Home தேசிய national tamil இரானின் தாக்குதல் குறித்து துபை, கத்தார், பஹ்ரைனில் வாழும் தமிழர்கள் கூறுவது என்ன?

இரானின் தாக்குதல் குறித்து துபை, கத்தார், பஹ்ரைனில் வாழும் தமிழர்கள் கூறுவது என்ன?

13
0

SOURCE :- BBC NEWS

துபை ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து எழும் புகை

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகவும் பிரபலமான நகரமான துபை, சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு பெயர் போனது. ஆனால், இதுவரை தனது நவீன வரலாற்றில் காணாத காட்சிகளை அந்நகரம் கடந்த 24 மணிநேரத்தில் கண்டுள்ளது.

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று துபை சர்வதேச விமான நிலையம், தற்போது அது காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

துபையில் உள்ள ஃபேர்மாண்ட் தி பாம் ஹோட்டலில் சனிக்கிழமை தீப்பிடித்து எரிவதை பிபிசி உறுதிப்படுத்திய வீடியோ காட்டுகிறது. அடர்ந்த கரும்புகை வானத்தை நோக்கி எழுகிறது. பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் தீப்பற்றியதில் நான்கு பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரணம், சனிக்கிழமை அன்று (பிப்ரவரி 28) இஸ்ரேல் – அமெரிக்கா, இரான் மீது தொடங்கிய தாக்குதல். அதில் இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர் இரானிய அரசு ஊடகமும் அதனை உறுதிப்படுத்தியது.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளது.

இரானின் தாக்குதல்கள் குறித்து மத்திய கிழக்கில் வாழும் தமிழர்கள் கூறுவது என்ன? அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதா?

மத்திய கிழக்கு, இரான், துபை, தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

துபையில் என்ன நிலை?

இன்று (மார்ச் 1) அதிகாலை, துபை சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ‘சம்பவத்தில்’ நான்கு பேர் காயமடைந்ததாக துபை ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய முனையத்தில் ‘சிறிய அளவில் சேதம்’ ஏற்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

துபை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் அஜித், “நேற்று (பிப்ரவரி 28) இரவு முதல் வெடிப்புச் சத்தங்களை அவ்வப்போது கேட்கிறோம். இரவு நாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் யாரும் தூங்கவில்லை. பலர் வீதியில் வந்து நின்றிருந்தனர்” என்று கூறினார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த பொறியாளரான அஜித் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக துபையில் வசித்து வருகிறார்.

“இத்தகைய ஒரு சூழலை நான் துபையில் இதுவரை பார்த்ததில்லை, என் தந்தையும் இங்கே தான் பல வருடங்கள் பணிபுரிந்தார். அவரும் இது போல பார்த்ததில்லை. அதேசமயம், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. ஆனால், இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை.” என்று அவர் கூறினார்.

“நேற்று இரவு திடீரென எங்கள் கைப்பேசிகளில் ‘அவசரகால குறுஞ்செய்திகள்’ வரத் தொடங்கின. இத்தகைய குறுஞ்செய்திகள் மிகவும் அரிதாகவே வரும். சில மாதங்களுக்கு முன் மழை குறித்த ஒரு குறுஞ்செய்தி பார்த்தோம், ஆனால் ஏவுகணை தாக்குதல் அபாயம் உள்ளதால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்ற குறுஞ்செய்தி சற்று பயத்தை அளித்தது” என்கிறார் துபையில் வசிக்கும் பொறியாளரும், தேனியைச் சேர்ந்தவருமான யாசர்.

“அவ்வப்போது வெடிப்புச் சத்தங்கள் கேட்டாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பேருந்துகள், மெட்ரோ சேவைகள் வழக்கம்போல இயங்குகின்றன. கடைகளும் திறந்துள்ளன. என் நண்பர்கள் பணிபுரியும் சில தனியார் நிறுவனங்கள் திங்கள்கிழமை (மார்ச் 2) அலுவலகத்திற்கு வரவேண்டாமென அறிவுறுத்தியுள்ளன. அதேசமயம், ஏவுகணை பாகங்கள் ஏதேனும் கண்டால் அதன் அருகே செல்ல வேண்டாமென்றும் அவசரகால குறுஞ்செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

துபை சர்வதேச விமான நிலையம் அருகில் வசிக்கும் வினோத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), “நேற்று இரவு ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. என் வீடு முப்பதாவது மாடியில் என்பதால், சில வெடிப்புகளை நேரில் பார்த்தேன். துபையில் இப்படி ஒரு காட்சியைக் காண்பேன் என நினைத்துப் பார்த்ததில்லை. உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கே வீடு வாங்கி குடியேறுகிறார்கள், சுற்றுலாவுக்காகவும் வருகிறார்கள் அப்படியிருக்க இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.” என்று கூறினார்.

மத்திய கிழக்கு, இரான், துபை, தமிழர்கள்

பட மூலாதாரம், Benazir Fathima

“நேற்று இரவு 7.30 மணிக்கு ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. குழந்தைகள் மிகவும் பயந்துவிட்டனர். வீட்டின் ஜன்னல்கள் அதிர்ந்தன. அதன் பின்னர் அரசிடமிருந்து அவசரகால செய்திகள் வந்தன. இன்று காலை முதல் எந்த பதற்றமும் இல்லை” என்று கூறுகிறார் பெனாசிர் பாத்திமா. இவர் கடந்த 30 வருடங்களாக துபையில் வசித்து வருகிறார்.

துபையில் வசிக்கும் பன்னாட்டு ஊடகவியலாளர் சுபாஷ் சந்திர போஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இங்கு இயல்பு நிலை தான் நீடிக்கிறது. மக்களின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. வரும் நாட்களில் நிலை மாறக்கூடும்.” என்று கூறினார்.

இரானிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படை மற்றும் வான் பாதுகாப்புப் படைகள், நாட்டின் பிரதேசங்களை நோக்கி ஏவப்பட்ட 137 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 209 டிரோன்களை இடைமறித்து அழிப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் பொதுமக்கள், நாட்டின் அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து வரும் தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளம் அமெரிக்க விமானப்படைக்கு ஒரு முக்கியமான தளமாகும்.

பல ஏவுகணை தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

கத்தாரில் என்ன நிலை?

கத்தாரின் தலைநகரான தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளம், மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் விமான நடவடிக்கைகளின் தலைமையகமாகும். இது மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளமாகும். சுமார் 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இங்கு உள்ளனர்.

கத்தார் பாதுகாப்பு அமைச்சகம், “நாட்டின் எல்லையை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக” தெரிவித்துள்ளது.

“கத்தாரில் சனிக்கிழமை (பிப்ரவரி 28) முழுவதுமே வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. வீடுகள், பணியிடக் கட்டடங்களில் அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது.” என்று கூறுகிறார் கத்தாரில் வசிக்கும் தமிழரான, மருத்துவர் சக்திதரன்.

“இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. நான் நேற்றும் பணிக்குச் சென்றேன், கடைகளுக்கு சென்றேன். ஆனால், என் மருத்துவமனை பணி நேரத்தைக் குறைத்துள்ளது. அதிகமான வெடிப்புச் சத்தங்கள் பகலில் கேட்பதால், பகல் நேர ஷிப்ட்களை எங்கள் மருத்துவமனை நிறுத்திவிட்டது. இங்கே சுற்றியுள்ள பகுதிகள் ஏவுகணைகள் விழுந்ததாக கூறுகிறார்கள், ஆனால் நேரடியாக நான் எதையும் பார்க்கவில்லை.” என்று அவர் கூறினார்.

கன்னியகுமாரியைச் சேர்ந்த அஸ்லம், கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். “வானில் ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதை நாங்கள் பார்த்தோம். ஆனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. நிலைமை மோசமடையும் என்ற பயம் இங்கு உள்ளது” என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கு, இரான், துபை, தமிழர்கள்

பட மூலாதாரம், Reuters

பஹ்ரைனில் என்ன நிலை?

பஹ்ரைன், வளைகுடா மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகம் ஆகும்.

பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள், தங்கள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்ததாகக் கூறின, ஆனால் அதன் மூலம் விழுந்த இடிபாடுகள் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

“முதலில் அமெரிக்க கடற்படை தளம் அருகே தான் வெடிப்புகளை கண்டோம். பின்னர் குடியிருப்புப் பகுதிகளில் பாதிப்புகள் உணரப்பட்டன.” என்கிறார் பஹ்ரைனில் வசிக்கும் தமிழரான அகிலேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“பஹ்ரைனில் உள்ள தமிழ் சங்கம் மூலமாக இங்குள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து வருகிறோம். நிலைமை மோசமடையக்கூடும் என்றே எங்களுக்கு கூறப்படுகிறது. இந்திய தூதரகமும் பஹ்ரைன் அரசும் பாதுகாப்பான புகலிடங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. நேற்று முழுவதும் கேட்ட வெடிப்புச் சத்தங்கள், இன்று காலை முதல் குறைந்துள்ளன. ஆனால், மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.” என்று அவர் கூறுகிறார்.

பஹ்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கான 00973-39418071 என்ற அவசர உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

பஹ்ரைனில் இரான் ஏவுகணை தாக்கிய ஒரு கட்டடம்

பட மூலாதாரம், Reuters

அதேபோல, சௌதி அரேபியாவும் தனது தலைநகர் ரியாத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பிற இடங்களில் இரானின் தாக்குதல்களை முறியடித்ததாகக் தெரிவித்துள்ளது.

ரியாத்தில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் மருத்துவருமான ஜாகிர், “இங்கு அனைத்தும் வழக்கம்போல தான் இயங்குகிறது, இப்போது கூட என் பணியிடத்தில் இருந்து தான் பேசுகிறேன். ஊடகங்களில் தாக்குதல் குறித்த செய்திகளைப் பார்க்க முடிகிறது, ஆனால் மக்கள் வாழும் பகுதிகளில் பாதிப்பு இல்லை” எனக் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நேற்று (பிப்ரவரி 28) குவைத் சர்வதேச விமான நிலையத்தை டிரோன் குறிவைத்ததாகவும், இதனால் ஒரு முனையம் சற்று சேதடைந்ததாகவும், குறைந்த அளவிலான பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்துக்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளதாக குவைத்தின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான குனா தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜலால், குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். “நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. வெளியே வர வேண்டாமென உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்தன. எனவே நான் வெளியே செல்லவில்லை. ஊடகங்களிடம் புகைப்படங்கள், காணொளிகளை பகிர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்போது 30 நிமிடத்திற்கு முன் வரை வெடிப்புச் சத்தங்களைக் கேட்டோம்” என்று அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU