Home தேசிய national tamil காலனி என்ற சொல் தலித் மக்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது? அரசின் அறிவிப்பு அதை மாற்றுமா?

காலனி என்ற சொல் தலித் மக்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது? அரசின் அறிவிப்பு அதை மாற்றுமா?

4
0

SOURCE :- BBC NEWS

'காலனி என்றால் பாகுபாடும் ஏளனமும் தொடர்கிறது' - அரசின் அறிவிப்பு மாற்றத்தைத் தருமா?

பட மூலாதாரம், Getty Images

விழுப்புரம் மாவட்டம் ஜக்காம்பேட்டையை சேர்ந்த ஏழுமலைக்கு அப்போது 12 வயது இருக்கும். தனது நண்பர் வீட்டுக்குச் சென்ற அவர் அப்போதுதான் முதல்முறையாக அந்தக் கேள்வியை எதிர்கொண்டார்.

‘இவன் ஊரா, இல்லை காலனியா? வீட்டுக்கு உள்ளே அழைத்து வந்திருக்கிறாய்’ என அவரது நண்பரின் பெற்றோர் கேட்டுள்ளனர். சிறுவனாக இருந்த ஏழுமலைக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது எந்த பதிலும் அந்தச் சிறுவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.

அதன் விளைவாக, “நான் எந்தப் பகுதியைச் சேர்ந்தவனாக இருப்பேன் என்ற சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே நண்பனின் வீட்டில் எனக்கு ‘விருந்தோம்பல்’ நிகழ்ந்தது” என்று கூறுகிறார், தற்போது பல்பொருள் அங்காடி நடத்தி வரும் ஏழுமலை.

“பின்னர் பெரியவர்கள் பேசுவதன் மூலமாகத்தான் நான் ‘காலனி’யை சேர்ந்தவன் என்பதே தெரிய வந்தது. காலனி பகுதியைச் சேர்ந்தவன் என வெளியில் கூறினால் மக்களின் கண்ணோட்டமே வேறு மாதிரியாக இருக்கும். நான் ஒரு பல்பொருள் அங்காடி வைத்திருக்கிறேன், ஆனால் என் கடையில் பொருட்களை வாங்கக்கூட யோசிப்பார்கள்” என்கிறார் ஏழுமலை.

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் பொதுவாக ‘காலனி’ என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிகளை ‘ஊர்’ என்றும் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளை ‘காலனி’ என்றும் கூறுவது பல்லாண்டுக் காலமாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன.

“இது தலித் மக்களை இழிவுபடுத்தும் ஒரு சொல்லாட்சியாக இருப்பதாக” தலித் செயற்பாட்டாளர்கள் பலரும் தொடர்ச்சியாகக் கூறி வரும் நிலையில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை சட்டமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 29) மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின், “இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமையின் குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் மாறியிருப்பதால் இனி இந்தச் சொல்லை, அரசு ஆவணங்களில் இருந்தும் பொதுப் புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.

இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்படப் பல்வேறு தலித் இயக்கத்தினர் வரவேற்றுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் சட்டமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில், “காலனி என்ற சொல் இழிசொல்லாகக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருந்திருக்கிறது. இதை விசிக சார்பில் சுட்டிக்காட்டினோம். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் அந்த வார்த்தையை நீக்குவதற்கான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்” என்றார்.

“காலனி ஏகாதிபத்தியத்தில் இருந்துதான் இந்த வார்த்தை வருகிறது. காலனி என்பதை அடிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதன் நீட்சியாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது” என்கிறார் எழுத்தாளர் வாசுகி பாஸ்கர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சமூக புறக்கணிப்புகள்

‘காலனி’ என்ற சொல்லால், தாங்கள் தினசரி வாழ்வில் பாகுபாடுகளைச் சந்திக்க நேர்ந்ததாகக் கூறுகிறார் ஜக்காம்பேட்டையை சேர்ந்த ஏழுமலை.

“கடந்த 2006இல் நான் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்தேன். நல்ல திறமையுடன் அங்கு நான் வேலை பார்த்து வந்தேன். அப்போது பங்க் உரிமையாளர் என்னிடம் பங்கில் கேஷியர் இல்லாதபோது கவனித்துக் கொள்ளுமாறு கூறினார்.

அப்போது கேஷியர் அவரிடம், ‘அவன் காலனியை சேர்ந்தவன், கையாடல் செய்துவிடுவான், அவர்கள் கூட்டமே இப்படித்தான்’ என்றார். உடனே உரிமையாளர், ‘நாம் காலனியில் இருந்து வருபவர்களை வேலைக்குச் சேர்ப்பதில்லையே, எப்படிச் சேர்த்தீர்கள்?’ என்று கூறினார்” என விவரிக்கிறார் ஏழுமலை.

இது மட்டுமின்றி, கேஷியரின் அறைக்குள் செருப்பு அணிந்து செல்லக்கூடாது, பூஜை சாமான்களை துலக்கக்கூடாது, அறையின் உள்ளே சென்று பெருக்கக்கூடாது போன்ற பாகுபாடுகளும் பணியிடத்தில் நிலவியதாகக் கூறினார் அவர்.

‘காலனி’ என்ற சொல் இன்றும் தங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறுகிறார், திண்டிவனம் கர்னாவூரை சேர்ந்த இன்பராஜ். தன் ஊரில் செருப்புக் கடை ஒன்றை நடத்தி வருகிறார் அவர்.

தலித் மக்கள் வசிக்கும் இதுபோன்ற குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை அவர்கள் ஒவ்வொருமுறையும் பல போராட்டங்களுக்குப் பிறகே கேட்டுப் பெறும் நிலைதான் இன்றும் இருக்கிறது என்கிறார் சேகர் கிருஷ்ணசாமி

பட மூலாதாரம், Getty Images

“ஒரு கடையை வாடகைக்குக் கேட்டால்கூட என்ன ஊர் எனக் கேட்பார்கள். காலனி என்று சொன்னால் வாடகைக்கு கடை கொடுக்கக்கூட தயங்குவார்கள். சேரி, காலனி எனப் பெயர்தான் மாறுகிறதே தவிர, மனநிலை மாறவில்லை” என்கிறார் இன்பராஜ். அதனால்தான் ஊருக்கு மிகவும் ஒதுக்குபுறமாக உள்ள பகுதியில் கடை நடத்தி வருவதாகக் கூறுகிறார் இன்பராஜ்.

பள்ளியிலும்கூட ஆசிரியர்கள் ‘ஊரா, காலனியா’ என்று கேள்வி கேட்பார்கள் எனக் கூறும் இன்பராஜ், தலித் மாணவர்கள் நன்றாகப் படித்தாலும் ‘காலனி சிறுவன்தானே’ எனப் புறந்தள்ளுவார்கள் என்கிறார்.

“மற்ற குழந்தைகளிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள், தலித் மாணவர்களிடம் ஏளனமாக, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றுதான் நினைப்பார்கள்” என்கிறார் இன்பராஜ்.

‘காலனி என்பது என் முகவரி அல்ல’

நல்ல நிலைக்கு வந்துவிட்டாலும் இந்தப் பாகுபாடுகள் மாறவில்லை என்கிறார், அதே ஊரைச் சேர்ந்த ராதா ராஜகோபால்.

“சிறு வயதில் யாரவாது என்னைப் பார்த்து ஊரா, காலனியா எனக் கேட்டால், காலனி என்று சொல்வதற்கு மிகவும் தயக்கமாக இருக்கும். கர்னாவூர்தானே என் ஊர், அதைத்தானே நான் முகவரி என்ற இடத்தில் சொல்கிறேன், எழுதுகிறேன்.

ஏன் எங்களை காலனி எனப் பிரிக்கிறார்கள் என்ற கேள்வி எழும். ஊரா, காலனியா என்ற கேள்விதான் முதலில் எழும். இப்போது படித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டாலும் இன்னும் இந்தப் பாகுபாடு தொடர்கிறது” என்கிறார் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரியும் ராதா ராஜகோபால்.

சேகர் கிருஷ்ணசாமி

பட மூலாதாரம், Sekar Krishnasamy

தலித் மக்கள் வசிக்கும் இதுபோன்ற குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை அவர்கள் ஒவ்வொருமுறையும் பல போராட்டங்களுக்குப் பிறகே கேட்டுப் பெறும் நிலைதான் இன்றும் இருக்கிறது என்கிறார், 1996 முதல் பத்து ஆண்டுகள் (இப்போதைய) தென்காசி மாவட்டத்தின் கட்டளை குடியிருப்பின் பஞ்சாயத்து தலைவராக இருந்த சேகர் கிருஷ்ணசாமி.

“ஊரும் சேரியும் இன்னும் தனித்தனியாகத்தான் இருக்கிறது. அதை உயர்த்திப் பிடிப்பதாகத்தான் காலனி என்ற சொல்லைப் பார்க்கிறோம். பொதுவாக ஊருக்கு வெளியேதான் காலனிகள் இருக்கும்.

அதனால் அதற்கான சந்தை மதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றுக்கும் அங்குள்ள மக்கள் அலைய வேண்டும். தண்ணீர்ப் பிரச்னை வெகுவாக இருக்கும்” எனக் கூறும் சேகர், தற்போது செங்கோட்டை நூலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அடிப்படை வசதிகள்

தான் பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது தனக்கு நாற்காலி தருவது தொடர்பாக, வட்டார வளர்ச்சி அலுவலருடன் எழுந்த பிரச்னை குறித்து வழக்கு நடந்ததாகவும் அவர் கூறுகிறார்.

கோயம்புத்தூரில் தலித் குடியிருப்பைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் கூறுகையில், “காலனிகளின் பெயரை எடுத்துவிட்டு, வேறோரு பொதுவான பெயர்களை தலித் குடியிருப்புகளுக்குச் சூட்ட வேண்டும். காலனியை சேர்ந்தவன் எனக் கூறினாலே சாதிய கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பார்கள். நீங்கள் எம்பிபிஎஸ் படித்திருந்தால்கூட காலணியில் இருந்துதானே வருகிறார் என்று அவர்கள் நீதிபதியாகி உங்களை எடை போடுவார்கள். படிப்புக்குக்கூட மரியாதை தர மாட்டார்கள்” என்றார்.

‘மனநிலை மாற்றமே முக்கியம்’

வாசுகி பாஸ்கர்

பட மூலாதாரம், Vasuki Bhaskar

தலித் மக்கள் தாங்கள் வாழும் இடம் சார்ந்து சந்திக்கும் மற்ற பிரச்னைகள் குறித்து விரிவாகக் கூறினார், எழுத்தாளர் வாசுகி பாஸ்கர்.

“தலித் குடியிருப்பைச் சேர்ந்தவன் என்றால், வங்கிக் கடன் கேட்டால், அதை நிராகரிப்பார்கள். வங்கிக் கடனை சரியாகச் செலுத்துவார்களா என சந்தேகப்படுவார்கள். சேவைகளைப் பெறுவதில் சிக்கல் இருக்கும். குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழில் அந்தப் பெயரைப் பதிவு செய்வதில்கூட தயக்கம் இருக்கும். போலீஸ் விசாரணை என்றால், ‘நீ செய்திருப்பாய்’ என்ற ரீதியிலேயே விசாரணை இருக்கும்” என்கிறார் அவர்.

காலனி எனும் சொல்லை நீக்கும் அரசின் எண்ணம் வரவேற்கத்தக்கது என்றாலும் பெயரை மாற்றுவதால் மனநிலை மாறாது என்றும் சுட்டிக் காட்டுகிறார் அவர்.

தலித் குடியிருப்புகளில் மற்ற பகுதிகளைப் போன்றே வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தும்போதுதான் மனநிலை மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அந்த அமைப்பிலிருந்து வெளியேறினால்தான் அதிலிருந்து தப்பிக்க முடியும். வெவ்வேறு ரூபங்களில் தலித் மக்களுக்கு இந்தப் பிரச்னைகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. எங்கிருந்து வருகிறோம் என்பதைச் சொல்வதற்கே தயக்கம் இருக்கும். பக்கத்தில் இருக்கக்கூடிய பகுதிகளைத்தான் சொல்வார்கள்” என்கிறார் வாசுகி பாஸ்கர்.

எனினும், தலித்துகள் மத்தியில் எழுந்த எழுச்சி அரசியல் காரணமாக, இளைஞர்கள் அத்தகைய தயக்கத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU