Home தேசிய national tamil கடைசிப் பந்து வரை திக் திக்: 14 வயதிலேயே ஐபிஎல் களம் கண்டு முதல் பந்தில்...

கடைசிப் பந்து வரை திக் திக்: 14 வயதிலேயே ஐபிஎல் களம் கண்டு முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய இந்த சிறுவன் யார்?

5
0

SOURCE :- BBC NEWS

2 மணி நேரங்களுக்கு முன்னர்

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 36வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.

போட்டியின் பெரும்பகுதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அந்த அணி கடைசியில் கோட்டைவிட்டது. கடைசிப் பந்து வரை வெற்றி யாருக்கு என்பதே தெரியாத அளவுக்கு பரபரப்பாக இருந்த இந்தப் போட்டி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்தது.

லக்னெள மிடில் ஆர்டர் ஏமாற்றம்

லக்னெள அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு மார்க்ரம்(66), இம்பாக்ட் வீரராக வந்த பதோனி(50) ஆகியோரின் அரைசதங்கள் உதவியதைவிட, கடைசி ஓவரில் அப்துல் சமது அடித்த 27 ரன்கள்தான் ஆட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தது. 10 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த அப்துல் சமது லக்னெளவின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக இருந்தார்.

லக்னெள அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்து தடுமாறியது. நடுப்பகுதி வீரர்கள் பூரன்(11),கேப்டன் பந்த்(3), தொடக்க ஆட்டக்காரர் மார்ஷ்(4) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். மார்க் ரம், பதோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்து அணியை மீட்டது.

மார்க்ரம், பதோனி ஆட்டமிழந்த பின் மில்லர், சமது சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். மில்லருக்கு போதுமான வாய்ப்புக் கிடைக்காத நிலையில் சந்தீப் சர்மாவின் ஓவரை பயன்படுத்திய சமது வெளுத்து வாங்கினார். இதுதான் லக்னெள அணியின் வெற்றிக்கான தருணமாக அமைந்தது.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

14 வயது வீரரின் அறிமுகம்

ராஜஸ்தான் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.10 கோடி கொடுத்து 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி எனும் வீரரை வாங்கியிருந்தது. அந்த வைபவ் சூர்யவன்ஷியை நேற்று இம்பாக்ட் வீரராக அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இளம் வயதில் அறிமுகமான வீரர் எனும் பெருமையை வைபவ் பெற்றார். ராஜஸ்தான் அணியில் முதல் பாதியில் பெஞ்சில் இருந்த வைபவ், சாம்ஸனுக்கு ஏற்பட்ட காயத்தால் இந்தப் போட்டியில் வாய்ப்புப் பெற்றார்.

ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்கிய வைபவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஷர்துல் தாக்கூர் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அனைவரையும் வியக்க வைத்தார், அதன்பின் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியும் அடித்தார்.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

முதல் போட்டியில் விளையாடுகிறோம் என்ற எந்த அச்சமும் இன்றி, பதற்றமும் இன்றி வைபவ் சிறப்பாக பேட் செய்தார். ஆவேஷ் கான் ஓவரில் ஒரு சிக்ஸர், பிரின்ஸ் யாதவ் ஓவரில் சிக்ஸர், என வெளுத்தார். ஆனால் மார்க்ரம் பந்துவீச்சில் இறங்கி அடிக்க முற்பட்டு ரிஷப் பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வைபவ் 20 பந்துகளில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 85 ரன்கள் எனும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

14வயதில் களமிறங்கிய வைபவ் ஸ்டெம்பிங் ஆகி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்விட்டு அழுதுகொண்டே சென்றார்.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

4வது அரைசதம் கண்ட ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வாலுக்கு இந்த ஐபிஎல் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 4 போட்டிகளில் 35 ரன்களே சேர்த்திருந்து ஏமாற்றம் அளித்திருந்தார். ஆனால், கடைசி 4 போட்டிகளில் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக 4 அரைசதம் அடித்து 250 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார்.

இந்த ஆட்டத்திலும் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார், பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்தது. 12வது ஓவரில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. வைபவ் ஆட்டமிழந்த பின் ராணா 9 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு ரியான் பராக், ஜெய்ஸ்வால் கூட்டணி ஏறக்குறைய வெற்றிக்கு அருகே அணியைக் கொண்டு சென்றனர். 18-வது ஓவரில் ஆவேஷ்கான் பந்துவீச்சில் இருவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் ஆட்டம் தலைகீழாக மாறிவிட்டது.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் அணி 18-வது ஓவர்வரை ஆட்டத்தை தன்வசம்தான் வைத்திருந்தது. ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரும், கடைசி ஓவரும்தான் ராஜஸ்தான் வெற்றியைப் பறித்தது. ஏனென்றால், 17வது ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது, 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ஆனால், ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் செட்டில் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(74), ரியான் பராக்(34) இருவரைம் ஆட்டமிழக்கச் செய்தார். இதுதான் திருப்புமுனையாக அமைந்தது. கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது, ஹெட்மெயர், துருவ் ஜூரெல் சேர்ந்து 19-வது ஓவரில்11 ரன்கள் சேர்த்தனர். இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் ஜுரெல் ஒரு ரன்னும், ஹெட்மயர் 2வது பந்தில் 2 ரன்னும் எடுத்தனர். ஹெட்மயர் 3வது பந்தை ஸ்குயர் லெக் திசையில் அடிக்கவே ஷர்துல் தாக்கூரிடம் கேட்சானது. அடுத்து வந்த சுபம் துபே 4 பந்தில் ரன் சேர்க்கவில்லை, 5வது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார்.

கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி தேவைப்பட்ட நிலையில் ஆவேஷ் வீசிய பந்தை துபே அடிக்க முற்படவே அதே ஆவேஷ் தடுக்கவே ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. ராஜஸ்தான் அணி கைக்கு மேல் கிடைத்த வெற்றியை 2வது போட்டியாக கோட்டைவிட்டது.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

வெற்றியை 2வது முறையாக நழுவவிட்ட ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி ஓவரில் வெற்றியைக் கோட்டைவிடுவது இது 2வது போட்டியாகும். ஏற்கெனவே கடந்த டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்ஷெல் ஸ்டார்க் பந்துவீச்சில் கடைசி ஓவரில் 9 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் ஆட்டம் டைஆனது. இதையடுத்து, ஆட்டம் சூப்பர்ஓவர் சென்று அதில் ராஜஸ்தான் அணி தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் லக்னெள அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 இடங்களில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் 10 புள்ளிகளுடன் இருப்பதால் ஐபிஎல் பரபரப்பை எட்டியுள்ளது. ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகள் 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது.

“எப்படி தோற்றோம் எனத் தெரியவில்லை”

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில், “எங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது. எந்த இடத்தில் தவறு செய்தோம் என எனக்குத் தெரியவில்லை. 18 முதல் 19வது ஓவர் வரை வெற்றி எங்கள் கையில்தான் இருந்தது, பின்னர் எப்படி ஆட்டம் கையைவிட்டு போனது எனத் தெரியவில்லை. இந்த தோல்விக்கு நான்தான் காரணம். ஆட்டமிழக்காமல் தவறான ஷாட்டை அடிக்காமல் ஆட்டத்தை 19வது ஓவரிலேயே முடித்துக் கொடுத்திருக்க வேண்டும்.

எங்கள் பந்துவீச்சில் 19 ஓவர்களை சிறப்பாக வீசிவிட்டு கடைசி ஓவரில் தவறு செய்தது துரதிர்ஷ்டம். கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசியிருந்தால் லக்னெள ஸ்கோரை 165 முதல் 170 ரன்களுக்குள் முடித்திருப்போம். 20 ரன்கள் தேவையின்றி வழங்கிவிட்டோம், அதையும் சேஸ் செய்ய முயன்று நெருங்கிய நிலையில் தோற்றிருக்கிறோம். ஆடுகளம் தெளிவாக இருந்தது, அந்த குறையும் கூற இயலாது” எனத் தெரிவித்தார்.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஏற்கெனவே பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 14 வயது 23 நாட்களே நிரம்பிய அவர் ஐபிஎல்லில் தடம் பதித்துள்ளார். பிகாரைச் சேர்ந்த வளரும் நட்சத்திரமான அவர், 2024-ம் ஆண்டு தனது 12 வயதிலேயே ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதனை ஏடுகளில் இடம்பிடித்தார். இதன் மூலம் பிகாரில் இருந்து இளம் வயதில் ரஞ்சி கிரிக்கெட் களம் கண்ட இரண்டாவது வீரரானார் வைபவ்.

அதிரடியாக ஷாட்களை விளாசுவதில் வல்லவரான சூர்யவன்ஷி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான டெஸ்டில் 58 பந்துகளில் சதம் அடித்து, அந்த பிரிவில் மிக வேகமாக சதம் அடித்த இந்திய இளம் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

கிரிக்கெட் உலகில் மிக வேகமாக ஏற்றம் கண்ட வைபவ் சூர்யவன்ஷிதான், ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். அவரை கடந்த ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. சஞ்சு சாம்சன், யாஷஷ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட சர்வதேச தரம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இணைந்து தனது திறமைகளை மேலும் பட்டை தீட்டிக் கொண்டுள்ள அவர் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே முத்திரை பதித்துள்ளார்.

(மேற்கூறிய விவரங்கள் ஐபிஎல் இணையதளத்தில் பகிரப்பட்டவை)

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் கூடுதல் விவரம்

இன்றைய ஆட்டங்கள்

முதல் போட்டி

  • பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி
  • இடம்: நியூ சண்டிகர்
  • நேரம்: மாலை 3.30

இரண்டாவது போட்டி

  • மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே
  • இடம்: மும்பை
  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • நாள் – ஏப்ரல் 25
  • இடம் – சென்னை
  • நேரம்- இரவு 7.30

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • நாள் – ஏப்ரல் 24
  • இடம் – பெங்களூரு
  • நேரம்- மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-368 ரன்கள்(8 போட்டிகள்)
  • சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-365 ரன்கள்(7 போட்டிகள்)
  • ஜாஸ் பட்லர்(குஜராத் டைட்டன்ஸ்) 315 ரன்கள்(7 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 14 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)
  • குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)
  • நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU