Home தேசிய national tamil எப்ஸ்டீனுடன் என்ன பேசினார்? மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் மின்னஞ்சல் உரையாடல் தொகுப்பு

எப்ஸ்டீனுடன் என்ன பேசினார்? மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் மின்னஞ்சல் உரையாடல் தொகுப்பு

14
0

SOURCE :- BBC NEWS

எப்ஸ்டீன் கோப்புகள், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

பட மூலாதாரம், ANI

அண்மையில் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர துவார் எனப்படும் வாயிலுக்கு வெளியே எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக ‘எப்ஸ்டீன் கோப்பில்’ மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம் பெற்றுள்ளதால், அவர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஏராளமான கோப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த எப்ஸ்டீன் கோப்புகளின்படி, 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஹர்தீப் சிங் பூரிக்கும் ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் இடையே மின்னஞ்சல் வழியாக பலமுறை உரையாடல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள ஹர்தீப் சிங் பூரி, எப்ஸ்டீனின் எந்தவொரு குற்றச் செயல்களுடனும் தனக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, எப்ஸ்டீன் கோப்புகளை ஆய்வு செய்த பிபிசி, அதில் ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்படும் விஷயங்கள் என்ன என்பது குறித்து அறிய முயற்சி செய்துள்ளது.

ஹர்தீப் சிங் பூரி ஏன் சர்ச்சையில் சிக்கினார் என்பதைப் புரிந்து கொள்ள, அந்த எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள மின்னஞ்சல்களை விரிவாகப் படிப்பது அவசியமாகிறது.

இருவருக்கும் இடையே எத்தகைய உரையாடல்கள் நடந்தன என்பதைக் காட்டும் மின்னஞ்சல் பகுதிகளின் தொகுப்பை நாங்கள் இங்கே வழங்குகிறோம்.

எப்ஸ்டீன் கோப்புகள், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜெஃப்ரி எப்ஸ்டீன்

பட மூலாதாரம், Getty Images

‘வேறு ஏதேனும் ஆலோசனை உள்ளதா?’

2014 ஜூன் 18

அமெரிக்க இணைய தொழில்முனைவோரான ரீட் ஹாஃப்மேன், லிங்க்ட்இன் இணை நிறுவனரும் ஆவார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஹர்தீப் சிங் பூரிக்கு ஒரு மின்னஞ்சலில் “…நான் டெர்ஜேவுடன் பேசினேன். ரீட் ஹாஃப்மேன் இந்தியாவுக்கு வரத் தயாராக உள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

2014 ஜூன் 23

எப்ஸ்டீனின் ஜூன் 18-ஆம் தேதி மின்னஞ்சலுக்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, “ரீட் ஹாஃப்மேனின் பயணத்திற்கு உதவ/ஏற்பாடுகளைச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி” என்று எழுதியிருக்கிறார்.

2014 செப்டம்பர் 24

ரீட் ஹாஃப்மேனையும் ஹர்தீப் சிங் பூரியையும் ஒரு மின்னஞ்சலில் அறிமுகப்படுத்திய எப்ஸ்டீன், “ரீட், ஹர்தீப் இந்தியாவில் உங்களுக்கு மிகவும் தேவையான நபர்” என்று எழுதியிருந்தார்.

2014 செப்டம்பர் 25

செப்டம்பர் 24-ஆம் தேதியிட்ட மின்னஞ்சலுக்கு பதிலளித்த ரீட் ஹாஃப்மேன், “ஹர்தீப், உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மனிதர்களை தேர்ந்தெடுப்பதில் ஜெஃப்ரி வல்லவர் (நான் ஒரு விதிவிலக்கு)” என்று எழுதினார்.

2014 செப்டம்பர் 25, அன்று இந்த மின்னஞ்சலுக்கு பதிலளித்த ஹர்தீப் பூரி, “மக்களை புரிந்து கொள்ளும் ஜெஃப்ரியின் திறமை குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரது உள்ளுணர்வு (மக்களை அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் திறன்) சிறந்தது.” என்று எழுதியுள்ளார்.

எப்ஸ்டீன் கோப்புகள், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜெஃப்ரி எப்ஸ்டீன்

பட மூலாதாரம், Getty Images

2014 அக்டோபர் 4

ஹர்தீப் சிங் பூரியிடம், “ரீட்-ஐ நீங்கள் சந்தித்தீர்களா?” என்று எப்ஸ்டீன் கேட்டார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக அக்டோபர் 4 அன்று, ஹர்தீப் சிங் பூரி அனுப்பிய மின்னஞ்சலில், “இன்று மதியம் நடைபெறும் ஒரு சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நான் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கிறேன். நண்பரே, நீங்கள் காரியங்களை சரியாக செய்து முடிப்பவர்” என்று எழுதினார்.

“வேறு ஏதாவது ஆலோசனை?”

ஹர்தீப் சிங் பூரியின் அக்டோபர் 4ஆம் தேதி மின்னஞ்சலுக்கு பதிலளித்த எப்ஸ்டீன், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சமூக வலையமைப்பு ஆளுமைகளைச் சந்திக்க அவர் இந்தியாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்வதாக அவரிடம் சொல்லுங்கள்” என தெரிவித்தார்.

விசா ஏற்பாடுகள்

2014 அக்டோபர் 11

ஹாஃப்மேனுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், “ஹர்தீப் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாரா?” என்று எப்ஸ்டீன் கேட்டுள்ளார்.

அக்டோபர் 12, 2014 அன்று, ரீட் ஹாஃப்மேன், “சிக்கலானவர்” என பதிலளித்துள்ளார்.

2014 அக்டோபர் 24

ஹர்தீப் சிங் பூரிக்கு ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதிய ஒரு மின்னஞ்சலில், “ஹர்தீப், எனக்கு உதவி தேவை. இந்தியாவில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள என் உதவியாளருக்கு அவசரமாக விசா தேவை. தூதரகத்தில் யாரிடமாவது பேச முடியுமா?” என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அக்டோபர் 24 அன்று, ஓய்வுபெற்ற தூதர் பிரமோத் பஜாஜுக்கு ஹர்தீப் சிங் பூரி எழுதிய ஒரு மின்னஞ்சலில், “பிரமோத், நீங்கள் இதை முன்னுரிமை அடிப்படையில் செய்ய முடிந்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரரிடம் சொல்கிறேன்” என்று உதவி கேட்டிருந்தார்.

“ஜெஃப்ரி, இப்போது என்னுடன் பணிபுரியும் தூதர் பஜாஜ், அதற்கு ஏற்பாடு செய்வார்.”

“பிரமோத், நியூயார்க்கில் வசிக்கும் சஞ்சீவ்-க்கும் இந்த மின்னஞ்சலில் ஒரு நகல் வைத்திருக்கிறேன். நீங்கள் அவரிடம் ஏதேனும் பேச விரும்பினால், பயன்படுத்திக் கொள்ளவும்.”

அக்டோபர் 24 ஆம் தேதி, ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு பிரமோத் பஜாஜ் ஒரு மின்னஞ்சல் எழுதினார். ஹர்தீப் சிங் பூரிக்கு எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சலை மேற்கோள் காட்டி, “உங்களுக்கு விசா கிடைக்க உதவுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்று கூறினார்.

பின்னர் பிரமோத் பஜாஜ் “விசா செயல்முறை இப்போது ஆன்லைனில் உள்ளது” என்று எழுதினார். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, “விசா விண்ணப்பத்தின் ஒரு நகலை அவுட்சோர்சிங் நிறுவன அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் எழுதினார்.

இறுதியாக, “இந்த செயல்முறை முடிந்தவுடன் எங்களுக்குத் தெரிவிக்கவும். மேலும் செயல்முறைக்கு உங்களுக்கு உதவுவோம்” என்று பிரமோத் பஜாஜ் எழுதினார்.

“உங்கள் சக ஊழியருக்கு ஏதேனும் கூடுதல் தகவல் அல்லது உதவி தேவைப்பட்டால், எங்களைத் தொடர்பு கொள்ளவும்.”

எப்ஸ்டீன் கோப்புகள், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜெஃப்ரி எப்ஸ்டீன், டிஜிட்டல் இந்தியா

பட மூலாதாரம், Ajay Aggarwal/Hindustan Times via Getty Images

டிஜிட்டல் இந்தியா

2014 டிசம்பர் 24

ஹர்தீப் சிங் பூரி, ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு எழுதிய மின்னஞ்சலில் ‘எக்ஸோடிக் ஐலேண்ட்’ அல்லது ‘அபூர்வத் தீவு’ பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், “நீங்கள் உங்கள் ‘அபூர்வத் தீவில்’ இருந்து திரும்பியதும் தெரியப்படுத்துங்கள். நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன். அத்துடன், இந்தியாவின் மீது உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் சில புத்தகங்களையும் வழங்க விரும்புகிறேன்,” என்று எழுதியிருந்தார்.

அதற்கு அன்றே பதிலளித்த எப்ஸ்டீன், “நானும் உங்களுக்கு எழுதிக் கொண்டிருந்தேன் – ஆச்சரியமாக இருக்கிறது! நான் ரீட் உடன் பேசினேன்,” என்று குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, “உண்மையில் இது டெலிபதி தான். நீங்கள் திரும்பியதும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்; அதற்கு உங்களுக்கு வேறு யாருடைய ஊக்கமும் தேவைப்படாது” என்று பதிலளித்தார்.

டிஜிட்டல் இந்தியா குறித்த குறிப்பு

பிரதமர் நரேந்திர மோதியின் முதல் ஆட்சிக் காலத்தில், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் 2015 ஜூலை மாதம் முதல் நாளன்று தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு சுமார் ஏழரை மாதங்களுக்கு முன்பே, 2014 நவம்பர் 13 அன்று ஹர்தீப் சிங் பூரி எப்ஸ்டீனுக்கு எழுதிய மின்னஞ்சலில் இது குறித்த குறிப்பு உள்ளது.

பூரி அந்த மின்னஞ்சலில், “ஜெஃப், அக்டோபர் 3-ம் தேதி சிலிக்கான் வேலியில் ரீட் உடன் நான் பேசியது பற்றி உங்களிடம் கூறியிருந்தேன். ரீட் கூடிய விரைவில் இந்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்பது உங்கள் கருத்தாக இருந்தது. அக்டோபர் நடுப்பகுதியில் இந்தியா திரும்பிய பிறகு, இந்தியாவில் இணையம் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்குச் சிறந்த வாய்ப்பு இருப்பதாக நான் முன்னெப்போதையும் விட இப்போது உறுதியாக நம்புகிறேன்,” என்று எழுதியிருந்தார்.

“உதாரணமாக, ஜப்பானிய தொலைத்தொடர்பு மற்றும் இணைய நிறுவனமான சாஃப்ட் பேங்க், அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய இ-காமர்ஸ் துறையில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய நிறுவனமான ஸ்நாப்டீல் 600 மில்லியன் டாலர் நிதியுதவியைப் பெற்ற முதல் நிறுவனமாகும். வலுவான பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு வந்த பிறகு சந்தையில் உற்சாகம் அதிகரித்துள்ளது. ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி இந்தியப் பொருளாதாரத்தைப் புத்துயிர் பெறச் செய்ய இந்த அரசு உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

டிஜிட்டல் இந்தியா 2015-ல் தான் தொடங்கப்பட்டது எனும் போது, 2014 நவம்பரிலேயே எப்ஸ்டீனுடன் ஹர்தீப் சிங் பூரி இது குறித்து எப்படி விவாதித்தார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.

எச்சரிக்கை: இந்த மின்னஞ்சல் உரையாடலில் இனவெறி கருத்துகள் உள்ளன.

2015 டிசம்பர் 25 அன்று எப்ஸ்டீன், ஹர்தீப் சிங் பூரியின் மின்னஞ்சல் ஒன்றை நார்வே நாட்டு தூதரக அதிகாரி டெர்ஜே ரோட்-லார்சனுக்கு அனுப்பி வைத்தார். அந்த மின்னஞ்சலின் கீழ் பகுதியில் பூரி, எப்ஸ்டீனிடம் “காபி குடிக்க நேரம்” ஒதுக்குமாறு கேட்டிருந்தார்.

ரோட்-லார்சனுக்கு அனுப்பிய அந்த மின்னஞ்சலில் எப்ஸ்டீன், பூரியை இருமுகம் கொண்டவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த ரோட்-லார்சன்: “நீங்கள் ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு இந்தியனையும் பாம்பையும் சந்தித்தால், முதலில் இந்தியனைக் கொல்லுங்கள்!” என்று எழுதினார்.

அதற்கு எப்ஸ்டீன்: “கேள்வி என்னவென்றால், இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பதுதான்,” என்று பதிலளித்தார்.

எப்ஸ்டீன் கோப்புகள், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜெஃப்ரி எப்ஸ்டீன்

பட மூலாதாரம், ANI

எதிர்க்கட்சிகள் என்ன கேள்விகளை எழுப்பின?

எப்ஸ்டீன் கோப்புகள், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜெஃப்ரி எப்ஸ்டீன்

பட மூலாதாரம், ANI

எப்ஸ்டீன் கோப்புகளில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றதைத் தொடர்ந்து, மத்திய அரசு மீதான தனது தாக்குதலை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதை தீவிரமான பிரச்னை என்று கூறும் அக்கட்சி, அமைச்சரின் பதில் கோரி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஹர்தீப் சிங் பூரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் முதல் கோரிக்கை ஆகும். சர்வதேச அளவிலான குற்றப் புலனாய்வு ஆவணங்களில் ஒரு மத்திய அமைச்சரின் பெயர் வரும்போது, தார்மீக அடிப்படையில் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஹர்தீப் சிங் பூரியின் மின்னஞ்சல்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆறு கேள்விகளை முன்வைத்துள்ளது. அவை:

  • ரீட் உடனான ஹர்தீப் சிங் பூரியின் சந்திப்பு பற்றி எப்ஸ்டீனுக்கு முன்னரே எப்படித் தெரிந்தது?
  • ரீட் ஹாஃப்மேனுடனான சந்திப்பிற்கு எப்ஸ்டீன் தான் ‘தொடர்புப் புள்ளியாக’ இருந்தாரா?
  • அந்தச் சந்திப்பு குறித்த விவரங்களை ஹர்தீப் சிங் பூரி ஏன் எப்ஸ்டீனுடன் விவாதித்தார்?
  • எப்ஸ்டீனை ‘நண்பர்’ என்று ஹர்தீப் சிங் பூரி குறிப்பிடுவது ஏன்?
  • ஹர்தீப் சிங் பூரிக்காக எப்ஸ்டீன் எத்தகைய வேலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்?
  • இவர்களுக்கிடையேயான தொடர்பு தற்செயலானது அல்லது மேலோட்டமானது என்றால், ஹர்தீப் சிங் பூரி ஏன் எப்ஸ்டீனிடம் ‘ஆலோசனை’ கேட்டார்?

இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கும், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் இடையே , 2014 முதல் 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 62 முறை மின்னஞ்சல் பரிமாற்றம் நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் ஹர்தீப் சிங் பூரியின் ராஜினாமாவை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகள், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜெஃப்ரி எப்ஸ்டீன்

பட மூலாதாரம், ANI

ஹர்தீப் சிங் பூரி விளக்கம் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாகத் தனது தரப்பு விளக்கத்தை அளிப்பதற்காக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பிப்ரவரி 11-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அப்போது அவர், “எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகள் தவறான செயல்கள் மற்றும் குற்றங்களுடன் தொடர்புடையவை. எப்ஸ்டீனிடம் ஒரு தீவு இருந்ததாகவும், அங்கு பாலியல் ரீதியான செயல்பாடுகளுக்காக அவர் மக்களை அழைத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் மீது சிறார் பாலியல் வன்கொடுமை புகார்களும் உள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.”

“எப்ஸ்டீன் தொடர்பாக 30 லட்சம் கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நான் நியூயார்க்கில் எட்டு ஆண்டுகள் இருந்தேன். 2009 மே மாதத்தில் ஐநா-வுக்கான இந்தியத் தூதராகப் பொறுப்பேற்றது முதல், 2017-இல் அமைச்சரானது வரையிலான காலகட்டத்தைப் பற்றி நாம் பேசுகிறோம். இந்த எட்டு ஆண்டுகளில், அநேகமாக மூன்று அல்லது நான்கு சந்திப்புகள் நடந்ததற்கான குறிப்புகள் மட்டுமே உள்ளன.”

“கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு நிகழ்ச்சியின் போது ராகுல் காந்தி என்னிடம் வந்து, ‘சில பெயர்கள் சுவாரஸ்யமான இடங்களில் இடம்பெற்றுள்ளன’ என்று கூறினார். அதன்பிறகு, இளம் தலைவரான ராகுல் காந்திக்கு இது குறித்து விளக்கமளிக்க முடிவு செய்து, அவருக்கு ஒரு குறிப்பு அனுப்புவதாகக் கூறினேன்.”

“அந்தக் குறிப்பில் நான் எழுதியது இதுதான்: அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, நான் சர்வதேச அமைதி நிறுவனத்திற்கு (IPI) அழைக்கப்பட்டேன். பன்முகத்தன்மைக்கான சுயாதீன ஆணையத்தின் (ICM) பொதுச் செயலாளராக நான் இருந்தபோது, அதன் தலைவராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் இருந்தார். பன்முகத்தன்மைக்கான சுயாதீன ஆணையம் என்பது சர்வதேச அமைதி நிறுவனத்தின் ஒரு திட்டமாகும். சர்வதேச அமைதி நிறுவனத்தில் எனது மேலதிகாரியாக இருந்த டெர்ஜே ரோட்-லார்சன், அந்த மோசமான நபரான எப்ஸ்டீனை அறிந்திருந்தார். சர்வதேச அமைதி நிறுவனம் மற்றும் பன்முகத்தன்மைக்கான சுயாதீன ஆணையம் பிரதிநிதி என்ற முறையில் சில சந்தர்ப்பங்களில் நான் எப்ஸ்டீனைச் சந்தித்தேன். நான் மூன்று அல்லது அதிகபட்சம் நான்கு முறை மட்டுமே அவரைச் சந்தித்தேன். பன்முகத்தன்மைக்கான சுயாதீன ஆணையம் சர்வதேச விவகாரங்களைக் கவனித்து வந்தது, எப்ஸ்டீன் அதில் அங்கமாக இருக்கவில்லை.”

தண்டனை பெற்ற ஒருவருடன் ஏன் தொடர்பில் இருந்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் நியூயார்க்கில் மிக முக்கியமான நபராக இருந்தார். அவருடன் தொடர்புடைய பாதி பேருக்கு அவரது கடந்த காலத்தைப் பற்றிச் சிறிதும் தெரியாது. ஆனால் இங்கு அது விஷயமல்ல. எங்களைப் போன்றவர்கள் வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்,” என்று கூறினார்.

எப்ஸ்டீன் கோப்புகள், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜெஃப்ரி எப்ஸ்டீன்

பிரபாகரன் உடனான சந்திப்பு

“கொழும்பில் நான் ஒரு இளம் முதல் செயலாளராக இருந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்க தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டேன். பிரபாகரனுடன் நான் பேசினேன் என்பதற்காக… பின்னாளில் நமது பிரதமரின் படுகொலைக்குக் காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு பயங்கரவாதியுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்பதற்காக… நானும் அந்த பயங்கரவாதியின் கொள்கைகளைக் கொண்டவன் என்று அர்த்தமாகுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“எட்டு ஆண்டுகளில், இரண்டு குறிப்புகள் அல்லது ஒரு மின்னஞ்சல் மட்டுமே உள்ளன. எனது தொடர்புகள் மூலமாக ரீட் ஹாஃப்மேன் என்பவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் லிங்க்டு இன் நிறுவனத்தின் நிறுவனர். அவரைச் சந்தித்த பிறகு நான் ஒரு செய்தியை அனுப்பினேன்.”

“நவம்பர் 2014-இல் நான் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தேன். ஒருவர் இந்தியாவைப் பற்றிப் புரிந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார். அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் லிங்க்டு இன் நிறுவனர் ரீட் ஹாஃப்மேனைச் சந்தித்தேன். இன்றைய இந்தியா ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்றும், ரீட் ஹாஃப்மேன் இந்தியாவிற்கு வந்து இந்த மாற்றங்களைக் காண வேண்டும் என்றும் எனது மின்னஞ்சலைத் தொடங்கினேன்.”

“நான் நவம்பர் 2014-லேயே டிஜிட்டல் இந்தியா பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். எனது நினைவு சரியாக இருந்தால், இந்தத் திட்டங்கள் 2015-இல் தான் தொடங்கப்பட்டன. அப்போது நான் மோதி அரசு எத்தகைய பணிகளைச் செய்யப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு சாதாரண குடிமகனாக இருந்தேன்.”

“எப்ஸ்டீனின் உதவியாளருக்கு விசா பெற்றுத் தருமாறு கோரிக்கை வந்தபோது, நான் அதற்குப் பதிலளிக்கவில்லை. அதை எனது சக ஊழியர் ஒருவருக்கு அனுப்பினேன்… அவர் அதை மற்றொருவருக்கு அனுப்ப, அந்த நபர் ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்’ என்று கூறிவிட்டார். இது யாருக்காவது கைமாறு செய்வதாகுமா?”

எப்ஸ்டீனின் கருத்து:

“எப்ஸ்டீன் என்னைப் பற்றி ‘இருமுகம் கொண்டவர்’ என்று எழுதியுள்ளார். அதன் அர்த்தம் என்ன? இந்த ஆள் சரியில்லை என்பதுதான். அவர்களின் மதிப்பீடுகளின்படி நான் சரியானவனாக இருக்கவில்லை.”

எப்ஸ்டீனுக்கும் தனக்கும் எந்த நெருக்கமும் இல்லை என்பதையும், அவர் தன்னை வெறுத்தார் என்றும் கூறும் ஹர்தீப் சிங் பூரி, ‘இந்தியன் மற்றும் பாம்பு’ தொடர்பான அந்த இனவெறிப் பழமொழியைச் சுட்டிக்காட்டினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU