Home தேசிய national tamil கான் பட விழாவில் ஒட்டுமொத்த அரங்கையும் 9 நிமிடம் எழுந்து நின்று கைத்தட்ட வைத்த இந்திய...

கான் பட விழாவில் ஒட்டுமொத்த அரங்கையும் 9 நிமிடம் எழுந்து நின்று கைத்தட்ட வைத்த இந்திய திரைப்படம்

3
0

SOURCE :- BBC NEWS

கேன்ஸ் திரைப்பட விழா, மஸான், ஹோம்பவுண்ட், நீரஜ் கெய்வான், ஜான்வி கபூர்

பட மூலாதாரம், Dharma Productions

கான் திரைப்பட விழாவில் 2010- ஆம் ஆண்டு இந்திய திரைப்பட இயக்குநர் நீரஜ் கெய்வான் தன்னுடைய முதல்படமான மஸானை திரையிட்டார்.

காதல், இழப்பு மற்றும் சாதிய க்கட்டமைப்பின் அடக்குமுறைப் பற்றி பேசும், நெகிழ வைக்கும் திரைப்படம் அது. வாரணாசியை மையமாகக் கொண்டு அந்த கதை நகரும்.

படத்தின் கதாநாயகனாக நடித்த விக்கி கௌஷல், கங்கைக் கரையில், சாதிய கட்டமைப்பில், கீழே இருக்கும் சாதியினருக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளில் ஒன்றான, பிணங்களை எரியூட்டும் நபராக நடித்திருப்பார்.

2010-ஆம் ஆண்டு நடைபெற்ற கான் திரைப்பட விழாவில், “அன் செர்டைன் ரிகார்ட்” (Un Certain Regard) என்ற பிரிவின் கீழ் மஸான் திரையிடப்பட்டது. வழக்கத்திற்கு மாறான கதை சொல்லும் பாணியில் உருவாக்கப்படும் படங்கள் இந்த பிரிவில் திரையிடப்படும். அப்படம் FIPRESCI மற்றும் அவெனிர் போன்ற விருதுகளை வென்றது.

மஸான் திரைப்படம் வெளியான பின், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் குறித்து பேசப்படும் ஒரு கதையை தேடி வந்தார் நீரஜ் கெய்வான்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு, கொரோனா பெருந்தொற்று காலத்தில், மும்பையில் செயல்பட்டு வந்த தர்மா தயாரிப்பு நிறுவனத்தின் ‘க்ரீயேடிவ் டெவலப்மெண்ட்’ தலைவராக பணியாற்றி வந்தார் சோமன் மிஸ்ரா.

நீரஜின் நண்பரான அவர், நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான ‘டேக்கிங் அம்ரித் ஹோம்’ என்ற கட்டுரையை நீரஜிற்கு அனுப்பி படிக்குமாறு கூறினார். பத்திரிகையாளர் பஷரத் பீரால் எழுதப்பட்டது அந்த செய்திக்கட்டுரை.

கொரோனா பெருந்தொற்றின் போது அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் நடைபயணமாக தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். அந்த நிகழ்வை மையப்படுத்தியே பஷரத் பீரின் அந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

மேலோட்டமாக மக்களின் நீண்ட நடைபயணத்தைக் குறிப்பிட்டிருந்தாலும், அதில் ஒரு இஸ்லாமியர் மற்றும் ஒரு தலித் நபருக்கு இடையேயான நட்பை மையப்படுத்தியிருக்கும் அக்கட்டுரை. நீரஜ் இந்த இரண்டு தனி நபர்களின் கதையால் உந்தப்பட்டார்.

அந்த இரண்டு நபர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் இந்த வாரம் நடைபெற்ற கான் திரைப்படவிழாவில், அதே ‘அன் செர்டைன் ரிகார்ட்’ பிரிவில் திரையிடப்பட்டது. படம் பார்த்து முடித்த பின்னர், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று 9 நிமிடங்கள் கைத்தட்டி அப்படத்தை பாராட்டினர்.

கேன்ஸ் திரைப்பட விழா, மஸான், ஹோம்பவுண்ட், நீரஜ் கெய்வான், ஜான்வி கபூர்

பட மூலாதாரம், Dharma Productions

எதிர்பாராத ஆதரவைப் பெற்ற படக்குழு

படத்தைப் பார்த்த பலரும் தங்களின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தனர். படத்தின் தயாரிப்பாளரான கரன் ஜோஹரை இறுக தழுவிக் கொண்டார் கெய்வான். பின்பு, படத்தில் நடித்த ஜான்வி கபூர், இஷான் கட்டார், மற்றும் விஷால் ஜெத்வா குழுவாக சேர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அரங்கத்தில் படத்தை ரசித்த மீரா நாயர், பாகிஸ்தானின் சியாம் சாதிக் உள்ளிட்ட பிரபலங்களும் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்தனர்.

1988-ஆம் ஆண்டு சலாம் பாம்பே படத்திற்காக ‘கேமரா டி’ஓர்’ விருதை வென்ற மீரா நாயர், ஜோஹருக்கு தன்னுடைய வாழ்த்தைக் கூறினார். 2022-ஆம் ஆண்டு, ஜாய்லேண்ட் திரைப்படத்திற்காக, அன் செர்டைன் ரிகார்ட் பிரிவில் நடுவர் விருதை வென்ற பாகிஸ்தானின் சியாம் சாதிக், பல்வேறு உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட, அந்த அரங்கத்தில் நிறைந்திருந்த மக்களின் மனநிலையை ரீல்ஸாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார்.

இந்த படம், யாராலும் எதிர்பார்க்கப்படாத நபரின் ஆதரவையும் பெற்றிருந்தது. படத்தின் முதன்மை தயாரிப்பாளர், பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநரான கரன் ஜோஹர். ஆனால், கடந்த மாதம் பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குநர் மார்ட்டின் சி. ஸ்கோர்சிசி, இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக இணைந்தார். பிரெஞ்சு தயாரிப்பாளர் மெலிடா டோஸ்கான் டு ப்ளாண்டியர் மார்டினுக்கு ஹோம்பவுண்ட் படம் குறித்து அறிமுகம் செய்து வைத்த பிறகு, ஸ்கோர்சிசி இப்படக்குழுவில் இணைந்தார்.

சமீபகால இந்திய திரைப்படத்திற்கு ஸ்கோர்சிசி ஆதரவு அளிப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு, கிளாசிக் இந்தியப் படங்களுக்கு மட்டுமே ஆதரவை வழங்கி வந்தார்.

“நீரஜின் முதல் படமான மஸானை நான் 2015-ஆம் ஆண்டு பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய இரண்டாவது படம் குறித்து மெலிடா என்னிடம் கூறிய போது, எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது,” என்று கடந்த மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“எனக்கு படமும், கலாசாரமும் பிடித்திருந்தது. நான் திரைப்படக் குழுவுக்கு உதவவும் விரும்பினேன். நீரஜ், இந்திய சினிமாவுக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கும் அழகான படத்தை உருவாக்கியுள்ளார்,” என்று ஸ்கோர்சிசி குறிப்பிட்டார்.

கேன்ஸ் திரைப்பட விழா, மஸான், ஹோம்பவுண்ட், நீரஜ் கெய்வான், ஜான்வி கபூர்

பட மூலாதாரம், Dharma Productions

“சாதியத்தின் எடையை உணர்ந்திருக்கிறேன்”

கெய்வானின் கூற்றுப்படி, படத்தின் பல கட்ட எடிட்டிங் பணிகளில் ஸ்கோர்சிசி மேற்பார்வையை செலுத்தி படத்தை மெருகேற்றினார். இருப்பினும் அவர், கலாசார பின்னணி குறித்து அவர் புரிந்து கொள்ள முற்பட்டார். இது ஐடியாக்களை பரிமாறிக் கொள்ள உதவியது.

கெய்வான் இந்த படத்தில் கையாளும் விசயத்தின் துல்லியமான உணர்வை திரையில் காட்ட முயன்றதால் அவருக்கு இந்த பின்னணி மிக முக்கியமாக இருந்தது.

இந்த படத்தின் இரண்டு முதன்மை கதாபாத்திரங்களான முகமது சோயப் அலி (இஷான் கட்டார்) மற்றும் சந்தன் குமார் (விஷால் ஜெத்வா) ஒரே மாதிரியான வரலாற்றைப் பகிர்ந்தவர்களாக இருக்கின்றனர். நூற்றாண்டுகளாக சாதி இந்துக்களின் கையில் பாகுபாட்டை அனுபவித்த வரலாறு அது. அவர்கள் முன்பே இருக்கும் தடைகளைக் கடந்து, மாநிலக் காவல்துறையில் இணைய வேண்டும் என்ற ஒரே மாதிரியான கனவையும் கொண்டிருப்பார்கள்.

தான் ஒரு தலித் சமூகத்தில் பிறந்தவர் என்பதை கெய்வான் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார். சிறு வயதில் இருந்து அவரின் வாழ்வில் நிழல் போல படர்ந்திருக்கும் யதார்த்தம் அது.

இளம் வயதில் அவர் தொழில் நிர்வாக படிப்பை படிக்க சென்றார். டெல்லிக்கு அருகே உள்ள குருகிராமில் பன்னாட்டு நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். அவர் பாகுபாட்டை அங்கே உணரவில்லை என்று கூறும் அதே நேரத்தில், இந்த சாதிய கட்டமைப்பில் அவருடைய இடம் எதுவென நன்றாக அறிந்திருப்பதாகவும், பிறப்பால் ஏற்பட்ட கனத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“இந்தி சினிமா வரலாற்றில் கேமராவுக்கு முன்னும், பின்னும் நின்று கொண்டிருக்கும் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரே நபர் நான் தான் என்று அறியப்பட்டிருக்கிறேன். இத்தகைய இடைவெளியோடு தான் நாம் வாழ்ந்து கொண்டுக்கின்றோம்,” என்று அவர் தெரிவித்தார்.

கேன்ஸ் திரைப்பட விழா, மஸான், ஹோம்பவுண்ட், நீரஜ் கெய்வான், ஜான்வி கபூர்

பட மூலாதாரம், Dharma Productions

கிராமத்தில் வாழும் மக்களின் படங்கள் பாலிவுட்டில் எங்கே?

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். ஆனால் பாலிவுட் திரைப்பட இயக்குநர்கள் தங்களின் கதைகளில் மிக அரிதாகவே கிராமங்களைப் பற்றி பேசுகின்றனர் என்று கெய்வான் கூறுகிறார். ஒரு புள்ளிவிவரங்களாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்கள் குறித்து பேசப்படுவது அவரை வேதனைக்குள்ளாக்குகிறது என்றும் அவர் கூறுகிறார்.

“அந்த புள்ளிவிவரங்களில் இருந்து ஒருவரை மட்டும் எடுத்து அவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் என்ன?” என்று கேள்வி எழுப்பும் அவர், “அவர்களை அந்த நிலைக்கு தள்ளியது எது?” என்று யோசித்த போது, இது குறித்து படம் எடுப்பது சரியாக இருக்கும் என்று நான் நினைத்தேன்,” என்றார்.

ஊரடங்குக்குப் பிறகான மக்கள் பயணத்தில் இருந்து தான் பீரின் கட்டுரை ஆரம்பமாகிறது என்பதால், கெய்வான், படத்திற்கான திரைக்கதையை எழுத அமரும் போது, கொரோனா தொற்று அறிவிப்புக்கு முன்பு, அந்த இரண்டு கதை மாந்தர்களின் வாழ்க்கையானது எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்யத் துவங்கினார்.

ஹைதராபாத்தில் அவர் வளர்ந்த போது கெய்வானுக்கு அக்சர் என்ற நெருங்கிய முஸ்லீம் நண்பர் ஒருவர் இருந்தார். எனவே, பஷரத்தின் கட்டுரையில் இடம் பெற்றிருந்த அலி மற்றூம் குமாரின் வாழ்க்கை அனுபவம் மிகவும் நெருக்கமான ஒன்றாக இருப்பதை உணர்ந்தார் கெய்வான்.

“அவர்கள் உறவின் பின்னணியில் உள்ள மனிதநேயம், ஒருவருக்கொருவர் இடையேயான உறவு போன்றவை என்னை வெகுவாக கவர்ந்தது,” என்று கூறும் கெய்வான், இந்த கதை அவருடைய ஹைதராபாத்தில் கழித்த பால்ய காலத்திற்கு அழைத்துச் சென்றது என்று கூறுகிறார்.

கெய்வான் உருவாக்கிய ஹோம்பவுன்ட் பனிக்காலத்தில் உணரப்படும் இதமான உணர்வு. வட இந்தியாவின் கிராமப்புறங்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த திரைப்படத்தில் வரும் இஸ்லாமிய மற்றும் தலித் முதன்மை கதாபாத்திரங்களின் வாழ்க்கை, மகிழ்ச்சி, மற்றும் சந்திக்கும் பிரச்னைகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தலித் பெண் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கதாபாத்திரம், அவர்களுக்கு இடையே நடைபெறும் உரையாடல்கள் மூலம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழா, மஸான், ஹோம்பவுண்ட், நீரஜ் கெய்வான், ஜான்வி கபூர்

படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் வகையில் இருக்கிறது. 2019-ஆம் ஆண்டு, பெருந்தொற்றின் வீரியம் எப்படியாக இருக்கும் என்று நம் யாருக்கும் தெரியாது. அதன் பின்னால் கதையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அது, வர்க்கம், சாதி, இனம் என அனைத்தையும் கடந்து நெருக்கடியான சூழல் அனைவரையும் பாதிக்கும் என்பதை நினைவூட்டும் வகையில் இருக்கிறது.

கற்பனை மற்றும் யதார்த்ததின் கலவையான இப்படத்தில், நம்பகத்தன்மை வாய்ந்தவையாக கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹோம்பவுண்ட் திரைப்படம் பார்வையாளர்களை நெகிழ்ச்சிக்குட்படுத்துவது மட்டுமின்றி, ஒரு அர்த்தமுள்ள உரையாடலையும் தூண்டும். நிழல்களில் வாழும் மனிதர்கள் பற்றிய ஆழமான புரிவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளது இப்படம்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU