Home தேசிய national tamil இந்தியா – வங்கதேசம் உறவை மேம்படுத்த ‘டீசல் ராஜதந்திரம்’ உதவுமா?

இந்தியா – வங்கதேசம் உறவை மேம்படுத்த ‘டீசல் ராஜதந்திரம்’ உதவுமா?

15
0

SOURCE :- BBC NEWS

இந்தியா - வங்கதேசம், டீசல் ராஜதந்திரம்

பட மூலாதாரம், Getty Images

9 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரினால், உலகிலுள்ள பல நாடுகளைப் போலவே வங்கதேசமும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

வங்கதேசம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. தங்களுக்குத் தேவையான அளவு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இச்சூழலுக்கு இடையில், இந்தியாவிலிருந்து 5000 மெட்ரிக் டன் டீசல் வங்கதேசத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாடம் மேலும் 50,000 மெட்ரிக் டன் டீசலை தந்து உதவுமாறு வங்கதேசம் கேட்டுள்ளது, ஆனால் இந்தியா இன்னும் இதற்குப் பதிலளிக்கவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது மோதி அரசு அதனை வரவேற்றிருந்தாலும், வங்கதேசத்தின் பி.என்.பி கட்சியுடன் (பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி) இந்தியாவின் உறவு வழக்கமாகவே சுமூகமாக இருந்ததில்லை.

வங்கதேசம் சீனாவிடமும் உதவி கோரியுள்ள நிலையில், இந்த நெருக்கடியான நேரத்தில் எண்ணெய், குறிப்பாக டீசல் விநியோகிப்பதன் மூலம் இந்தியா வங்கதேசத்திற்கு உதவ வேண்டும் என்று சில பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளும் எந்தவொரு வாய்ப்பையும் சீனா தவறவிடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

‘இந்தியா – சீனா இரு நாடுகளிடமும் உதவி கேட்கப்பட்டுள்ளது’

இந்தியா - வங்கதேசம், டீசல் ராஜதந்திரம்

நெருக்கடியைச் சமாளிக்க கூடுதலாக 50,000 மெட்ரிக் டன் டீசல் வழங்கக் கோரி வங்கதேசம் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளது.

வங்கதேசத்துக்கான இந்தியத் தூதர் பிரணாய் குமார் வர்மா, வங்கதேசத்தின் மின்சாரம், எரிசக்தி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் இக்பால் ஹசன் மஹ்மூத் துகுவை மார்ச் 11-ஆம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பேசிய துகு, “எங்களது கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுப்பதாக அவர்கள் கூறினர். தற்போது அவர்களே சிக்கலில் உள்ளனர்,” என்று தெரிவித்தார்.

வங்கதேச பெட்ரோலியக் கழகத்தின் தகவல்படி, அந்த அமைப்புக்கும் இந்திய அரசுக்குச் சொந்தமான நுமலிகார் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் இடையே ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்தின் கீழ், 5,000 டன் டீசல் புதன்கிழமை வங்கதேசத்தைச் சென்றடைந்தது.

அதேவேளையில், நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் எரிசக்தி விநியோகத்தைப் பெறுவதற்கு சீனாவின் உதவியையும் வங்கதேசம் நாடியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் டாக்காவுக்கான சீன தூதர் யாவ் வென்னுடன் சமீபத்தில் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி இறக்குமதிக்காக மாற்று ஆதாரங்களைக் கொண்டுள்ள நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக துகு கூறுகிறார்.

“போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை”

வங்கதேசத்தைத் தவிர, இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் மாலத்தீவுகளும் கூடுதல் எண்ணெய் விநியோகம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. தனது சொந்தத் தேவைகள் மற்றும் கையிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கியமான அண்டை நாடான வங்கதேசத்தில், இந்தியாவை விரும்பாத ஒரு கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு, இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ‘டீசல் இராஜதந்திரத்தின்’ கீழ் வங்கதேசத்திற்குச் சில கூடுதல் உதவிகளைச் செய்து அவர்களுடனான உறவை மேம்படுத்த வேண்டும் என்றும் அரசியல் வட்டாரங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்துக் கேட்டபோது, முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் சஷாங்க் பிபிசி செய்தியாளர் சந்தன் குமார் ஜஜ்வாரேவிடம் கூறுகையில், “இந்தியா எப்போதும் ‘அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையைக் கொண்டுள்ளது, நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்து வருகிறோம்… அதற்கு ‘தடுப்பூசி மைத்ரி’ ஒரு உதாரணம். ஆனால் இப்போது அதற்குரிய நேரமல்ல” என்றார்.

“தற்போது இந்தப் போரின் முடிவு என்னவாகும், இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நமக்கே தெரியாது… நமக்கும் எரிவாயு தட்டுப்பாடு உள்ளது, நகரங்களில் நீண்ட வரிசைகள் உள்ளன மற்றும் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

சஷாங்க் மேலும் கூறுகையில், “இந்த முடிவு பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் என்று நான் நினைக்கிறேன். நாம் ஒன்றை அவர்களுக்குக் கொடுப்பதும், வேறொருவர் மற்றொன்றைக் கொடுப்பதும்… நாளை ஒருவரால் கொடுக்க முடியாமல் போனால் நாம் அவருக்கு எதிராகத் திரும்புவதும் சரியாக இருக்காது. அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை என்பது ஏற்கனவே நமது கொள்கையாக உள்ளது. ஆனால் எந்தவொரு முடிவும் நாட்டின் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படும்” என்றார்.

இந்தியா - வங்கதேசம், டீசல் ராஜதந்திரம்

‘டீசல் இராஜதந்திரம் மட்டும் போதாது’

கௌடில்யா பொதுக் கொள்கைப் பள்ளியின் சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கனிகா ரக்ரா கூறுகையில், “ஷேக் ஹசீனா அரசாங்கம் பதவியில் இருந்து அகற்றப்பட்டதிலிருந்தும், ஹசீனாவிற்கு இந்தியாவில் தஞ்சம் அளிக்கப்பட்டதிலிருந்தும் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் அதிகமாக உள்ளன. அவற்றை அமைதிப்படுத்த ‘டீசல் இராஜதந்திரம்’ ஒரு வழியாக இருக்கலாம்.

ஆனால் அதே சமயம், இந்தியா ‘அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையைக் கொண்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா ஏற்கனவே வங்கதேசத்திற்கு டீசல் (5000 டன்) வழங்கியுள்ளது, எதிர்காலத்திலும் வழங்கக்கூடும், ஆனால் இது மட்டுமே ஒரே உத்தியாக இருக்க முடியாது” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “பாருங்கள், மார்ச் மாதத்திலேயே வங்கதேச ராணுவப் புலனாய்வுப் பிரிவின் வருகை இருந்தது. இந்தியா மற்றும் வங்கதேசத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் சந்தித்துப் பேசினர். அதிகாரப்பூர்வமற்ற மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது தான் இதன் பொருள். இத்தகைய சூழ்நிலையில், இந்தியா எண்ணெய் நெருக்கடியில் உதவும் என்றும் அதன் மூலம் இந்தியா-வங்கதேச உறவுகள் மேம்படும் என்றும் நம்புவது அப்பாவித்தனமாக இருக்கும். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம், அதே நேரத்தில் எங்களது பணிகளையும் நாங்கள் தொடர வேண்டும் என்று கூறுவது சிறப்பாக இருக்கும். அது ஏற்கனவே நடந்து கொண்டுதான் இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

சீனாவின் உதவி கிடைத்தால் வங்கதேசம் சீனாவிற்கு ஆதரவாகச் சாய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு முனைவர் கனிகா பதில் கூறுகையில், “வங்கதேசம் ஒரு இறையாண்மை கொண்ட நாடு, அது தனது சொந்தத் தேவைகளையும் நன்மைகளையும் கவனித்துக் கொள்ளும். அவர்கள் சீனாவிடமும் உதவி கேட்டுள்ளனர், சீனாவும் உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. எனவே, சூழ்நிலை எவ்வாறு உருப்பெறுகிறது என்பதை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சீனா எவ்வளவு டீசல் அனுப்புகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “‘டீசல் இராஜதந்திரம்’ போன்ற கருத்துகள் செய்திகளில் பார்க்க நன்றாக இருக்கும், ஆனால் ராஜ்ஜீயத்தில் பல கூறுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனவே வெறும் டீசல் இராஜதந்திரத்தை மட்டும் உத்தியாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் நமது உறவு மேம்படும் என்று நான் நம்பவில்லை. நாம் உதவ வேண்டும், ஆனால் அதனுடன் சேர்த்து பிற விஷயங்களும் செய்ய வேண்டும். வெறும் உதவி செய்வது மட்டுமே உறவுகளை மேம்படுத்தாது” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU