SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
-
3 மணி நேரங்களுக்கு முன்னர்
-
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
நடக்கவிருக்கும் 2026 ஐபிஎல் தொடரின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ‘ஹோம் ஸ்டேடியம்’ சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் 11 இருக்கைகள் காலியாக விடப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
2025 ஐபிஎல் கோப்பை வென்றதற்கான கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக அந்த மைதானத்தில் நடக்கும் ஆர்சிபி-யின் போட்டிகளில் 11 காலி இருக்கைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த அசம்பாவிதத்துக்குப் பிறகு வரும் சனிக்கிழமைதான் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இங்கு விளையாடுகிறது. சில வாரங்கள் முன்பு வரை இந்த மைதானத்தில் ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
என்ன நடந்தது?
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே ஆர்சிபி அணியின் கோப்பை கனவு என்பது நிறைவேறாமல் இருந்துவந்தது.
சுமார் 18 ஆண்டுகளாக அந்த அணியின் ரசிகர்கள் கோப்பைக்காகக் காத்திருந்தனர். இந்நிலையில் 2025 சீசன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வென்றது அந்த அணி.
இதைப் பெரிய அளவில் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.
இறுதிப் போட்டி நடந்த செவ்வாய் (ஜூன் 3) மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் பெங்களூரு முழுவதும் பட்டாசு வெடித்து அந்த வெற்றி கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 4 ஆர்சிபி அணி தங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை சின்னசாமி மைதானத்தில் நடத்துவதாக அறிவித்தது. ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், விதான் சவுதாவிலிருந்து சின்னசாமி மைதானம் வரை வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என்று ஜூன் 4ஆம் தேதி காலை 7.01 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதில் இந்த அணிவகுப்பு பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிற்பகல் 3.14 மணிக்கு ஆர்சிபி தரப்பில் இருந்து வெற்றி அணிவகுப்பு குறித்து வெளியான மற்றொரு பதிவில், இலவச பாஸ்களை அதன் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த அறிவிப்பின் காரணமாக ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி மைதானத்துக்கு முன் பெருமளவு குவிந்தனர். வெற்றி அணிவகுப்பிற்கு 2,00,000-க்கும் அதிகமான மக்கள் வந்திருந்ததாகவும், ஆனால் தாங்கள் அதில் பாதியளவு மட்டுமே எதிர்பார்த்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
இந்த அளவுக்கு எதிர்பாராத கூட்டம் ஏற்பட்டதால் மைதானத்துக்கு வெளியே பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காமாட்சியும் (29 வயது) ஒருவர்.
பட மூலாதாரம், Getty Images
மீண்டும் சின்னசாமியில் ஐபிஎல்
இந்த நிகழ்வின் காரணமாக கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் ஆர்சிபி நிர்வாகத்தின் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்தன.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா செய்தியாளர்களிடம் பேசுகையில், “முழு நிகழ்வையும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) மற்றும் ஆர்சிபி நிர்வாகம் தான் ஏற்பாடு செய்தன. அரசாங்கம் இந்த விழாவில் பங்கேற்க மட்டுமே செய்தது” என்றார்.
அதேபோல், சின்னசாமி மைதானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
2025 மகளிர் உலகக் கோப்பை, 2026 வுமன்ஸ் பிரீமியர் லீக், 2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களை நடத்த பெங்களூரு மைதானம் பரிசீலிக்கப்படவில்லை. அதனால், மீண்டும் அங்கு ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்றும் கருதப்பட்டது. வேறு மைதானங்களில் போட்டியை நடத்தவும் ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது. இதற்கிடையே ஆர்சிபி நிர்வாகம் தங்கள் அணியை விற்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்ததால், பெங்களூருவில் ஐபிஎல் இனி நடக்குமா என்றுமே பலரும் கேள்வியெழுப்பினர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராகப் பதவியேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், மீண்டும் பெங்களூருவில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டார்.
மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதற்கு கடந்த மார்ச் 16ம் தேதி கர்நாடக அரசு அனுமதி கொடுத்தது.
2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் 5 ஹோம் ஆட்டங்கள் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. மீதமிருக்கும் 2 ஆட்டங்கள் ராய்ப்பூரில் நடக்கின்றன.

11 பேர் நினைவாக…
இந்த புதிய சீசனின் முன்பாக பேசிய ஆர்சிபி அணியின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் மேனன், “ஜூன் 4-ஆம் தேதி நாம் இழந்த அந்த 11 ரசிகர்களின் நினைவாக, போட்டிக்கு முன்னதான பயிற்சியின் போது வீரர்கள் 11-ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிவார்கள். அனைத்து வீரர்களின் முதுகிலும் 11-ஆம் எண் இருக்கும். அதுமட்டுமின்றி, அன்றைய தினம் (மார்ச் 28) போட்டியின்போது அவர்கள் கையில் கறுப்பு நிறப் பட்டையையும் அணிந்திருப்பார்கள். மேலும், சின்னசாமி ஸ்டேடியத்தில் 11 இருக்கைகளை நிரந்தரமாக காலியாக வைப்பதற்கும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது நம்முடன் எப்போதும் நிலைத்திருக்கும் அந்த 11 ரசிகர்களுக்குச் செலுத்தும் ஒரு அஞ்சலியாகும்.” என்று கூறினார்.
மேலும், செவ்வாய்கிழமை (மார்ச் 24) உயிரிழந்த 11 பேரின் நினைவாக, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா சின்னசாமி மைதானத்தில் நினைவுப் பலகையைத் திறந்து வைத்தார்.

மகளை இழந்த குடும்பம்
இந்த சம்பவத்தில் உடுமலையைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் மூர்த்தியின் மகள் காமாட்சி, உயிரிழந்தார். ஒரே மகள் இறந்து போனதில், அவருடைய தாயும், தந்தையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய காமாட்சியின் தந்தை மூர்த்தி, ”எனது மகள் இறந்த பின்பு, இழப்பீடாக ரூ.5 லட்சம் தரப்பட்டது. என்னிடம் பேசிய மைதானத்தின் பொது மேலாளர், இந்தத் தகவலைக் கூறி, முடிந்தால் அந்த நிகழ்வுக்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்தார். ஆனால் நானும் எனது மனைவியும், எங்கேயுமே செல்கிற மனநிலையில் இல்லை. அதிலும் எனது மனைவி உடலாலும், உள்ளத்தாலும் உருக்குலைந்த நிலையில் உள்ளார்.” என்றார்.
”ஒரே மகளை ஆசை ஆசையாக வளர்த்து நன்கு படிக்க வைத்து, அவளையும் பறிகொடுத்து விட்டு, நிர்கதியாக நிற்கிறோம். இனி யாருக்காக, எதற்காக சம்பாதிக்க வேண்டுமென்று நினைக்கிறோம். இனி எங்களுக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளும் எண்ணம் எதுவுமில்லை. நாங்கள் நடத்தி வந்த பள்ளியையும் இந்த ஆண்டுடன் விற்று விட முடிவு செய்திருக்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்னால் இயன்ற சில உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இருக்கும் வரையிலும் இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி, பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து விட்டுப் போகவேண்டுமென்று நினைக்கிறோம்.” என்றார் மூர்த்தி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



