SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Elke Scholiers/Getty
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடைபெற்று வரும் போரின் போது ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் பட்சத்தில், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா தனது 40 சதவீத எண்ணெய் விநியோகத்தைப் பெறுகிறது.
ஒரு கட்டத்தில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. ஆனால் ஜனவரியில் இறக்குமதி குறைந்து நாளொன்றுக்கு 11.6 லட்சம் பேரலாக இருந்தது. இது நவம்பரில் 18 லட்சம் பேரலாக இருந்தது.
இந்தியா தனது ஏற்றுமதி மீதான 25 சதவீத அமெரிக்க வரி மீண்டும் விதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், அமெரிக்காவிடம் ‘ஒப்பந்தத்தின் கீழ் அளித்த வாக்குறுதியை’ நிறைவேற்றவும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவில்லை என்றால், வரி 18 சதவீதத்திலிருந்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். யுக்ரேனுக்கு எதிராகப் போர் புரிந்து வரும் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிப்பதே அவரது நோக்கமாகும்.
இருப்பினும், நாட்டின் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி தேவைகள் மற்றும் பாதுகாப்பு தனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்று இந்தியா கூறியிருந்தது.
இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் பற்றாக்குறை இந்தியாவை நெருக்கடியில் தள்ளக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எரிசக்தி துறையில் மத்திய கிழக்கில் தொடரும் போரின் பாதிப்பைத் தாங்கும் இந்தியாவின் திறன், இந்தப் போர் எத்தனை நாட்கள் நீடிக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும்.
அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் தலைவர் சஞ்சய் ஜோஷி பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், “விநியோகம் தொடரும் வரை எல்லாம் சரி. ஆனால் மாற்று ஆதாரங்களையும் நாம் பார்க்க வேண்டும். அடுத்த சில வாரங்களில் என்ன நடக்கும் என்று நமக்கு உண்மையில் தெரியாது, ஏனெனில் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது” என்றார்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வணிகம் செய்யும் முறை மாறிவிடுகிறது. ஏனெனில் இந்தியாவிடம் சுத்திகரிப்புத் திறன் மிக அதிகமாக உள்ளது.
“இதன் பொருள் நமக்கு கச்சா எண்ணெய் எவ்வளவு தேவையோ, அதே அளவு மற்ற நாடுகளுக்கும், அதாவது ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் பெட்ரோலியப் பொருட்கள் தேவைப்படுகின்றன. யுக்ரேன் போரின் உச்சக்கட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களையே பயன்படுத்திக் கொண்டிருந்தன” என்றார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடர்வதற்கு எதிர்ப்பு கிளம்பினால் என்ன நடக்கும்?
ஜோஷி கூறுகையில், “எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் விரும்பினால் தங்கள் சொந்தக் காலிலேயே சுட்டுக் கொள்ளலாம் (தங்களுக்குத் தாங்களே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்)” என்றார்.
“எரிசக்தி விநியோகத்தில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டால், இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருப்பதாக” ரஷ்யா உடனடியாக முன்வந்துள்ளது.
இந்தியா நெருக்கடியில் ஏன் சிக்கக்கூடும்?
தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க போதுமான அளவுக்கு எண்ணெய் இருப்பு இருப்பதாக இந்திய அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.
நிபுணர்களின் கருத்தும் அரசாங்கத்தின் அறிக்கையுடன் ஒத்துப்போகிறது, இருப்பினும் அவர்கள் அதைச் சற்று வித்தியாசமான முறையில் முன்வைக்கிறார்கள். பொதுவாகத் தற்போதைய போர் ரஷ்யா-யுக்ரேன் போரைப் போல நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிலெக்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் சப்ளைஸ் நிறுவன இயக்குநர் அர்ஜுன் கெம்பானி பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், “இந்தியா ஓரளவிற்கு நெருக்கடியில் உள்ளது. ஆனால் போர் அடுத்த 15 நாட்களில் முடிவுக்கு வந்தால் நாம் இயல்பான நிலையில் இருப்போம். இதற்கு மேல் போர் நீடித்தால் நாம் நெருக்கடியில் சிக்கக்கூடும் மற்றும் அதன் தாக்கம் மற்ற பொருட்களின் விலைகளில் எதிரொலிக்கலாம்” என்றார்.
பிசினஸ் அட்வைசரி நிறுவனமான டிரான்சாக்ஷன் ஸ்கொயர் நிறுவனர் கிரீஷ் வான்வாரி கூறுகையில், போர் 15 நாட்களுக்கு மேல் நீடித்தால் விலைவாசி உயரக்கூடும் என்றார். அவர் கூறுகையில், “அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்கள் முக்கியமானவை. போர் இன்னும் தீவிரமானால் இந்தியாவுக்கு அது பிரச்னையாக மாறும்” என்றார்.
பட மூலாதாரம், Dhiraj Singh/Bloomberg via Getty
74 நாட்களுக்குப் போதுமான இருப்பு: இந்திய அரசு
ஜனவரியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில் கூறுகையில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்பு வசதிகளில் வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய், உள்நாட்டுத் தேவையை 74 நாட்களுக்குப் பூர்த்தி செய்யப் போதுமானது என்றார்.
கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்கள் வரை போதுமானது, அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களின் இருப்பு அடுத்த 25 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய போதுமானது என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. இது குறுகிய கால விநியோக அதிர்ச்சிகளைச் சமாளிக்க வைக்கப்பட்டுள்ள உத்தி ரீதியான இருப்பிலிருந்து வேறுபட்டது.
இரான் டிரோன் தாக்குதலுக்குப் பிந்தைய எதிர்பாராத சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தி வைக்கப் போவதாக சர்வதேச சந்தையில் அதன் மிகப்பெரிய விநியோகஸ்தரான கத்தார் கூறியுள்ளது.
இந்தியா தனது சுமார் 2.7 கோடி டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியில் 40 சதவீதத்தை கத்தாரிலிருந்து வாங்குகிறது. எரிவாயு இறக்குமதி செய்யும் நிறுவனமான பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட் சப்ளையில் உள்ள இடையூறுகள் குறித்து தனது வாடிக்கையாளர்களான கெயில் இந்தியா மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில், “இந்தியா உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் மூன்றாவது மிகப்பெரிய இறக்குமதியாளர், நான்காவது மிகப்பெரிய சுத்திகரிப்பாளர் மற்றும் ஐந்தாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளர் ஆகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள குறுகிய கால இடையூறுகளைச் சமாளிக்க நாட்டிடம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் ஏவியேஷன் டர்பைன் ஃபியூயல் உள்ளிட்ட முக்கிய பெட்ரோலியப் பொருட்கள் போதுமான இருப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
“கடந்த சில ஆண்டுகளில் இந்தியா எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தி தனது மக்களுக்குக் குறைந்த விலையில் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இந்திய எரிசக்தி நிறுவனங்களுக்கு இப்போது ஹோர்முஸ் நீரிணை வழியாக அல்லாமல் வேறு வழிகளிலும் எரிசக்தி விநியோகத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய விநியோக தொடர்ந்து கிடைக்கும் மற்றும் ஹோர்முஸ் பாதை வழியாகத் தற்காலிகமாக எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள இடைவெளியை சமாளிக்க உதவும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?
பட மூலாதாரம், Abeer Khan/Bloomberg via Getty
தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் (National Institute of Advanced Studies) எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பேராசிரியரான ஆர். ஸ்ரீகாந்த், எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெய் கிடைத்த காலத்தில் கூடுதல் லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தது என்பதால் எண்ணெய் விலை உயரும் என்று எதிர்பார்க்கவில்லை.
அவர் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், “எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் நல்ல லாபம் ஈட்டியுள்ளன, இப்போது அது அவர்களின் லாப வரம்பில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. அரசியல் ரீதியாகவும் அரசாங்கம் விலையை உயர்த்த அவர்களை அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.
பேராசிரியர் ஸ்ரீகாந்த் கூறுகையில், “நாம் இரண்டு-மூன்று வாரங்கள் வரை நிலைமையைச் சமாளிக்க முடியும். ஆனால் எண்ணெயைப் பொறுத்தவரை இந்தியாவிற்கு முன்பே பல நாடுகள் கவலை தெரிவிக்கத் தொடங்கும். அடிப்படையில் இந்தப் போர் பல நாடுகளைப் பாதிக்கும். எந்தச் சூழ்நிலையிலும் எண்ணெய் முற்றுகை ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்க முடியாது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



