SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், AFP via Getty Images
புதுப்பிக்கப்பட்டது 16 மார்ச் 2026, 06:46 GMT
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரானுடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகள் இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து வர உதவியுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான கடல் வழித்தடத்தைத் திறக்க போர்க்கப்பல்களை அனுப்புமாறு பல நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ள நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில், இந்தியா மற்றும் இரான் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக சனிக்கிழமை இந்தியக் கொடி ஏற்றப்பட்ட இரண்டு எரிவாயு டேங்கர் கப்பல்கள் கடந்து வர முடிந்ததாக ஜெய்சங்கர் கூறினார்.
அவர் கூறுகையில், “நான் தற்போது அவர்களுடன் (இரான்) பேசி வருகிறேன், இந்த உரையாடல் சில முடிவுகளைத் தந்துள்ளதைக் காண முடிகிறது,” என்றார்.
இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் செல்வதற்கு ‘சாதாரண’ அல்லது ‘நிரந்தர ஒப்பந்தம்’ எதுவுமில்லை என்றும், இதற்கு ‘இரான் எதையும் பிரதிபலனாகப் பெறவில்லை’ என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
திரவ இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றிச் சென்ற இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகக் கடந்த செய்தி சனிக்கிழமை வெளியானபோது, இரானிய எண்ணெயை ஏற்றிச் செல்லும் மேலும் பல டேங்கர் கப்பல்கள் கடந்து செல்வதாக இரானிய அதிகாரிகள் அறிவித்தனர்.
பிபிசி பெர்சியன் செய்தியின்படி, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) கடற்படைத் தளபதி அலிரேசா தாங்சிரி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் “நீருக்கடியிலான போரில் இரானிய கடற்படையின் மன உறுதியும் நடவடிக்கைகளும் பலன் அளித்துள்ளன. எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இரானிய எண்ணெயை ஏற்றிச் சென்ற பல டேங்கர் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளை நீக்குவதற்கு இது ஒரு உண்மையான முன்மாதிரி.” என்று கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?
இந்தியா மற்றும் இரான் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள், சனிக்கிழமை இந்தியக் கொடி ஏந்திய இரண்டு எரிவாயு டேங்கர் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கடந்து வர அனுமதித்தன என்று எஸ். ஜெய்சங்கர் ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ இதழிடம் தெரிவித்தார்.
அவர் அந்தப் பேட்டியில், “நான் தற்போது அவர்களுடன் பேசி வருகிறேன். எனது பேச்சுவார்த்தை சில முடிவுகளைத் தந்துள்ளது. இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பலன் அளிக்கும் பட்சத்தில், இயல்பாகவே நான் இதைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்” என்று கூறினார்.
மேலும் அவர், “இந்தியாவின் பார்வையில், நாம் பேசுவதும், ஒருங்கிணைந்து செயல்படுவதும், ஒரு தீர்வைக் காண்பதுமே சிறந்தது. இது மற்ற நாடுகளுக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தால், அது உலகிற்கு நன்மையாக அமையும்” என்றார்.
‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ செய்திப்படி, எரிசக்தி விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சாத்தியமான ராஜதந்திர தீர்வு குறித்து பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இரானுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன.
பிரஸ்ஸல்ஸ் நகரில் திங்கள்கிழமை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, ஜெய்சங்கர் ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ இதழிடம் பேசினார்.

ஐரோப்பிய நாடுகள் இந்தியாவைப் போன்ற ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “ஒவ்வோர் உறவும் அதன் சொந்தத் தகுதியின் அடிப்படையில் அமைகிறது. எனவே, இதை மற்ற உறவுகளுடன் ஒப்பிடுவது எனக்கு கடினம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை ஐரோப்பிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன். அவர்களில் பலரும் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
மேலும் ஜெய்சங்கர் கூறுகையில், “இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களுக்கு இரானுடன் பொதுவான ஏற்பாடு எதுவும் இல்லை; ஒவ்வொரு கப்பலின் இயக்கமும் தனித்தனி நிகழ்வாகவே கையாளப்படுகிறது” என்றார்.
“இதற்குப் பிரதிபலனாக இரான் எதையும் பெறவில்லை, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளே இந்தப் பேச்சுவார்த்தைக்கு அடிப்படை” என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இது எந்தவொரு வர்த்தகப் பரிமாற்றமும் சார்ந்த விஷயம் அல்ல. இந்தியாவிற்கும் இரானுக்கும் இடையே உறவுகள் உள்ளன. இந்த மோதலை நாங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்றாகக் கருதுகிறோம்” என்றார்.
இது ஆரம்பக் கட்டமே என்றும், தற்போது பல இந்தியக் கப்பல்கள் அந்தப் பகுதியில் இருப்பதாகவும் அவர் கூறினார். எனவே, ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்தத் திசையில் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
பட மூலாதாரம், AFP via Getty Images
கடந்த வாரம், ஆகஸ்ட் 2022-க்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக விற்பனையானது.
இரானின் புதிய அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனேயி, கடந்த வாரம் தனது முதல் அறிக்கையில் ஹோர்முஸ் நீரிணையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார்.
முன்னதாக, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகவே சென்று வந்தது.
இந்தியா தனது திரவ இயற்கை எரிவாயு நுகர்வில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதில் சுமார் 90 சதவீதம் சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது. இந்த எரிபொருளின் பெரும்பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது.
ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 33 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் சமையலுக்காக சிலிண்டர்களில் கிடைக்கும் எல்பிஜி எரிவாயுவைச் சார்ந்துள்ளன.
இந்தியாவின் பல நகரங்களில் எல்பிஜி விற்பனை நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருவதால், சில உணவகங்கள் தற்காலிகமாக மூடவும் முடிவு செய்துள்ளன.
இந்த மோதல் நீடித்தால், விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தொழில்துறை நிபுணர்கள் நம்புகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



