Home தேசிய national tamil ஐபிஎல் 2026: லக்னௌ அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கேகேஆர்

ஐபிஎல் 2026: லக்னௌ அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கேகேஆர்

6
0

SOURCE :- BBC NEWS

24 பந்துகள் சந்தித்த அஜிங்க்யா ரஹானே 41 ரன்கள் எடுத்தார்

பட மூலாதாரம், Getty Images

9 ஏப்ரல் 2026, 14:04 GMT

புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 15வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத தமிழ்நாடு பந்துவீச்சாளர் வருண் சக்கர்வர்த்தி இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அதேசமயம் லக்னௌ அணியில் தமிழ்நாடு ஸ்பின்னர் எம்.சித்தார்த் இடம்பிடித்திருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.

ரஹானே – ரகுவன்ஷி போட்ட நல்ல அடித்தளம்

கொல்கத்தா அணியின் ஓப்பனர் ஃபின் ஆலன் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார். பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தை அவர் தூக்கி அடிக்க, பந்து டாப் எட்ஜ் ஆகி தேர்ட் மேன் திசையில் நின்றிருந்த திக்வேஷ் ராத்தியிடம் கேட்ச் ஆனது. ஆலன் 9 ரன்களில் வெளியேறினார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஜிங்க்யா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் மூன்றாவது முதல் ஐந்தாவது ஓவரில் அவர்கள் சற்று கவனமாகவே விளையாடினார்கள். இந்த ஓவர்களில் ஒரு பவுண்டரியோ, சிக்ஸரோ அடித்துவிட்டு மற்ற பந்துகளில் ஸ்டிரைக் ரொடேட் செய்தார்கள்.

பவர்பிளேவின் கடைசி ஓவரில் சற்று வேகம் காட்டி ரன் விகிதத்தை அதிகப்படுத்தினார் ரகுவன்ஷி. ஆவேஷ் கான் வீசிய அந்த ஓவரில் அவர் 2 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் விளாசினார். பவர்பிளே முடிவில் கேகேஆர் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது.

பவர்பிளே முடிந்து சுழல் வந்த பிறகும்கூட அவர்கள் இருவரும் எப்படியும் ஓவருக்கு 9 ரன்களாவது வரும் வகையில் பார்த்துக்கொண்டார்கள்.

10 ஓவர்கள் முடிவில் 98/1 என்ற நல்ல நிலையில் இருந்தது கேகேஆர். இந்நிலையில், 11வது ஓவரில் ரஹானே வீழ்த்தி அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் திக்வேஷ். 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரஹானே.

இந்த ஜோடி 8.4 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்தது.

டெத் ஓவரில் அதிரடி காட்டிய கேகேஆர்

7 பந்துகள் சந்தித்த ரிங்கு சிங் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்

பட மூலாதாரம், Getty Images

அவுட் ஆன பிறகு கொல்கத்தாவின் ரன் விகிதம் வெகுவாகக் குறைந்தது. 12வது ஓவரில் ரகுவன்ஷியை வெளியேற்றினார் தமிழ்நாடு ஸ்பின்னர் எம்.சித்தார்த். ரகுவன்ஷி 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

அதன்பிறகு வந்த ரிங்கு சிங் ரன் எடுக்கவே தடுமாறினார். அவர் 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

11 முதல் 15 வரையிலான 5 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 17 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

ரன் விகிதம் வெகுவாகக் குறைந்த நிலையில் கடைசி கட்டத்தில் கேமரூன் கிரீன் – ராவ்மன் பவெல் இருவரும் சற்று அதிரடி காட்டினார்கள்.

டெத் ஓவர்களில் ஓவருக்கு ஓரிரு பவுண்டரிகளாவது இருவரும் அடித்தார்கள். அதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

கேமரூன் கிரீன், ராவ்மன் பவெல் இருவரும் முறையே 32 மற்றும் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

லக்னௌ பௌலர்களில் எம்.சித்தார்த், ஆவேஷ் கான், திக்வேஷ் ராத்தீ, பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

டாஸில் சொன்னது என்ன?

டாஸ் வென்ற எல்எஸ்ஜி கேப்டன் ரிஷப் பன்ட், “நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். எதிரணியை முதலில் பேட்டிங் செய்ய வைக்க நினைக்கிறோம், எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு வெற்றி நிச்சயமாக அணியின் மனநிலைக்கு கூடுதல் உற்சாகத்தைத் தரும். நாங்கள் அதே அணியுடன் தான் விளையாடுகிறோம். எங்கள் டாப்-ஆர்டர் பேட்டிங் மிகவும் வலிமையாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம், அவர்கள் எங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.

கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே தானும் பந்துவீச்சை தேர்வு செய்ய நினைத்ததாகவே கூறினார். வருண் சக்கரவர்த்தி இன்னும் காயத்திலிருந்து குணமடையாத காரணத்தினால் அவர் இந்தப் போட்டியிலும் விளையாடப்போவதில்லை என்றும் ரஹானே தெரிவித்தார்.

ஐபிஎல் 2026: கொல்கத்தாவுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கேகேஆர் அணியில் ஒரு மாற்றமாக முசர்பானிக்குப் பதிலாக சுனில் நரைன் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். உடல்நலக்குறைவு காரணமாக நரைன் கடந்த போட்டியில் ஆடவில்லை.

பிளேயிங் லெவன்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ரிங்கு சிங், ராவ்மன் பவெல், ரமன்தீப் சிங், அனுகூல் ராய், சுனில் நரைன், நவ்தீப் சைனி, கார்த்திக் தியாகி.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: டிம் செய்ஃபர்ட், மனிஷ் பாண்டே, ராகுல் திரிபாதி, வைபவ் அரோரா, தேஜஸ்வி சிங்

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்

லக்னௌ அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிகோலஸ் பூரன், அப்துல் சமத், முகுல் சௌத்ரி, எம்.சித்தார்த், ஆவேஷ் கான், மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ராதி.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஆயுஷ் படோனி, ஷபாஸ் அஹமது, மயாங்க் யாதவ், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கி

காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி இந்தப் போட்டியில் விளையாடவில்லை

பட மூலாதாரம், Getty Images

ஆடுகளம் எப்படி?

இங்கு நடந்த முந்தைய போட்டியில் (கேகேஆர் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டி) பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளம் தான் இன்றும் பயன்படுத்தப்பட உள்ளது.

ஆடுகளத்தின் ஒரு முனையில் அதிகப்படியான காய்ந்த பகுதிகள் காணப்படுகின்றன. எனவே சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த முனையிலிருந்து முக்கியமாக பந்து வீசுவார்கள் என்று கருதுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் ஃபாஃப் டு பிளெசி போட்டிக்கு முன்பான தன்னுடைய பிட்ச் ரிப்போர்டில் தெரிவித்தார்.

புதிய பந்து ஸ்விங் ஆக வாய்ப்புள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கருதினாலும், இது ஒரு அதிக ரன்கள் எடுக்கக்கூடிய போட்டியாகவே இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

ஆடுகளம் சற்று காய்ந்து காணப்பட்டாலும், மழை பெய்வதற்கான அறிகுறி இருப்பதால், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வதே சரியான முடிவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

ஐபிஎல் 2026ல் இதுவரை…

2026 ஐபிஎல் சீசனில், இந்தப் போட்டிக்கு முன்பு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது. முதலிரு போட்டிகளிலும் அவர்கள் தோற்றிருந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அவர்களின் கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. புள்ளிப் பட்டியலில் கேகேஆர் 9வது இடத்தில் இருக்கிறது.

அதேசமயம் எல்எஸ்ஜி 2 போட்டிகளில் விளையாடி தலா 1 வெற்றி, 1 தோல்வி பெற்றிருக்கிறது. டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிராக தோல்வியடைந்து சீசனைத் தொடங்கிய அந்த அணி, கடந்த போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தியது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU