Home தேசிய national tamil இஸ்லாமியர்களின் புனிதத் தலத்திலிருந்து எப்ஸ்டீனுக்கு “கிஸ்வா” அனுப்பப்பட்டதா?- புதிய ஆவணங்களால் சர்ச்சை

இஸ்லாமியர்களின் புனிதத் தலத்திலிருந்து எப்ஸ்டீனுக்கு “கிஸ்வா” அனுப்பப்பட்டதா?- புதிய ஆவணங்களால் சர்ச்சை

5
0

SOURCE :- BBC NEWS

காபா கிஸ்வா சர்ச்சை

பட மூலாதாரம், EPA

இஸ்லாம் மதத்தின் புனிதத் தலமான காபாவை மூடும் துணியின் (கிஸ்வா) பல துண்டுகள் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்டது குறித்து வெளிப்படுத்தும் ஆவணங்களால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கோபத்தில் உள்ளனர்.

ஜனவரி 30-ஆம் தேதி அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட மேலும் சில “எப்ஸ்டீன் கோப்புகளில்” அத்துணியின் மூன்று துண்டுகள் (கிஸ்வா என அழைக்கப்படுகின்றன) சௌதி அரேபியாவிலிருந்து கரீபியனில் உள்ள எப்ஸ்டீனின் வீட்டுக்கு கப்பலில் அனுப்பப்பட்டதை குறிப்பிடும் 2017-ஆம் ஆண்டு மின்னஞ்சல்கள் உள்ளன.

எக்ஸ் சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர், “உலகின் மிகவும் புனிதமான இடத்தின் ஒரு பகுதியை மிகவும் அழுக்கான இடத்திற்கு அனுப்புவதை கற்பனை செய்து பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

2014-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், எப்ஸ்டீன் மற்றொரு நபருடன் சேர்ந்து தரையில் இருந்த ஒரு துணியை ஆய்வு செய்கிறார். அது ‘கிஸ்வா’ (காபாவின் கதவில் மூடப்பட்டிருக்கும்) துணியின் மிகவும் அலங்கரிக்கப்பட்ட பகுதியாக தோன்றுகிறது.

காபா கிஸ்வா சர்ச்சை

பட மூலாதாரம், Source: US Department of Justice

மற்றொரு எக்ஸ் பயனர், “கிஸ்வா ஒரு கம்பளம் போன்று தரையில் கிடப்பதை பார்க்கும் போது என் இதயம் நொறுங்குகிறது.” என பதிவிட்டுள்ளார்.

எனினும், 2017-ஆம் ஆண்டு எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்ட கிஸ்வாவின் சில துண்டுகளை குறிக்கும் ஆவணங்களுடன் இந்த புகைப்படத்திற்கு எவ்வித நேரடி தொடர்பும் இல்லை என தோன்றுகிறது. அப்புகைப்படத்தில் உள்ள துணி, உண்மையிலேயே கிஸ்வாவின் ஒரு பகுதிதானா என்பதும் உறுதியாக தெரியவில்லை.

‘மசூதி’

கருப்பு பட்டால் தயாரிக்கப்படும் கிஸ்வாவில் குர்ஆன் வாசகங்கள் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் நெய்யப்படும்.

மெக்காவில் அமைந்துள்ள மஸ்ஜித் அல்-ஹரம் மசூதியின் மையத்தில் உள்ள காபாவின் நான்கு சுவர்களும் கிஸ்வா துணி கொண்டே மூடப்படுகின்றது. இது ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான யாத்ரீகர்களால் தொடப்படுகிறது. புதிய இஸ்லாமிய ஆண்டைக் குறிக்கும் விழாவில் அது மாற்றப்படுகிறது.

காபா கிஸ்வா சர்ச்சை

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க நீதித்துறை ஆவணக் காப்பகத்தின்படி, 2017ஆம் ஆண்டில், எப்ஸ்டீனின் ஊழியர்களுக்கும் அஜீஸ் அல்-அஹ்மதி என்ற நபருக்கும் இடையேயான மின்னஞ்சல்களின்படி, எப்ஸ்டீன் மூன்று கிஸ்வா துண்டுகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டது: அதாவது, காபாவின் உள்ளே பயன்படுத்தப்படும் பச்சைநிற துணி, வெளிப்புறத்தை மூட பயன்படுத்தப்படும் கருப்பு நிற துணி மற்றும் அதே துணியில் செய்யப்பட்டு காபாவில் பயன்படுத்தப்படாத, எம்பிராய்டரி செய்யப்பட்ட துணி.

பிப்ரவரி 2017 இல் வந்த ஒரு மின்னஞ்சலில், “அஹ்மதி” என்று குறிப்பிடப்படும் ஒருவரின் உதவியாளர், எப்ஸ்டீன் ஊழியர்களிடம், ‘மசூதிக்கு காபாவின் சில துண்டுகளை அனுப்புவதாக கூறினார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த “மசூதி” என்பது எப்ஸ்டீனின் சொத்துகளில் இருந்த ஓரிடமா என்பது தெளிவாக தெரியவில்லை.

இதுவரை ஆய்வு செய்யப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளில், அந்த தீவில் மசூதி குறித்து எந்தவொன்றும் குறிப்பிடப்படவில்லை. எனினும், நீதித்துறை இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களின்படி, “வழிபாட்டுத்தலம்” (temple) என்ற ஒரு சிறிய கட்டடம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “மசூதி” என்பதை மெக்காவில் காபா அமைந்துள்ள கிராண்ட் மசூதியுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.

2017-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி எப்ஸ்டீனின் பாம் பீச் (Palm Beach) இல்லத்திற்கு கப்பல் வந்ததாகவும் அதன்பின் அக்கப்பல் அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள செயின்ட் தாமஸ் தீவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவு, எப்ஸ்டீனுக்கு சொந்தமான லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவுக்கு அருகில் உள்ளது. இந்த தீவில் தான் தாங்கள் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக, பாதிக்கப்பட்ட பலரும் குற்றம் சாட்டினர்.

2017-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதியிட்ட அமெரிக்க சுங்கத்துறை படிவத்தில் அக்கப்பலில், 10,980 டாலர் மதிப்புடைய “ஓவியங்கள் & வண்ணக்கோல்கள் (pastels)” இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 21-ஆம் தேதியிட்ட மின்னஞ்சலில் கிஸ்வா துண்டுகள் “எப்ஸ்டீனின் இல்லத்திற்கு” அனுப்பப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்பின், அஹ்மதியின் கணக்கிலிருந்து எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், அந்த கருப்பு துணி, “சுன்னி, ஷியா மற்றும் மற்ற மதப்பிரிவுகளை சேர்ந்த குறைந்தது ஒரு கோடி முஸ்லிம்களால் தொடப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காபாவை அவர்கள் ஏழு முறை சுற்றி, ஒவ்வொருவரும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு அதை தொட முயற்சிப்பார்கள், அவர்களின் பிரார்த்தனைகள், கண்ணீர் மற்றும் நம்பிக்கைகளை அந்த துணியின் மீது வைத்துள்ளனர்,” என அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிஸ்வா துணியை எப்ஸ்டீன் அன்பளிப்பாக பெற்றாரா, அது உண்மையிலேயே கிஸ்வா தானா என்பது தெளிவாக தெரியவில்லை.

காபா கிஸ்வா சர்ச்சை

பட மூலாதாரம், Source: US Department of Justice

எனினும், சௌதி அரேபியாவிலிருந்து எப்ஸ்டீனுக்கு அனுப்பப்படும் முதல் கப்பல் இதுவல்ல என, அமெரிக்க நீதித்துறை பதிவுகள் பரிந்துரைக்கின்றன.

2017-ஆம்ம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி அஹ்மதியின் உதவியாளர் என கூறப்படும் நபருக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே பகிரப்பட்ட மின்னஞ்சல்களில், “மசூதிக்குள் வைப்பதற்கான ஏதோ ஒன்றை தயாரிப்பதற்கு மசூதியின் உள்ளே எடுக்கப்பட்ட படங்களை அனுப்புமாறு” அந்நபர் கோரியதாக தோன்றுகிறது. முன்னதாக, அந்த மின்னஞ்சல்களில் எப்ஸ்டீனின் உதவியாளர், எப்ஸ்டீனின் வீட்டுக்கு “கூடாரம் மற்றும் மற்ற பொருட்கள்” வந்து சேர்ந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

நீதித்துறை கோப்புகளில், அரேபிய கம்பளி கூடாரம் மற்றும் கம்பளம், காபி பானைகள், கோப்பைகள் மற்றும் கூடைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய படத்தைக் காட்டும் ஆவணம் இருந்தது. எனினும், அவை கப்பலில் எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்ட பொருட்களா என்பதை உறுதிப்படுத்த முடியாது.

2008-ஆம் ஆண்டில் இரண்டு குற்றச்சாட்டுகளில் எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட பின்னர் தான் இந்த இரண்டு முறையும் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அஹ்மதியிடம் கருத்து கேட்க பிபிசி முயற்சித்தபோது அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. இந்த ஆவணங்களில் சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது எந்தவொரு தவறான செயலுக்குமான ஆதாரங்கள் அல்ல.

இதுவரை ஆய்வு செய்யப்பட்ட எப்ஸ்டீன் ஆவணங்களை பொருத்தவரை, மின்னஞ்சல்களில் மசூதி என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், எப்ஸ்டீனின் தீவில் ஒரு மசூதி இருந்ததற்கான தெளிவான உறுதிப்படுத்தலோ அல்லது மசூதி இருந்ததற்கான இடமோ கொடுக்கப்படவில்லை.

2009 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவில் வழிபாட்டுத் தலம் போன்ற கட்டடத்தை எப்ஸ்டீன் கட்டினார். அதன் தங்கக் குவிமாடம் 2017-ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியில் அடித்துச் செல்லப்பட்டது.

எனினும், மின்னஞ்சல்களில் “மசூதியைத்தான்” இந்த கட்டடமாக குறிப்பிட்டுள்ளார்களா அல்லது எப்ஸ்டீனின் சொத்தில் உள்ள வேறு எந்த இடத்தையும் அவ்வாறு குறிப்பிட்டார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

காபா அமைந்துள்ள மெக்காவின் கிராண்ட் மசூதியை இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “மசூதியுடன்” குழப்பிக் கொள்ளக் கூடாது.

காபா கிஸ்வா சர்ச்சை

பட மூலாதாரம், EPA

மரியாதைமிக்கது, ஆனால் புனிதமானது அல்ல

கிஸ்வா துணியை எப்படி தயாரிப்பது, அதை எப்படி நிறுவுவது, அகற்றுவது மற்றும் பழைய துணிகளை என்ன செய்வது என்பது உட்பட முழு கட்டுப்பாடும் சௌதி அதிகாரிகளிடமே உள்ளது. ஆனால், பழைய கிஸ்வா துணியை விநியோகிப்பது குறித்து எந்தவொரு சட்டமும் இல்லை.

இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிய சௌதி அதிகாரிகளை பிபிசி தொடர்புகொண்டது. ஆனால் இக்கட்டுரை வெளியிடப்படும் வரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.

“அந்த துணியில் தங்கம் மற்றும் வெள்ளியால் குர்ஆன் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ள பகுதி ‘பெல்ட்’ (Belt) மற்றும் ‘சமடியாஸ்’ (Samadias) என அறியப்படுகின்றன, அவை சௌதி அரேபியாவின் அரசவை அதிகாரிகளால் மட்டுமே பரிசளிக்கப்பட முடியும்,” என ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகள் குறித்து எழுதும் எழுத்தாளர் அஹ்மத் அல்-ஹலாபி பிபிசி அரபு சேவையிடம் தெரிவித்தார்.

“இந்த துணிகள் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதன் அரசு அதிகாரிகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன”.

“மீதமுள்ள கருப்பு துணி பல துண்டுகளாக வெட்டப்பட்டு, கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படலாம்,” என ஹலாபி மேலும் கூறுகிறார்.

லண்டனில் உள்ள எஸ்.ஓ.ஏ.எஸ் (SOAS) பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கலை வரலாற்று நிபுணரான முனைவர் சைமன் ஓ’மியரா கூறுகையில், கிஸ்வா “இயல்பாகவே புனிதமானது அல்ல” என்றும் ஆனால் முஸ்லிம் உலகில் அது மிகவும் மரியாதைமிக்கதாக கருதப்படுவதாக தெரிவித்தார்.

“இது காபா கட்டடத்தை கௌரவிக்கிறது – ஒரு மன்னரின் மேலங்கியைப் போல.

“காபா கட்டடத்திலிருந்து கிஸ்வா துணியை எடுத்த பின்னர் அது இழிவுபடுத்தப்பட கூடாது. அதை அவமதிக்கக் கூடாது.”

மற்றொருபுறம், நீதித்துறையால் வெளியிடப்பட்ட மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள துணிகளின் நம்பகத்தன்மை குறித்து ஹலாபி கேள்வியெழுப்புகிறார். கிஸ்வாவை முஸ்லிம் அல்லாதோருக்கு அன்பளிப்பாக வழங்க அனுமதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

காபா கிஸ்வா சர்ச்சை

பட மூலாதாரம், Source: US Department of Justice

சௌதி தொடர்புகள்

நீதித்துறை கோப்புகளின்படி, 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை எப்ஸ்டீன் மற்றும் அஹ்மதி என்ற பெயரில் குறிப்பிடப்படும் நபருக்கும் இடையே பல்வேறு மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்ததாகத் தெரிகிறது. அதில் சில மின்னஞ்சல்களில் அஹ்மதியை எப்ஸ்டீன் “பாஸ்” மற்றும் “மாஸ்டர்” என்று குறிப்பிட்டுள்ளார். நியூ யார்க் மற்றும் பாரிஸில் பல்வேறு பகுதிகளில் இருவரும் சந்தித்ததாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட கோப்புகள், அஹ்மதி வாயிலாக சௌதி அரசாங்கம் மீது செல்வாக்கு செலுத்த எப்ஸ்டீன் முயற்சித்ததாக பரிந்துரைக்கிறது.

2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அஹ்மதியின் பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் எப்ஸ்டீனுக்கும் “ஹீ ரஃபாட்” (HE Raafat) என அழைக்கப்படும் ஒருவருக்கும் இடையே சந்திப்பை ஏற்படுத்த அவர் முயற்சித்ததாக உணர்த்துகிறது. அந்த குறிப்பிட்ட நபர் எப்ஸ்டீனின் சகவாசத்தை “விரும்பும்” (enjoy) ஒருவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், HE என்பது சௌதி அரேபியாவின் மூத்த அரசு அதிகாரிகளை குறிக்க பயன்படுத்தப்படும் “மாண்புமிகு” (His Excellency) எனும் வார்த்தையை குறிக்கலாம்.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களின்படி, சௌதி அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு எதிராக எப்ஸ்டீன் வாதிட்டுள்ளார். ‘அஹ்மதி’ என்று குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு ஆகஸ்ட் 2016 இல் அனுப்பிய மின்னஞ்சலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், அஹ்மதி அதை “மறுஆய்வு” செய்வதாகக் கூறியது போல் தோன்றுகிறது. அவர் தனது பதிலில் “ராஃபத் அல்சபாக்” என்று குறிப்பிடப்படும் ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை இணைத்துள்ளார்.

காபா கிஸ்வா சர்ச்சை

எப்ஸ்டீனின் உதவியாளர்களில் ஒருவரின் கணக்கிலிருந்து 2016-ஆம் ஆண்டு நவம்பரில் வந்த மின்னஞ்சல் ஒன்று “அஜிசா ஹெச்.இ. ரஃபாத்தின்(HE Raafat) உதவியாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்ஸ்டீனிடமிருந்து ரஃபாத் அல்சபாக்-குக்கு வந்த பல மின்னஞ்சல்கள் அவரை சௌதி துணை பட்டத்து இளவரசரின் “ஆலோசகர்” என்று குறிப்பிடுகின்றன. சௌதி அரேபியாவின் அதிகாரபூர்வ செய்தி முகமை 2017 இல் அவரை “அரசவை ஆலோசகர்” என்று விவரித்தது.

அமெரிக்க நீதித்துறை கோப்புகளில் உள்ள மின்னஞ்சல்களின்படி, “சபாக்” (Sabbagh) என்ற நபர் எப்ஸ்டீனுடன் அடிக்கடி மின்னஞ்சல்களைப் பரிமாறிக் கொண்டார்.

2016 ஆம் ஆண்டு ஒரு குறுஞ்செய்தியில், ரஃபாத் அல்சபாக் என்ற பெயரில் ஒரு கணக்கு எப்ஸ்டீனுக்கு “உங்கள் நட்பை நான் பாராட்டுகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரஃபாத் அல்சபாக்’ என்ற பெயரில் எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்ட மற்றொரு மின்னஞ்சலில், 17 வயது ரஷ்ய அழகு ராணி துபைக்குச் சென்று தனது ‘கன்னித்தன்மையை’ விற்றதாகக் கூறப்படும் செய்திக்கான இணைப்பு இருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, குழந்தைகள் மீது பாலியல் இச்சை கொண்ட எப்ஸ்டீன், “இறுதியாக, நீங்கள் எனக்கு மதிப்புமிக்க ஒன்றை அனுப்பினீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இந்தக் கோப்புகளில் ‘அஹ்மதி’ பற்றிய தகவல்கள் மிகக் குறைவு, ஆனால் செப்டம்பர் 2018 இல் வந்த மின்னஞ்சலில், இந்தப் பெயரைக் கொண்ட ஒருவர் எப்ஸ்டீனிடம் தனது மொபைல் கேம் நிறுவனம் குறித்து ஆலோசனை கேட்பதாகத் தெரிகிறது.

கிஸ்வா மற்றும் இந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. முழுமையான விசாரணைக்கான கோரிக்கைகளும் முஸ்லிம் உலகில் அதிகரித்து வருகின்றன.

உலகளாவிய பத்திரிகை எதிர்வினை குழுவின் (Global Journalism Reactive Team) காவூன் காமூஷ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU