Home தேசிய national tamil “இந்திய அணியின் தோல்விக்கு காரணம்..” – அக்சர் படேலை சுற்றி நடக்கும் விவாதம் என்ன?

“இந்திய அணியின் தோல்விக்கு காரணம்..” – அக்சர் படேலை சுற்றி நடக்கும் விவாதம் என்ன?

3
0

SOURCE :- BBC NEWS

அக்சர் படேல்

பட மூலாதாரம், Getty Images

ஆமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெறும் மோசமான ஆட்டத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக அதன் திட்டமிடலும் உத்தியும் மிகவும் குறுகிய நோக்கம் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் 11 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்திய அணி நிர்வாகத்தின் இந்தச் சிந்தனை ஒரு தவறான தேர்வு, முக்கியமான கட்டத்தில் அணியின் தெளிவு மற்றும் விளையாட்டைப் பற்றிய புரிதலை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டியது.

தனது சொந்த மைதானத்தில் துணை கேப்டன் அக்சர் படேலை பெஞ்சில் அமர வைக்கும் முடிவு என்பது ஒருமுறை நடந்த தவறு மட்டுமல்ல. இது பெரும்பாலும் மைதானத்தில் வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு பின்னால் மறைந்து விடும் சிக்கலான சிந்தனையின் பிரதிபலிப்பாகும்.

ஒரு குறிப்பிட்ட வகையான போட்டிக்குத் தயாரான அணியால், சூழ்நிலைகள் மாறும்போது அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்பதும் இதனால் வெளிப்பட்டது. மோதேராவில் இதுதான் நடந்தது, இதைத் தென்னாப்பிரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இறுதியில் இந்தியாவின் தவறான ஷாட் தேர்வுகள் முழுமையான வீழ்ச்சியின் அடையாளமாக மாறியது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா கடினமான சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்தது. அவர்களின் வழக்கமான சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றினார். அவர் தேர்வு செய்யப்பட்டபோது தம்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை காப்பாற்றிக்கொண்டதுடன், படேல் எப்படிச் செய்வாரோ அதேபோல சிறப்பாகச் செயல்படவும் செய்தார்.

தனது சொந்த மைதானத்திலேயே அணியில் இல்லை

அக்சர் படேல்

பட மூலாதாரம், ANI

யோசித்துப் பாருங்கள், மோதேரா அக்சரின் சொந்த மைதானம். இங்குள்ள பிட்ச்சின் வேகம், அதன் பிடிப்பு மற்றும் கோணங்களை அவர் நன்கு அறிவார். இரவில் மின்விளக்குகளுக்குக் கீழ் பிட்ச்சின் தன்மை எப்படி மாறுகிறது, எப்போது மெதுவாகிறது, எப்போது கட்டுப்பாட்டுடன் பந்து வீச வேண்டும், குறிப்பாக மிடில் ஓவர்களில் அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியம் இவை அனைத்தும் அவருக்குத் தெரியும். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரது வாழ்க்கைப் பயணம் இந்த புரிதலின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இந்தியாவிற்குப் பந்துவீச்சில் கட்டுப்பாடும், நடு வரிசையில் நிலைத்தன்மையும் தேவைப்பட்டபோது, அதே வீரர் வெளியேற்றப்பட்டார்.

உதவி பயிற்சியாளர் ரயான் டென் டூஷேட், வாஷிங்டன் சுந்தரைத் தேர்ந்தெடுக்கும் திட்டம் பின்னடைவாக மாறிவிட்டதை ஒப்புக்கொண்டார்.

போட்டிக்கு முன்னதாக – தென்னாப்பிரிக்காவின் இடது கை பேட்டர்கள், பவர் பிளேயில் ஆஃப்-ஸ்பின் போடுவதற்கான வாய்ப்பு மற்றும் ‘மேட்ச்-அப்’ கணிதம் போன்ற கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

ஆனால் போட்டி அந்தத் திட்டத்தின்படி நடக்கவில்லை. சுந்தருக்கு பவர் பிளேயில் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை, பின்னர் மிடில் ஓவர்களின் அழுத்தத்தில் அவர் சிக்கிக் கொண்டார், அங்கு மில்லர் தலைமையிலான தென்னாப்பிரிக்க பேட்டர்கள் அதிரடியாக விளையாடினர்.

“இன்றைய உத்தியின் ஒரு பெரிய பகுதி அவர் பவர் பிளேயில் சிறப்பாகப் பந்து வீச வேண்டும் என்பதுதான். அங்கு அவர் இரண்டு ஓவர்கள் போடுவார் என்று நாங்கள் நினைத்தோம்,” என்று டென் டூஷேட் கூறினார்.

ஆனால் டி-20 கிரிக்கெட் எந்தவொரு திட்டமிட்ட திரைக்கதையின்படி நடப்பதில்லை. தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் ஐந்து ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 30 ரன்களாக இருந்தது. எந்த பவர் பிளே கட்டத்தைக் கருத்தில் கொண்டு இந்தியா வீரர்களைத் தேர்வு செய்ததோ, அது எதிர்பார்த்தபடி அமையவில்லை.

சுந்தருக்குப் பதில் அக்சர் எவ்வாறு சிக்கனமாக இருந்திருப்பார்?

அக்சர் படேல்

பட மூலாதாரம், ANI

இனிவரும் காலங்களில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கான முதல் விதி ‘நடைமுறைச் சிந்தனை’ என்பதாக இருக்க வேண்டும். ஏனெனில் தேர்வு என்பது அனுமானங்களின் அடிப்படையில் அல்லாமல், சூழ்நிலைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

அக்சரின் சிறப்பு மிடில் ஓவர்களில் கட்டுப்பாட்டை உருவாக்குவதாகும். அவர் பந்து வீசும் நீளம் மற்றும் வேகத்தில் மாற்றங்களைச் செய்து பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்துகிறார்.

அவர் முன்னதாகவே அளித்த பேட்டி ஒன்றில், “எப்போது பந்தின் நீளத்தைப் பின்னுக்கு இழுக்க வேண்டும், எப்போது ஃபுல் லென்த்தில் போட வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.” எனக் கூறியிருந்தார்.

அக்சரை வெளியேற்றும் முடிவைக் “கடுமையானது” என்று டாஸ் போடும் போது கேப்டன் சூர்யகுமார் கூறினார். இது “புத்திசாலித்தனமின்மை” என்பதன் மற்றொரு வடிவமாகும்.

அதன் பிறகு நடந்தது அந்த முடிவின் விளைவுதான். டென் டூஷேட் முதல் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் வரை எவரிடமும் இதைச் சரி என நியாயப்படுத்த வலுவான வார்த்தைகள் இல்லை.

“சூர்யாவும் கௌதமும் இதைப் பற்றிப் பேசினார்கள். இந்தப் போட்டிக்கு ஆஃப்-ஸ்பின்னர் அவசியம் என்று நாங்கள் கருதினோம்,” என்று கோடக் கூறினார். ஆனால் திட்டம் விரைவில் சிதைந்துவிட்டது.

சுந்தருக்குப் பவர் பிளேயில் பந்துவீச்சு கிடைக்கவில்லை மற்றும் மிடில் ஓவர்களில் அவரது தாக்கம் குறைவாகவே இருந்தது, அங்கு அக்சர் பொதுவாகச் சிறந்த தேர்வாக இருந்திருப்பார்.

அக்சர் என்ன செய்திருக்க முடியும்?

அக்சர் படேல்

பட மூலாதாரம், ANI

தென்னாப்பிரிக்கா மில்லர் மற்றும் பிரேவிஸ் மூலம் இன்னிங்ஸைச் சீரமைத்தபோது, வேகத்தை மாற்றி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பந்துவீச்சாளர் இந்தியாவிற்குத் தேவைப்பட்டார். அக்சர் இந்தப் பொறுப்பைப் பலமுறை நிறைவேற்றியுள்ளார்.

அதைவிட முக்கியமானது என்னவென்றால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய பேட்டிங் ஏற்கனவே பலவீனமாகத் தெரிந்தது. அத்தகைய சூழ்நிலையில் 6 அல்லது 7-வது இடத்தில் ஒரு நிலைத்தன்மை தேவைப்பட்டது. அக்சர் இந்தப் பொறுப்பை சிறப்பாக செய்து வந்துள்ளார்.

அதற்குப் பதிலாக இந்தியாவின் மிடில் ஆர்டர் நிலையின்றித் தெரிந்தது.

சேஸிங்கில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, அக்சர் இல்லாதது வெறும் உத்தி சார்ந்த குறைபாடாக இல்லாமல், அது அணியின் கட்டமைப்பிலேயே இருந்த ஒரு குறையாக மாறியது.

டென் டூஷேட் இதை நேரடியாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், “நாங்கள் பெரிய அளவில் குழப்பமடைந்தோம்” என்று கூறினார். இந்தியா ஒரு குறிப்பிட்ட வகையான போட்டிக்குத் திட்டமிட்டது என்றும், நிலைமை மாறும்போது அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

“எல்லாம் திட்டத்தின்படி நடந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை,” என்று கோடக்க்கும் கூறினார்.

இப்போது இந்த முடிவை எடுத்த தலைமைப் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகிய இருவரிடமும்தான் கேள்வி உள்ளது.

எல்லாம் சரியாக இருக்கும்போது மட்டும் செயல்படும் திட்டங்களால் தொடர்களை வெல்ல முடியாது. கடினமான சூழ்நிலைகளிலும் தாக்குப்பிடித்து நிற்கும் அணிகளுக்கே வெற்றி கிடைக்கும்.

அக்சர் வெறும் ஒரு சுழற்பந்து வீச்சு தேர்வு மட்டும் அல்ல. அவர் அணியின் சமநிலையின் முக்கியப் பகுதி. “அணியில் எனக்கு வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன, இது எனது பணியின் அவசியத்தைக் காட்டுகிறது,” என்று அவர் முன்னரே கூறியிருந்தார்.

அக்சரை வெளியேற்றியதன் மூலம் இந்தியா தனது பிளேயிங்-11 இன் மூன்று அடுக்குகளைச் சமரசம் செய்து கொண்டது. அதில் மிடில் ஓவர்களில் பந்துவீச்சு கட்டுப்பாடு, கீழ்-நடுத்தர வரிசையில் நிலைத்து விளையாடும் பேட்டிங் மற்றும் இடது-வலது கை பேட்டிங் கூட்டணியின் நெகிழ்வுத்தன்மை ஆகியவை அடங்கும்.

வெறும் 30 பந்துகளில் அர்த்தமற்றதாகிப்போன ஒரு ‘பவர் பிளே திட்டத்திற்காக’ இவை அனைத்தும் நடந்தன. இது வெறும் தேர்வுத் தவறு மட்டுமல்ல, இது சிந்தனையில் ஏற்பட்ட தவறு.

அக்சர் படேல் விவகாரத்தில் எழுப்பப்படும் இந்தச் சிக்கலை விடவும் கவலைக்குரிய விஷயம் இந்திய அணியின் தொடர்ச்சியான தவறான உத்திகள்.

போட்டி தொடங்குவதற்கு முன்பே விளையாட்டின் போக்கை கற்பனையாக எழுதிவிடும் சிந்தனை, சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படுவதற்குப் பதிலாக, வெறும் கணிப்புகளின் அடிப்படையில் பிளேயிங்-11 ஐ உருவாக்குவதை விட, மாறும் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் கட்டமைப்பின் அவசியத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி இந்தக் கசப்பான உண்மையை வெளிப்படுத்தியுள்ளதுடன், இந்தியாவை ‘வாழ்வா-சாவா’ என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.

மறுபுறம் தென்னாப்பிரிக்கா கேசவ் மகாராஜின் சுழற்பந்து வீச்சுடன் ஆட்டத்தைத் தொடங்கியது. இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேன்களைக் கொண்ட டாப் ஆர்டர் சீக்கிரமே சரிந்தது. மிடில் ஓவர்களில் கட்டுப்பாடு தேவைப்பட்டது. இலக்கைத் துரத்தப் பொறுமை தேவைப்பட்டது. ஆனால் இந்தியாவின் புகழ்பெற்ற பேட்டிங் வரிசையால் எதையும் செய்ய முடியவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த எல்லாத் தருணங்களிலும் அக்சர் படேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகவும் பொருத்தமானவராக இருந்திருப்பார். 150 மற்றும் 187 ரன்களுக்கு இடையிலான அந்த இடைவெளியை நிரப்பும் வீரராக அவர் இருந்திருப்பார்.

இவை அனைத்தும் அக்சரின் சொந்த மைதானமான ஆமதாபாத்தில் நடந்தது என்பது இன்னும் பெரிய துரதிர்ஷ்டமாகும்.

மோதேராவின் சிறப்புகளைச் சில வீரர்களே சிறப்பாகப் புரிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் பிட்ச்சின் தன்மை சற்றே மாறக்கூடிய இத்தகைய விக்கெட்டுகளில் பயனுள்ளதாக இருக்கக்கூடிய, இவ்வளவு நம்பகமான ஆல்ரவுண்டர்கள் இந்தியாவிலும் மிகக் குறைவு.

ஆனால் அந்த அறிவின் தேவை இந்தியாவிற்கு மிக அதிகமாக இருந்த இரவில், இந்திய டிரஸ்ஸிங் ரூமில் இருந்த உத்தியாளர்களும் முடிவெடுப்பவர்களும் அனுபவத்திற்குப் பதிலாகக் கோட்பாட்டையும், இருப்புக்கு பதிலாகக் கணிப்பையும் தேர்ந்தெடுத்தனர்.

இந்தச் சிந்தனையும் முடிவும் எதை வெளிப்படுத்துகின்றன?

அக்சர் படேல்

பட மூலாதாரம், Getty Images

இந்தத் தோல்வி சரித்திரத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வீழ்ச்சியாகப் பதியப்படும். ஆனால் அந்தத் தோல்வி எவ்வாறு உருவானது என்பதுதான் உண்மையான கதை.

  • போட்டியின் தொடக்கத்தில் 20/3 என ஆட்டத்தைத் தனது பிடியில் வைத்திருந்த ஒரு அணி, பிறகு கட்டுப்பாட்டை இழந்தது.
  • 187 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பேட்டிங் வரிசை 111 ரன்களுக்குச் சுருண்டது.
  • இந்த இரண்டு தோல்விகளின் மையத்திலும் விடுபட்ட ஒரு இணைப்பாக இருந்தவர், ஒரு இன்னிங்ஸில் கட்டுப்பாட்டையும் மற்றொரு இன்னிங்ஸில் நிலைத்தன்மையையும் வழங்கக்கூடிய வீரரான அக்சர் படேல்.

இறுதியாக, இது ஒரு வீரரை அணியிலிருந்து நீக்கியது தொடர்பான விஷயம் மட்டுமல்ல.

இது தனது அடையாளத்தில் குழப்பம் அடைந்துள்ள ஒரு அணி நிர்வாகம் தொடர்பான விஷயம். அது ‘மேட்ச்-அப் (கற்பனைத் திட்டம்) அடிப்படையிலான டி-20 அணியா’ அல்லது ‘சூழ்நிலையைப் படித்து விளையாடும் கிரிக்கெட் அணியா?’

இந்தக் கேள்விக்கு தீர்வு காணப்படும் வரை, இதுபோன்ற முடிவுகள் அணியைத் தொடர்ந்து பாதிக்கும்.

ஏனெனில் மோதேராவின் அந்த வேதனைமிக்க இரவு, அணியின் சமநிலை தவறினால் ஏற்படும் இழப்பு சிறியதல்ல, அது இந்திய அணியின் வெற்றிக்கே பெரும் தடையாக இருக்கும் என்பதைக் காட்டியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU