Home தேசிய national tamil இரான் தாக்கப்படுவதற்கு சற்று முன் மோதி இஸ்ரேல் சென்றது பற்றி விவாதம் ஏன்?

இரான் தாக்கப்படுவதற்கு சற்று முன் மோதி இஸ்ரேல் சென்றது பற்றி விவாதம் ஏன்?

4
0

SOURCE :- BBC NEWS

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மோதியின் இஸ்ரேல் பயணம்

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி 26-ஆம் தேதி மாலை பிரதமர் மோதி இஸ்ரேலிலிருந்து கிளம்பினார்.

பிப்ரவரி 28-ஆம் தேதி காலையில் இரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளியாகின.

அதன்பின், இந்த தாக்குதல்களில் தாங்களும் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியது.

இந்த தாக்குதல்கள் இரானில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. இரானிய படைகளும் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.

இந்தப் பகுதிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருப்பி விடப்பட்டுள்ளன, பல முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களாகவே நடந்து வருகின்றன என்பதை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

இரானை குறிவைத்து, பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு இந்தப் பகுதியில் அமெரிக்கா தனது மிகப்பெரிய ராணுவப் படையெடுப்பை மேற்கொண்டுள்ளது.

இப்போது எழும் கேள்வி என்னவென்றால், பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணம் உலகுக்கு என்ன செய்தியைக் கொடுத்தது?

இந்தியா மற்றும் மேற்கு ஆசியா

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மோதியின் இஸ்ரேல் பயணம்

பட மூலாதாரம், Getty Images

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சுமார் 89 லட்சம் இந்தியர்கள் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) உறுப்பினர் நாடுகளான சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர் என்பதிலிருந்து, இந்தப் பயணம் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் ஜிசிசி நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 178.56 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக மாறியது.

இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்கு ஜிசிசி நாடுகளும் ஒரு முக்கிய ஆதாரமாகும்.

ஜிசிசி உட்பட முழுப் பகுதியையும் இந்தியா தனது ‘நீட்டிக்கப்பட்ட அண்டை நாடு’ என்று கருதுகிறது.

இஸ்ரேலுக்கான தனது பயணத்தின்போது, ​​’மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் நிலைத்தன்மை இந்தியாவின் பாதுகாப்போடு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது’ என்பதையும் பிரதமர் மோதி தெளிவுபடுத்தினார்.

மோதல் வெடித்த பிறகு, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முதலில் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரிடம் பேசினார், பின்னர் இரானிய வெளியுறவு அமைச்சரிடம் பேசுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார். அதன் பிறகு அவர் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் இறுதியாக சௌதி அரேபியாவைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சருடன் பேசினார்.

‘சீனாவை நோக்கி சாயும் அரபு நாடுகள்’

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மோதியின் இஸ்ரேல் பயணம்

பட மூலாதாரம், Getty Images

குவைத்திலிருந்து பிபிசியிடம் பேசிய ‘தி டைம்ஸ் குவைத்’தின் நிர்வாக ஆசிரியர் ரேவன் டி’சோசா, “இந்தியா ஒருபோதும் இதுபோன்ற ராணுவ நடவடிக்கையில் பங்கேற்காது என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், எனவே யாரும் இந்தியாவைக் குறை கூறவில்லை. ஆனால், இஸ்ரேலிய பிரதமருடனான சந்திப்பை இந்த நேரத்தில் தவிர்த்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை இந்தியா, பிரதமருக்குப் பதிலாக ஒரு இளநிலை பிரதிநிதியை அனுப்பியிருக்கலாம். இந்தியர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் திறமைகள் மூலம் குவைத்திலும் முழு வளைகுடா பிராந்தியத்திலும் நிறைய மரியாதையைப் பெற்றுள்ளனர், அதைக் கெடுக்கும் வகையில் எதுவும் நடக்கக்கூடாது.” என்றார்.

டி’சோசாவின் கூற்றுப்படி, இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

அவர் மேலும் கூறுகையில், “அரபு நாடுகள் இந்தியாவை வெளிப்படையாக விமர்சிக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த பயணம் தொடர்பான படங்களும் செய்திகளும் கவனிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அணிசேரா இயக்கத்தின் தூண்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியா எப்போதும் நடுநிலைமை பற்றிப் பேசி வருகிறது, ஆனால் பிராந்தியத்தில் இன்னும் அப்படித்தான் பார்க்கப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. அரபு நாடுகள் இப்போது சீனாவை நோக்கி சாய்ந்துகொண்டிருக்கின்றன, இதனால் நான் ஆச்சரியப்படவில்லை.” என்றார்.

ஆனால், பிரதமரின் இந்தப் பயணம் எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது என்று இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஷஷாங்க் நம்பினார்.

“இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த நேரத்தில், உலகில் பல விஷயங்களில் நிச்சயமற்ற தன்மை உள்ளது, இஸ்ரேல் போன்ற ஒரு பழைய கூட்டாளியுடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது முக்கியம். பயங்கரவாதம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது, மேலும் அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். இரான் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைக்கு சற்று முன்பு இந்தியப் பிரதமரின் இஸ்ரேல் பயணம் அந்நாட்டுக்கு வெளிப்படையாக நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் அதை விட வேறு எதுவும் அதில் இல்லை என்று நான் நினைக்கிறேன்.”

இஸ்ரேலுடன் வலுவான கூட்டாண்மையை உருவாக்க முயற்சி

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மோதியின் இஸ்ரேல் பயணம்

பட மூலாதாரம், @narendramodi

சுதந்திரத்திற்கு முன்பே 1946-ஆம் ஆண்டில் அப்போதைய இடைக்கால பிரதமர் ஜவஹர்லால் நேரு, உலகளவில் இந்தியா எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்தார்.

“அதிகார அரசியலில் ஈடுபட மாட்டோம், ஒரு குழுவுடன் சேர்ந்து மற்றொரு குழுவுக்கு எதிராக நிற்க மாட்டோம் என்பதே எங்கள் கொள்கை” என்று அவர் கூறியிருந்தார்.

பின்னர், ‘அணிசேராமை’ மற்றும் ‘வியூக சுயாட்சி’ போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன, ஆனால், பக்கசார்பாக இருக்கக்கூடாது என்ற அடிப்படை உணர்வு அப்படியே இருந்தது.

பிரதமர் மோதியின் இந்த இரண்டு நாள் பயணத்தில் பல அடையாள ரீதியிலான தருணங்கள் காணப்பட்டன.

மோதியின் பயணத்தின்போது, ​​17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின, 10 அறிவிப்புகள் செய்யப்பட்டன, ஆனால் வருகைக்கு சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலிய பிரதமர் கூறியது ஆர்வத்தை ஏற்படுத்தியது.

பிப்ரவரி 22, 2026 அன்று தனது சகாக்களிடம் பேசிய அவர், “… மத்திய கிழக்கைச் சுற்றி அல்லது அதற்குள் ‘அறுங்கோணம்’ (hexagon) போன்ற கூட்டணி என்று நீங்கள் அழைக்கக்கூடிய ஒரு முழு கட்டமைப்பை நாங்கள் உருவாக்குவோம். அதில் இந்தியா, அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், மத்திய தரைக்கடல் நாடுகள் (கிரீஸ் மற்றும் சைப்ரஸ்) மற்றும் சில ஆசிய நாடுகள் ஆகியவை அடங்கும், அவற்றை நான் இப்போது குறிப்பிடவில்லை… தீவிரப்போக்கு கொண்ட குழுக்களுக்கு எதிராக, அது நாம் கடுமையாகத் தாக்கியுள்ள தீவிர ஷியா குழுக்களாக (Axis) இருந்தாலும் சரி, அல்லது வளர்ந்து வரும் தீவிர சுன்னி குழுக்களாக இருந்தாலும் சரி, சூழ்நிலை, சவால்கள் மற்றும் இலக்குகளில் இணைந்த ஒரு குழுவை உருவாக்குவதே இதன் நோக்கம்.” என்றார்.

இந்தியா தனது பங்குக்கு இஸ்ரேலுடன் வலுவான கூட்டாண்மையை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் பிரதமர் மோதியின் உரையை அங்கு கூடியிருந்த அனைவரும் பாராட்டினர்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மோதியின் இஸ்ரேல் பயணம்

பட மூலாதாரம், ilia YEFIMOVICH/AFP via Getty Images

அக்டோபர் 7, 2023 அன்று, இஸ்ரேலில் நடந்த ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

“இஸ்ரேலுடன் முழு பலத்துடனும் முழு நம்பிக்கையுடனும், இப்போதும் எதிர்காலத்திலும் இந்தியா உடன் நிற்கிறது. எந்த காரணத்துக்காகவும் அப்பாவி மக்களைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது” என்று மோதி கூறினார்.

‘இஸ்ரேல் மக்கள் நீடூழி வாழ்க’ என்று பொருள்படும் ‘அம் இஸ்ரேல் கை’ (‘Am Yisrael Khai’) என்றும் அவர் கூறினார்.

ஆனால், அதே நேரத்தில் காஸாவில் ஏற்பட்ட பேரழிவை அவர் பகிரங்கமாகக் குறிப்பிடவில்லை. காஸாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகத்தின்படி, இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையில் 72,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

காஸாவுக்கு உதவியை அதிகரிக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள குடியிருப்புகளில் வன்முறையை நிறுத்தவும் இஸ்ரேலுக்கு மோதி அழுத்தம் கொடுக்கவில்லை.

பிரதமர் மோதியின் பயணத்தை தொடர்ந்து, இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் நிரூபமா மேனன் ராவ், “வெளியுறவுக் கொள்கை ஒரு சதுரங்க விளையாட்டு போன்றது. ஆனால், மேற்கு ஆசியாவில் அப்படி இல்லை. அந்தப் பிராந்தியத்தில் வெளியுறவுக் கொள்கை முடிவுகள் உண்மையான மனித விளைவுகளை ஏற்படுத்துகின்றன, மேலும் மாறக்கூடியவையாக உள்ளன. எந்தத் தரப்பினருக்கும் நிரந்தர ஆதரவாளராகத் தோன்றாமல், தனது சொந்த நகர்வுகளைச் செய்ய முடியும் என்று இந்தியா நம்புகிறது. இந்த நடவடிக்கை புத்திசாலித்தனமானதா அல்லது அதிக நம்பிக்கையுடையதா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.”

காலம் குறித்த கேள்வி

 பிரதமருக்கு 'நெசெட் சபாநாயகர் பதக்கம்' வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், REUTERS/Piroschka van de Wouw

ஆனால், பயணத்திற்கு முன்பே, அதன் நேரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

பிப்ரவரி 24 அன்று, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களை இஸ்ரேல் வெளியேற்றுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது உலகளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் திட்டமிட்டுள்ளன. இருப்பினும், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தனது ‘அன்பான நண்பர்’ நெதன்யாகுவை அரவணைக்க பிரதமர் இஸ்ரேல் செல்கிறார். பாலத்தீன பிரச்னையில் மோதி அரசாங்கம் இரட்டை நிலைப்பாடுகளையும் பாசாங்குத்தனமான கருத்துகளையும் வெளியிடுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் ராஜீய அதிகாரி கே.சி. சிங் பிப்ரவரி 24 அன்று கூறுகையில், “பிரதமர் மோதி தனது ‘நண்பர்’ நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் இஸ்ரேலுக்கு செல்கிறார், இது வளைகுடா மற்றும் மேற்கு ஆசியாவுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த நேரத்தில் நிகழ்கிறது. இதன் பொருள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இந்தியா பக்கபலமாக இருப்பது போல் தெரிகிறது. இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையா அல்லது ஒரு வியூகத் தவறா என்பதை காலம்தான் சொல்லும்.”

 பிரதமருக்கு 'நெசெட் சபாநாயகர் பதக்கம்' வழங்கப்பட்டது.

ஆனால், பிரதமர் மோதியின் இந்த வருகைக்கு பலர் ஆதரவளித்தனர்.

ஜோர்டான், லிபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றிய அனில் திரிகுணாயத், “அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கெனவே தாக்குதல் நடத்த முடிவு செய்திருந்தன என்று நான் நம்புகிறேன். பிரதமர் மோதி இஸ்ரேலில் இருந்தபோது அத்தகைய தாக்குதலை நடத்தவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருகையால் அரபு நாடுகள் இந்தியாவுக்கு எதிராக எதுவும் நினைக்காது என்று நான் கருதுகிறேன். ஒரு நாட்டுடன் உள்ள உறவை, மற்றொரு நாட்டுடன் உள்ள உறவுடன் இணைத்து பார்க்காத இந்தியாவின் கொள்கை (de-hyphenation) மிகவும் தெளிவாக உள்ளது. கடினமான காலங்களில் கூட இஸ்ரேல் இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் நேற்றைய அறிக்கையைப் பார்த்தால், இரானின் இறையாண்மை பற்றி மட்டுமல்ல, பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளைப் பற்றியும் பேசியது, இது மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU