Home தேசிய national tamil குஜராத்: இளங்கலை இந்து சமய ஆய்வுகள் படிப்புக்கு சிக்கல் – நான்கே ஆண்டுகளில் என்ன நடந்தது?

குஜராத்: இளங்கலை இந்து சமய ஆய்வுகள் படிப்புக்கு சிக்கல் – நான்கே ஆண்டுகளில் என்ன நடந்தது?

9
0

SOURCE :- BBC NEWS

குஜராத், மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்,  இந்து சமய ஆய்வுகள்

பட மூலாதாரம், Hardik

வடோதராவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் (எம்.எஸ். பல்கலைக்கழகம்) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்து சமய ஆய்வுகள் படிப்புகள் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

படிப்பை நடத்துவதற்கான நிர்வாக ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. மேலும் பேராசிரியர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இருப்பினும், பேராசிரியர்களின் ஊதியம் போன்ற பிரச்னைகள் சமீபத்தில் ‘தீர்க்கப்பட்டுவிட்டன’ என்று எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் டீன் கல்பனா கவ்லி பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.

இந்தப் படிப்பு பலமுறை விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் பல முயற்சிகள் எடுத்தும், இந்தப் படிப்பில் மாணவர்கள் இல்லாதது எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் கீழ், எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் 2022-23 இல் இந்து சமய ஆய்வுகள் படிப்பு தொடங்கப்பட்டது.

இருப்பினும், இந்தப் படிப்பை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இதன் இருப்பு குறித்தே கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சர்ச்சையில் சிக்கியது எப்படி?

குஜராத், மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்,  இந்து சமய ஆய்வுகள்

பட மூலாதாரம், Hardik

இந்த படிப்பு திடீரென மூடப்பட்டால், தங்கள் படிப்பு பாதியிலேயே நின்றுவிடும் என்று கூறி இந்தப் படிப்பை படிக்கும் மாணவர்கள் சமீபத்தில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் படிப்பு எவ்வளவு தேவை என்பதை பல்கலைக்கழக நிர்வாகம் பார்க்கவில்லை என்பதுதான் மாணவர்களின் புகார். சரியாக நடத்தப்படாத காரணத்தால் இந்தப் படிப்பு வெறும் நான்கு ஆண்டுகளில் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளது.

இப்போது இந்தப் படிப்பின் நிலை என்னவென்றால், இதில் மொத்தமாக ஒரு டஜன் மாணவர்கள் கூட இல்லை.

எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் இந்து சமய ஆய்வுகள் இரண்டாம் ஆண்டு மாணவி முஸ்கான் கிரி , “முதல் ஆண்டில் இதில் எட்டு மாணவர்கள் சேர்ந்தனர். நான் உளவியல் படிப்பை விட்டுவிட்டு இந்த இந்து சமய ஆய்வுகள் படிப்பில் சேர்ந்தேன்.” என்று கூறினார்.

மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையில் உள்ளனர். இந்தப் படிப்பு நிறுத்தப்பட்டுவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

அவர்களின் கூற்றுப்படி, “படிப்பு தொடங்கப்பட்டது, ஆனால் அதை நடத்துவதற்கு முறையான ஏற்பாடுகள் இல்லை.”

“நாங்கள் சேர்ந்தபோது 25 மாணவர்கள் இருந்தனர். இந்தப் படிப்பு தொடங்கப்பட்ட பிறகு இது இரண்டாவது பேட்ச். காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம், அது சரிவர நிர்வகிக்கப்படாததுதான்,” என மஹக் என்ற மாணவி கூறினார்.

இந்து சமய ஆய்வுகள் படிப்பு பயிலும் மாணவி கலா ஜோஷிபுரா, “இந்தப் படிப்பில் சேரும் செயல்முறை எளிதானது அல்ல. இணையதளம் அடிக்கடி ஹேங் ஆகிவிடுகிறது.” என்கிறார்.

“இத்தகைய படிப்பைத் தொடங்கிய பிறகு, இதன் மீதும் கவனம் செலுத்த வேண்டும். நான் முதல் ஆண்டில் இருந்தபோது, இந்தப் படிப்பிலிருந்து நிறைய கற்றுக்கொள்வேன் என்று நினைத்தேன்,” என்கிறார் முஸ்கான் கிரி.

“இந்தப் படிப்பு மூடப்படும் நிலையை நோக்கிச் செல்கிறது என்றால், அது நிர்வாகத்திற்கு அவமானமான விஷயம்,” என்கிறார் எம்.எஸ். பல்கலைக்கழக மாணவர் வீரேந்திரசிங் சௌஹான்.

“பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ரஷ்ய மொழிப் படிப்புகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்றால், இந்து சமய ஆய்வுகள் படிப்பை நடத்துவதில் மட்டும் ஏன் சிக்கல் உள்ளது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

இதை எச்.பி.பி (Higher Payment Program) கீழ் வைப்பதற்குப் பதிலாக, வழக்கமான படிப்பில் சேர்க்க வேண்டும் என்றும், கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்து சமய ஆய்வுகள் படிப்பில் என்ன கற்பிக்கப்படுகிறது?

குஜராத், மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்,  இந்து சமய ஆய்வுகள்

பட மூலாதாரம், Hardik

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ், வடோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் கலைத் துறையில் இந்து சமய ஆய்வுகளில் பி.ஏ. ஹானர்ஸ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

  • எம்.எஸ். பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இது ஒரு உயர் கட்டணம் உள்ள படிப்பாகும். (Higher Payment Program).
  • 12-ஆம் வகுப்பு வரை படித்த எந்தப் பிரிவு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • சேர்க்கை முற்றிலும் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இணையதளத்தின்படி, இந்தப் படிப்புக்கான விண்ணப்பம் மற்றும் நுழைவுத் தேர்வு கட்டணம் 300 ரூபாய் ஆகும், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளுக்கான வருடாந்திர கட்டணம் 14,000 ரூபாய் ஆகும்.

இந்த மூன்று ஆண்டு கால இளநிலைப் பாடத்திட்டம் மொத்தம் ஆறு செமஸ்டர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் இந்து தத்துவ விவாதம் (Hindu Tatva-Vimarsa), இந்து தத்துவம், யோக சாஸ்திரம், பிராமண சித்தாந்தம் (Pramana Siddhanta), உபநிடதங்கள் மற்றும் வேதங்கள் குறித்த அறிமுகம் போன்ற பாடங்கள் அடங்கும்.

எம்.எஸ். பல்கலைக்கழக இணையதளத்தின்படி, அதன் பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், பகவத் கீதை, பக்தி இயக்கம் ஆகியவற்றுடன் சைவ சமயம், வைணவ சமயம் மற்றும் சாக்தம் போன்ற பாடங்கள் உள்ளன.

பாடத்திட்டத்தில் இந்து உளவியல், ஆயுர்வேதம், பொருளாதாரம் (அரசியல்), நாட்டிய சாஸ்திரம், காவிய சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் கட்டடக்கலை போன்ற பாடங்களும் அடங்கும்.

இந்தப் படிப்பு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைத்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருந்தாலும் இதில் இன்டர்ன்ஷிப் திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.

‘அடிப்படை வசதிகள் கூட இல்லை’

குஜராத், மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்,  இந்து சமய ஆய்வுகள்

பட மூலாதாரம், Hardik

பல்கலைக்கழகம் இந்தப் படிப்புக்காகத் தங்களுக்கு முறையான வகுப்பறையைக்கூட ஒதுக்கவில்லை என்று மாணவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகத் தங்கள் படிப்பிற்காகப் பல்கலைக்கழகத்திற்குள் ஒவ்வொரு இடமாக அலைய வேண்டியுள்ளதாக சொல்கின்றனர்.

“நிர்வாகம் இந்து சமய ஆய்வுகள் பாடப் பிரிவை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் விரிவுரைகளில் கலந்துகொள்ள வடோதரா சமஸ்கிருத மகாவித்யாலயாவிற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. நிலைமை எவ்வளவு மோசமாகிவிட்டது என்றால், பல நேரங்களில் மாணவர்கள் திறந்தவெளியில் அல்லது பூங்காக்களில் மரங்களுக்கு அடியில் புல்லில் அமர்ந்து படிக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, இங்கு கற்பிக்கும் பேராசிரியர்களுக்குத் தனி பணியாளர் அறை (Staff room) கூட இல்லை,” என முஸ்கான் கூறுகிறார்.

“இந்து சமய ஆய்வுகள் துறைக்கு பணியாளர் அறை இல்லை.” என்றார் கலா ஜோஷிபுரா .

இது குறித்து பிபிசி குஜராத்தி, எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் கலைப் பீட டீன் கல்பனா கவ்லியைத் தொடர்பு கொண்டது.

அவர் கூறுகையில், “எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் 2022-23 ஆம் ஆண்டில் இந்து சமய ஆய்வுகள் படிப்பு தொடங்கியது. காலப்போக்கில் இதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, எண்ணிக்கையைப் பராமரிப்பதிலும் சிரமம் உள்ளது.” என்றார்.

குஜராத், மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்,  இந்து சமய ஆய்வுகள்

மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பிபிசி குஜராத்தியிடம் கூறிய கவ்லி, “இது ஒரு ‘அதிக கட்டணம் கொண்ட படிப்பு’ என்பதால், மாணவர்கள் சேர்வதில் சில சிரமங்கள் உள்ளன. 2022-இல் இந்த படிப்பு தொடங்கப்பட்ட போது, அவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது, அது இப்போது 10 ஆகக் குறைந்துள்ளது,” என தெரிவித்தார்.

“இந்த ஆண்டு இந்தப் படிப்பில் அதிக மாணவர்கள் சேருவதை உறுதி செய்ய நான் மீண்டும் முயற்சிப்பேன். இது ஒரு உயர் கட்டண படிப்பு, இதனை மூன்று ஆண்டுகள் பயில வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தப் படிப்பு குறித்து விரிவான பிரச்சாரம் செய்வோம். பேராசிரியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும்,” என கவ்லி கூறுகிறார்.

வேலைவாய்ப்பிற்கான சாத்தியம் எவ்வளவு?

குஜராத், மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்,  இந்து சமய ஆய்வுகள்

பட மூலாதாரம், Hardik

“இந்தப் படிப்பு மாணவர்கள் கோயில் மேலாண்மை (Temple Management) துறையில் வேலை பெற உதவும். மாணவர்கள் சமஸ்கிருதக் கல்லூரிகள் மற்றும் குருகுலங்களிலும் வேலை பெறலாம்,” என கவ்லி கூறுகிறார்.

“நாங்கள் இன்டர்ன்ஷிப்பிற்காக மாணவர்களை வடோதராவில் உள்ள குருகுலத்திற்கும் அனுப்பியுள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்தப் படிப்பில் பேராசிரியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்காத பிரச்னையையும் மாணவர்கள் எழுப்பியுள்ளனர்.

“பேராசிரியர்களுக்குக் கூட உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை,” என மாணவி மஹக் கூறுகிறார்.

“கடந்த ஆண்டு இந்தப் படிப்பில் இரண்டு பேராசிரியர்கள் ஏழு பாடங்களைக் கற்பித்தனர். இந்த ஆண்டு நான்கு பேராசிரியர்கள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாவிட்டால், இந்தப் படிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்? இது உண்மையில் அவமானகரமானது,” என அவர் கூறுகிறார்.

“ஊதியம் கிடைக்காததால் பேசிரியர்கள் கவலையில் உள்ளனர். இந்தப் படிப்பு மூடப்படும் நிலையில் இருக்கும்போது, அதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும்,” என கலா ஜோஷிபுரா கூறினார்.

இது குறித்து டீன் கல்பனா கவ்லியிடம் பிபிசி கேட்டபோது, “பேராசிரியர்களின் ஊதியப் பிரச்னையை நாங்கள் தற்போதைக்குத் தீர்த்துவிட்டோம்” என்று கூறினார்.

பிபிசி இந்தப் படிப்பைக் கற்பிக்கும் பேராசிரியர்களைத் தொடர்பு கொண்டது, ஆனால் அவர்கள் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU