஆட்டமிழந்த பின்பு கூட ரிஷப் பந்த் களமிறங்கியிருக்கலாம் ஆனால் அப்போது கூட அவர் களமிறங்காமல் மில்லரை அனுப்பியது மிகப்பெரிய தவறாக இருந்தது.

தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தவுடன் அதை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள சரியான பேட்டர்களை களமிறக்க வேண்டும், பெரிய பார்ட்னர்ஷிப்களை உருவாக்கும் வீரர்களை அந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.

ரிஷப் பந்த் நேற்றைய ஆட்டம் முழுவதும் கடும் குழப்பத்துடனே இருந்தார். கேட்சை நழுவிட்ட பிரின்ஸ் யாதவ், அப்துல் சமது இருவரையும் களத்திலேயே கடுமையாகத் திட்டினார். டிஆர்எஸ் ரிவியூ செய்வதிலும் பந்த் தாமதமாக செயல்பட்டார். கடந்த 7 இன்னிங்ஸ்களில் ரிஷப் பந்த் 108 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து பேட்டிங்கிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை.

லக்னெள அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

தோல்விக்கு ரிஷப் பந்த் கூறிய காரணம்

லக்னெள அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பேசுகையில் “நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாக இந்த மைதானத்தில் சேர்த்துவிட்டோம். டாஸ் முக்கிய பங்கு வகித்தது. முதலில் பந்துவீசும் அணிக்கு இந்த மைதானம் நன்கு உதவும். லக்னெளவில் இதுபோன்று எப்போதும் நடக்கும், 2வது இன்னிங்ஸில் விக்கெட் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். இந்த தவறுகளில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்.

ஆயுஷ் பதோனியை இம்பாக்ட் ப்ளேயராக பயன்படுத்தி, மயங்க் யாதவை கொண்டுவரத் திட்டமிட்டோம். அவரின் உடல்நிலை தேறி இப்போதுதான் வந்துள்ளார். நான் 7-வது வீரராகக் களமிறங்கியதற்கு காரணம், விக்கெட்டை சிறப்பாக பயன்படுத்தவே. அப்துல் சமதை அனுப்பினோம். மில்லர் வந்தபின் விக்கெட்டில் சிக்கிவிட்டோம். எங்களின் சிறந்த பேட்டர்கள் கலவையை அடுத்துவரும் போட்டிகளில் உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

லக்னெளவை நெருங்கும் ஆபத்து

இந்த வெற்றி மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் போட்டியிடுகிறது, நிகர ரன்ரேட்டில் குஜராத் அணியைவிட 0.600 புள்ளிகள் பின்னடைவுடன் 2வது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது.

அதேசமயம், லக்னெள அணி 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது. 10 புள்ளிகளுடன் பஞ்சாப், ஆர்சிபி அணிகளுடன் லக்னெளவும் மல்லுக்கட்டுகிறது.

ஆர்சிபி, பஞ்சாப் நிகர ரன்ரேட் பிளஸில் இருக்கும்போது, லக்னெளவின் ரன்ரேட் 10 புள்ளிகள் பெற்றாலும் மைனசில் இருப்பது ஆபத்தாகும். லக்னெளவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் முன்னேறி வரும் மும்பை அணி 8 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது.

இன்னும் ஒரு வெற்றியை மும்பை பெற்றால், 10 புள்ளிகளுடன் லக்னெளவை பின்னுக்குத் தள்ளி 4 அல்லது 3வது இடத்தை நோக்கி நகர்ந்துவிடும். ஆதலால், லக்னெள அணியின் நிலைமை அடுத்துவரும் போட்டிகளில் பெறும் வெற்றியைப் பொருத்து மாறும்.

ஐபிஎல் கூடுதல் விவரம்

இன்றைய ஆட்டம்

  • சன்ரைசர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம்: ஹைதராபாத்
  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத்
  • நாள் – ஏப்ரல் 25
  • இடம் – சென்னை
  • நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்
  • நாள் – ஏப்ரல் 27
  • இடம் – மும்பை
  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • நாள் – ஏப்ரல் 24
  • இடம் – பெங்களூரு
  • நேரம்- மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 417 ரன்கள் (8 போட்டிகள்)
  • நிகோலஸ் பூரன் (லக்னெள)- 377 ரன்கள் (8 போட்டிகள்)
  • ஜோஸ் பட்லர் (குஜராத்)- 356 ரன்கள் (8 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்)- 16 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)
  • குல்தீப் யாதவ் (டெல்லி)- 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
  • நூர் அகமது(சிஎஸ்கே)- 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU