Home தேசிய national tamil கேகேஆர் அணிக்கு எதிராக 226 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கேகேஆர் அணிக்கு எதிராக 226 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

7
0

SOURCE :- BBC NEWS

நைட் ரைடர்ஸுக்கு எதிராக 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார் அபிஷேக் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

2 ஏப்ரல் 2026, 13:47 GMT

புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் ஆறாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் இந்த போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் இங்கு நடக்கும் முதல் ஐபிஎல் போட்டி இது.

இவ்விரு அணிகளுமே தங்களின் முந்தைய போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தன. அதனால் இன்று முதல் வெற்றிக்காக நிச்சயம் கடுமையாகப் போராடுவார்கள்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்

பட மூலாதாரம், Getty Images

பவர்பிளேவில் அதிரடி காட்டிய அபிஷேக் & ஹெட்

வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் சன்ரைசர்ஸ் ஓப்பனர்கள் அபிஷேக் ஷர்மா & டிராவிஸ் ஹெட் ஆகியோர் நிதானமாக ஆடினார்கள். அதனால் அந்த ஓவரில் 6 ரன்கள் வந்தது.

ஆனால், முசர்பானி வீசிய இரண்டாவது ஓவரில் இருந்து தங்கள் வழக்கமான அதிரடியை அவர்கள் தொடங்கினார்கள். முசர்பானியின் அந்த ஓவரில் ஹெட் 2 பவுண்டரிகளும், அபிஷேக் 1 சிக்ஸரும் அடித்தனர். வைபவ் அரோரா வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்தார் ஹெட்.

3 ஓவர்களில் 43 ரன்கள் வந்துவிட, நான்காவது ஓவரில் நரைனைப் பந்துவீசச் செய்தார் ரஹானே.

அந்த ஓவரில் பொறுமையாக ஆடிய சன்ரைசர்ஸ் ஓப்பனர்கள் 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சுழலுக்கு எதிராக அவர்கள் மெதுவாக ஆடியதால், அடுத்த ஓவரை வருணுக்குக் கொடுத்தார் நரைன். அதன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அபிஷேக், அந்த ஓவரில் மேலும் 1 சிக்ஸரும் 3 பவுண்டரிகளும் அடித்தார். அந்த ஓவரில் 25 ரன்கள் எடுக்கப்பட்டது.

ஆறாவது ஓவரை கார்த்திக் தியாகி வீசினார். அதில் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடித்த ஹெட் அதே ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

இந்த இருவரின் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பவர்பிளேவில் 1 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் எடுத்தது.

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்

பவர்பிளே முடிந்த அடுத்த இரு ஓவர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் கேப்டன் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடி காட்டினார்கள். ஆனால், அவர்கள் இருவருமே பிளெஸிங் முசர்பானி வீசிய ஒன்பதாவது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.

அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருடைய கேட்ச்சை பவுண்டரி எல்லையில் டைவ் அடித்து சிறப்பாகப் பிடித்தார் வருண் சக்கரவர்த்தி.

அனுகூல் ராய் வீசிய பத்தாவது ஓவரில் அனிகேத் வெர்மாவும் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது.

அணியை மீட்ட கிளாசன் – நித்திஷ் கூட்டணி

இந்த சீசனில் தன்னுடைய முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார் கிளாசன்

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நெருக்கடிக்கு உள்ளானது. அப்போது ஜோடி சேர்ந்த ஜெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் இருவரும் அணியை அதிலிருந்து மீட்டார்கள்.

அவர்கள் சற்று நிதானமாக விளையாடினாலும் சரியான இடைவெளியில் பவுண்டரிகளும் அடித்தார்கள். முடிந்த வரை அனைத்து பந்துகளிலும் சிங்கிள், டபுள் எடுத்தார்கள். அப்படி அடித்துவிட்டு இடையே ஓரிரு பவுண்டரிகள் வந்ததால், எப்படியும் ஓவருக்கு 8,9 ரன்களுக்கும் குறையாமல் வந்தது. அதனால் ரன்ரேட் வெகுவாகக் குறையவில்லை. இந்த ஜோடி 34 பந்துகளில் 50 ரன்களை எட்டியது.

39 ரன்கள் எடுத்திருந்த நித்திஷ் ரெட்டி வைபவ் அரோராவின் பந்துவீச்சில் 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சலில் அரோரா முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் ஹர்ஷ் துபே, கிளாசன் இருவரும் அதிரடி காட்டியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.

கிளாசன் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் முசர்பானி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

டாஸில் நடந்தது என்ன?

டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, “நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். எப்போதும் முன்னேற்றத்திற்கு இடமுண்டு, ஆனாலும் முதல் போட்டியில் நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தன. பொதுவாக புற்கள் மற்றும் மழையை இந்த அளவிற்கு நாங்கள் பார்ப்பதில்லை, அதனால்தான் முதலில் பந்துவீச விரும்பினோம். 40 ஓவர்களுக்கும் ஆடுகளம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கேமரூன் கிரீன் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். அவர் விரைவில் பந்துவீசுவார்.” என்று தெரிவித்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் இஷான் கிஷன், “நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். ஆனால் முதலில் பேட்டிங் செய்வதால், பந்தின் தன்மையைப் பார்த்து அதற்கு ஏற்றவாறு விளையாட வேண்டும். எங்களுக்கான சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ஒருவேளை சூழல் சாதகமாக இல்லையென்றாலும் நாங்கள் நிதானமாக இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க முயற்சிப்போம். கம்மின்ஸ் எப்போது வருவார் என்று இன்னும் தெரியவில்லை, ஆனால் விரைவில் தயாராகிவிடுவார்; பேட்டிங்கிலும் அவர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்.” என்று கூறினார்.

ஐபிஎல் 2026: கொல்கத்தா நைட் ரைடர்ச் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

விளையாடும் வீரர்கள் யார்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பிளேயிங் லெவன்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேமரூன் கிரீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ரமன்தீப் சிங், அனுகூல் ராய், சுனில் நரைன், வைபவ் அரோரா, பிளெஸிங் முசர்பானி, வருண் சக்கரவர்த்தி, கார்த்திக் தியாகி

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஃபின் ஆலன், மனிஷ் பாண்டே, தேஜஸ்வி சிங், சௌரப் துபே, ராவ்மன் பவல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பிளேயிங் லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் (கேப்ரன் & விக்கெட் கீப்பர்), ஹெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி, அனிகேத் வெர்மா, சலில் அரோரா, ஹர்ஷ் துபே, ஷிவாங் குமார், டேவிட் பெய்ன், ஜெய்தேவ் உனத்கட்,

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஹர்ஷல் பட்டேல், லியாம் லிவிங்ஸ்டன், இஷான் மலிங்கா, ஆர் ஸ்மரன், சகிப் ஹுசைன்.

கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் இல்லையென்று டாஸின்போது ரஹானே கூறியிருந்தார். அதனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் பேட்டிங் செய்யும்போது ஃபின் ஆலன் களமிறங்கக்கூடும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஷிவாங் குமாருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் கடந்த போட்டியில் ஆடிய ஹர்ஷல் பட்டேல், இஷான் மலிங்கா ஆகியோரில் ஒருவர் இந்தப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழப்பார்கள். அவர்கள் இருவருமே சப்ஸ்டிட்யூட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

முடிவுகள் இதுவரை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் (ரன்ரேட்: – 0.687) இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. 2.907 என்ற ரன்ரேட் கொண்டிருக்கும் அந்த அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU