Home தேசிய national tamil “இவையெல்லாம் பிரேம்ஜி பாடியதா?” – ஆச்சர்யப்படுத்தும் பாடல்களின் பட்டியல்

“இவையெல்லாம் பிரேம்ஜி பாடியதா?” – ஆச்சர்யப்படுத்தும் பாடல்களின் பட்டியல்

13
0

SOURCE :- BBC NEWS

பிரேம்ஜி அமரன்

பட மூலாதாரம், Premji Amaran

நகைச்சுவை நடிகராக அறியப்படும் பிரேம்ஜி சிறந்த பாடகர் மட்டுமல்ல, இசையமைப்பாளரும் கூட.

இசையமைப்பாளர் இளையராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பல திரைப்படங்களில் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இன்று (பிப்ரவரி 25) அவருக்கு பிறந்தநாள். நீங்கள் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று அவரிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்ட போது உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளரான பின் அவர் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறேன். ஏ.ஆர்.ரகுமான், அனிருத் தவிர, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், இமான், மணிசர்மா, தேவிஸ்ரீபிரசாத் உட்பட பல இசையமைப்பாளர்களிடம் பாடிய அனுபவம் இருக்கிறது. என தனது நினைவலைகளை பகிரத் தொடங்கினார். இனி அவரது வார்த்தைகளில் அந்த அனுபவங்கள் குறித்து கேட்கலாம்.

முதலில் பாடிய பாடல்

இதுவரை 15 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். 25க்கும் அதிகமான பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் பாடியிருக்கிறேன். பெரியப்பா இளையராஜா இசையில் சில ‘டிராக்’ பாடியிருக்கிறேன். அப்பா கங்கை அமரன் இசையமைத்த ‘இனி ஒரு சுதந்திரம்’ படத்தில் ‘பள்ளிக்கூடம் போகாம’ என்ற பாடலை சின்ன வயதில் பாடியிருக்கிறேன். அந்தப் பாடலை அப்பாவே எழுதியிருந்தார். 1987-இல் அந்த படம் வந்தது, சிவகுமார், நளினி நடித்து இருந்தார்கள். பிரேம் கங்கைஅமரன் என என் பெயர் இடம்பெறும்.

அம்பானி பரம்பர (மங்கத்தா)

நான் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் , எத்தனை படங்களில் நடித்து இருந்தாலும் இன்றைக்கும் என்னை பார்ப்பவர்கள் ‘மச்சி ஓபன் த பாட்டில்’ என்கிறார்கள். அதற்கு காரணம் அந்தப் பாடல், அது அடைந்த வெற்றி. வாலி வரிகளை எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

மனோ, திப்பு, ஹரிசரண், நவீன்மாதவுடன் இணைந்து நானும் பாடியிருந்தேன். ஏகப்பட்ட கச்சேரிகளில் நான் ரசித்து பாடிய பாடலும் கூட. அஜித் ரசிகர்களுக்கு விருப்பமான இந்தப் பாடல், இப்போதைய ரீ ரிலீசிலும் கொண்டாடப்படுகிறது.

சரோஜா சாமானிக்காலோ (சென்னை 28)

தமிழகத்தில் இந்த இந்தி வார்த்தை இந்தப் பாடலால் பிரபலமானது. அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய இந்தப் படத்தில் யுவன் இசையில், நானும், ஷங்கர் மகாதேவனும் இணைந்து பாடினோம். இவ்வளவு இளமையான வரிகளை எழுதியவர் என் அப்பா கங்கை அமரன்தான்.

நானே முதல் வரியை பாடி, டான்ஸ் ஆடியிருப்பேன். இப்பவும் இந்த பாடலை கேட்டால் மனதுக்குள் அப்படியொரு உற்சாகம் பிறக்கும். பார்ட்டி பாடல்களில் சரோஜாவை தவிர்க்க முடியாது. உலகம் முழுக்க இந்தப் பாடலை பாடியிருக்கிறேன்.

பிரேம்ஜி அமரன்

பட மூலாதாரம், Youtube

தீப்பிடிக்க, தீப்பிடிக்க (அறிந்தும் அறியாமலும்)

விஷ்ணுவர்தன் இயக்கிய இந்த படத்தில் ‘தீப்பிடிக்க’ பாடலில் தீப் பொறி பறக்கும். பாடல் பெரிய ஹிட். ஆனால், பலருக்கும் நான் அந்தப் பாடலை பாடினேன் எனத் தெரியாது. பா.விஜய் வரிகளுக்கு, நானும், அனுஷ்கா மஞ்சந்தாவும் இணைந்து பாடினோம். பாடலை படமாக்கிய விதமும், டான்சரின் நடன அசைவும் கூட பாடல் வெற்றிக்கு இன்னொரு காரணம். இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜாதான்.

ஒரு பழைய பாடல் மெட்டும், புதுசும் கலந்த அந்த மிக்சிங் எனக்கு பிடிக்கும். ஆர்யாவின் வெற்றி பாடல்களில் இந்தப் பாடலுக்கு முக்கியமான இடம் உண்டு. இந்தப் பாடலுக்கு முதலில் நான் டிராக் பாடினேன். மும்பை பாடகரை வைத்து பதிவு செய்ய நினைத்தார்கள். இயக்குனர் விஷ்ணுவர்தன் ‘இந்த குரல் நல்லா இருக்குதே’ எனச் சொல்ல, எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

ஜல்சா பண்ணுங்கடா… (சென்னை 28)

இந்தப் பாடலையும் அப்பா (கங்கை அமரன்) எழுத, யுவன் இசையமைத்தார். ரஞ்சித், திப்பு, ஹரிசரண், கார்த்திக்குடன் நானும் இணைந்து பாடினேன், நானும் பாடலில் ஆடினேன். நண்பர்களின் மனநிலை, மகிழ்ச்சி, நட்பை சொல்லும் அந்தப் பாடலை இன்னும் ரசிக்கிறார்கள். அந்த பாடலைப் பார்க்கும் பலருக்கும் தங்களின் உயிர் நண்பர்கள், பிரிந்து போன நண்பர்கள் நினைவு வருவது நிச்சயம்.

பிரேம்ஜி அமரன்

பட மூலாதாரம், Youtube

எங்க ஏரியா உள்ளே வராதே (புதுப்பேட்டை)

புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை, தனுஷ், யுவனுடன் இணைந்து நானும் பாடியிருந்தேன். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் கொஞ்சம் கோபமான குரலில் பாடலும், வரிகளும் செல்லும். அந்த பாடலில் பள்ளி மாணவன் கெட்அப்பில் தனுஷும் நன்றாக நடனம் ஆடியிருப்பார்.

எங்க ஏரியா உள்ளே வராதே

பட மூலாதாரம், Think Tape/Youtube

ஏழேழு தலைமுறைக்கும் (கோவா)

எங்கள் குடும்ப பாடல் என்று இதை தாராளமாக சொல்லலாம். காரணம், பாடலுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. நான், பவதாரணி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து பாடினோம்.

அப்பா பாடலை எழுதினார். இந்தப் பாடலை கேட்கும்போது தேனி பண்ணைபுர நினைவுகள் வந்து செல்லும். அந்தக் கால பட பாணியில் கோபுரத்தை காண்பித்துவிட்டு படத்தொடக்கத்தில் டைட்டில் கார்டுடன் இந்தப் பாடல் வந்து செல்லும்.

ஓ மை கடவுளே (திருப்பாச்சி)

திருப்பாச்சி படத்தில் இப்படியொரு பாடலா என யோசிக்க வேண்டாம். கண்ணும் கண்ணுதான் பாடலின் நடுவே ஒரு ராப் வரும். அதில் இந்த வரிகளை நான்தான் பாடினேன். முழு பாடலை ஹரிஷ் ராகவேந்திரா, உமாரமணன் பாட, இயக்குனர் பேரரசு பாடலை எழுதியிருந்தார்.

அது ஒரு காலம் (அதே நேரம் அதே இடம்)

ஜெய், விஜயலட்சுமி நடித்த இந்த படத்துக்கு நான்தான் இசையமைத்தேன். ஹரிசரணுடன் இணைந்து இந்தப் பாடலை நான் பாடினேன். தனது காதலியை நினைத்து ஜெய் பாடுவதாக இருக்கும். பாடலைக் கேட்டு பாருங்க, பிரேம்ஜி இப்படி இசையமைத்து பாடியிருக்கிறாரா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். காதல் தோல்வி, வாழ்க்கை பற்றிய வரிகள் நன்றாக இருக்கும்.

சச்ச சச்ச சாரே (பார்ட்டி)

இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை. இந்தப் பாடல் மனதுக்கு ரொம்ப இஷ்டம். காரணம், அண்ணன் தம்பிகளான சூர்யா, கார்த்தி, அண்ணன் தம்பிகளான வெங்கட்பிரபுவும் நானும் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கிறோம். கடற்கரை பின்னணியில் அழகாக படமாக்கப்பட்டு இருக்கும். அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

அடகட (சத்யம்)

விஷால், நயன்தாரா நடித்த சத்யம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நான் பாடிய பாடல் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பாடலாகவும் அது இருந்தது. அந்தப் பாடலில் விலங்குகள், சிஜி, செட், மேக்கப் எல்லாமே நன்றாக இருக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இசையமைப்பில் பிடித்தவை

‘துணிச்சல்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனேன். அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் அருண் விஜய். தமிழன் படத்தை இயக்கிய மஜீத் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் அண்ணன் வெங்கட் பிரபு, யுகேந்திரன், கருணாஸ், விஜய் ஜேசுதாஸ், சின்மயி, கார்த்திக், மாலதி உட்பட பலர் பாடியிருந்தனர்.

ஆனால், இந்தப் படம் வருவதற்கு முன்பே ‘ஞாபகம் வருதே (2007) என்ற படம் வந்துவிட்டது. அந்த படத்தில் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி.சரண், சுஹாசினி உட்பட பலர் நடித்து இருந்தனர். கே.எஸ்.ராஜ் இயக்கியிருந்தார்.

வித்யாசாகர், மணிசர்மாவிடம் பல படங்களில் நான் உதவியாளராக வேலை பார்த்தேன். யுவனுடன் பெரும்பாலான படங்களில் பணியாற்றியிருக்கிறேன். தோழா படத்தில் நான் பாடலும் எழுதியிருக்கிறேன்.

விஜய் வசந்த் நடிக்க, ராஜபாண்டி இயக்கிய ‘அச்சமின்றி’ படத்துக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். அந்த பட பாடல், பின்னணி இசை நன்றாக இருக்கும். இவ்வளவு ஏன் மக்கள் இன்றும் கொண்டாடி வரும் சென்னை 28 படத்துக்கு நான்தான் பின்னணி இசை.

என்று கூறி முடித்துக் கொண்டார் பிரேம்ஜி அமரன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU