Home தேசிய national tamil இயேசு உண்மையில் கருமை நிறத்தில் இருந்தாரா? வரலாற்றாசிரியர்களின் கூற்று என்ன?

இயேசு உண்மையில் கருமை நிறத்தில் இருந்தாரா? வரலாற்றாசிரியர்களின் கூற்று என்ன?

5
0

SOURCE :- BBC NEWS

இயேசு

பட மூலாதாரம், CICERO MORAES/BBC BRAZIL

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நீளமான வெளிர் பழுப்பு நிற முடி, நீல நிற கண்கள் மற்றும் தாடி கொண்ட வெள்ளை நிற மனிதர் எனும் உருவ அமைப்பு கொண்டவராக இயேசு கிறிஸ்து பரவலாக அறியப்படுகிறார்.

இந்த உருவ அமைப்பு கலை மற்றும் மதம் சார்ந்த படைப்புகள் இரண்டிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலகில் உள்ள சுமார் 2 பில்லியன் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோருக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு படமாக இருந்தாலும், இது யதார்த்தத்துடன் சிறிதும் தொடர்பில்லாத ஒரு உருவப்படமாக கருதப்படுகின்றது.

இயேசு, அவரது காலத்தின் மற்ற யூதர்களைப் போலவே, கருமையான சருமம் கொண்டவராகவும், குட்டையாகவும், குட்டையான கேசத்துடன் இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இயேசு எப்படி இருந்தார் என்பதை அறிவதில் உள்ள சிரமம் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் இருந்தே உள்ளது.

பைபிளில், அவர் உடல் ரீதியாக எப்படி இருந்தார் என்று எந்த விளக்கத்தையும் அளிக்கப்படவில்லை.

“சுவிசேஷங்களில் அவர் உடல் ரீதியாக விவரிக்கப்படவில்லை. அவர் உயரமானவரா அல்லது குட்டையானவரா, அழகானவரா அல்லது வலிமையானவரா என்பதும் இல்லை. தோராயமாக, அவர் சுமார் 30 வயதுடையவர் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது,” என ‘இயேசு எப்படி இருந்தார்?’ எனும் புத்தகத்தின் ஆசிரியரும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இறையியல் மற்றும் மத ஆய்வுகள் துறையில் பேராசிரியராகவும் உள்ள நியூசிலாந்தை சேர்ந்த வரலாற்றாசிரியர் ஜோன் இ. டெய்லர் கூறுகிறார்.

“இந்த தரவு பற்றாக்குறை குறிப்பிடத்தக்கது. இயேசுவின் முதல் சீடர்கள் அத்தகைய தகவல்களில் அக்கறை கொள்ளவில்லை என்பதை இது குறிக்கிறது. இயேசு உடல் ரீதியாக எப்படி இருந்தார் என்பதைச் சொல்வதை விட அவரது கருத்துக்களையும், உரையாடல்களையும் பதிவு செய்வது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது,” என்கிறார் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறையின் பேராசிரியரும், Jesus Histórico – Uma Brevíssima Introdução எனும் புத்தகத்தின் ஆசிரியருமான ஆண்ட்ரே லியோனார்டோ செவிடரேஸ்.

2001- ஆம் ஆண்டில், பிபிசி தயாரித்த ஒரு ஆவணப்படத்திற்காக, பிரிட்டன் தடயவியல் முக மறுசீரமைப்பு நிபுணர் ரிச்சர்ட் நீவ், அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி யதார்த்தத்திற்கு நெருக்கமானதாகக் கருதக்கூடிய வகையில் இயேசுவின் படத்தை உருவாக்கினார்.

இயேசு வாழ்ந்ததாக நம்பப்படும் அதே பகுதியில் வாழ்ந்த பண்டைய மக்களின் முதல் நூற்றாண்டு கால மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி, அவரும் அவரது குழுவினரும் முப்பரிமாண தொழில்நுட்பத்தின் மூலம் இயேசுவின் முகம் போன்ற ஒரு பொதுவான முகத்தை உருவாக்கினர்.

நிபுணர் ரிச்சர்ட் நீவ் வரைந்த விளக்கப்படம்.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த யூதர்களின் எலும்புக்கூடுகள், அவர்களின் சராசரி உயரம் 1.60 மீ என்றும், அவர்களில் பெரும்பாலோர் 50 கிலோவுக்கும் சற்று அதிகமாக எடை கொண்டவர்களாக இருந்ததையும் காட்டுகின்றன. மேலும் அவை தோலின் நிறத்தையும் தோராயமாக வெளிப்படுத்துகின்றன.

“உயிரியல் ரீதியாகவும், அந்தக் கால யூதர்கள் இன்றைய இராக் பகுதியைச் சேர்ந்த யூதர்களைப் போலவே இருந்தனர். எனவே, ஒரு பொதுவான மத்திய கிழக்கு மனிதரைப் போல, இயேசுவுக்கு அடர் பழுப்பு முதல் கருப்பு நிற முடி, பழுப்பு நிற கண்கள், கருமையான தோல் இருந்தது என்று நான் நம்புகிறேன்” என்று ரிச்சர்ட் நீவ் கூறுகிறார்.

“அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் நிறத்தையும், குறிப்பாக, கடுமையான வெயிலில் பாலைவனத்தில் வாழும் மனிதர்களின் உடலமைப்பையும் கருத்தில் கொண்டால், அவர் நிச்சயமாக கருமையான சருமம் கொண்டவராக இருந்தார்,” என தடயவியல் முக மறுசீரமைப்பில் நிபுணரும் பிரேசிலை சேர்ந்த கிராஃபிக் டிசைனருமான சிசெரோ மோரேஸ் தெரிவிக்கிறார்.

மொரேஸ் ஏற்கனவே 11 கத்தோலிக்க துறவிகளின் முகங்களை மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இந்த நிருபரின் வேண்டுகோளின் பேரில், அறிவியல் முறையில் இயேசு கிறிஸ்துவின் உருவத்தையும் மொரேஸ் உருவாக்கினார்.

“இயேசுவின் முகத்தை கற்பனை செய்வதற்கான சிறந்த வழி, அந்த பாலைவன நிலத்தில் வாழ்ந்த பெடோவின் மக்களை பார்ப்பதுதான். கடுமையான வெயிலை எதிர்கொண்ட அந்த நிலங்களிலிருந்து வந்த நாடோடிகள் அவர்கள்” என்கிறார் அலகோவாஸ் ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் The Da Vinci Code and Christianity in the First Centurie என்ற புத்தகத்தின் ஆசிரியருமான இறையியலாளர் பெட்ரோ லிமா வாஸ்கோன்செல்லோஸ்.

இயேசுவின் முடி அமைப்பு குறித்தும், சுவாரஸ்யமான ஒரு குழப்பம் நிலவுகிறது .

கொரிந்தியருக்கு எழுதிய அதிகாரத்தில், “ஒரு ஆணுக்கு நீண்ட கூந்தல் இருந்தால் அது அவமானம்” என்று பவுல் எழுதியுள்ளார்.

இயேசு சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போல, அவருக்கு நீண்ட முடி இல்லை என்பதை இந்த வசனம் குறிக்கிறது.

“ரோமானிய பகுதியில், நன்கு சவரம் செய்யப்பட்ட முகம், நன்கு நறுக்கப்பட்ட முடி ஆகியவையே ஒரு ஆணின் தோற்றமாக இருந்துள்ளது. ஒருவேளை பண்டைய தத்துவஞானிகளுக்கு சிறிது முடி மற்றும் தாடி இருந்திருக்கலாம்” என்று வரலாற்றாசிரியர் ஜோன் இ. டெய்லர் கூறுகிறார்.

பட மூலாதாரம், ICON PRODUCTIONS/DIVULGATION

தொடக்கத்தில், 3 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இயேசுவின் உருவம் என அறியப்பட்ட உருவப்படங்கள் அவரை தாடி இல்லாத, குறைவான முடி கொண்ட இளைஞனாகக் காட்டுகின்றன என்று செவிடரேஸ் கூறுகிறார்.

“தாடி வைத்த கடவுளை விட ஒரு இளம் தத்துவஞானியாக, ஒரு ஆசிரியரின் பிரதிநிதித்துவமாக அந்தப் படம் இருந்தது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

“பழைய கிறிஸ்தவ உருவப்படங்களில், இயேசு பல்வேறு வடிவங்களில் வர்ணிக்கப்படுகிறார். சில நேரங்களில் தாடியுடன், ஒரு தத்துவஞானி அல்லது ஆசானைப் போலவும் மற்ற நேரங்களில் தாடியில்லாமல், அமைதியான ஒரு கலைமிக்க வடிவமாகவும் வர்ணிக்கப்படுகிறார்.

அவர் எப்போதும் ஒரு சாதாரண துணி அணிந்துள்ளவராக வரையப்பட்டுள்ளார். இது எளிமையையோ, ஞானத்தையோ குறிக்கிறது. சில ஓவியங்களில் அவர் சூரியக் கடவுளாகவும், வேறு சிலவற்றில் அடக்கமான மேய்ப்பனாகவும் தோன்றுகிறார்” என்று பிரேசிலில் உள்ள போன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழக பேராசிரியரும், பிரேசிலிய இறையியல் மற்றும் மத அறிவியல் சங்கத்தின் உறுப்பினருமான வில்மா ஸ்டீகல் டி டோமாசோ விளக்குகிறார்.

படங்கள்

பல நூற்றாண்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்ட உருவப்படங்கள், இயேசுவை தெய்வீக உருவமாக, கடவுளின் மகனாகவே எப்போதும் சித்தரிக்க முயன்றன. மனித உருவிலான இயேசுவை அல்ல என்று ஜோன் நம்புகிறார்.

“இது என்னை எப்போதும் கவர்ந்த ஒரு பகுதி. நான் இயேசுவைத் தெளிவாகக் காண விரும்பினேன்,” என்று அவர் கூறுகிறார்.

பைசண்டைன் பேரரசு உச்சத்தில் இருந்த இடைக்காலத்தில், தாடி மற்றும் முடியுடன் கூடிய இயேசுவின் படம் உருவானது. ”இந்தக் காலகட்டத்தில் தான் இயேசுவின் உருவத்தை அக்கால மன்னர்கள் மற்றும் பேரரசர்களைப் போலவே, வெல்ல முடியாத ஒரு மனிதனாக சித்தரிக்கத் தொடங்கினர்” என்று பேராசிரியர் செவிடரேஸ் கூறுகிறார்.

“வரலாறு முழுவதும், இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கலைப் படைப்புகளும், அவரது முகத்தை சித்தரித்த படங்களும், கிறிஸ்தவ வரலாற்றின் தொடக்கத்தில் பாலத்தீனத்தில் வசித்த உண்மையான மனிதனை உருவகப்படுத்துவதில் குறைவான அக்கறை கொண்டுள்ளன” என்று போன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் நம்பிக்கை மற்றும் கலாசார மையத்தின் ஒருங்கிணைப்பாளரான சமூகவியலாளர் பிரான்சிஸ்கோ போர்பா ரிபேரோ நெட்டோ கூறுகிறார்.

குழுக்களோடு இயேசு ஒன்றாக இருக்கும் காட்சிகளில், அவர் மற்றவர்களை விட பெரிதாக காட்டப்படுகிறார். இது மனித இனத்தை மிஞ்சிய அவரது தெய்வீக தன்மையை குறிப்பதாகும்.

சிலுவையில், அவர் உயிருடன் மற்றும் மகிமையுடன் வரையப்படுகிறார். இது அவரது உயிர்த்தெழுதலும், மரணத்தை வென்ற வெற்றியையும் குறிக்கிறது.

ஜோவாகின் பீனிக்ஸ் இயேசுவாக நடித்தார்.

பட மூலாதாரம், Disclosure

மேற்கத்திய திருச்சபை விதிமுறைகளை உருவாக்காததால், பல நூற்றாண்டுகளாக கலைஞர்கள் இயேசுவை தங்கள் சொந்த வழியில் உருவாக்கினர்.

“சீனாவின் முன்னாள் போர்த்துகீசிய காலனியான மக்காவ்வில் உள்ள இயேசுவின் உருவப்படங்கள், அவரை சீன பாணியிலான உடையுடன் காட்டுகின்றன. எத்தியோப்பியாவில், கருமையான நிறம் கொண்ட இயேசுவின் படங்கள் உள்ளன” என்று பேராசிரியர் செவிடரேஸ் கூறுகிறார்.

கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் மக்களுக்கு, இயேசுவின் புற அம்சங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்று “Catechism and Catequese” என்ற புத்தகத்தின் ஆசிரியரும், இறையியலாளருமான பிரான்சிஸ்கோ கேட்டாவோ கூறுகிறார்.

“இயேசுவின் உடல் தோற்றத்தைப் பற்றி நான் ஒருபோதும் நேரடியாகக் கவலைப்பட்டதில்லை. உண்மையில், அவர் எப்படி இருந்தார் என்பதைவிட, அவரது பார்வையிலும் சைகைகளிலும் வெளிப்பட்ட கடவுளின் கருணைதான் முக்கியம்,” என்று அவர் கூறுகிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU