SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
இந்திய பிரதமர் மோதி இரண்டு நாள் இஸ்ரேல் பயணத்தில் இருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே இரான் மீதான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் உறுதி செய்தன. இரானின் அதிஉயர் ஆயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அதனை இரானிய அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோதி பயணத்தின்போது, இரு நாட்டு அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், 10 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்தப் பயணம் இஸ்ரேலுக்கான இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவையும் தெளிவாகக் காட்டியது.
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றிய மோதி, “இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது. வலுவாக, முழு நம்பிக்கையுடன், இப்போதும் எதிர்காலத்திலும்” என்று கூறினார்.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் மேற்கொண்ட “இரக்கமற்ற பயங்கரவாத தாக்குதல்” பற்றிப் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். இந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் பலியாயினர், 250க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் கைப்பற்றப்பட்டனர்.
இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பிரதமர் மோதியை இஸ்ரேல் பயணத்தின்போது பாலத்தீன உரிமைகள் பிரச்னையை எழுப்புமாறு வலியுறுத்தினார். ஆனால், பிரதமர் மோதி அதை எழுப்பவில்லை.
இந்த முறையீட்டின்போது, இந்தியா, இரான் இடையிலான வலுவான, வரலாற்று உறவுகளை அராக்சி வலியுறுத்தினார். மேலும், இந்தியாவை தனது நண்பர் என்றும் அழைத்தார்.
ஆனால், பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணத்திற்குப் பிறகு உடனடியாக நடந்த இந்தத் தாக்குதலால், இந்தியாவுக்கான சிரமங்கள் கணிசமாக அதிகரித்து இருப்பதாகவும், இந்தியாவின் முன்பாக குழப்பமான சூழ்நிலை எழுந்துள்ளதாகவும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
எண்ணெய் விநியோகத்தை எவ்வாறு பாதிக்கும்?
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் இந்தியாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கக் கூடும் என்றும், இஸ்ரேல் மற்றும் இரானில் வசிக்கும் இந்திய குடிமக்களை பாதுகாப்பாகத் திரும்ப அழைத்து வருவதில் சிக்கல்கள் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் வசிக்கும் தனது குடிமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
டெல் அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் இதுகுறித்த ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அதில், “பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் இருக்கும் அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உள்ள நெல்சன் மண்டேலா அமைதி மற்றும் மோதல் தீர்வு மையத்தைச் சேர்ந்த நிபுணரான பிரேமானந்தா மிஸ்ரா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இரான் மீதான தாக்குதல்கள் பல வழிகளில் இந்தியா மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்.
“இரான் மற்றும் இஸ்ரேலுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகள் அமெரிக்காவால் கணிசமாகப் பாதிக்கப்படுகின்றன. இரான் மற்றும் இஸ்ரேலுடன் எந்த அளவு வரை செல்ல வேண்டும் என்பதில் இந்தியா எப்போதும் ஒரு குழப்பத்திலேயே உள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்தத் தாக்குதல் எண்ணெய் விநியோகத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் பிரேமானந்தா.
“இந்தியாவின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 50% ஹோர்முஸ் நீரிணை பாதை வழியாக வருகிறது. சமீப காலங்களில் இந்தியா இந்தப் பாதை வழியாகத் தனது எண்ணெய் விநியோகத்தைக் கணிசமாக அதிகரித்துள்ளது,” என்று அவர் விளக்கினார்.
“ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இருக்கும் அழுத்தம் இந்தப் பாதையை இந்தியா சார்ந்திருப்பதை மேலும் அதிகரித்துள்ளது. எண்ணெய்க்காக இந்தியாவுக்கு மற்றொரு பாதை உள்ளது. அது செங்கடல். எண்ணெய் விநியோகத்திற்காக இந்தியா இரானை சார்ந்திருக்கவில்லை. ஆனால், இந்தப் பாதை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. இந்தப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்தால், அது இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்கிறார் பிரேமானந்த மிஸ்ரா.
அதேநேரத்தில், மத்திய கிழக்கு இன்சைட்ஸ் தளத்தின் நிறுவனர் டாக்டர் சுபாதா சௌத்ரி, வரும் காலங்களில் எண்ணெய் விலை உயர்வு பிரச்னையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கருதுகிறார்.
“இரானுக்கு ஆதரவாக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஹோர்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் எண்ணெய் வழித்தடத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப் போவதாகக் கூறியுள்ளனர். இது அந்த வழித்தடத்தின் மூலம் எண்ணெய் வழங்கும் நிறுவனங்களுக்கு சவாலை அதிகரிக்கும். இது எதிர்காலத்தில் எண்ணெய் விலையில் மிகப்பெரிய அளவில் தாக்கம் செலுத்தும்,” என்று அவர் விளக்கினார்.
“இந்தியா இரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை. ஆனால், எண்ணெய் விநியோகத்திற்காக இந்தியா வளைகுடா நாடுகளையே பெரிதும் சார்ந்துள்ளது.”
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பிம்பத்தை பாதிக்குமா?
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவுக்கு பிரிக்ஸின் முக்கியத்துவமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியா இந்த ஆண்டு பிரிக்ஸின் தலைமையை வகிக்கிறது. இரானும் 2024இல் பிரிக்ஸில் உறுப்பினரானது. கடந்த ஆண்டு, இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை பிரிக்ஸ் விமர்சித்தது.
“இரான் பிரிக்ஸில் ஒரு முக்கியமான உறுப்பினர். ஆனால் பிரதமர் மோதி இஸ்ரேலில் இருந்து திரும்பி வந்துள்ளார். இதன் காரணமாக, இரான் மீதான தாக்குதல் பிரிக்ஸின் எதிர்காலம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்கா உடனான உறவுகளில் இந்தியா எந்த இடைவெளியையும் உருவாக்கக் கூடும் என்ற சூழல் இருப்பதாக இப்போதைக்குத் தெரியவில்லை,” என்று கூறுகிறார் பிரேமானந்த மிஸ்ரா.
“வெளியுறவுக் கொள்கை முடிவுகளாக இருந்தாலும் சரி, பொருளாதாரமாக இருந்தாலும் சரி, இரு துறைகளிலும் இந்தியாவுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்” என்கிறார் அவர்.
பிரதமர் மோதியின் பயணத்திற்குப் பிறகு உடனடியாக நடந்த இந்தத் தாக்குதல் குறித்து பிரேமானந்தா மிஸ்ரா பேசியபோது, “பிரதமர் மோதிக்கு இதுகுறித்து விளக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்திய பிரதமரின் இஸ்ரேல் பயணமும், சில நாட்களுக்குப் பிறகு நடந்த இந்தத் தாக்குதலும் என இந்தக் காலகட்டம் நிச்சயமாக கேள்விக்குரியது. இது இந்தியாவினுடைய பிம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மோதியின் வருகைக்குப் பிறகு உடனடியாக நடந்த இந்தத் தாக்குதல்கள், இந்தியாவின் பிரச்னைகளை அதிகரித்துள்ளதாகவும் சுபாதா சௌத்ரி நம்புகிறார்.
“இந்தியாவின் நிலைப்பாடு பெருமளவில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது. இரானும் ரஷ்யாவும் பிரிக்ஸ் அமைப்பில் உள்ளன. இப்போது இதுவொரு போர் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையில் இது ஆட்சியை மாற்றுவதற்கான நடவடிக்கை,” என்று அவர் கூறுகிறார்.
அதோடு, “இந்திய பிரதமர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தபோது, அங்கு ஒரு பதக்கத்தைப் பெற்றார். அது இஸ்ரேலின் நாடாளுமன்றமான நெசெட்டில் இருந்து பெறப்பட்ட பதக்கம். இந்தப் பதக்கம் இதற்கு முன்பு யாருக்கும் வழங்கப்பட்டது இல்லை. பிரதமர் மோதி எதிர்கொள்ளும் பிரச்னை என்னவெனில், இப்போது அவர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதால், அவரால் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை எவ்வாறு மறுக்க முடியும்?,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு இருக்கும் பாதைகள் என்ன?
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்தியா, இரான் இடையிலான தூரம் மேலும் அதிகரிக்கப் போகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒரு பக்கமாக நிற்பது எப்போதுமே கடினமான முடிவுதான். ஆனால் இந்தியாவின் சமீபத்திய நிலைப்பாடு, வரும் காலங்களில் இந்தியா, இரான் இடையிலான உறவுகளில் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது,” என்று பிரேமானந்த மிஸ்ரா கூறுகிறார்.

அதோடு, இது வர்த்தக பாதைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தப் போவதாக அவர் குறிப்பிடுகிறார்.
அமெரிக்கா, இஸ்ரேல், இரான் இடையிலான தற்போதைய பதற்றத்தில் இந்தியா ஏதேனும் பங்கை வகிக்க முடியுமா?
அதுகுறித்துப் பேசிய அவர், “இந்தியா மத்தியஸ்தம் செய்ய முடியாது. இந்தியா அந்த நிலையில் இல்லை. தனது நலன்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதில் கவனம் செலுத்துவதுதான் இந்தியாவுக்கு இப்போது முக்கியமானது,” என்றார்.
“இது குழப்பமான காலம். காலம் செல்லச் செல்ல, இப்போது தொடங்கியுள்ள இந்த மோதல் எவ்வளவு தூரம் அதிகரிக்கும் என்பது தெரிய வரும். இந்த மோதல் நீண்டகாலம் தொடர்ந்தால், அது நிச்சயமாக இந்தியாவின் மீது பொருளாதார மற்றும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்தியாவின் பதில் நிச்சயமற்றதாக உள்ளது. இந்தத் தாக்குதலை இந்தியா கண்டிக்கவில்லை என்றால், பிரிக்ஸ் பெரும் சிக்கலில் சிக்க நேரிடும்,” என்றும் அவர் விளக்கினார்.
“இந்த மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதுதான் இப்போதைக்கு இருக்கும் முதன்மையான கேள்வி” எனவும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



