SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Valentina Sinis
இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்ந்து வரும் நிலையில், இராக்கை தளமாகக் கொண்ட ஆயுதமேந்திய இரானிய குர்திஷ் குழுக்கள் விரைவில் எல்லையைக் கடந்து இரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான போரில் ஈடுபடக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இரான் பல குர்திஷ் குழுக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது, இதில் ஒரு குர்திஷ் போராளி கொல்லப்பட்ட ஏவுகணைத் தாக்குதலும் அடங்கும். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்ச் 7 அன்று பேசுகையில் குர்திஷ்கள் இரானில் சண்டையிடுவதை விரும்பவில்லை என்று கூறினார்.
குர்திஷ் போராளிகளின் முழுவதும் பெண்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை அணுகுவதற்கான அரிதான வாய்ப்பை பிபிசி பெற்றது.
இரானிய குர்திஷ் போராளிகளுக்கான தளமாக வடக்கு இராக்கில் செயல்படும் ஆழமான குகைகள் மற்றும் நிலத்தடி சுரங்கப்பாதைகளுக்குள் நுழைவதற்கு பல நாட்கள் காத்திருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.
அவர்கள் ஒரு ரகசிய தகவல் தொடர்பு வலையமைப்பை இயக்குகிறார்கள் மற்றும் குர்திஸ்தானின் பாதி தன்னாட்சி பெற்ற பகுதியில் கண்காணிப்புக்கு உட்பட்ட ஒரு சுயசார்பு வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
ஒரு பெண் புகைப்படக் கலைஞர் மட்டுமே வளாகத்துக்குள் நுழைந்து குர்திஷ்களுடன் பத்து நாட்கள் செலவிட அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்திய தசாப்தங்களில், இரானில் இருந்து பல குர்திஷ் கிளர்ச்சிக் குழுக்கள் எல்லையைத் தாண்டி இராக்கின் மலைகளுக்குச் சென்றுள்ளன.
அவர்கள் இரானிய உளவுத்துறை, இராக்கில் உள்ள ஷியா பிரதிநிதிகள் மற்றும் துருக்கியப் படைகளிடமிருந்து தலைமறைவாக உள்ளனர்.
சமீபத்தில், வடக்கு இராக்கில் உள்ள முக்கிய இரானிய குர்திஷ் குழுக்கள் ஒரு கூட்டணியை உருவாக்கினர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குர்திஷ் தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு போரில் சேருமாறு கேட்டுக்கொண்டதாக ஊகங்கள் எழுந்துள்ளன.
மார்ச் 5 அன்று ராய்ட்டர்ஸுக்கு டிரம்ப் அளித்த தொலைபேசி நேர்காணலில், இரானில் குர்திஷ் தாக்குதலை ஆதரிப்பதாகக் கூறினார், “அவர்கள் அதைச் செய்ய விரும்பினால் அது அற்புதம் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
இருப்பினும், அமெரிக்க அதிபர் சனிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இரானிய நிலப்பரப்பில் குர்திஷ் படைகள் வேண்டாம் என்று கூறினார்.
“போரை ஏற்கெனவே இருந்ததை விட சிக்கலானதாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சு தொடர்வதற்கு நடுவே, இரான் பல குர்திஷ் குழுக்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்கியது, அதில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு போராளி கொல்லப்பட்டார்.
மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குர்திஷ் குழுக்களில் ஒன்று குர்திஸ்தானின் சுதந்திர வாழ்க்கைக் கட்சி (PJAK), அவர்கள் இரானில் மீண்டும் கால் பதிக்க பல ஆண்டுகளாகத் தயாராகி வருவதாகக் கூறுகிறார்கள்.
“நான் என் குடும்பத்துக்காகவும், நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட குர்திஷ் மக்களுக்காகவும் போராடுகிறேன்,” என்று 21 வயது பெண் போராளியான ஆரியன் கூறுகிறார்.
அவர் பிஜேஏகேவில் உள்ள பெண்கள் பாதுகாப்புப் படைப் பிரிவின் உறுப்பினராக உள்ளார்.
ஒரு குர்து இனத்தவராக, ஆரியன் இரானில் அநீதி மற்றும் பாகுபாட்டை அனுபவித்ததாகவும், ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகிறார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேஏகேவில் சேர்ந்தார்.
ரகசிய ராணுவ தளங்களில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Valentina Sinis
இந்த சுரங்கங்கள் உணவு, பணம் மற்றும் வெடிமருந்து கிடங்குகளுடன் கூடிய பாதுகாப்பான புகலிடங்களாகும்.
பிஜேஏகே தனது போராளிகளின் எண்ணிக்கையை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது, ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இரானுடனான போரை தொடங்குவதற்கு முன்பே பெரும்பாலும் பெண்களைக் கொண்ட சுமார் 60 போராளிகள் இந்த தளத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
போராளிகளுக்கு ராணுவப் பயிற்சிகள், சித்தாந்த அமர்வுகள், துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன்களை கையாளுதல் போன்ற பல்வேறு திறன்களைப் பயிற்சி செய்கிறார்கள்.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்ங்கள் அதிகரித்த சூழலில், எல்லையை நோக்கி அனுப்பப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்கள் மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.
“இந்தப் போர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று” என்று 40 வயதான கெலாவெஜ் எவ்ரின் பிபிசியிடம் கூறினார்.
20 வயதில், எவ்ரின் இரானிய நகரமான உர்மியாவில் தனது புவியியல் படிப்பை கைவிட்டு, ஒரு காலாட்படை வீரராக பிஜேஏகேவில் சேர்ந்தார். பின்னர் அவர் ஒரு செய்தித் தொடர்பாளராக ஆனார்.
ரகசிய குகைகளில் ஒன்றிலிருந்து பேசிய எவ்ரின், தனது வாழ்நாளில் பாதியை இந்த மலைகளில் கழித்ததாகவும், தான் போராளியாக சென்றதிலிருந்து தனது குடும்பத்தைப் பார்க்கவில்லை என்றும் கூறுகிறார்.
தற்போதைய தாக்குதல்களில் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி இறந்திருக்கலாம் என்றாலும், இரான் முழுவதும் 2022 இல் தொடங்கிய பெண்கள் தலைமையிலான தொடர் போராட்டங்கள் ஏற்கெனவே இஸ்லாமிய குடியரசை பலவீனப்படுத்தியிருப்பதாக அவர் கூறுகிறார்.
பெண்கள் தலையை மூடும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதிகளைப் பின்பற்றாததற்காக இரானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 22 வயது மஹ்சா அமினி என்ற குர்திஷ் பெண்ணின் மரணத்தால் ஏற்பட்ட அமைதியின்மையை அவர் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Valentina Sinis
பெண்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு
‘பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்’ என்ற பெயரில் இயக்கமாக பரிணமித்த போராட்டங்கள் மீது, இரானிய அதிகாரிகள் கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டனர். ஆனால் அது சில புதிய பிஜேஏகே உறுப்பினர்களுக்கு ஒரு உத்வேகமாகவே அமைந்தது.
PJAK-வில் சேருவதற்கு முன்பு, 18 வயதான பிகென் வெகுஜன போராட்டங்களில் பங்கேற்றார் மற்றும் பள்ளியில் ஹிஜாப் அணிய மறுத்து, ஒரு சிவில் ஒத்துழையாமையில் ஈடுபட்டார்.
“பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை,” என்று பிகென் ஒரு சக போராளியின் தலைமுடியை மெதுவாக பின்னிக் கொண்டே கூறுகிறார்.
“நாங்கள் வீட்டு வன்முறை மற்றும் சமூக கட்டுப்பாடுகளை அனுபவிக்க வேண்டும், அல்லது புரட்சி மூலம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.” என்கிறார் பிகென்.
குர்திஷ் கிளர்ச்சிக் குழுக்கள் பெரும்பாலும் குழந்தைகளை படையில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறார்கள், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிகென் கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்தபோது ,இரானில் ஒரு பள்ளி மாணவியாக இருந்தார். இங்குள்ள பல போராளிகள் தங்களுக்கு ஆயுதமேந்திய எதிர்ப்புதான் ஒரே வழி என்று கூறுகிறார்கள்.
“குர்திஷ் மக்களின் அடுத்த தலைமுறைக்கு சுதந்திரமான எதிர்காலத்தைப் பெறுவதற்கானதே எனது போராட்டம்,” என்று 23 வயதில் கெரில்லா போராளியாக மாறிய பல் மருத்துவர் டெலால் கூறுகிறார்.
“குர்திஷ் மக்களுக்கு… கடந்த இருநூறு ஆண்டுகள் அடக்குமுறை மற்றும் வன்முறையால் அறியப்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
பிஜேஏகே 2004 இல் உருவாக்கப்பட்டது மற்றும் துருக்கிய அரசுடன் நான்கு தசாப்த கால மோதலுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆயுதங்களை ஒப்படைத்த துருக்கியில் உள்ள ஒரு பிரிவினைவாத குழுவான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் (PKK) இணைக்கப்பட்டது.
இந்த முடிவை மதிக்கிறோம் என்று பிஜேஏகே கூறியது, ஆனால் இரானிய குர்துகள், அந்நாட்டின் இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பைத் தொடருவார்கள்.
துருக்கி மற்றும் இரான் இரண்டும் பிஜேஏகேவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கின்றன.
துருக்கி பாதுகாப்பு அமைச்சகம், “பிஜேஏகே என்ற பயங்கரவாதக் குழுவின்” செயல்பாடுகளை கண்காணிப்பதாகக் கூறுகிறது, இது இனப் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அது குற்றம் சாட்டுகிறது.

உள்நாட்டுப் போர் குறித்த அச்சம்
பட மூலாதாரம், Valentina Sinis
குர்திஷ் போராளிகள் தங்களுக்கு முன்னால் உள்ள சவாலின் தன்மையை அறிந்திருக்கிறார்கள். ஒருவேளை இரானின் இஸ்லாமிய குடியரசின் நன்கு ஆயுதம் ஏந்திய படைகளுடன் நேரடி மோதலுக்கான வாய்ப்பு கூட இருக்கலாம்.
“ஒரு உள்நாட்டுப் போரை எதிர்கொள்ள மாட்டோம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று எவ்ரின் பிபிசியிடம் கூறுகிறார்.
“போரை ஆட்சியின் வீழ்ச்சியை நோக்கி வழிநடத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், இதனால் போர் நம்மை நோக்கித் திசைதிருப்பப்பட்டு எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டிய கட்டாயம் ஏற்படாது,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
“மத்திய கிழக்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது, இரான் மக்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்காலத்திற்காக ஒரு முடிவை எடுக்க வேண்டும்.” என்கிறார் எவ்ரின்.
இரானிய எதிர்க்கட்சி குழுக்கள் இந்தப் போரிலிருந்து இரான் பிராந்தியத்தில் ஜனநாயகத்தின் ஒரு உதாரணமாக வெளிவரும் என்று நம்புகின்றன, ஆனால் தேசியவாத சக்திகள் வெற்றி பெற்றால் அது மாறுபட்ட சுழற்சியாக இருக்கும் என்று அஞ்சுகின்றன.
இரானின் சுமார் 9 கோடி மக்கள்தொகையில் குர்துகள் 10% வரை உள்ளனர், மேலும் அவர்கள் பல தசாப்தங்களாக இஸ்லாமியக் குடியரசால் ஓரங்கட்டப்பட்டு துன்புறுத்தப்படுவதாக உணர்ந்தனர். அது முதலே இராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் வாழும் இவர்கள் மீது, இரானிய அரசு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
குர்திஷ் குழுக்கள் அமைத்திருக்கும் புதிய கூட்டணியின் தலைவர்களிடம் பிபிசி பேசியதுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான பேச்சு குறித்து அவர்களிடம் கேட்டது, ஆனால் அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் படைகள் இதுவரை இரானின் எல்லையைத் தாண்டியுள்ளதாக வந்த செய்திகளை நிராகரித்தனர்.
இருப்பினும், இரானிய மண்ணில் ஏற்கனவே “குறிப்பிடத்தக்க” ஆயுதப் படைகள் இருப்பதாகவும், அவர்கள் செயல்பட சரியான தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் பிஜேஏகே கூறுகிறது.
“எங்கள் ராணுவ ஈடுபாடு அடுத்த சில நாட்களில் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பொறுத்தது” என்று ஒரு தலைவர் பிபிசியிடம் கூறினார்.
அமெரிக்கா மீது சந்தேகம்
பட மூலாதாரம், Valentina Sinis
மற்ற இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், பல்வேறு வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாகவும் கூறுகின்றன.
இரானிய குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் (KDPI) தலைவர் முஸ்தபா ஹிஜ்ரி, “மாற்றத்திற்குட்பட்ட காலத்தில் இரானிய குர்திஸ்தானை நிர்வகிப்பது” தங்கள் பணி என்று கூறுகிறார், மேலும் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய பழிவாங்கலில் இருந்து விலகி இருக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில், சில குர்திஷ் போராளிகள் வரவிருக்கும் எந்தவொரு போரிலும் அமெரிக்க ஆதரவை நம்பியிருக்க முடியுமா என்று சந்தேகிக்கின்றனர்.
இரானிய குர்திஷ் போராளிகளை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் பிபிசியிடம் பேசுகையில், அமெரிக்க விமானப்படையின் உத்தரவாதமான ஆதரவு இல்லாவிட்டால், எதிர் குழுக்கள் தரையில் படைகளை நகர்த்தாது என்று கூறினார்.
இரானிய இராணுவம் வலுவாக உள்ளது என்றும், குர்திஷ் போராளிகள் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் “நொறுக்கும்” விளைவை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் நம்புகிறார்.
பெண்கள் பாதுகாப்புப் படைகளின் பெண் போராளிகளுக்கு, அவர்கள் விரும்பும் ‘சுதந்திரம்’ வருவதற்கு நீண்ட காலம் ஆகிறது.
டெலால் இப்போது பயிற்சி தளங்களை விட்டு வெளியேறி எல்லைக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளார். இரானின் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான போரில் குர்துகள் இணைந்தால், எந்தப் போரும் எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை அறிய வழி இல்லை.
வாலண்டினா சினிஸின் கூடுதல் செய்திகளுடன்
பெண் போராளிகள் தங்கள் உண்மையான பெயர்களைக் கொடுக்கவில்லை, பாதுகாப்பை உறுதி செய்ய இராணுவ அழைப்பு அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிபிசி தமிழுடன் பகிருங்கள்
இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



