SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், SHAFEQNA
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதை அடுத்து, இரானில் இடைக்கால தலைமை சபை பொறுப்பேற்றுள்ளது.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் சபையில், இரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோலம்-ஹோசெய்ன் மோஹ்செனி எஜெஹெய் மற்றும் பாதுகாவலர்கள் மன்றத்தின் உறுப்பினர் ஆயதுல்லா அலி ரெஸா ஆராஃபி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அலி ரெஸா ஆராஃபி, இடைக்காலத் தலைமை சபையின் ஜூரிஸ்டாக (சட்ட வல்லுநர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இரான் அரசியலமைப்பின் 111-வது பிரிவின்படி, அதி உயர் தலைவர் காலமானாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், இடைக்காலத் தலைமை சபை அமைக்கப்படுகிறது.
இடைக்காலத் தலைமை சபை என்ன செய்யும்?
இப்போது இரான் நாட்டின் புதிய அதி உயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபைதான் நாட்டின் ஆட்சியை நடத்தும்.
இருப்பினும், இந்த சபைக்கு முழு அதிகாரமும் இல்லை. பல விஷயங்களில், இதன் முடிவுகள் நிபுணர்களின் சபையின் முக்கால்வாசி உறுப்பினர்களின் ஒப்புதலுடன் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட முடியும்.
இந்த முடிவுகள்-
– அமைப்பின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானித்தல்.
– பொது வாக்கெடுப்பை அறிவித்தல்.
– போர் அல்லது அமைதியை அறிவித்தல்.
– அதிபரைப் பதவியிலிருந்து நீக்குதல்.
– கூட்டுப் படைத் தளபதி, புரட்சிகர காவல் படையின் தளபதி அல்லது உயர் ராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளின் நியமனம் அல்லது பணிநீக்கம்.
புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மற்றும் பல உயர் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்காலத் தலைமை சபை இது தொடர்பாக முக்கால்வாசி பெரும்பான்மையுடன் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலி ஆராஃபி யார்?
இரான் ஊடகங்களின்படி, அலி ரெஸா ஆராஃபி 1959-ஆம் ஆண்டு யஸ்த் மாகாணத்தின் மேபத் நகரில் பிறந்தார். இவரது தந்தை முகமது இப்ராகிம் ஆராஃபி அக்காலத்தின் மதகுருவாக இருந்தார்.
அவர் பஹ்லவி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருந்ததோடு, அயத்துல்லா கொமேனிக்கு நெருக்கமான மதகுருக்களுடன் தொடர்பில் இருந்தார்.
அலி ஆராஃபி சிறுவயதிலேயே தனது தந்தை மற்றும் பிற ஆசிரியர்களிடம் ஆரம்பகால மதக் கல்வியைப் பெற்றார். ஆரம்பக் கல்விக்காக கும் நகருக்குச் சென்ற அவர், அதன் பிறகு மதப்பள்ளியில் பயின்றார்.
ஆராஃபி, மொர்தேசா ஹெரி யஸ்தி, முகமது ஃபசல் லங்கரானி, ஹுசைன் வாஹித் கோராசானி, ஜவாத் தப்ரிஸி மற்றும் ஹசன் ஹசன்சாதே அமோலி போன்ற பல ஷியா மத அறிஞர்களிடம் கல்வி பயின்றார். முகமது தகி மிஸ்பாஹ் யஸ்தியின் தத்துவ வகுப்புகளிலும் அவர் கலந்து கொண்டார்.
ஆராஃபிக்கு மதப்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பித்த அனுபவம் உண்டு, மேலும் அவர் பல ஆராய்ச்சிப் பணிகளில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இளமைக்காலத்திலிருந்தே அரசியலில் தீவிரமாக இருந்த அவர், தனது தந்தையுடன் இணைந்து பஹ்லவி ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்றார். 16 வயதில் அவர் கைது செய்யப்பட்டுச் சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
1979-இல் கும் மதப்பள்ளியில் “வெளிநாட்டு மாணவர் கண்காணிப்புக் குழு” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1986-இல் இந்த அமைப்பின் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு அதன் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்ட பிறகு, அதன் பெயர் “உலக இஸ்லாமிய அறிவியல் மையம்” என மாற்றப்பட்டது.
1993 முதல் இந்த அமைப்பு இரான் அதி உயர் தலைவரின் கட்டுப்பாட்டில் வந்தது. 2002-இல் காமனெயி இந்த அமைப்பின் தலைமையை ஆராஃபியிடம் ஒப்படைத்தார். ஆராஃபி 2008 வரை அதன் தலைவராக இருந்தார்.
ஆராஃபி, புனித குர்ஆன் அறிவியல் மற்றும் கல்விப் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளார்.
அவர் மேபத் நகரின் இமாம்-ஏ-ஜும்மா (வெள்ளிக்கிழமை தொழுகை தலைவர்) ஆகவும், 2014-இல் கும் நகரின் இமாம்-ஏ-ஜும்மா ஆகவும் இருந்துள்ளார்.
அவர் பண்பாட்டு புரட்சியின் உச்ச கவுன்சில் உறுப்பினராகவும் உள்ளார். 2016-இல் அவர் கும் மதப்பள்ளியின் இயக்குநராகவும், இரான் மதப்பள்ளிகளின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
அவர் கும் மதப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார்.
2019-இல் காமனெயியின் உத்தரவின் பேரில் ஆராஃபி பாதுகாவலர்கள் சபையின் உறுப்பினரானார்.
காமனெயி-யின் நம்பிக்கைக்குரியவர்
பட மூலாதாரம், LEADER.IR
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அலி ரெஸா ஆராஃபியின் பெயரைச் சிலரே அறிந்திருந்தனர். முன்பு அவர் “ஹுஜ்ஜத் அல்-இஸ்லாம்” என்று அழைக்கப்பட்டார், ஆனால் இப்போது அவர் “ஆயத்துல்லா” என்று அழைக்கப்படுகிறார்.
காமனெயி-க்கு ஆராஃபி மீது முழு நம்பிக்கை இருந்தது, மேலும் அவர் காமனெயி-க்கு நெருக்கமானவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
இந்த நம்பிக்கை மற்றும் நெருக்கம் காரணமாக, ஆராஃபியின் அந்தஸ்து படிப்படியாக உயர்ந்தது. காமனெயி-யின் வாரிசாக வரக்கூடியவர்களின் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறத் தொடங்கியது.
தனது உரைகள் மற்றும் பொது நிலைப்பாடுகளில், ஆராஃபி பெரும்பாலும் இஸ்லாமியக் குடியரசுத் தலைவரின் (காமனெயி) கருத்துக்களையே வெளிப்படுத்தி வந்துள்ளார்.
2016-இல் அவர் “மேற்கத்தியச் சிந்தனையை” எதிர்கொள்ளக்கூடிய ஒரு “சிந்தனை” தேவை என்று வலியுறுத்தினார், அத்துடன் அதில் பேச்சுவார்த்தை, எதிர்ப்பு, ஜிகாத் மற்றும் புரட்சி போன்ற கோட்பாடுகள் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்றார்.
வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு விவகாரங்களிலும் அவரது கருத்துக்கள் அதி உயர் தலைவரால் அறிவிக்கப்பட்ட கொள்கைகளின்படியே உள்ளன.
இரான் நாட்டின் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடரவும், அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்குப் பதிலடி கொடுக்கவும், மக்கள் தொகை அதிகரிப்புக் கொள்கைகளுக்கும் அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
ஜூலை 2017-இல் கும் நகரின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, அவர் அமெரிக்காவை “உலகின் மனித உரிமை மீறல்களின் மையம்” என்று குறிப்பிட்டார்.
ஆராஃபியின் வளர்ச்சி, சமீபத்திய ஆண்டுகளில் இஸ்லாமியக் குடியரசின் மத மற்றும் அரசியல் கட்டமைப்பில் அவர் ஒரு செல்வாக்குமிக்க ஆளுமையாக உருவெடுத்துள்ளதை உணர்த்துகிறது.
இடைக்காலத் தலைமை சபையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பின் அடிப்படையில், இனி இரான் நாட்டில் என்ன நடந்தாலும், அதில் ஆராஃபி ஒரு முக்கியப் பங்கை வகிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



