Home தேசிய national tamil எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம் – தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?

எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம் – தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?

20
0

SOURCE :- BBC NEWS

எரிவாயு, பெட்ரோல்- டீசல், தட்டுப்பாடு, தமிழ்நாடு, மத்திய கிழக்கு

“எங்களுக்கு கழிவறைக்குக் கூட செல்ல கூட முடியாத நிலை உள்ளது”- கூட்டம் கூட்டமாக பெட்ரோல் பங்கை நாடி வரும் மக்களுக்கு இடையே பணியாற்றி வரும் பெட்ரோல் நிலைய பணியாளர் ஆஷாவின் வார்த்தைகள் இவை.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், உலக அளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதன் அதிர்வலைகள் இப்போது தமிழகத்தின் வீதிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

எரிவாயு, பெட்ரோல்- டீசல், தட்டுப்பாடு, தமிழ்நாடு, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

உண்மையிலேயே பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா?

கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், “வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தை காட்டிலும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் வழங்குவதில் முன்னுரிமை தருகிறோம்” என மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் ‘மூன்று நாட்களில் பெட்ரோல் தட்டுப்பாடு’ என்ற சமூக வலைதள செய்தி மக்களை வீதிக்கு வர வைத்துள்ளது.

கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்ற சமூக ஊடக பதிவுகள் தலை தூக்கின.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல், விற்பனை நிலையங்களில் மக்களை வரிசை கட்டி நிற்க வைத்துள்ளது. நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு மக்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்புகின்றனர்.

அகில இந்திய அளவில் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி கூறியுள்ளார்.

எரிவாயு, பெட்ரோல்- டீசல், தட்டுப்பாடு, தமிழ்நாடு, மத்திய கிழக்கு

பெட்ரோல் நிரப்ப வந்தவர்கள் சொல்வது என்ன?

”கேன்களில் எரிபொருள் நிரப்புவர்களால் பல கி.மீ தூரம் பயணித்தும் எங்களுக்கு பெட்ரோல் கிடைப்பதில்லை” என்கிறார் வரிசையில் நின்றிருந்த பிரகாஷ்.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், “மடிப்பாக்கத்தில் இருந்து பெட்ரோலுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன், எங்கு பார்த்தாலும் பெட்ரோல் இல்லையென விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது, இறுதியாக மீனம்பாக்கத்தில் வந்து பெட்ரோல் நிரப்பினேன். பெரும்பாலானோர் கேன்களில் பெட்ரோல் வாங்குவதுதான் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படக் காரணம்” என்கிறார்.

“எங்கள் வாழ்வாதாரமே வாகனங்களை நம்பிதான் உள்ளது, டீசல் இல்லையென்றால் எங்கள் பிழைப்பு நடக்காது. நாங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய டீசல் வாங்கவில்லை, எங்கள் தேவைக்கு இருப்பு வைக்கவே வாங்குகிறோம்” என்கிறார் சரக்கு வாகனம் ஓட்டும் ரவிச்சந்திரன்

“இந்த தேவையற்ற அச்சம் என் பணியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார் டெலிவரி வேலை செய்யும் கெளதம்.

“டெலிவரி வேலை செய்வதால் எனக்கு நேரம் மிகவும் முக்கியம், தினமும் 5 நிமிடத்தில் பெட்ரோல் போடுவேன், ஆனால் இன்று ஒரு மணி நேரம் ஆனது” என்றார்.

“அதிக நேரத்தை பெட்ரோல் போட செலவழித்துவிட்டேன், டெலிவரி செய்யும் இடத்தில் என் மேல் கோபப்படுவார்கள்” என்கிறார் கெளதம்.

அதே நேரத்தில் “பெட்ரோல் தட்டுப்பாடு ஒரு வதந்தி மட்டுமே, தானாகவே இது சரியாகிவிடும்” என்கிறார் நிதித்துறையில் பணியாற்றும் திவ்யேஷ்.

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் பெண்.

‘ யாரும் பேசுவதில்லை’

“பெட்ரோல் பங்குகளை நாடி வருவோரை பற்றி மட்டுமே பேசுவோர் எங்கள் துயரை கண்டுகொள்வதில்லை” என்கிறார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் குமுதா.

“இதுபோன்ற நாட்களில் அமர்வதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை” என்றார் அவர்.

“கழிவறை செல்லக்கூட நேரம் கிடைப்பதில்லை” என்கிறார் மற்றொரு பணியாளர் ஆஷா.

“வழக்கத்தை விட ஐந்து மடங்கு கூட்டம் வருகிறது, வருபவர்கள் அனைவரும் டேங்க் புல்லாக நிரப்ப சொல்கிறார்கள், நகர்வதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை” என அவர் கூறினார்.

அரசும் எண்ணெய் நிறுவனங்களும் என்ன சொல்கின்றன?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் தரவுகளின்படி, இந்தியாவில் 42 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் 3 கோடியே 35 லட்சம் வாகனங்கள்.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி “பெட்ரோல் இருப்பில் எந்த குறையும் இல்லை” என விளக்கமளித்துள்ளார்.

“நாட்டுக்கு தேவையான அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாடு முழுவதும் திடீரென ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த பீதி அவசியமற்றது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் “பெட்ரோல் டீசல் போதுமான அளவு கிடைப்பதுடன் விநியோகமும் சீராக உள்ளது, வதந்திகளில் யாரும் கவனம் செலுத்த வேண்டாம்” என்று குறிப்பிட்டிருந்தது.

பிபிசி தமிழிடம் பேசிய சென்னையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் டீலர் அரசன், “மக்கள் பதற்றமடையும் அளவுக்கு இங்கு எதுவும் நடக்கவில்லை, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எப்போதும் போல பெட்ரோல் டீசல் வந்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

“இந்த திடீர் வதந்தியால் எரிபொருள் தேவை இரட்டிப்பாகியுள்ளது அதையும் நிறுவனத்திடம் இருந்து பெற்று மக்களுக்கு வழங்கி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தேவைக்கு மட்டும் எரிபொருளை மக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கேன்களில் பெட்ரோல் டீசல் நிரப்புவது குறித்து விளக்கமளித்த அவர், “கேன்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற விதி ஏற்கனவே அமலில் இருப்பதால் அதனை நாங்கள் பின்பற்றி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU