Home தேசிய national tamil ‘ஒரே நாளில் எம்ஜிஆர் – சிவாஜியை இயக்கிய’ கே. சங்கரின் 10 முக்கிய படங்கள்

‘ஒரே நாளில் எம்ஜிஆர் – சிவாஜியை இயக்கிய’ கே. சங்கரின் 10 முக்கிய படங்கள்

5
0

SOURCE :- BBC NEWS

ஒரே நாளில் இரு ஜாம்பவான்களை இயக்கிய சங்கரின் 10 முக்கிய படங்கள்

பட மூலாதாரம், Handout

தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் பழம்பெரும் இயக்குநரான கே.சங்கர் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். காலத்தால் அழியாத பல படைப்புகளை தந்த இயக்குநர் கே.சங்கர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நுாற்றுக்கும் அதிகமான படங்களை இயக்கியவர்.

புராணப் படங்கள், வரலாற்று படங்கள், சமூக அக்கறை படங்கள், பக்தி படங்கள், வணிக ரீதியிலான படங்கள் எனப் பல தளங்களில் ஜெயித்தவர் இயக்குநர் கே.சங்கர்.

மார்ச் 17-ஆம் தேதி அவருடைய பிறந்தநாள். இந்த ஆண்டு அவருடைய நூற்றாண்டை அவரின் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் கே.சங்கர்

பட மூலாதாரம், Vignesh Menon

எம்ஜிஆரின் சம்பந்தியான இயக்குநர்

இயக்குநர் கே.சங்கர் பேரனும், விண்மீன்கள், அசுரகுலம் படங்களின் இயக்குநருமான விக்னேஷ் மேனனிடம் உங்கள் தாத்தா இயக்கிய படங்களில் சிறந்த 10 படங்களை வரிசைப்படுத்த முடியுமா என்று பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.

“அவரின் பல படங்களுக்கு நான் ரசிகன். தாத்தாவுடன் நெருங்கி பழகி இருக்கிறேன், கடைசி காலத்தில் என் வீட்டில்தான் வசித்து வந்தார். எடிட் உதவியாளராக வாழ்க்கை தொடங்கியவர் ஒரு கட்டத்தில் காலையில் எம்ஜிஆரின் பணத்தோட்டம், மாலையில் சிவாஜி கணேசனின் ஆலயமணி படங்களை இயக்கும் அளவுக்கு வளர்ந்தார்.”

“பல மொழிகளில் ஏகப்பட்ட ஹிட் கொடுத்தார். எம்ஜிஆருடன் அதிக படங்களில் பணியாற்றிய 3 இயக்குநர்களில் ஒருவர் என்பதோடு எம்ஜிஆரின் சம்பந்தியாகவும் மாறினார். தன் வளர்ப்பு மகனும், அண்ணன் சக்ரபாணி மகனுமான ராமுவை, தாத்தாவின் மூத்த மகள் விஜயலட்சுமிக்கு மணம் முடித்து வைத்தார் எம்ஜிஆர். நான் அவரின் மகன் வழிப் பேரன்.” என்ற விக்னேஷ் மேனன் தனக்குப் பிடித்த இயக்குநர் கே.சங்கரின் பத்து படங்களைப் பட்டியலிட்டார்.

இயக்குநர் கே.சங்கர்

பட மூலாதாரம், Vignesh Menon

அடிமைப் பெண்

”எம்ஜிஆரின் பத்து வணிகப் படங்கள் எனக் கணக்கிட்டால், அதில் அடிமைப்பெண் படத்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு. தன் தாயின் கட்டளைப்படி, கொடுங்கோல் மன்னனிடம் இருந்து தன் நாட்டையும், அடிமையாக இருக்கும் நாட்டுப் பெண்களை விடுவிக்க போராடும் புரட்சி வேடம் எம்ஜிஆருக்கு. அவரும், ஜெயலலிதாவும் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தனர்.

எம்ஜிஆரின் ஆடை அவ்வளவு அழகாக இருக்கும். இந்தப் படத்தில் இடம் பெற்ற காலத்தை வென்றவன் பாடல் பிற்காலத்தில் அதிமுக மேடைகளில் அதிகமாக ஒலித்தது. ஹீரோயினாக நடித்த ஜெயலலிதா ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை, கே.வி.மகாதேவன் இசையில் பாடினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பெருமளவு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எம்ஜிஆர் தயாரித்த இந்த படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சமீபத்தில் கூட அடிமைப்பெண் ரீ ரிலீஸ் ஆனது”. என்கிறார் விக்னேஷ் மேனன்

இயக்குநர் கே.சங்கர்

பட மூலாதாரம், Pyramid Talkies

பல்லாண்டு வாழ்க

”கொடூர கொலை கைதிகளை திருத்தும் வேடத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தார். அவர் கதாபாத்திரமும், படத்தில் இடம் பெற்ற பாடல்களும், கைதியாக நடித்தவர்களின் நடிப்பும், படம் சொல்லும் கருத்தும் நிறையவே பாராட்டுகளைப் பெற்றது.

‘ஒன்றே குலமென்று வாழுவோம், போய் வா நதியலையே, சொர்க்கத்தின் திறப்பு விழா’ போன்ற பாடல்கள் மறக்க முடியாத பாடல்கள் பட்டியலில் சேர்ந்தன. எம்ஜிஆரின் நடிப்பே மற்ற படங்களை விட, கொஞ்சம் அமைதியாக, மாறுபட்டதாக இருக்கும். மனிதநேயத்தை போற்றும் கதைக்களம் இந்தப் படம் பெரிய ஹிட்டானது.”

குடியிருந்த கோயில்

”இந்தப் படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜஸ்ரீ நடித்தனர். இந்தப் படத்தின் பெயரை கேட்டவுடன் முதலில் நினைவுக்கு வருவது ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே சுகம் சுகம் என்ற பஞ்சாபி ஸ்டைல் பாங்ரா டான்ஸ்தான். தாத்தா யோசனைப்படி நன்கு பயிற்சி எடுத்து அந்தப் பாடலில் நடித்திருப்பார் எம்ஜிஆர்.

அதேபோல, அண்ணன் தம்பிகள் பிரியும் அந்த ரயில்வே நிலைய காட்சி பலர் மனதில் நிற்கும். நான் யார்? என்ற பாடலின் மூலம் இந்த படத்தில் தான் புலமைபித்தனை சினிமா பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார் தாத்தா கே.சங்கர். இரண்டு வேடத்தில் நடித்த எம்ஜிஆர். ஒரு கேரக்டருக்காக டல் மேக்கப் போட்டு தன்னை மாற்றியிருப்பார். எம்ஜிஆர் இந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கமான மாநில அரசு விருது பெற்றார்.” என கூறுகிறார் விக்னேஷ் மேனன்

இயக்குநர் கே.சங்கர்

பட மூலாதாரம், Ayngaran

கலங்கரை விளக்கம்

”எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த ஒருவகை திரில்லர் படம். ஹீரோயினுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொண்ட கதை. ஆனாலும், எம்ஜிஆர் காதல், சண்டைக் காட்சிகளில் கலக்கியிருப்பார்.

மாமல்லபுரம், மைசூரில் படப்பிடிப்பு நடந்தது. ‘பொன்னெழில் பூத்தது’, ‘காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்’, பாடல் அழகு என்றால், பாரதிதாசனின் வரிகளில் அமைந்த ‘சங்கே முழங்கு’ பாடல் கம்பீரம். இன்னும் பல பள்ளி விழாக்களில் இந்தப் பாடலுக்கு ஆடுகிறார்கள்.”

சிவகங்கை சீமை

”தமிழ் சினிமாவின் வரலாற்றுப் படங்களில் சிவகங்கை சீமையை தவிர்க்க முடியாது. அதிக பகட்டு இல்லாமல் படமும் இயல்பாக இருக்கும். மருதுபாண்டியர் வாழ்க்கையை, வீரதீரங்களை சொல்லும் கதை. கவியரசர் கண்ணதாசன் தயாரிக்க, தாத்தா இயக்கத்தில் உருவான அருமையான படம். சரித்திரத்தில் நடந்த நிகழ்வை சினிமாவில் செதுக்கி இருப்பார்கள். கண்ணதாசன் தயாரித்த படம் என்பதால் 16 பாடல்கள், அனைத்தும் முத்து.”

ஆண்டவன் கட்டளை

”சிவாஜி கணேசன், தேவிகா, சந்திரபாபு, பாலாஜி நடித்த படம். கல்லுாரி பேராசிரியர், மாணவி காதலை கண்ணியமாக சொன்ன கதை. நடிகர் வீரப்பா தயாரிக்க, கே.பி.கொட்டாரக்காரா கதை எழுத, ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுத, தாத்தா இயக்கிய படம். அமைதியான நதியினிலே ஓடம், ஆறுமனமே ஆறு போன்ற மறக்க முடியாத பாடல்கள் இடம்பெற்றுள்ள படம்.” என்கிறார் விக்னேஷ் மேனன்

இயக்குநர் கே.சங்கர்

பட மூலாதாரம், Ayngaran

ஆலயமணி

”சிவாஜி கணேசனுடன், சரோஜாதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி, வீரப்பா, எம்.ஆர்.ராதா உட்பட பலர் நடித்திருந்தனர். காதல், தியாகம் என இரண்டையும் அழகான சொன்ன படம். .தெலுங்கில் ‘குடி கண்டலு’ என்ற பெயரில் என்.டி.ஆர் நடிப்பிலும் இந்தியில் ‘ஆத்மி’ என்ற பெயரில் திலீப்குமார் நடிப்பிலும் ரீமேக் ஆனது.

காலையில் சிவாஜி நடித்த இந்த படம், மதியம் எம்ஜிஆர் நடித்த பணத்தோட்டம் என ஒரே நேரத்தில், இரண்டு ஜாம்பவான் நடித்த படங்களை இயக்கி புகழ் பெற்றார் தாத்தா கே.சங்கர். கண்ணதாசன் வரிகளில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘சட்டி சுட்டதடா’ ‘கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா’ ஆகிய பாடல்கள் இன்றும் தமிழகம் முழுக்க தத்துவப் பாடல்களாக ஒலிக்கின்றன.”

பாத காணிக்கை

”ஜெமினி கணேசன், சாவித்ரி, எம்.ஆர்.ராதா, அசோகன் நடித்த இந்தப் படத்தில் உறவுகளை, உணர்வுகளை அழுத்தமாகச் சொல்லியிருப்பார். ஒவ்வொருவரும் போட்டிபோட்டு நடித்து இருப்பார்கள். திருமணம், ஆசை, குடும்பச் சிக்கல்களை அழகாக சொல்லியிருப்பார். இவர்களை தவிர, இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கிய சிறுவனின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது.

அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் சிறந்த நடிகராக வளர்ந்த கமல்ஹாசன். தாத்தாவின் படங்களில் கதை மட்டுமல்ல, பாடல்களும் சிறப்பாக வருவது இயற்கை. இந்த படத்தில் இடம் பெற்ற வீடு வரை உறவு, வீதிவரை மனைவி பாடலை கேட்காதவர்கள் இருக்க முடியாது. கண்ணதாசனின் வரிகளில் அது ஒரு காவியம்” என்கிறார் விக்னேஷ் மேனன்.

இயக்குநர் கே.சங்கர்

பட மூலாதாரம், Pyramid

தாய்முகாம்பிகை

”பிற்காலத்தில் தாத்தா ஆன்மிகப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆன்மிகத்துடன், சமூக பிரச்னை, குடும்ப விஷயங்களை கலந்து புதுவகை படங்களைக் கொடுத்தார். அவை மக்களிடம் வரவேற்பை பெற்றன. கார்த்திக், சிவகுமார், சரிதா, சுஜாதா, கே.ஆர்.விஜயா, பூர்ணிமா நடித்த இந்தப் படம் இசைக்கலைஞர் பற்றி, முகாம்பிகை மகிமை சொல்லும் கதை. இன்றைக்கும் இளையராஜா தனது கச்சேரிகளி்ல் முதலில் பாடுகிற ஜனனி ஜனனி பாடல் இடம் பெற்ற படம்.”

வருவான் வடிவேலன்

”மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் படமாக்கப்பட்ட முருக பக்தி படம். ஜெய்கணேஷ், முத்துராமன், ஜெயசித்ரா, லதா, மனோரமா உட்பட பலர் நடித்தனர். பக்தி படத்தில் இந்த படம் பெரிய சாதனை செய்தது. மலேசிய தைப்பூசத்தை அவ்வளவு அழகாக சொன்ன கதை” என்கிறார் விக்னேஷ் மேனன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

3 முதல்வர்களை இயக்கியவர்

எம்ஜிஆர், என்.டி ராமாராவ், ஜெயலலிதா என 3 முதல்வர்களை இயக்கியிருக்கிறார் சங்கர். தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் கொடி கட்டி பறந்து இருக்கிறார். இந்தியில் 22 படங்களை இயக்கியவர், ஷம்மி கபூர், ராஜேஷ் கண்ணா தொடங்கி பல முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்திருக்கிறார்.

சென்னையில் 2006-ஆம் ஆண்டு கே.சங்கர் காலமானார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU