Home தேசிய national tamil இந்தியா பாகிஸ்தான் பதற்றம் – அண்டை நாடுகள் யார் பக்கம்?

இந்தியா பாகிஸ்தான் பதற்றம் – அண்டை நாடுகள் யார் பக்கம்?

2
0

SOURCE :- BBC NEWS

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் முழு பிராந்தியத்திற்கும் மிக முக்கியமான நிகழ்வாகும்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.

வியாழக்கிழமை இரவு, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அவை முறியடிக்கப்பட்டதகவும் இந்தியா கூறியது.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மறுத்துள்ளார்.

“நம்பகமான தகவலின்படி, லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது .

25 இந்திய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தக் கூற்றுக்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தப் பதற்றம் குறித்து இந்தியா – பாகிஸ்தானின் அண்டை நாடுகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அண்டை நாடுகளில் சமூக-பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்கள் அதிகம் உள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

“இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அண்டை நாடுகளில் சமூக-பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நீண்ட காலமாகத் தொடர்ந்தால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மிகப் பெரியது” என்று மிடில் ஈஸ்ட் இன்சைட்ஸ் பிளாட்பார்மின் நிறுவனர் முனைவர் சுபாதா செளத்ரி கூறுகிறார்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு இந்த அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் போராடி வருவதாகவும், அத்தகைய நாடுகளுக்கு பொருளாதார நலன்கள் மிகவும் முக்கியமானவை என்றும் சுபாதா செளத்ரிகூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அண்டை நாடுகள் இந்த பதற்றத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாக அவர் நினைகிறார்.

சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட அண்டை நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட அண்டை நாடுகள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மியான்மர் மற்றும் பூட்டான் போன்ற அண்டை நாடுகளுக்கு பல வழிகளில் மிகவும் முக்கியமானது.

“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நீண்ட காலம் தொடர்ந்தால், அது பல்வேறு அண்டை நாடுகளுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். நேபாளத்தில் இருந்து தொடங்கினால், நேபாளத்தின் வர்த்தகத்தில் 60 சதவீதம் இந்தியாவுடன் நடைபெறுகிறது. அது பாதிக்கப்படலாம். துறைமுகங்கள் மற்றும் வர்த்தக பாதைகளின் அடிப்படையில் நேபாளம் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட எல்லை உள்ளது. நேபாளம் இந்த பதற்றத்தைக் குறைக்க விரும்புகிறது, அதே நேரத்தில் சீனா இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி நேபாளத்துடனான தனது உறவை மேலும் மேம்படுத்தலாம்” என்று சுபாதா செளத்ரி கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இதேபோன்ற பொருளாதார நெருக்கடி பூட்டானிலும் ஏற்படக்கூடும், ஏனெனில் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அங்குள்ள சுற்றுலா துறையும் பாதிக்கப்படும்.

தெற்காசிய புவிசார் அரசியல் நிபுணரும் தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான தனஞ்சய் திரிபாதி, ஆப்கானிஸ்தானைத் தவிர, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தில் அனைத்து நாடுகளும் நடுநிலை வகிக்கும் என்று நம்புகிறார்.

இந்த விஷயத்தில் மற்ற அனைத்து அண்டை நாடுகளும் அமைதியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார்

பட மூலாதாரம், X/Shehbaz Sharif

“இந்தியா, இந்தப் பிராந்தியத்தில் ஒரு பெரிய பொருளாதார சக்தியாக இருக்கிறது. சிறிய அண்டை நாடுகள் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியாவுடன் ஆழமாக தொடர்புடையவையாக உள்ளன. இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்குச் சுற்றுலா வருமானம் முக்கியம் என்பதால், இவ்வாறு நிலவும் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அவற்றின் விருப்பம்,” என்று அரசியல் ஆய்வாளர் தனஞ்சய் திரிபாதி கூறுகிறார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளது.மேலும் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு நிறைய உதவியுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோதியும் இலங்கைக்குப் பயணம் செய்தார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை விரைவில் தீர்க்க வேண்டும் என தனஞ்சய் திரிபாதி கூறுகிறார்

இதே கருத்தை ஒப்புக்கொள்ளும் வெளியுறவு நிபுணர் கமர் ஆகா, இந்தியா அண்டை நாடுகளுடன் வணிக உறவுகளைக் கொண்டுள்ளது என்கிறார்.

“மோதல் அதிகரித்தால் அது பொருளாதாரத்தைப் பாதிக்கும். போரின் போது பாதுகாப்புச் செலவு அதிகரிக்கிறது. அது வேலைவாய்ப்பு பாதிக்கும்” என்று கமர் அகா விளக்குகிறார்.

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக இருந்தபோதிலும், முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் பல விஷயங்களில் இந்தியாவுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

”சீனா பல நாடுகளில் முதலீடு செய்துள்ளது. ஆனால் அதன் முதலீட்டிலிருந்து சீனா அதிக நன்மைகளைப் பெறுகிறது என்று கருதப்படுகின்றது. எனவே மாலத்தீவுகள் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் மீண்டும் இந்தியாவுடன் நெருக்கமாகிவிட்டன.” என்கிறார் கமர் அகா

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தில், தற்போதைய நிலை குறித்து சீனா கவலை தெரிவித்திருந்தாலும், சீனாவின் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், சீனாவின் நிலைப்பாட்டை பலர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. மேலும் அதன் வணிக நலன்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

சீனா தற்போது அமெரிக்காவுடன் வரிப் போரில் சிக்கியுள்ள நிலையில், இது சீனாவின் சொந்தப் பொருளாதாரத்திற்கும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் ‘வருந்தத்தக்கவை’ என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் நிலையற்ற சூழலை ஏற்படுவதை சீனா ஒருபோதும் விரும்பாது என்றும், கோடிக்கணக்கான ரூபாயில் செய்யப்பட்டுள்ள அதன் முதலீடு வீணாகிவிடும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

2005 முதல் 2024 வரை சீனா பாகிஸ்தானில் சுமார் 68 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது .

இது தவிர, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) மற்றும் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் சீனா மிகப்பெரிய முதலீட்டைச் செய்து வருகிறது.

ஆப்கானிஸ்தானின் ஆதரவு யாருக்கு?

இந்த ஆண்டு ஜனவரியில், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் துபையில் சந்தித்தனர்

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அதனைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறைப்பதாகவும் கூறியது. இந்த பதற்றம் குறித்து கவலை தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தை மூலம் இந்த பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது.

“பாகிஸ்தானுடனான எல்லையை, அதாவது ‘துராந்த் கோட்டை’, இதுவரை எந்த ஆப்கானிஸ்தான் அரசும் அங்கீகரிக்கவில்லை. எனவே பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் எல்லைத் தகராறு உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் தீவிரமடைந்தால், ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் நிற்பதைக் காணலாம்” என்று கமர் அகா கூறுகிறார்.

“இந்த எல்லைப் பிரச்னை, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த காலக்கட்டத்திலே நிலவியது. அப்போது நடைபெற்ற இரண்டாவது ஆங்கிலோ–ஆப்கான் போரின் முடிவில், இரு நாடுகளுக்குமிடையிலான எல்லையாக துராந்த் கோடு வரையறுக்கப்பட்டது.”

1893 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் மன்னருக்கும் பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சர் மோர்டிமர் துராந்த்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் பிரிட்டிஷ் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

1947 இல் பாகிஸ்தான் உருவானதற்குப் பிறகு, பல ஆப்கானிய ஆட்சியாளர்கள் துராந் ஒப்பந்ததை கேள்விக்குள்ளாக்கினார்கள்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இடையே நீடித்துவரும் சிக்கலுக்கான விதை விதைக்கப்பட்டது.

“தெற்காசியாவின் பெரும்பாலான நாடுகளுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது, இந்த மோதல் அதிகரித்தால் இந்த நாடுகளின் கவலைகளும் அதிகரிக்கும்” என்று பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சியுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார். இதன் பிறகு அராக்சி இந்தியா வந்து எஸ் ஜெய்சங்கரை சந்தித்தார்.

பட மூலாதாரம், Getty Images

இரான் முன் உள்ள சிக்கல்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், இந்த வாரம் பாகிஸ்தானுக்கு பயணம் செய்த இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தியாவுக்கும் வருகை தந்தார்.

பஹல்காம் தாக்குதலை இரான் கண்டித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில், மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அங்கு நிலவும் பதற்றம் குறித்து பேசினார்.

இரானும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள், இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட எல்லை உள்ளது.

“இந்தியா-பாகிஸ்தான் மோதல் விரைவில் முடிவுக்கு வருவதை இரான் விரும்புகிறது, ஏனெனில் பிராந்தியத்தில் மோதல் தீவிரமடைந்தால், பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்வதால் இரானும் பாதிக்கப்படலாம்” என்று கமர் அகா கூறுகிறார்.

அதே நேரத்தில், உத்தி சார்ந்த மற்றும் பொருளாதார காரணங்களால் இந்தியாவிற்கும் இரானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் வலுவாக உள்ளன.

இரானின் முதல் ஐந்து வர்த்தக கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் இரானுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசியை அனுப்புகிறது.

இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதன் காரணமாக இந்தியாவிற்கான இரானின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் பத்து சதவீதத்தை இரானிய எண்ணெய் மூலம் பூர்த்தி செய்து வந்தது.

இது தவிர, இரானின் சபாஹர் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்துள்ளது.

இந்தியா, சபாஹர் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் சந்தைகளை அணுக விரும்புகிறது.

”இரான் இரு நாடுகளுடனும் உறவுகளை பேணுகிறது. அமைதியை நிலைநாட்ட அதன் முயற்சிகள் தொடரும்” என்று பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU