Home தேசிய national tamil “இரானின் எண்ணெயைக் கைப்பற்ற விரும்புகிறேன்” – கார்க் தீவு பற்றி டிரம்ப் கூறியது என்ன?

“இரானின் எண்ணெயைக் கைப்பற்ற விரும்புகிறேன்” – கார்க் தீவு பற்றி டிரம்ப் கூறியது என்ன?

4
0

SOURCE :- BBC NEWS

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“இரானின் எண்ணெய் மீதான கட்டுப்பாட்டை கைப்பற்ற விரும்புவதாகவும், இரானின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடும்” என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரான் போரில் போர்நிறுத்தம் செய்வது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய பாகிஸ்தானில் ஒருபுறம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொருபுறம் தரைவழித் தாக்குதலுக்காக ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கைச் சென்றடைந்துள்ளன.

இந்தச் சூழலில் ஃபைனான்சியல் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

இருப்பினும், இரானுடன் ஒரு ஒப்பந்தம் ‘மிக விரைவில்’ ஏற்படக்கூடும் என்று டிரம்ப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தப் போர் எண்ணெய் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது, ஒரே மாதத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாக விலை அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 116 டாலராக உயர்ந்தது.

பிப்ரவரி 28 அன்று இரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு முன்பு, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 72 டாலராக இருந்தது.

இதற்கிடையில், இரான் போரில் ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நுழைந்திருப்பது, செங்கடல் வழியாக எரிபொருள் போக்குவரத்திற்கான அபாயத்தையும் அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2023-ல் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்குப் பிறகு அதிகரித்த ஹூத்தி தாக்குதல்களால் இந்த வழித்தடத்தில் எரிபொருள் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. முன்னதாக, உலகளாவிய பெட்ரோலிய எரிபொருள் வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழித்தடத்தின் மூலமே நடைபெற்றது.

டிரம்ப் கூறியது என்ன?

இரானின் கார்க் தீவை அமெரிக்காவால் எளிதில் கைப்பற்ற முடியும், ஆனால் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்று டிரம்ப் கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images

அமெரிக்க அதிபருடன் நடத்திய நேர்காணலை ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் டிரம்ப், “உண்மையைச் சொன்னால், இரானின் எண்ணெயைக் கைப்பற்றுவதே எனக்குப் பிடித்தமான விஷயம். ஆனால் அமெரிக்காவில் உள்ள சிலர், ‘நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள்,” என்று கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையில் கார்க் தீவை ஆக்கிரமிப்பதும் அடங்கக்கூடும் என்பதை டிரம்ப் சூசகமாகத் தெரிவித்தார்.

“நாங்கள் கார்க் தீவைக் கைப்பற்றலாம் அல்லது கைப்பற்றாமலும் போகலாம். எங்களிடம் பல வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால், நாங்கள் அங்கே சிறிது காலம் தங்கியிருக்க வேண்டியிருக்கும்” என்றார்.

அந்தத் தீவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கேட்டபோது, “அங்கு எந்தச் சிறப்புப் பாதுகாப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களால் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும்” என்றார்.

கூடுதலாக 3,500 அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்குக்கு வந்தடைந்துள்ள நிலையில் அதிபர் இவ்வாறு கூறியுள்ளார். பதற்றம் அதிகரித்தால் அமெரிக்கப் படைகள் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் என்ற சூழலை இது ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் டிரம்ப் கூறினார்.

ஆனால் போர்நிறுத்த ஒப்பந்தம் விரைவில் எட்டப்படுமா இல்லையா என்பது குறித்துக் கூற அவர் மறுத்துவிட்டார்.

“ஒப்பந்தம் மிக விரைவாக ஏற்படலாம்” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் நடப்பதற்கான சாத்தியம் குறித்து இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், “அமெரிக்கப் படைகள் தரையிறங்கியதும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இரானியப் படைகள் காத்திருக்கின்றன” என்றார்.

இரானின் காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி, இப்பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளபதிகள் மற்றும் அரசியல் அதிகாரிகளின் இல்லங்களை இரானிய ஆயுதப் படைகள் குறிவைக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.

காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் என்பது இரானின் மிக உயர்ந்த செயல்பாட்டுக் கட்டளைப் பிரிவாகும், இது நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.

‘இரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது’

ஞாயிற்றுக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இரானில் ஆட்சி மாற்றத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக அமெரிக்கா நம்புவதாகக் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நீங்கள் கவனித்துப் பார்த்தால், ஏற்கனவே அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. முதல் ஆட்சி முற்றிலும் முடிந்து, அழிக்கப்பட்டுவிட்டது, அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். இரண்டாவது ஆட்சியும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இப்போது மூன்றாவது ஆட்சியில், இதுவரை யாரும் பேசாத நபர்களுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் மாறுபட்ட ஒரு குழு, எனவே இதை நான் ஆட்சி மாற்றமாகவே கருதுகிறேன். உண்மையைச் சொன்னால், அவர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்து கொள்கிறார்கள்,” என்றார்.

மேலும், “அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே நான் நினைக்கிறேன். இதைவிடச் சிறந்தது எதுவும் இருக்க முடியாது” என்றும் கூறினார்.

“நிர்வாகம் மிக மிக மோசமாக இருந்தது. நியமிக்கப்பட்ட மற்றவர்கள் அனைவரும் இப்போது இல்லை, அவர்கள் இறந்துவிட்டார்கள். அநேகமாக இன்னும் ஒருவருக்கு மட்டுமே உயிர் மிஞ்சியிருக்கிறது,” என்று டிரம்ப் கூறினார்.

ஒரு மாத காலமாக நடந்து வரும் போரில் இரானிய தலைவர்கள் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

“நாங்கள் அவர்களுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவோம் என்பது கிட்டத்தட்ட உறுதி என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது நடக்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், “இரானைப் பொறுத்தவரை எதுவும் சொல்ல முடியாது, ஏனென்றால் நாங்கள் அவர்களுடன் பேசுகிறோம், பிறகு அவர்கள் மீது குண்டுவீச வேண்டியிருக்கிறது” என்றார்.

அமெரிக்கா கார்க் தீவை குறி வைப்பது ஏன்?

அமெரிக்காவின் பார்வை கார்க் தீவின் மீது படர்ந்துள்ளது.

ஏனெனில் இங்கு ஒரு பெரிய எண்ணெய் முனையம் அமைந்துள்ளது. இது இரானின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.

இதைக் கைப்பற்றுவது இரானின் எண்ணெய் ஏற்றுமதியை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், இரானின் நிலப்பகுதி மீது தாக்குதல்களை நடத்துவதற்கான ஒரு மூலோபாயத் தளமாகவும் இது மாறக்கூடும்.

பிபிசியின் செக்யூரிட்டி பிரீஃப் உடன் தொடர்புடைய பாதுகாப்பு ஆய்வாளர் மிக்கி கே கருத்துப்படி, இந்தத் தீவைக் கைப்பற்றுவது இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் முக்கிய வருமான ஆதாரத்தைத் துண்டிக்கும். இது அவர்களின் போர் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கும்.

இதற்கிடையில், ஸ்கூல் ஆஃப் வார் பாட்காஸ்டின் தொகுப்பாளரும், சிபிஎஸ் தேசிய பாதுகாப்பு ஆய்வாளருமான ஆரோன் மெக்லீன் பிபிசியிடம் கூறுகையில், இந்தத் தீவைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை அளவில் சிறியதாக இருக்கலாம், ஆனால் அது மிகவும் சவாலானதாக இருக்கும் என்றார்.

கார்க் தீவு என்பது இரானின் கடற்கரையிலிருந்து வெறும் 15 கடல் மைல் (24 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவாகும்.

இது அளவில் சிறியதாக இருந்தபோதிலும், இரானின் எரிசக்தி உள்கட்டமைப்பின் மிக முக்கியமான பகுதியாக உள்ளது.

வளைகுடாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, இந்தச் சிறிய ஆனால் முக்கியமான தீவின் மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதலானது, இரானிய பொருளாதாரத்தின் முக்கிய நரம்பைத் தாக்குவது போன்றதாகும்.

ஏனெனில் இரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் இந்தத் தீவில் உள்ள ஒரு முனையத்திலிருந்தே வருகிறது. இது நிலப்பகுதியிலிருந்து குழாய் வழியாக இங்கு கொண்டு வரப்படுகிறது.

இரு தரப்பிலிருந்தும் தொடரும் தாக்குதல்கள்

 ஈ-3 சென்ட்ரி விமானம்

பட மூலாதாரம், Facebook

கடந்த 24 மணிநேரத்தில் இரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்துள்ளன, மேலும் பல வளைகுடா நாடுகளில் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பத்து வீரர்கள் காயமடைந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று கடுமையாக சேதமடைந்தது.

புகைப்படங்களில் இரண்டு பகுதிகளாக உடைந்த நிலையில் காணப்படும் விமானம் E-3 சென்ட்ரி ரக விமானம் என்பதை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படங்கள், சவுதி தலைநகர் ரியாத்திற்கு தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தைச் சேர்ந்தவை.

விமானப்படை தளத்தின் மீது இரான் நடத்திய ராணுவத் தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இரான் தலைநகர் தெஹ்ரானில் பல பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிச்சத்தம் கேட்ட சில நாட்களிலேயே, அங்குள்ள பல இடங்களைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களால் தெஹ்ரான் மற்றும் அல்-போர்ஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுவிட்டதாகவும் இரானின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை முயற்சிகளின் விளைவு என்ன?

முன்னதாக, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்ததாக பிபிசி உருது தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Pakistan Foreign Ministry

பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் உதவ முடியும் என்று இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பாகிஸ்தான் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் கூறியுள்ளார்.

இஷாக் தார் கூறுகையில், “வரவிருக்கும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் மகிழ்ச்சியுடன் நடத்தி, அதற்கு வசதி செய்து தரும்,” என்றார்.

இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இதனைத் தெரிவித்தார்.

இப்பகுதியில் நிலவும் போரை விரைவாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தான் விவாதித்ததாக இஷாக் தார் குறிப்பிட்டார்.

முன்னதாக, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்ததாக பிபிசி உருது தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில் இஷாக் தார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஆசிம் மாலிக் மற்றும் பிரதமரின் சிறப்பு உதவியாளர் தாரிக் ஃபாத்தேமி ஆகியோரும் உடனிருந்தனர்.

சமீபத்தில், அமெரிக்கா ஓர் ஒப்பந்தத்திற்காக பாகிஸ்தான் வழியாக இரானிடம் 15 அம்சத் திட்டத்தைச் சமர்ப்பித்ததாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறின.

இருப்பினும், ஹோர்மூஸ் நீரிணை மீதான தனது சட்டபூர்வமான உரிமை உட்பட ஐந்து நிபந்தனைகளை இரான் முன்வைத்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU