Home தேசிய national tamil ‘உணவு, மருந்துகள், ஸ்மார்ட் ஃபோன்கள்’ – ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் எதெல்லாம் விலை உயரும்?

‘உணவு, மருந்துகள், ஸ்மார்ட் ஃபோன்கள்’ – ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் எதெல்லாம் விலை உயரும்?

5
0

SOURCE :- BBC NEWS

ஹோர்மூஸ் நீரிணை, இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால் ஹோர்மூஸ் நீரிணை வழியாக விநியோகிக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு தடைபட்டிருப்பது, உலகளாவிய எரிசக்தி விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளது.

பெட்ரோல் விலை ஏற்கனவே உயர்ந்துவிட்டது. பிரிட்டனில், குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள மக்கள் வீடுகளை வெப்பமூட்டுவதற்கான கட்டணங்களும் உயர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஆனால் இந்த மோதலால் எரிபொருள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஹோர்மூஸ் நீரிணை வழியாக சர்வதேச விநியோகச் சங்கிலிகளுக்குள் நுழையும் முக்கியமான ரசாயனங்கள், வாயுக்கள் மற்றும் இதர தயாரிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 100-க்கும் மேல் இருந்த நிலையில் இருந்து, போர் தொடங்கிய பிறகு வெறும் ஒரு சில கப்பல்கள் என்ற எண்ணிக்கைக்கு அது குறைந்துள்ளதால், உணவு முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மருந்துகள் வரை பல பொருட்களின் விலைகள் பாதிக்கப்படலாம் என்று பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது.

பாதிக்கப்படக்கூடியவை என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

உரங்கள் (உணவு)

பெட்ரோகெமிக்கல்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து பெறப்படுகின்றன, அவை வளைகுடா பிராந்திய நாடுகளால் ஏற்றுமதிக்காக பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அவற்றில் மிக முக்கியமானது உரம், இது உலகளாவிய விவசாய உற்பத்திக்கு இன்றியமையாதது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, யூரியா, பொட்டாஷ், அம்மோனியா மற்றும் பாஸ்பேட் போன்ற உலகின் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்கிறது.

ஹோர்மூஸ் நீரிணை, இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

உலக வர்த்தக அமைப்பின் (WTO) தரவுகள், மோதல் தொடங்கியதிலிருந்து இந்த நீர்வழிப்பாதை வழியாக உரங்கள் தொடர்பான தயாரிப்புகளின் வெளிச்செல்லும் ஏற்றுமதி சரிந்துள்ளதைக் காட்டுகின்றன.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வடக்கு அரைக்கோளத்தின் பயிர் நடவு காலமாகும் என்பதால், இந்த உரங்களின் பற்றாக்குறை இப்போது விவசாய உற்பத்தியை மோசமாக பாதிக்கும் என்றும், இப்போது விவசாயிகள் குறைவான உரத்தைப் பயன்படுத்துவது ஆண்டின் பிற்பகுதியில் விளைச்சலைப் பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கீல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, “ஒரு சிறிய கால அளவிலான மூடல் கூட முழு வளரும் பருவத்தையும் சீர்குலைக்கக்கூடும், இதன் உணவு பாதுகாப்பு விளைவுகள் நீரிணை மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.”

நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 5.2% உயரக்கூடும் என்று அந்த நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும், ஒட்டுமொத்த உணவு விலையேற்றத்தால் மோசமாக பாதிக்கப்படும் நாடுகள் ஜாம்பியா (31%), இலங்கை (15%), தைவான் (12%) மற்றும் பாகிஸ்தான் (11%) என்று அது மதிப்பிடுகிறது.

ரஷ்யா பொதுவாக உலகளாவிய உர ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கை வழங்குகிறது, இந்த இடைவெளியை நிரப்ப ரஷ்யா உற்பத்தியை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உரம் போன்ற பொருட்களின் முக்கிய உற்பத்தியாளரான ரஷ்யா, ‘சரியான நிலையில்’ இருப்பதாக விளாடிமிர் புதினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார்.

ஹீலியம் (மைக்ரோசிப்கள்)

உலகளாவிய ஹீலியம் வாயு ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக கத்தாரிலிருந்து வந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்கிறது.

இது இயற்கை எரிவாயு உற்பத்தியின் ஒரு உபபொருளாகும், மேலும் இது செமிகண்டக்டர் வேஃபர்களை (semiconductor wafers) தயாரிக்கப் பயன்படுகிறது, பின்னர் அவை கணினிகள், வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்களாக மாற்றப்படுகின்றன.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேனர்களில் உள்ள காந்தங்களைக் குளிர்விக்கவும் ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது.

ஹோர்மூஸ் நீரிணை, இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், AFP via Getty Images

இந்த வாயுவை உற்பத்தி செய்யும் கத்தாரின் ராஸ் லாஃபன் எனும் மாபெரும் ஆலை, இரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

சேதத்தை சரிசெய்ய மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று கத்தார் அரசாங்கம் எச்சரித்துள்ளது, இது விநியோகம் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

2023 ஆம் ஆண்டில், உலகளாவிய ஹீலியம் விநியோகம் தடைபட்டால் ‘விலை உயர்வு’ ஏற்படும் என்று அமெரிக்க செமிகண்டக்டர் தொழில்துறை சங்கம் எச்சரித்தது.

ஹோர்மூஸ் நீரிணை அடைப்பின் தொடர் தாக்கம், ஸ்மார்ட்போன்கள் முதல் தரவு மையங்கள் வரையிலான பல அதிநவீன தொழில்நுட்பங்களின் விலைகள் உயர்வதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நீடித்த ஹீலியம் பற்றாக்குறையால் எம்ஆர்ஐ விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் மூத்த ஆய்வாளர் பிரசாந்த் யாதவ் எச்சரித்துள்ளார்.

“எம்ஆர்ஐ இயந்திரங்களுக்கு காந்தங்களைக் குளிர்விக்க 1,500 முதல் 2,000 லிட்டர் ஹீலியம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு முறை நீங்கள் ஸ்கேன் செய்யும் போதும், அதில் ஒரு சிறிய பகுதி ஆவியாகிவிடும்.”

“ஹீலியத்தின் முக்கிய பயன்பாடு தரவு மையங்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் ஏஐ மற்றும் தரவுத் துறையின் குளிர்விப்பு ஆகியவற்றில் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் எம்ஆர்ஐ-களுக்கும் மற்ற மருத்துவ பயன்பாடுகளுக்கும் ஹீலியம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது,” என்று அவர் பிபிசி வெரிஃபையிடம் கூறினார்.

பெட்ரோகெமிக்கல் வழிப்பொருட்கள் (மருந்துகள்)

மெத்தனால் மற்றும் எத்திலீன் போன்ற பெட்ரோகெமிக்கல்களின் வழிப்பொருட்கள், வலிநிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளின் உலகளாவிய உற்பத்தியில் முக்கிய பொருட்களாக உள்ளன.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் – சௌதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகியவை உலகளாவிய பெட்ரோகெமிக்கல் உற்பத்தித் திறனில் சுமார் 6% கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் இந்த ரசாயனங்களை உலகிற்கு ஏற்றுமதி செய்ய முதன்மையாக ஹோர்மூஸ் நீரிணையைப் பயன்படுத்துகின்றன, இதில் பாதி ஆசியாவிற்குச் செல்கிறது.

இந்தியா உலகின் ஜெனரிக் (பிராண்ட் அல்லாதவை) மருந்து ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது, அவற்றில் பல அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுகின்றன.

இந்த மருந்துப் பொருட்களில் பல பொதுவாக வளைகுடா விமான நிலைய மையங்கள், குறிப்பாக துபாய் வழியாக உலகச் சந்தைகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன, அவை இந்த மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக பொது மக்களுக்கான மருந்து விலைகள் உயரக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கந்தகம் (உலோகங்கள்/பேட்டரிகள்)

கந்தகம் (சல்பர்) என்பது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைச் சுத்திகரிப்பதன் மூலம் கிடைக்கும் மற்றொரு உபபொருளாகும், இது வளைகுடா பிராந்தியத்தில் ஏற்றுமதிக்காக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலகளாவிய கடல்வழி கந்தக வர்த்தகத்தில் சுமார் பாதி ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்கிறது.

இதன் முக்கிய பயன்பாடு ஒரு விவசாய உரமாகும், ஆனால் இது உலோக செயலாக்கத்திற்கும் இன்றியமையாதது.

கந்தகம், சல்பூரிக் அமிலம் தயாரிக்கப் பயன்படுகிறது, இது செம்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் செயலாக்கத்திற்கும், லித்தியத்தைப் பிரித்தெடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மின்சார வாகனங்கள் மற்றும் டிரோன்கள் போன்ற ராணுவ வன்பொருட்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் உற்பத்திக்கு அந்த உலோகங்கள் அனைத்தும் தேவைப்படுகின்றன.

கந்தக விநியோகம் தொடர்ந்து தடைபட்டால், பேட்டரிகள் கொண்ட பொருட்களை வாங்கும் நுகர்வோர் அதிக விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரச்னைகளை பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU