Home தேசிய national tamil ‘இஸ்லாமிய நேட்டோ’: அரபு – முஸ்லிம் நாடுகள் ராணுவ கூட்டணி குறித்து மீண்டும் விவாதம் ஏன்?

‘இஸ்லாமிய நேட்டோ’: அரபு – முஸ்லிம் நாடுகள் ராணுவ கூட்டணி குறித்து மீண்டும் விவாதம் ஏன்?

7
0

SOURCE :- BBC NEWS

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இரான் மீதான ஒரு சாத்தியமான தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரிப்பதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், அரபு – இஸ்லாமிய அரசியல் மற்றும் ராணுவக் கூட்டணியை உருவாக்கும் விவகாரம் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.

முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு என்ற கருத்து முதன்முதலில் துருக்கி அதிபர் துருக்கி அதிபர் எர்துவானால் செப்டம்பர் 2024-இல் முன்மொழியப்பட்டது. அந்த நேரத்தில், இஸ்ரேலால் ஏற்படும் ‘வளர்ந்து வரும் விரிவாக்க அச்சுறுத்தலுக்கு’ எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

செப்டம்பர் 2025-இல், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரும் ‘இஸ்லாமிய நேட்டோ’ அமைப்பை நிறுவுவது பற்றிப் பேசினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ‘இஸ்லாமிய நேட்டோ’ அமைப்பை உருவாக்கும் யோசனை வேகம் பெற்றுள்ளது.

எர்துவானின் சமீபத்திய சௌதி அரேபியா மற்றும் எகிப்து பயணங்களைத் தொடர்ந்து, அரபு ஊடகங்களில் ‘இஸ்லாமிய நேட்டோ’ முன்மொழிவு மீண்டும் விவாதிக்கப்படுகிறது. முக்கிய அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய கூட்டணி உருவாகக்கூடும் என்று ஊகங்கள் உள்ளன.

இருப்பினும், துருக்கி மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய சௌதி தலைமையிலான ‘இஸ்லாமிய நேட்டோ’வை உருவாக்கும் திட்டம் தற்போது இல்லை என்று ஒரு சௌதி அதிகாரியின் கூற்றை மேற்கோள் காட்டி ஒரு செய்தி கூறுகிறது.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

எந்த நாடுகள் சேர்க்கப்படலாம்?

அரபு ஊடக செய்திகள், இந்த சாத்தியமான கூட்டணியில் துருக்கி, எகிப்து, சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனீசியா ஆகியவை இடம்பெறலாம் என்று தெரிவித்துள்ளன.

லண்டனைத் தளமாகக் கொண்ட ராய் அல்-யூம் செய்தி இணையதளம் பிப்ரவரி 5 அன்று வெளியிட்ட செய்தியின்படி, “எர்துவானின் ரியாத் மற்றும் கெய்ரோ பயணங்கள் ‘மூன்று நாடுகளை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் மற்றும் ராணுவ இஸ்லாமியக் கூட்டணியை’ உருவாக்கும் திட்டத்தின் பின்னணியில் வந்தவை. இது பின்னர் அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தான் மற்றும் அதிக முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனீசியாவையும் உள்ளடக்கி விரிவடையக்கூடும்”.

துருக்கிய செய்தி வலைத்தளம் ஒன்றும், “முன்னெப்போதும் இல்லாத அரசியல் நெருக்கம் மற்றும் கருத்துகளின் ஒருங்கிணைப்புக்கு மத்தியில், எகிப்து, சௌதி அரேபியா மற்றும் துருக்கியை உள்ளடக்கிய ஒரு பிராந்திய கூட்டணிக்கான வரையறைகள் தென்படுகின்றன,” என்று கூறியது.

இருப்பினும், எர்துவானின் பயணங்கள் எந்தவொரு கூட்டணியையும் குறிக்கவில்லை, மாறாக அந்தப் பிராந்தியம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் உள்ளது என்ற அதிகரித்து வரும் புரிதலைப் பிரதிபலிக்கிறது என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“எகிப்து, சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே அதிகரித்து வரும் நெருக்கம், கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது மற்றும் பொதுவான நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் இணக்கத்தை குறிக்கிறது. ஆனால் அது இன்னும் ஒரு விரிவான உத்தி கூட்டணியின் நிலையை எட்டவில்லை,” என்று அரபிக் டிஃபென்ஸ் கூறியது.

“எகிப்து-துருக்கி கூட்டணி பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த அரபு-இஸ்லாமிய கூட்டணிக்கு அடிப்படையாக அமையக்கூடும்,” என்று சர்வதேச சட்டப் பேராசிரியர் முகமது மஹ்ரான், யூம் 7 என்ற எகிப்திய இணையதளத்திடம் தெரிவித்தார்.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், US Department of Defense via Reuters

இந்தக் கூட்டணியின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?

காஸாவில் இஸ்ரேலின் போர் மற்றும் இரானுடனான 12 நாள் மோதலுக்குப் பிறகு, அரபு – இஸ்லாமியக் கூட்டணி விவாதம் அரபு ஊடகங்களில் மீண்டும் உருவெடுத்துள்ளது.

எகிப்திய தனியார் வலைத்தளமான அல்-ஒரூபா அல்-யூம், “அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள் மற்றும் சூழ்ச்சிகள் காரணமாக, பிராந்தியத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் சௌதி அரேபியா, எகிப்து, பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தாரை உள்ளடக்கிய ஓர் உத்தி கூட்டணியை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது.” என்று தெரிவித்துள்ளது.

முன்னாள் எகிப்திய தூதர் அலி அல்-அஷ்மாவி கத்தார் தொலைக்காட்சி சேனலான அல் ஜசீரா முபாஷரிடம், “சாத்தியமான இந்த கூட்டணி பிராந்தியத்தை துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட ‘மேலாதிக்கத் திட்டங்களை’ முறியடித்து, பிராந்தியத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்” என்றார்.

துருக்கிய ஆய்வாளர் அலி பகாரும் அந்த ஊடகத்திடம் பேசுகையில், “இஸ்ரேல் பெற்றுள்ள மிகப்பெரிய ராணுவ சக்தியை எதிர்கொள்ள இத்தகைய இஸ்லாமியக் கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க முயற்சிகள் தேவைப்படும்.” என்றார்.

லண்டனைச் சேர்ந்த அல்-குட்ஸ் அல்-அரபி தளத்தில்,” இந்த சாத்தியமான இஸ்லாமிய நேட்டோ அமைப்பு என்பது இந்த நாடுகளின் மீது தாக்குதலை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டணி” என்று லூத்ஃபி அல்-உபைதி விவரித்தார்.

இன்னும் பல ஊடக செய்திகள் இதே கருத்தை எதிரொலிக்கின்றன. “மெதுவாக உருவாகி வரும் ஒரு கூட்டணி, நேட்டோ என்று அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் ஒரு தடுப்பு சக்தியாக செயல்படும்.” என்று அவை தெரிவிக்கின்றன.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

துருக்கியின் நிலைப்பாடு என்ன?

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் எர்துவானின் சௌதி அரேபியா மற்றும் எகிப்து பயணத்திற்கு முன்னதாக, துருக்கிய ஊடகங்களில் ஒரு சாத்தியமான ‘இஸ்லாமிய நேட்டோ’ பற்றிய பேச்சுகள் நிறைந்திருந்தன.

இருப்பினும், கவனம் படிப்படியாக பரந்த பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை நோக்கி நகர்ந்தது.

துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் ஜனவரி இறுதியில் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிகரிக்க ‘பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான தளத்தை’ உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

“ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றுமில்லாத நிலையில் இருந்து உருவாகி இன்று இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது எப்படி என்று பாருங்கள். பின் ஏன் நம்மால் அதைச் செய்ய முடியாது?” என்றும் ஃபிடன் கூறினார்.

அரசுக்கு ஆதரவான ஊடகங்கள், இப்படியான கூட்டணியை பிராந்தியத்துக்கான ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கூறுகின்றன. சிலர் இது இஸ்ரேலின் பிராந்திய குறிக்கோள்களை எதிர்கொள்ள உதவும் என்று வாதிடுகின்றனர்.

ஆய்வாளர் கெவ்ஹர் சலூல் பிப்ரவரி 9 அன்று, “இரான், சிரியா, காஸா மற்றும் பாலத்தீனம் போன்ற விவகாரங்களில் துருக்கி, சௌதி அரேபியா மற்றும் எகிப்து இடையே தெளிவான ஒருமித்த தன்மை வெளிப்பட்டுள்ளது” என எழுதினார்.

இந்தக் கூட்டணி தற்போது பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தாலும், துருக்கி, எகிப்து மற்றும் சௌதி அரேபியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.

எகிப்திற்கு 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும், அங்கு ஒரு வெடிமருந்து உற்பத்தி கட்டமைப்பை உருவாக்கவும் துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியின் ‘கான்’ போர் விமானத் திட்டத்தில் முதலீட்டாளராகவும் அதை வாங்கக்கூடிய நாடாகவும் பங்கேற்க சௌதி அரேபியா ஆர்வமாக உள்ளதாக துருக்கிய ஊடகங்களும் கூறுகின்றன.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

கூட்டணியை உருவாக்குவதில் உள்ள சவால்கள் என்ன?

அரபு-இஸ்லாமியக் கூட்டணியை உருவாக்குவதும் பல சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களால் சூழப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

லண்டனைச் சேர்ந்த ராய் அல்-யூம் தளத்தின்படி, ”ஒரு முக்கிய சவால் என்னவென்றால், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஒருபோதும் களத்தில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை மற்றும் அவை பெரும்பாலும் ‘ஆவணங்களில்’ மட்டுமே இருந்துள்ளன. இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களில் சிலர் ஒருவருக்கொருவர் ராணுவ மோதல்களில் கூட ஈடுபட்டுள்ளனர்.”

துருக்கி, எகிப்து மற்றும் சௌதி அரேபியா இடையிலான தற்போதைய ஒத்துழைப்பு ஒரு பாரம்பரிய அல்லது உத்தி கூட்டணியின் நிலையை எட்டவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர், ஏனெனில் “பல விவகாரங்களில், குறிப்பாக பிராந்தியத்தின் அரசியல் மாற்றங்கள் தொடர்பானவற்றில் மூன்று நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.”

முன்னாள் எகிப்திய தூதர் அலி அல்-அஷ்மாவி அல் ஜசீராவிடம் பேசுகையில், “இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் சவால்களை எதிர்கொண்டு இந்தக் கூட்டணி எளிதாக முன்னேற முடியாது.” என்றார்.

துருக்கிய ஆய்வாளர் அலி பகாரும், “இஸ்ரேல் இந்தக் கூட்டணி நடைமுறையில் உருவாக அனுமதிக்காது, ஏனெனில் அமெரிக்காவில் உள்ள அதன் இணைந்த லாபிகள் ஏற்கனவே அதைத் தடுக்கச் செயல்படத் தொடங்கிவிட்டன.” என்றார்.

அரபு-யூரேசிய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர் காதி கனில், இத்தகைய கூட்டணிக்கான சாத்தியமான எதிர்கால காட்சிகளை விளக்கினார். “மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படவே அதிக வாய்ப்புள்ளது.” என்றார்.

இந்த முகாம் ஒரு பெரிய நிறுவன ரீதியான கூட்டணியாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU