Home தேசிய national tamil இரானிய அதிபருடன் உரையாடிய மோதி – இந்தியாவின் நிலைப்பாடு மாறுகிறதா?

இரானிய அதிபருடன் உரையாடிய மோதி – இந்தியாவின் நிலைப்பாடு மாறுகிறதா?

12
0

SOURCE :- BBC NEWS

பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை அன்று இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசினார்.

பட மூலாதாரம், Getty Images

3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோதி, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசினார். இது குறித்த தகவலை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

அவர் ‘பிராந்தியத்தின் முக்கியமான எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக்’ கண்டித்ததுடன், “இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

அதே சனிக்கிழமை அன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம், ‘ஹோர்மூஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்கள்’ குறித்து 22 நாடுகளின் கூட்டு அறிக்கையை வெளியிட்டது. இதில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கண்டிக்கப்பட்டது.

இந்த 22 நாடுகளில் இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை.

அதாவது, இரானைக் கண்டிப்பதில் இருந்து இந்தியா விலகி இருந்தது.

இருப்பினும், இதற்கு முன்பு இந்தியா வளைகுடா நாடுகளின் பல தலைவர்களுடன் பேசி, அங்கு நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களைக் கண்டித்திருந்தது.

மார்ச் 2-ஆம் தேதி அன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் பேசி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதன் அவசியத்தை பிரதமர் மோதி வலியுறுத்தினார்.

சனிக்கிழமை அன்று இரான் தொடர்பாக இந்தியா எடுத்த நிலைப்பாடு, முந்தைய நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயமாக வித்தியாசமானது.

இதற்கு முன்பு இரான் போர் குறித்துப் பேசிய பிரதமர் மோதி, பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பேச்சுவார்த்தை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வந்தார்.

ஆனால், இரானிய அதிபருடன் பேசும்போது எரிசக்தி மையங்கள் மீதான தாக்குதல்களை அவர் கண்டிப்பது இதுவே முதல் முறையாகும்.

சனிக்கிழமை என்ன நடந்தது?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், @Iran_in_India

சனிக்கிழமை அன்று இரானிய அதிபருடன் பேசிய தகவலை எக்ஸ் தளத்தில் தெரிவித்த பிரதமர், “டாக்டர் மசூத் பெசெஷ்கியனிடம் பேசி அவருக்கு ஈத் மற்றும் நவ்ரோஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த பண்டிகைச் சூழல் மேற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பதிவிட்டார்.

“பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் உலகின் எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கும் வகையில் பிராந்தியத்தின் அடிப்படை உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நான் கண்டித்தேன். கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் கப்பல் பாதைகள் திறந்திருப்பதன் மற்றும் பாதுகாப்பாக இருப்பதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்தினோம்.”

இதற்குச் சில மணிநேரங்களுக்குப் பிறகு, பிரதமர் பெர்சிய மொழியிலும் இது குறித்த தகவலைப் பதிவிட்டார்.

இரான் போர் தொடங்கிய பிறகு, மோதி மற்றும் பெசெஷ்கியன் இடையே பேச்சுவார்த்தை நடப்பது இது இரண்டாவது முறைதான்.

அதே சமயம், இந்தியாவில் உள்ள இரான் தூதரகம் மோதி மற்றும் பெசெஷ்கியன் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், “அதிபர் பெசெஷ்கியன் பிரதமர் மோதியிடம், இரான் போரைத் தொடங்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் எந்தவித தூண்டுதலும் இன்றி இரான் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் பள்ளிச் சிறுவர்கள் உட்படப் பல அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும் கூறினார். மோதலை நிறுத்த வேண்டுமானால், அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாகத் தங்கள் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்” என எழுதியுள்ளது.

இந்தியா உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் அமைப்பைக் குறிப்பிட்ட பெசெஷ்கியன், இரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதியைப் பேணவும் இந்தியா சுதந்திரமான பங்கை வகிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோதி இதற்கு முன்பு மார்ச் 12-ஆம் தேதி அன்றும் இரான் அதிபருடன் பேசியிருந்தார்.

அதில் மோதி பிராந்தியத்தின் பதற்றம் குறித்துக் கவலை தெரிவித்தார் மற்றும் அனைத்துப் பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புவதாகக் கூறினார்.

அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெயர்களை அப்போதும் நேரடியாகக் குறிப்பிடவில்லை, இப்போதும் குறிப்பிடவில்லை.

பின்பு இந்த முறை என்ன நடந்தது என்பதை நிபுணர்கள் வேறு கோணத்தில் பார்க்கிறார்கள்.

இரான் உடனான பேச்சுவார்த்தையின் போது முதல் முறையாகப் பிராந்தியத்தில் நடக்கும் தாக்குதல்களை மோதி கண்டித்ததுடன், எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவின் நிலைப்பாடு இந்த முறை ஏன் மாறுபட்டது?

இந்தியக் கப்பலான நந்தா தேவி எல்பிஜி (LPG) விநியோகத்துடன் மார்ச் 17 அன்று குஜராத்தின் ஜாம்நகரை வந்தடைந்தது.

பட மூலாதாரம், AFP via Getty Images

தெற்காசிய விவகார நிபுணர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ” பெசெஷ்கியனுடனான பேச்சுவார்த்தையின் போது முக்கியமான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை மோதி கண்டித்தார். இது மறைமுகமாக இருந்தாலும், இரான் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை அவர் முதல் முறையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க-இஸ்ரேலிய நடவடிக்கைகள் இந்தியாவின் பொருளாதார மற்றும் எரிசக்தி நலன்களுக்கு எந்த அளவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதை இது காட்டுகிறது” என்கிறார்.

போர் தொடங்கியதிலிருந்து, ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வதை இரான் திறம்படத் தடுத்துள்ளது.

பிபிசி வெரிஃபை தகவல்படி, போர் தொடங்கிய முதல் 20 நாட்களில் ஹோர்மூஸ் வழியாக 99 கப்பல்கள் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

உலகெங்கிலும் நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதப் பங்கு இந்தப் பகுதி வழியாகவே செல்கிறது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இரான் மீதும், இரான் வளைகுடா நாடுகளின் பல முக்கிய எண்ணெய் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தின.

இதன் காரணமாக உலகெங்கிலும் எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மீதும் இதன் தாக்கம் தெரிவதாகத் தோன்றுகிறது.

தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் தன்ஞ்சய் திரிபாதி, பிபிசி செய்தியாளர் சந்தீப் ராயிடம் பேசுகையில், “இரான் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு முக்கியக் காரணம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு ஆகும். ஹோர்மூஸ் ஜலசந்தி முடக்கம் நீண்ட காலம் நீடித்தால், நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும். ஏனெனில் நாட்டின் 60 முதல் 70 சதவீத எரிபொருள் இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே வருகிறது” என்றார்.

தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி

எல்பிஜி தட்டுப்பாட்டை இந்திய அரசு மறுத்த போதிலும், பல நகரங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

பட மூலாதாரம், EPA

இந்தியாவின் பல நகரங்களில் எல்பிஜி சிலிண்டர்களுக்காக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இருப்பினும், எல்பிஜி நெருக்கடி குறித்து தேவையற்ற அச்சம் பரப்பப்படுவதாக அரசு கூறியுள்ளது.

அதே நேரத்தில், சாதாரண பெட்ரோல் விலை இதுவரை உயர்த்தப்படவில்லை, ஆனால் பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து, தலைநகர் டெல்லியில் அதன் விலை 102 ரூபாயாக உயர்ந்துள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஹோர்மூஸ் போக்குவரத்து முடக்கம் இந்தியாவின் மீதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, எண்ணெய் மற்றும் எரிவாயு மட்டுமல்லாமல் உரங்கள் போன்றவற்றிற்கும் இந்தியா வளைகுடா நாடுகளையே நம்பியுள்ளது. மத்திய கிழக்கில் வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் 51 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இதன் காரணமாக இந்தப் போர் இந்தியாவின் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது.

“தற்போது பிரிக்ஸ் நாடுகளின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது, இதில் இரானும் இப்போது உறுப்பினராக உள்ளது. இது குறித்து இந்தியா ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று இரான் விரும்புகிறது. எனவே இந்தியாவின் தரப்பில் ஏதேனும் முயற்சி எடுக்கப்படலாம். இதனால்தான் இரானும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்றும் தன்ஞ்சய் திரிபாதி கூறினார்.

அதே நேரத்தில், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ரேஷ்மி காஜியின் கூற்றுப்படி, இப்போது இந்தப் போர் தொடர்பாக அமெரிக்காவிற்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஏனெனில் பெரும்பாலான நாடுகள் இந்தப் போரை நோக்கமற்றது என்று கூறுகின்றன.

எண்ணெய் நெருக்கடி காரணமாக இந்தியா இப்போது இரான் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறதா?

இந்தக் கேள்விக்கு ரேஷ்மி காஜி மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்.

அவர் பிபிசியிடம் கூறுகையில், “இந்தியா ராஜதந்திரம் தொடர்பாக எப்போதும் ஒரு தார்மீக நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் இரான் அதிபருடன் பேசினர். ஏனெனில் மௌனமாக இருப்பது ஒரு நிலைப்பாடு ஆகாது” என்றார்.

முன்னதாக இந்தியாவின் மௌனம் குறித்துக் கேள்விகள் எழுந்தன

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இரான் நாட்டின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி காமனெயியின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் மௌனம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன (கோப்புப் படம்).

பட மூலாதாரம், ATTA KENARE/AFP via Getty Images

இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான போரின் முதல் இரண்டு நாட்களில் இந்தியா இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. ஒரு அறிக்கையில் இந்தப் போர் குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டதுடன், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பிரதமர் மோதி மற்றொரு அறிக்கையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான இரானின் தாக்குதலை ‘கடுமையாகக் கண்டித்தார்’ மற்றும் இந்தியா அதன் உடன் நிற்பதாகக் கூறினார். ஆனால் இரான் நாட்டிற்கு எதிரான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.

அதேசமயம், இரான் நாட்டின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி காமனெயி மரணமடைந்த ஐந்து நாட்களுக்குப் பிறகே இந்தியாவால் அதிகாரப்பூர்வமாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசு எடுத்த இந்த நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இருப்பினும், இரங்கல் புத்தகம் ஐந்து நாட்களுக்குப் பிறகே திறக்கப்பட்டதாகவும், அதனால்தான் மார்ச் 5 அன்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வந்திருந்த 130 பேர் பயணித்த இரானிய போர்க்கப்பலான ‘டேனா’ (IRIS Dena), இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் வெளியுறவுத் கொள்கை மிகவும் விமர்சிக்கப்பட்டது.

இரான் நாட்டின் கப்பல் ஒன்றிற்கு இந்தியாவில் தஞ்சம் அளிப்பது குறித்த கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார். இருப்பினும், இந்தியப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட இரானிய கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ குறித்து அவர் ஏதும் கூறவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணம்

போரின் ஆரம்ப நாட்களில் இரான் தொடர்பான இந்தியாவின் கொள்கை மிகவும் தெளிவற்றதாக இருந்தது. அப்போதே ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒருவேளை அமெரிக்காவின் அழுத்தத்தால் அது முடியாமல் போயிருக்கலாம்” என்கிறார் தனஞ்சய் திரிபாதி.

இந்த மாற்றத்தின் நேரம் குறித்து அவர் கூறுகையில், “தங்களால் ஹோர்மூஸ் ஜலசந்தியைத் திறக்க முடியாது என்று அமெரிக்க நிர்வாகத்திற்கும் இப்போது புரிந்திருக்கும். போர் 72 மணிநேரத்தில் முடிந்துவிடும் என்று அவர்கள் உலகிற்கு உறுதியளித்திருந்தனர், ஆனால் அது நடக்கவில்லை. இப்போது இந்தியா, ஜப்பான், தென்கொரியா உட்படப் பல நாடுகளுக்கு இதனால் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், அதைத் திறக்குமாறு அமெரிக்காவிற்கு உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்துள்ளது” என்றார்.

அவரது கூற்றுப்படி, இத்தகைய சூழ்நிலையில் மற்ற நாடுகள் தங்கள் நலன்களுக்காக இரானுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும்.

ஆனால் போர் தொடக்கத்தில் இந்தியாவின் மௌனத்தை ஆதரித்து பேசும் ரேஷ்மி காஜி, இத்தகைய விஷயங்களில் நிதானமாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் இந்தியா அதையே செய்ததாகவும் கூறுகிறார்.

அவரது கூற்றுப்படி, “ஒவ்வொரு நிகழ்விற்கும் உடனடி எதிர்வினை அளிக்கத் தேவையில்லை, இந்தியா இந்த விஷயத்தில் சரியான நேரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.”

“பிரதமர் மோதி மிகவும் சரியான நேரத்தில் பதிலளித்துள்ளார். பிரிக்ஸ் அமைப்பிலிருந்து இதுவரை பதில் வரவில்லை, ஏனெனில் அனைவரும் ‘காத்திருப்போம், கவனிப்போம்’ என்ற நிலையில் உள்ளனர். எண்ணெய் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் இப்போது அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது உலகம் முழுவதும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. உலக வல்லரசு என்ற முறையில் அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு வழங்கிய நம்பிக்கை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. பிரிக்ஸ் போன்ற பிராந்திய அமைப்புகள் இன்னும் வலுவாக உருவெடுக்க இது ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. காலப்போக்கில் இவர்களும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

அவரது கருத்துப்படி, ‘இந்தியாவிற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் நல்ல உறவு உள்ளது. இந்தப் போரிலும் இந்தியா ஒருபோதும் இஸ்ரேல் போர் செய்ய வேண்டும் என்றோ அல்லது இரான் போர் செய்ய வேண்டும் என்றோ கூறவில்லை. அவர்கள் எப்போதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதையே வலியுறுத்தி வருகின்றனர்.’ என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU