Home தேசிய national tamil உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிரம்பின் வரி விதிப்பால் இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு லாபமா?

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிரம்பின் வரி விதிப்பால் இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு லாபமா?

4
0

SOURCE :- BBC NEWS

ஆடைச் சந்தை

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 ஏப்ரல் 2025, 13:41 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பால், ‘இந்திய ஜவுளித்துறைக்கு பெரும் சாதகம்’ ஏற்படுமென்று ஜவுளித் தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள 27 சதவிகித வரிவிதிப்பின்படி, அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்புகின்றனர். (வரிவிதிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் காண்பித்த விளக்கப்படத்தில் இந்தியாவுக்கு 26% வரி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ உத்தரவில் 27% என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு மற்ற சில நாடுகளுக்கான வரிவிதிப்புகளிலும் காணப்பட்டது)

இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பா?

டிரம்ப் அறிவித்துள்ள புதிய பரஸ்பர வரி, இந்திய ஆடைத்துறைக்கு ஆகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார், இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் (ITF-Indian Texprenuers Federation) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்.

”பரஸ்பர வரியில், இந்தியாவுக்கு 27 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ஆடைத்துறையில் கடும் போட்டியாளர்களாக உள்ள வியட்நாமுக்கு 46%, இலங்கைக்கு 44 %, வங்கதேசத்துக்கு 37 % , சீனாவுக்கு 34% என்ற அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்திக்கான செலவு, போட்டித் தன்மையை ஒப்பிட்டால் இது இந்தியாவுக்கு மிகத்தெளிவாக பெரும் நன்மையைத் தரும் என நம்புகிறோம்.” என்கிறார் பிரபு தாமோதரன்.

மேலும் தொடர்ந்த அவர், ”கடந்த காலத்தில் பருத்தி ஆடை ஏற்றுமதிக்கு இந்தியாவைப் போலவே வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் வரியை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், சமீபத்திய மாற்றத்தின்படி பார்க்கும்போது, இந்தியாவுக்கான வரி குறைவதால், அமெரிக்க சந்தைக்கான ஆடை ஏற்றுமதியில் இந்தியா பல அடிகள் முன்னோக்கிச் செல்ல முடியும்.” என்றார்.

ஆனால், இந்த வரி விதிப்பு முறையில் சில மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், எதையும் உடனடியாகக் கணிக்க இயலாது என்கிறார், தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (SIMA-The Southern India Mills’ Association) தலைவர் சுந்தரராமன்.

இப்போதைய நிலையில் ஆடைத்துறையில் இந்தியாவுக்கு பாதிப்பு எதுவுமில்லை என்றாலும், இதனால் எவ்வளவு ஏற்றுமதி அதிகரிக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது என்கிறார் அவர்.

ஜவுளித்துறை

பட மூலாதாரம், Getty Images

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய சுந்தரராமன், ”ஜவுளித்துறையில் இந்தியாவுக்குக் கடும் போட்டியாளர்களாக உள்ள வியட்நாம் மற்றும் வங்கதேசத்துக்கு அதிகளவு வரி விதிக்கப்பட்டுள்ளதால் சில சாதகங்கள் ஏற்படும் என்பது நிச்சயம். ஆனால் இதே நிலை நீடிக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த நாடுகள் வரியைக் குறைப்பதற்கு நிச்சயமாக அமெரிக்காவுடன் பேசுவார்கள். அதை அமெரிக்கா ஏற்றால், தற்போதுள்ள வரி விதிப்பில் சில மாற்றங்கள் வரும். இல்லாவிடில், தற்போதுள்ள இந்திய ஜவுளி ஏற்றுமதி 10 சதவிகிதம் வரை உயரும் என எதிர்பார்க்கலாம்.” என்றார்.

அமெரிக்க நுகர்வோர்கள் மீதான தாக்கம்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு முறையால் இந்தியாவுக்கு சாதகங்கள் அதிகம் என்று கூறும் தொழில் அமைப்பினர் பலரும், ஒரு விஷயத்தில் ஒரே விதமான அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

கூடுதல் வரி விதிப்பால் அமெரிக்காவின் வர்த்தகம் குறையும் என்பதே அந்த அச்சம். இதனால் ஒட்டுமொத்தமாக அமெரிக்கர்களின் வாங்கும் அளவு குறையும் என்பது இவர்களின் கணிப்பாக உள்ளது.

”இந்த வரி விதிப்பு, அமெரிக்காவிலுள்ள நுகர்வோரிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அறிவித்தபடியே வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்கு பல நாடுகளும் பதிலடி கொடுக்கும். அது அமெரிக்காவின் சில்லறை வர்த்தகத்தில் அதிர்வலைகளை உருவாக்கும். அது இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் குறுகிய கால ஏற்றுமதிப் போக்குகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் என்பதோடு வர்த்தகத்தின் அடுத்தடுத்த கட்டங்களையும் ஒரு வகையில் பாதிக்கும். இந்த காரணிகளை கவனிப்பது அவசியம்.” என்கிறார் பிரபு தாமோதரன்.

டொனால்ட் டிரம்ப், புதிய வரி விதிப்பு: அமெரிக்கா, ஆடைச் சந்தையை, இந்தியா

பட மூலாதாரம், Special arrangement

”முன்பு 100 ரூபாய்க்கு விற்ற ஒரு பொருளின் விலை, திடீரென 140 ரூபாயாகும்போது, 5 பொருட்களை வாங்கியவர்கள் அதை 3 ஆகக் குறைத்து விடுவர். இதனால் அமெரிக்கர்களின் நுகர்வு அளவு குறையும். அதன் தொடர்ச்சியாக வர்த்தகம், இறக்குமதி எல்லாமே குறையும் என்பதால் நமது ஏற்றுமதி எப்படி உயருமென்று கணிக்க முடியாது.” என்கிறார் சைமா தலைவர் சுந்தரராமன்.

அமெரிக்காவின் நுகர்வு அளவு குறைந்தாலும் இந்தியாவுக்கு சாதகமாகவே அமையும் என்கிறார் சுந்தரராமன்.

தற்போதுள்ள வரி விதிப்பு முறை தொடரும்பட்சத்தில், போட்டி நாடுகளை விட இந்தியாவுக்கு வரி குறைவாக இருப்பதால், அமெரிக்காவின் சந்தையில் இந்திய ஜவுளிகளின் ஏற்றுமதி அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், ”இந்தியாவை விட அதிகமாக வரிச்சலுகை துருக்கி பெற்றுள்ளது. ஆனால், ஏற்கெனவே ஐரோப்பிய யூனியனிலும் துருக்கிக்கு பூஜ்ஜிய சதவிகிதமே வரி விதிப்பு உள்ளதால், அந்நாட்டிலிருந்து ஐரோப்பாவுக்கு ஆடை ஏற்றுமதி செய்யவே வாய்ப்பு அதிகம்.” என்றார்.

இந்திய தயாரிப்புகளுக்கான போட்டித்தன்மை

அதேநேரத்தில், இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம், வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளை விட இந்தியாவுக்கான வரி விதிப்பு குறைவாக இருப்பதால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் ஆடை ஏற்றுமதி, தற்போதுள்ள 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயரும் என்கிறார் சுப்பிரமணியன்.

ஆடைகள் ஏற்றுமதிக்கான முக்கிய அமைப்பான ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் (AEPC-Apparel Export Promotion Council) முன்னாள் தலைவரும், ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகத் தலைவருமான சக்திவேல், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் மதிப்புக்கு ஏற்ப கூடுதல் வரியை (Ad valorem duty) டிரம்ப் விதித்திருப்பது சில எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்கிறார்.

டொனால்ட் டிரம்ப், புதிய வரி விதிப்பு: அமெரிக்கா, ஆடைச் சந்தையை, இந்தியா

பட மூலாதாரம், Special arrangement

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” 27 சதவிகித வரியுடன் கூடுதல் மதிப்பு வரிக் கட்டணம் அதிகபட்சமாக செலவுகளை அதிகரிக்கும். இதனால், இந்திய தயாரிப்புகளுக்கு போட்டித்தன்மை குறைவாகும். துருக்கி, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு 10 சதவிகித வரி தரப்பட்டுள்ளதால், அமெரிக்க வர்த்தக வாய்ப்புகளை அதிகப்படுத்தும். இதனால் வர்த்தக ஓட்டங்களில் மாற்றம் ஏற்படும்.” என்றார்.

இதனால் இந்தியாவின் ஏற்றுமதி பங்கு மேலும் பாதிக்கப்படும் என்று கூறும் சக்திவேல், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு 20 சதவிகித வரி என்பது இந்தியாவை விட குறைவு என்பதால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்றாலும், இந்த நாடுகளும் ஆடை இறக்குமதியில் இந்தியாவை சார்ந்திருப்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம் என்கிறார்.

ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்தியாவை விட அதன் போட்டி நாடுகளுக்கு கூடுதல் வரி என்பது இந்தியாவுக்கு அமெரிக்க வர்த்தகத்தில் ஆதாயத்தைத் தரும் என்கிறார் அவர்.

”தற்போது அமெரிக்க ஜவுளிச் சந்தையை சீனா 21 %, வியட்நாம் 19%, வங்கதேசம் 10% என்ற அளவில் ஆக்கிரமித்துள்ளன. இதில், இந்தியாவின் பங்களிப்பு வெறும் 6 சதவிகிதம்தான். தற்போதைய வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவை விட வரி குறைவு என்றாலும் அந்த நாடுகள், அமெரிக்க ஜவுளிச்சந்தையில் 3 சதவிகிதம் மட்டுமே பங்கெடுத்துள்ளன.” என்கிறார் தாமோதரன்.

ஜீரோ டூ ஜீரோ வரி விதிப்பு – மத்திய அரசுக்கு கோரிக்கை

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு முறையால் கிடைக்கும் வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்துவதற்கு, மத்திய அரசு சில உதவிகளைச் செய்ய வேண்டும் என ஜவுளித்துறையினர் கோருகின்றனர்.

”முக்கியமாக அமெரிக்காவிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் விதிக்கப்படும் 11 சதவிகித வரியை முழுவதுமாக நீக்க வேண்டும்” என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன்.

அப்படிச் செய்யும்பட்சத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளுக்கும் அந்நாட்டில் வரி விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.

இதே கருத்தை கூறும் பிரபு தாமோதரன், ”ஆடை ஏற்றுமதியில் இந்திய ஜவுளித்துறை புதிய உச்சத்தை எட்டுவதற்கு, அமெரிக்காவுக்கு இந்தியா பூஜ்ஜிய வரியை வழங்க வேண்டும். இந்த நடவடிக்கை ஒட்டுமொத்தமாக தொழில்துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.” என்றார்.

பரஸ்பர வரி விதிப்பு முறை என்பதால், இரு தரப்பிலும் ‘ஜீரோ டூ ஜீரோ’ என்ற வரி விதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என கூறும் சுப்பிரமணியன், ”ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடும் சிரமங்களை கடந்து வந்துள்ளது. தற்போது சாதகமான சூழல் நிலவுவதால், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்.” என்கிறார்.

டொனால்ட் டிரம்ப், புதிய வரி விதிப்பு: அமெரிக்கா, ஆடைச் சந்தையை, இந்தியா

பட மூலாதாரம், Special arrangement

அதேபோன்று, தற்போதுள்ள ஏற்றுமதி ஆர்டர்களுக்கே திருப்பூர் பனியன் நிறுவனங்கள் 90 சதவிகிதம் பிஸியாக இயங்கி வரும் நிலையில், புதிய வரி விதிப்பால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமெனில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார் சுப்பிரமணியன்.

”ஏற்கெனவே டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைவது, ஏற்றுமதியாளர்களுக்கு சாதகத்தையே ஏற்படுத்தியுள்ளது. இப்போது இந்த வரி விதிப்பும் கூடுதல் சாதகமாகிறது. ஆனால், உற்பத்தியை அதிகரிக்க அதற்கான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. தொழிற்சாலைகளை விரிவுபடுத்தவும், அதி நவீன இயந்திரங்களைப் பொருத்தவும், செயற்கை நுண்ணறிவு உபகரணங்களைக் கொண்டு வரவும் மானியம் போன்ற உதவிகளை மத்திய அரசு விரைவாக வழங்குவது நல்லது.” என்கிறார் சுப்பிரமணியன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU