SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
37 நிமிடங்களுக்கு முன்னர்
இன்றைய (06/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டு மக்களின் பாதுகாப்பு சார்ந்த போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, வரும் புதன்கிழமை (மே 7) அன்று இந்தப் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மே 7ஆம் தேதி தொடங்கி மே 9ஆம் தேதி வரை பயிற்சி தொடரும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமை (மே 5) வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் 244 (வகைப்படுத்தப்பட்ட) மாவட்டங்களில் கிராம அளவில் மாதிரிப் பயிற்சிகளை நடத்துமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது. இந்த ஒத்திகையின்போது, வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலியை ஒலிக்கச் செய்து, மக்கள் தங்களை காத்துக் கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு ஒத்திகை, நாட்டுக்கு எதிராக அந்நிய ராணுவ சக்திகளின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சூழல் ஏற்பட்டால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், “கட்டுப்பாட்டு அறைகள், தீயணைப்பு மற்றும் வார்டன் சேவைகளைச் செயல்படுத்தவும், பதுங்கு குழிகள் மற்றும் அகழிகளைச் சுத்தம் செய்யவும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க பெரும்பாலும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கிராமங்களில் பதுங்கு குழிகள் பரவலாக உள்ளன.
இந்தப் பயிற்சியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு இயக்குநரகத்துடன் தொடர்புடைய சுமார் 4 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள்” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

சென்னையில் ரூ.23 கோடி வைரத்தை கொள்ளையடித்த கும்பல் தூத்துக்குடியில் கைதானது எப்படி?
சென்னையில் ஹோட்டல் ஒன்றில் வியாபாரியைக் கட்டிப்போட்டு ரூ.23 கோடி மதிப்பிலான வைரத்தைக் கொள்ளையடித்து காரில் தப்பிய 4 பேர் கும்பலை தூத்துக்குடியில் போலீசார் கைது செய்துள்ளதாக தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.
“சென்னையில் நேற்று முன்தினம் வைர வியாபாரி சந்திரசேகர் என்பவர் தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அப்போது நகை வாங்குவது போன்று வந்த 4 பேர் கும்பல், அவரது அறைக்குச் சென்றனர். பின்னர் அவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு விட்டு ரூ.23 கோடி மதிப்பிலான வைரத்தைக் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கொள்ளை கும்பல் தூத்துக்குடி நோக்கிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது,” என்று அந்தச் செய்தி கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அதோடு, இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
“அப்போது, நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை பதிவெண் கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர்.”
“இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், சென்னையில் வைர வியாபாரியிடம் வைரத்தைக் கொள்ளையடித்த கும்பல் என்பதும், அந்த 4 பேரும் ஜான் லாயட், விஜய், ரதிஷ், அருண் பாண்டியராஜன் என்பதும் தெரிய வந்தது.
உடனடியாக தூத்துக்குடி போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். பிறகு சென்னை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்காக 4 பேரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றனர்” என அந்தச் செய்தி கூறுகிறது.
டெல்லி செங்கோட்டைக்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்த பெண்

பட மூலாதாரம், Getty Images
முகலாயர் ஆட்சிக் காலத்தில் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டைக்கு தானே வாரிசு என உரிமை கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று (மே 5) தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு அருகே உள்ள ஹவுராவில் வசித்து வருபவர் சுல்தானா பேகம். இரண்டாவது பகதூர் ஷா ஜாபரின் பரம்பரை வாரிசு எனக்கூறிக் கொள்ளும் இவர் டெல்லியில் உள்ள நினைவுச் சின்னமான செங்கோட்டைக்கு உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.
“இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: ‘ஏன் டெல்லி செங்கோட்டையை மட்டும் கேட்கிறீர்கள்? பதேபூர் சிக்ரி (16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசின் தலைநகரம்), தாஜ்மஹால் (17ஆம் நூற்றாண்டில் ஷாஜஹானால் கட்டப்பட்டது) எல்லாம் உங்களுக்கு வேண்டாமா? அவையெல்லாம் வேண்டும் என்று வாதிட விரும்புகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதோடு, இந்த மனு தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாக அச்செய்தி கூறுகிறது.
ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிரான மனு தள்ளுபடி

பட மூலாதாரம், Getty Images
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்ததாகவும் மனுதாரர் இந்த விஷயத்தில் வேறு சட்ட வாய்ப்புகளை அணுகலாம் என்று நீதிமன்றம் கூறியதாகவும் தினமணி நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
ராகுல் காந்தி தனது பிரிட்டன் குடியுரிமையை மறைத்ததாக கர்நாடக பாஜகவை சேர்ந்த எஸ்.விக்னேஷ் சிசிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “ராகுல் காந்தியின் குடியுரிமை பதிவுகள் பற்றிய விவரங்களைக் கோரி பிரிட்டன் அரசுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டில், வி.எஸ்.எஸ்.சர்மா என்பவர் இதே கோரிக்கையை பிரிட்டன் அரசிடம் முன்வைத்து பதில் பெற்றுள்ளதை அறிந்தேன். பிரிட்டன் அரசிடமிருந்து தனக்கு வந்த மின்னஞ்சல்களை சர்மா என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதில் ‘குடியுரிமை விவரங்களை சம்பந்தப்பட்ட நபரின் (ராகுல் காந்தி) ஒப்புதல் இல்லாமல் தெரிவிக்க முடியாது’ என்று பிரிட்டன் அரசு பதில் அளித்திருந்தது.
இதன்மூலம் ராகுல் காந்திக்கு பிரிட்டன் குடியுரிமை இருப்பதை அந்த நாட்டு அரசு முழுமையாக ஒப்புக்கொள்வதாக உள்ளது என்றும், எனவே, அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். நீதிமன்றமும் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ராகுலின் எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும்” என்று அவர் கோரியிருந்ததாக நாளிதழ் செய்தி கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, “இதை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தியின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் குறித்து மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அதன் பிறகு மத்திய அரசு உரிய தகவல்களை மே 5ஆம் தேதிக்குள் தர வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்த மனு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் கோரிய விவரங்களைப் பெற கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.”
அப்போது நீதிபதிகள் அட்டௌ ரஹ்மான் மசூதி, ராஜீவ் சிங் ஆகியோர், “மனுதாரரின் புகார் குறித்து மத்திய அரசால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்க முடியவில்லை. எனவே, மனுவைத் தொடர்ந்து நிலுவையில் வைத்திருப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. இந்த விவகாரத்தில் மனுதாரர் வேறு சட்ட வாய்ப்புகளை அணுகலாம்” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.
வவுனியாவில் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் 74 முறைப்பாடுகள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று 6ஆம் திகதி செவ்வாய்க் கிழமை 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறுகின்றது.
இதில், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் இதுவரை 74 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளதாக வீரகேசரியின் செய்தி தெரிவிக்கிறது.
“நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வவுனியாவில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் திங்கள் கிழமை (மே 05) கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன. இதுவரை எந்தவிதக் குழப்பங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன” என்று தெரிவித்ததாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
அதோடு, “இதுவரைக்கும் 74 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனத் தெரிவித்தார்” என்று அச்செய்தி கூறுகிறது.
இலங்கையில், 339 உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (மே 6) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU