Home தேசிய national tamil காங்கிரஸ் கட்சி கூட்டணியை உடைத்தால் திமுக என்ன செய்யும்?

காங்கிரஸ் கட்சி கூட்டணியை உடைத்தால் திமுக என்ன செய்யும்?

5
0

SOURCE :- BBC NEWS

2026 சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, திமுக, காங்கிரஸ், கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

விரைவில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தை காங்கிரஸின் ஒரு பகுதியினர் தீவிரமாக முன்வைத்துள்ளனர்.

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி எதை நோக்கிச் செல்கிறது? என்ற கேள்வி உள்ள நிலையில் அந்த உறவு மிகக் குழப்பமான சூழலை நோக்கிச் செல்வதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 15) நடந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் “கூட்டணியில் கூடுதல் இடங்கள், அதிகாரத்தில் பங்கு” என பல கோஷங்களை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துவிட்ட நிலையிலும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட கமிட்டி ஒன்று இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதுதான் கவனிக்க வைத்திருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும், உள்ளாட்சித் தேர்தலின்போது 30 சதவீத பங்கு வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அந்தக் கூட்டத்தில் பேசிய விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், “எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் அதே வார்த்தையில் பேசுவோம்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடுவது காங்கிரஸ் கட்சியின் லட்சியம் என்றும் குறிப்பிட்டார்.

சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தி.மு.க இன்னும் பேச்சு வார்த்தைகளைத் துவங்காத நிலையில், அக்கட்சிக்கும் காங்கிரசிற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துவருவதையே மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2026 சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, திமுக, காங்கிரஸ், கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

கூட்டணியில் என்ன நடக்கிறது?

“காங்கிரஸ் தரப்பில் பேசப்படுகின்ற வார்த்தைகளுக்கு தி.மு.க. இன்னமும் எதிர்வினை ஆற்றாமல் இருப்பது ஒரு வகையில் ஆச்சரியம் தான்.” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

“மாணிக்கம் தாகூர் பேச்சுக்கு திமுக எந்த ஒரு பெரிய எதிர்வினையும் ஆற்றவில்லை. ‘எங்களுக்கு மரியாதை வேண்டும், உங்களுக்காக பழி சுமந்தோம்’ என்றெல்லாம் பேசுகிறார். இப்படி காங்கிரஸ் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகிறபோது, ராகுல் காந்தி, கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போன்றவர்கள் பேசினால்தான் பதில் சொல்வோம் என்கிறது தி.மு.க. 2026இல் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது எப்படி கணிக்க முடியாமல் இருக்கிறதோ, அப்படித்தான் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியும் இருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.

கடந்த சில வாரங்களாகவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பலர், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை வலியுறுத்திவருகின்றனர்.

கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பில்லை என மு.க. ஸ்டாலின் தெரிவித்தபோது, அதற்குப் பதிலளிக்கும் வகையில் மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் எக்ஸ் தளத்தில் கருத்துகளை வெளியிட்டனர்.

இந்த நிலையில், அடுத்த சில மாதங்களுக்கான ”மகளிர் உரிமைத் தொகையை” மொத்தமாக தமிழக அரசு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியிருந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்பட்டதால் இனி காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு பற்றி பேச மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டார்.

ஆனால், இந்தக் கருத்தை மறைமுகமாக விமர்சிப்பதைப்போல, “கடந்த 3 ஆண்டுகளில் தேர்தலுக்கு முன்னதாக இதுபோன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில் நான்கு மட்டுமே வெற்றிபெற்றன” என்று பதிவிட்டார் பிரவீன் சக்கரவர்த்தி.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்திக்க பெங்களூர் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எனக்குத் தெரியாது. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது. அகில இந்தியத் தலைவர்களை விட பெரியவர்கள் யாராவது உண்டா? அறைக்குள் பேச வேண்டியதை பொது வெளியில் பேசினால் எப்படி அனுமதிக்க முடியும்?” என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே இன்று (பிப்ரவரி 17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ”திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது. கட்சியினர் சிலர் கூறும் கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல, அது தனிப்பட்ட நபர்களின் கருத்து.” எனக் கூறினார்.

2026 சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, திமுக, காங்கிரஸ், கூட்டணி

பட மூலாதாரம், K Selvaperunthagai/Facebook

‘த.வெ.க- காங்கிரஸ் கூட்டணி?’

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் விஜயின் த.வெ.கவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டுமென விரும்புவதாகச் சொல்கிறார் குபேந்திரன்.

“கேரளாவில் ஆட்சியைப் பிடிப்பதற்கு விஜய் உதவுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் நம்புகிறார். கேரளாவில் தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். த.வெ.க-வுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் காங்கிரசுக்கு ஆதரவளிப்பார்கள், அங்கு ஆட்சி பிடிக்கலாம். பாண்டிச்சேரியிலும் ஆட்சியைப் பிடிக்கலாம் தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தி.மு.கவுடன் இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்.” என்கிறார் அவர்.

சமீபத்தில் டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார் கனிமொழி. அந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு சலசலப்புகள் அடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.

இது குறித்துப் பேசிய குபேந்திரன், “டெல்லியில் நடந்த ராகுல் காந்தி – கனிமொழி சந்திப்பு சுமுகமாக நடக்கவில்லை என்றுதான் சொல்கிறார்கள். காங்கிரஸ் தலைமைக்கு தி.மு.கவுடன் தொடர்வதில் கசப்புணர்வு இருப்பதாக நம்புகிறேன். இல்லாவிட்டால் இந்த மோதல் இவ்வளவு பெரிதாக ஆகியிருக்காது. இத்தனைக்கு 2019-இல் காங்கிரஸ் தலைவர்களே ராகுலை பிரதமராக முன்னிறுத்தாதபோது, அதைச் சொன்னவர் மு.க. ஸ்டாலின்தான். அப்படியிருக்கும்போது, இப்படி ஒரு சூழல் ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை.” என்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, திமுக, காங்கிரஸ், கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் வெளியேறினால், தி.மு.க. என்ன செய்யும்?

ஒருவேளை தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால், தி.மு.க. என்ன செய்யும்?

“தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளாது. காங்கிரஸ் வெளியேறிவிட்டால் காங்கிரசிற்கு அளித்துவந்த இடங்களில் பத்தில் தி.மு.க. போட்டியிடலாம். மீதமுள்ள இடங்களை பெற பல கட்சிகள் காத்திருக்கின்றன” என்கிறார் குபேந்திரன்.

“தே.மு.தி.க, வரலாம். கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு போன்றவர்கள் காத்திருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்திற்கும் இடங்களைக் கொடுப்பார்கள். ஆனால், காங்கிரஸ் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறுவது அந்தக் கூட்டணிக்குக் கிடைத்துவந்த சிறுபான்மையினர் வாக்குகளைப் பாதிக்கும். மேலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சில இடங்களில் தோற்கலாம். ஏனென்றால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெற்றது. அந்த இடங்கள் எல்லாம் நெருக்கடியாக மாறும்” என்று குறிப்பிடுகிறார் குபேந்திரன்.

ஆனால், காங்கிரஸ் த.வெ.கவுடன் கூட்டணி அமைப்பது அக்கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்காதா? என்ற கேள்விக்கு இருக்காது என்கிறார் குபேந்திரன்.

” காங்கிரசுக்கு தற்போதைய சூழலில், 70 – 80 இடங்களை த.வெ.க. அளித்தாலும் இதில் குறிப்பிடத்தகுந்த தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புக் குறைவு. காங்கிரசைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கிறது. விஜயுடன் சேரும்போது, வாக்கு சதவீதம் உயரலாம். இரு திராவிடக் கட்சிகளுக்கும் கிடைக்கக்கூடிய வெற்றிகளை சில இடங்களில் தடுக்கலாம். அதைத் தவிர பெரிதாக எதுவும் செய்ய முடியாது” என்கிறார் குபேந்திரன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

த.வெ.கவைப் பொறுத்தவரை காங்கிரஸ் அக்கட்சியுடன் கூட்டணி சேர்வது, சிறப்பான விஷயமாகத்தான் இருக்கும். தேர்தல் பணிகளை கீழ்மட்டத்தில் எப்படிச் செய்யலாம் என்பதை காங்கிரசிடமிருந்து கற்கலாம் என்கிறார் குபேந்திரன்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி இடையிலான தேர்தல் கூட்டணி நீண்ட காலமாக நீடித்துவருகிறது. 2004ஆம் ஆண்டில் துவங்கி 2011ஆம் ஆண்டு தேர்தல் வரை காங்கிரசும் தி.மு.கவும் ஒன்றாகவே இணைந்து போட்டியிட்டன. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது. அத்தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. அதன் பிறகு, 2016ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து இரு கட்சிகளும் இணைந்தே தேர்தல்களைச் சந்தித்துவருகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU