Home தேசிய national tamil காமனெயி கொல்லப்பட்டதற்கு இந்தியாவில் என்ன எதிர்வினை?

காமனெயி கொல்லப்பட்டதற்கு இந்தியாவில் என்ன எதிர்வினை?

4
0

SOURCE :- BBC NEWS

ஸ்ரீநகரில் போராட்டம் நடத்தும் மக்கள்

பட மூலாதாரம், ANI

4 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் நாட்டின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன.

இரான் அரசு ஊடகம் காமனெயியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நடந்த தாக்குதல்களில் காமனெயி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் தெரிவித்திருந்தார்.

காமனெயி கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை, காஷ்மீர் மற்றும் லக்னோவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ராயப்பேட்டையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் புது கல்லூரி அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்களுடன் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள பல முஸ்லிம் மத தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், சென்னை

லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், “அவர்கள் காமனெயியை வஞ்சகமாகக் கொன்றுவிட்டார்கள். ஒரு காமனெயி கொல்லப்பட்டால், ஆயிரம் காமனெயிகள் உருவாவார்கள்,” என்றார்.

காமனெயி கொல்லப்பட்டது குறித்து ஷியா மத குரு மௌலானா கல்பி ஜவாத் கூறுகையில், “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்த இவ்வளவு பெரிய ஆளுமை மறைந்துவிட்டது என்பது இந்த நூற்றாண்டின் மிகவும் துயரமான சொற்களில் ஒன்றாகும். அவர் மிகப்பெரிய சக்திகளுக்குக் கூட ஒருபோதும் அஞ்சவில்லை.”

“பெரிய வல்லரசுகள் அவரைப் பணிய வைக்க முயன்றன. ஆனால் அவர் ஒருபோதும் தலைவணங்கவில்லை. அதனால்தான் அவர்கள் அவரை ஒரு எதிரியாகப் பார்த்தார்கள். அந்த குரலை ஒடுக்கி அழித்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள், அப்போதுதான் அவர்கள் சுதந்திரமாக அநீதி இழைக்கவும், கொள்ளையடிக்கவும், மக்களை அடிமைப்படுத்தவும் முடியும் என்று நினைத்தார்கள்.” என்றார் அவர்.

லக்னோவில் போராட்டம் நடத்தும் ஒரு பெண்

பட மூலாதாரம், ANI

‘முழு மத்திய கிழக்கையும் போருக்குள் தள்ளிவிட்டன’

இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினருமான காலித் ரஷீத் ஃபரங்கி மஹ்லி கூறுகையில், “இரான் ஒரு சுதந்திர நாடு, அதன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும் இந்தப் போரை நிறுத்த சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.”

“காமனெயியின் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட வேண்டும்”

லக்னோவைச் சேர்ந்த ஷியா மத குரு மௌலானா யாசூப் அப்பாஸ், “அமெரிக்காவும் இஸ்ரேலும் முழு மத்திய கிழக்கையும் போருக்குள் தள்ளிவிட்டன. இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு சோகமான நாள், ஏனெனில் இரான் அதி உயர் தலைவர் எப்போதும் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் பேசினார்,” என்றார்.

ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைக் கண்டித்து   ஷியா சமூக மக்கள்ஸ்ரீநகரில் போராட்டம் நடத்தினர்.

பட மூலாதாரம், ANI

காமனெயியின் மரணத்திற்குப் பிறகு ஷியா சமூக தலைவர் சையத் சமர் காஷ்மி, “நாங்கள் ஒரு தலைவரை இழப்பது இது முதல் முறையல்ல, ஆனால் எங்கள் அன்புக்குரிய தலைவரின் மரணத்தை நாங்கள் மறக்க மாட்டோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்படி வஞ்சகமாக எங்களது தலைவரைக் கொன்றார்கள் என்பதை எங்கள் தலைமுறையினருக்குச் சொல்வோம்.” என்றார்.

”உலக நாடுகள் அமைதியாக இருந்தபோது, பாலத்தீனத்தில் நடக்கும் கொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினாலேயே அவர் கொல்லப்பட்டார்.”

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

பட மூலாதாரம், Getty Images

அரசியல் வட்டாரங்களில் என்ன சொல்கிறார்கள்?

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, ஆயத்துல்லா அலி காமனெயியின் மரணம் உட்பட இரான் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

அனைவரும் அமைதி காக்கவும், பதற்றம் அல்லது அமைதியின்மையை அதிகரிக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“ஜம்மு காஷ்மீரில் துக்கம் அனுசரிப்பவர்கள் அமைதியாக துக்கம் அனுசரிக்க அனுமதிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். காவல்துறை மற்றும் நிர்வாகம் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பலப்பிரயோகம் அல்லது கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி,”வரலாற்றில் மிகவும் சோசமான மற்றும் வெட்கக்கேடான நாள் இன்று. ஏனெனில் காமனெயியின் படுகொலையை இஸ்ரேலும் அமெரிக்காவும் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கின்றன.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இதனைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், மனசாட்சியை விட வசதி மற்றும் ஆதாயத்தைத் தேர்ந்தெடுத்த முஸ்லிம் நாடுகள் வெளிப்படையாகவோ அல்லது மௌனமாகவோ இதற்கு ஆதரவு தெரிவித்தன. நீதிக்காகப் போராடியவர் யார் மற்றும் அநியாயக்காரர்களுக்கு உதவியவர் யார் என்பதற்கு வரலாறே சாட்சியாக இருக்கும்,” எனக் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு மிர்வைஸ் உமர் ஃபாரூக், காமனெயியின் மரணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“காமனெயி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த துயரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இது முஸ்லிம் உலகத்தையே உலுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒன்றிணைந்து இந்த கொடூரத்தையும், இரான் மீதான தாக்குதலையும், மினாப்பில் அப்பாவி சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதையும் கண்டிக்கிறார்கள்,” என எழுதியுள்ளார்.

“இந்தத் துயரமான நேரத்தில் இரான் நாட்டின் வீரமான மக்களுடன் இருக்கிறோம். அல்லாஹ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வலிமையைத் தரட்டும். இதற்கு காரணமானவர்களுக்கு விரைவில் நீதி வழங்கட்டும்,” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU