Home தேசிய national tamil இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தால் அமெரிக்கா யாரை ஆதரிக்கும்?

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தால் அமெரிக்கா யாரை ஆதரிக்கும்?

5
0

SOURCE :- BBC NEWS

பஹல்காம் தாக்குதல், இந்தியா, பாகிஸ்தான், நரேந்திர மோதி, முக்கிய செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், T. Narayan/Bloomberg via Getty Images

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவும் அந்தத் தாக்குதலுக்கு கண்டனங்களைப் பதிவு செய்தன. மேலும் இந்தியாவுக்கு தங்களின் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டன.

இந்தத் தாக்குதலுக்கு எதிராக சீனாவும் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்தது. மேலும், தீவிரவாதத்திற்கு சீனா எப்போதும் எதிராக இருக்கும் என்றும் கூறியது.

நிபுணர்களின் கூற்றுப்படி தற்போது நிலவி வரும் உலக அரசியல் சூழலில், இந்த விவகாரத்தில் இருந்து சீனா விலகியே இருக்கும். சீனா, பாகிஸ்தான் இடையிலான நெருக்கம் சமீபத்தில் அதிகரித்து வந்தது. மேலும் இந்தியாவுடனான சீனாவின் எல்லைப் பிரச்னையும் பேசுபொருளாக இருந்தது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியபோது, கடந்த காலத்தில் பாகிஸ்தானுக்கே அமெரிக்கா ஆதரவாக இருந்தது. 1971ஆம் ஆண்டு போரின் போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவளித்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

அமெரிக்க தலைவர்கள் கூறுவது என்ன?

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது 26 பேர் கொல்லப்பட்டனர். சிலர் காயம் அடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள்.

தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடக பக்கத்தில், “காஷ்மீரில் இருந்து வருத்தமளிக்கும் செய்தி வந்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா துணை நிற்கும். பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இந்திய மக்களுக்கு முழுமையான ஆதரவையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று கூறினார்.

தாக்குதல் நடந்தபோது, அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன் இரங்கல்களைத் தெரிவித்தார்.

“இந்தியாவின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நானும் உஷாவும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் எக்ஸ் பக்கத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதை மீண்டும் உறுதி செய்தார்.

“பஹல்காமில் 26 இந்துக்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, நாங்கள் இந்தியாவுடன் துணை நிற்கிறோம். உற்றவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இரங்கலையும் எனது பிரார்த்தனையும் உரிதாக்கிக் கொள்கிறேன். இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

நிபுணர்கள் கூறுவது என்ன?

பஹல்காம் தாக்குதல், இந்தியா, பாகிஸ்தான், நரேந்திர மோதி, முக்கிய செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் உருவாகும் பட்சத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறதா அமெரிக்கத் தலைவர்களின் இந்த அறிக்கைகள்?

‘மிடில் ஈஸ்ட் இன்சைட்ஸ் ப்ளாட்ஃபார்ம்’ அமைப்பின் நிறுவரான முனைவர் சுபதா சௌத்ரி இதுகுறித்துப் பேசும்போது, “அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக இருக்க இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்தியா குவாட் அமைப்பின் உறுப்பினர். மற்றொன்று, சீனா, அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தகப் போர். சீனா – பாகிஸ்தானுக்கு இடையே நெருக்கமான உறவு நீடிப்பதால் அமெரிக்கா இந்த விவகாரத்தை உற்று நோக்கும்,” என்று கூறுகிறார்.

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா என நான்கு நாடுகளை உள்ளடக்கிய அமைப்பே குவாட்.

“இருப்பினும் தற்போது அமெரிக்க ராணுவம் எந்தப் போரிலும் ஈடுபடுவதை டிரம்ப் விரும்பவில்லை. தற்போது டிரம்பின் முழுக் கவனமும் அமெரிக்காவின் பொருளாதார நிலை மற்றும் நிதிப் பற்றாக்குறையைச் சீர்ப்படுத்துவதில்தான் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அவர் மிகவும் கவனமாகச் செயல்படுவார்,” என்று சுபதா கூறுகிறார்.

“இந்த விவகாரத்தில் எந்த விதமான முடிவையும் எடுப்பதற்கு முன்பு அமெரிக்காவின் புலனாய்வுத் துறை பஹல்காமில் நடந்தது என்ன, எப்படி நடந்தது என்பது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும். மேலும் இந்தத் தாக்குதல் வருங்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மதிப்பாய்வு செய்யும். இந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடுமா என்றால் அதற்கு ‘இல்லை’ என்பதே பதில். அமெரிக்கா தனது கூட்டாளியான சௌதி அரேபியா மூலமாக இந்த விவகாரத்தில் தலையிடும்,” என்று அவர் கூறுகிறார்.

பஹல்காம் தாக்குதல், இந்தியா, பாகிஸ்தான், நரேந்திர மோதி, முக்கிய செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, பாகிஸ்தான் இடையே சூழல் பதற்றமடைவதைத் தொடர்ந்து, சௌதி அரேபியா உள்படப் பல்வேறு நாடுகள் ராஜ்ஜீய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சௌதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முன்வந்துள்ளார்.

“இந்தியா, பாகிஸ்தான் அல்லது தெற்காசியா விவகாரம் டிரம்புக்கு முக்கியமல்ல. ஒரு தொழிலதிபராக, குடியேற்றம், பொருளாதாரக் கொள்கை, வரி, விலைவாசி உயர்வு போன்ற உள்நாட்டு விவகாரங்களே அவருக்கு முக்கியம்,” என்று மேற்கோள் காட்டுகிறார் சுபதா.

“இந்த விவகாரத்தில் தலையிட்டு இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான சூழலை உருவாக்க நினைத்தாலும், இரு நாடுகளிலும் போர் குறித்த தீவிர சிந்தனைகளைக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில், மறைமுகமாக நடைபெறும் ராஜ்ஜீய பேச்சுவார்த்தைகள் பயனளிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அது அப்படிப் பயனளிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் சுபதா.

“பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பிகாரில் உள்ள மதுபானியில் தேர்தல் பேரணியின்போது இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு யாராலும் நினைத்துப் பார்க்க இயலாத தண்டனை வழங்கப்படும்,” என்று பிரதமர் மோதி கூறினார்.

“தற்போது மிஞ்சியிருக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் நேரம் வந்துவிட்டது. 140 கோடி இந்தியர்களின் வலிமை, தீவிரவாத குழுக்களின் தலைவர்களின் முதுகெலும்பை உடைக்கும்,” என்றும் அவர் கூறினார்.

“இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படலாம். ஆனால் அது எவ்வளவு பெரியது மற்றும் அதற்கு எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதைக் கூறுவது கடினம். இருப்பினும் இரண்டு நாடுகளும் தத்தம் நாட்டு மக்களைத் திருப்திபடுத்த ஏதேனும் செய்யும்,” என்று சுபதா கூறினார்.

அமெரிக்கா பாகிஸ்தானுடன் வலுவான உறவை வைத்திருந்தது என்றும், தெற்காசியாவில் இந்தியாவுக்கு கட்டற்ற சுதந்திரத்தை அமெரிக்கா வழங்க விரும்பவில்லை என்றும் மற்றொருபுறம் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

தெற்காசிய விவகாரங்களில் நிபுணரும், தெற்காசிய பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியருமான தனஞ்ஜெய் திரிபாதி, “எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமெனில், அமெரிக்கா யாருடனும் இல்லை. சமீபமாக இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு மேம்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் மூலோபய கூட்டாளியாக அமெரிக்கா விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான உறவும் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

தாலிபன்களுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவியிருக்கலாம். ஆனாலும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா சிறிய அளவிலான நடவடிக்கையே மேற்கொண்டது. பாகிஸ்தான் நேரடியாக அமெரிக்காவை எப்போதும் எதிர்த்ததில்லை.

சமீபத்தில் அமெரிக்காவின் வர்த்தகத் துறை பாகிஸ்தான், சீனா, அரபு எமிரேட்ஸ் உள்பட எட்டு நாடுகளில் செயல்பட்டு வரும் 70 நிறுவனங்களுக்கு ஏற்றுமதித் தடை விதித்தது.

பாகிஸ்தானில் 19, சீனாவில் 42, எமிரேட்ஸில் 4 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இரான், பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, செனேகல், பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பஹல்காம் தாக்குதல், இந்தியா, பாகிஸ்தான், நரேந்திர மோதி, முக்கிய செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

தடை செய்யப்பட்ட அமைப்புகள் தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அரசாங்கம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டத்திற்கு உதவியதாகக் கூறி மூன்று சீன நிறுவனங்கள் மற்றும் ஒரு பெலாரூஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்தாலும்கூட, ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு கட்டற்ற சுதந்திரத்தை அமெரிக்கா வழங்க விரும்பவில்லை என்று தனஞ்ஜெய் திரிபாதி நம்புகிறார்.

“அமெரிக்காவின் மூலோபய சமூகத்தில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள், தெற்காசியாவை முழுமையாக இந்தியாவுக்கு வழங்க விரும்பவில்லை. அவர்கள் இந்தியாவை முழுமையாக நம்பவில்லை. இந்தப் பிராந்தியத்தில் அவர்களின் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை,” என்றும் அவர் கூறுகிறார்.

தற்போதைய சூழலில், இந்தியாவுக்கு ஆதரவு அளித்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தாலும்கூட, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என்பதை அந்த நாடு சுட்டுக்காட்டியுள்ளதாக திரிபாதி கூறுகிறார்.

பலமுனைகளில் சிக்கியுள்ள அமெரிக்கா

பஹல்காம் தாக்குதல், இந்தியா, பாகிஸ்தான், நரேந்திர மோதி, முக்கிய செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

இதுபோன்ற சூழலில் அமெரிக்கா யாருக்கும் ஆதரவாக இருக்காது. மாறாகத் தனது நிலை என்ன என்பதையே பார்க்கும் என்கிறார் ஹர்ஷ் வி பாண்ட். அவர், புதுடெல்லியில் அமைந்துள்ள ‘அப்சர்வெர் ரிசர்ச் ஃபவுண்டேஷனில்’ வெளியுறவுக் கொள்கை துறையின் துணைத் தலைவர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

“தற்போதைய சூழலில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக கருத்துகளைப் பகிர்ந்தாலும்கூட, இவ்விரு நாடுகளுக்கும் இடையே போர் போன்ற சூழல் உருவானாலும் டிரம்புக்கு எந்த வித்தியாசமும் தெரியப் போவதில்லை. மேலும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் எந்தவிதமான பங்கையும் வகிக்கப் போவதில்லை,” என்று கூறுகிறார்.

முந்தைய காலங்களில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கலாம். ஆனால் காலம் மாறிவிட்டது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்தால் அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா, யுக்ரேன் இடையே நடைபெறும் போரானது அமெரிக்கா சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை. இந்தப் போர் அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளதால், இதை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தொடர்ச்சியாக முயன்று வருகிறார்.

டிரம்ப் சமீபத்தில் விதித்திருக்கும் சுங்கவரி உலகப் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, சர்வதேச நாணய நிதியம், இந்த வரி விதிப்பால் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்றும் கூறியுள்ளது.

பஹல்காம் தாக்குதல், இந்தியா, பாகிஸ்தான், நரேந்திர மோதி, முக்கிய செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

வெளியுறவு விவகார நிபுணரான கமார் அகா, “இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விரும்பும். ஏனெனில் யுக்ரேன், காஸா, ஏமனின் ஹூத்தி கலகக்குழு என்று பல முனைகளில் அமெரிக்காவின் ஈடுபாடு உள்ளது,” என்று கூறுகிறார்.

பலவிதமான முயற்சிகளை மேற்கொண்ட போதும்கூட, அமெரிக்காவால் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர இயலவில்லை. தற்போது வர்த்தகப் போரில் சிக்கியுள்ளது. எனவே இந்தியாவும், பாகிஸ்தானும் போரில் ஈடுபடுவதை அமெரிக்கா விரும்பாது என்று அவர் கூறுகிறார்.

“அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற உடனே ரஷ்யா – யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன்” என்று டிரம்ப் அறிவித்திருந்தார். தொடர்ச்சியாக அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தாலும்கூட அதில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

“ஏற்கெனவே பலுசிஸ்தானில் ஒரு முழுமையான ரயிலே தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற நிகழ்வில் இருந்து மீண்டும் வரும் பாகிஸ்தான் மீது நரேந்திர மோதி இந்தப் பதற்றத்தின் வாயிலாகத் தொடர்ச்சியாக அழுத்தம் தருவார்” என்று தான் கருதுவதாக கமார் ஆகா என்று கூறுகிறார்.

கடந்த மாதம், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 400 பேர் பயணித்த ரயில் ஒன்றை ஆயுததாரிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பதிலடி தர வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பிபிசி செய்தியாளர் அசாதே மோஷிர் இந்த விவகாரம் தொடர்பாக, குறிப்பாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் இடை நிறுத்தப்பட்டது குறித்து, பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

அவரின் கேள்விக்கு பதில் அளித்த பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “உலக வங்கியை நாங்கள் நாடுவோம். இந்த ஒப்பந்தம் 1960இல் கையெழுத்தானது. பல காலமாக இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதை ஒருதலைபட்சமாக நீங்கள் இடை நிறுத்தி வைக்க இயலாது,” என்று கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர், “இதைப் போருக்கான அறிவிப்பாகவே காண இயலும். ஏனெனில் எங்களுக்குத் தண்ணீர் கிடைப்பதை நீங்கள் தடுக்கப் பார்க்கிறீர்கள். சிந்து நீரைப் பெறுவது எங்களின் உரிமை. ஒப்பந்தத்தில் என்ன இருந்ததோ அதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அதுவே தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். “இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கைகளை அதன் பாணியில் கையாள வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

பஹல்காம் தாக்குதல், இந்தியா, பாகிஸ்தான், நரேந்திர மோதி, முக்கிய செய்திகள், செய்திகள்,

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் பாகிஸ்தான் ராணுவம் ஆயத்தமாகி வருவது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, “நாங்கள் தயாராக வேண்டியதில்லை. ஏற்கெனவே தயார் நிலையில்தான் இருக்கிறோம்,” என்று கூறினார் கவாஜா.

காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்தியா முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்துக் கேள்வி எழுப்பியபோது, “காஷ்மீரில் நடப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல் என்பது சாத்தியமில்லை. எல்லையின் இரண்டு பகுதிகளிலும் ஆயிரக் கணக்கான ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார். அதோடு, பாகிஸ்தானில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இயங்கி வந்த ஆயுதக் குழுக்கள் தற்போது செயலிழந்துவிட்டன. அவர்களின் காலம் முடிந்துவிட்டது,” என்றும் கூறுகிறார் கவாஜா ஆசிஃப்.

ஐ.நா. வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் 23ஆம் தேதியன்று இந்தியா பல்வேறு ராஜ்ஜீய நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பாகிஸ்தானியர்களுக்கான விசாவை ரத்து செய்தது. அட்டாரி எல்லையை மூடியது. மேலும் இந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை இடை நிறுத்தியது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், அடுத்த நாள் பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை அந்த நாடு வெளியேறும்படி கூறியது. வாகா எல்லையை மூடியது. பாகிஸ்தானின் வான்வெளியை இந்தியா பயன்படுத்துவதற்குத் தடை விதித்து அறிவித்தது.

பஹல்காம் தாக்குதல், இந்தியா, பாகிஸ்தான், நரேந்திர மோதி, முக்கிய செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, பாகிஸ்தான் இடையே கையெழுத்தாகியுள்ள சிம்லா ஒப்பந்தம் உள்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்து அறிவித்தது பாகிஸ்தான். இரு நாடுகளும், அவரவர் நாட்டில் இருக்கும் மற்ற நாட்டு ராஜ்ஜீய அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில், கட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் வியாழக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தத் தாக்குதலுக்கு கண்டனத்தைப் பதிவு செய்த ஐ.நா, “இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைபிடித்து, தற்போது நிலவும் சூழல் மோசமடையாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியது.

ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபினி துயாரிக், “அன்டோனியோ எந்தவொரு நாட்டின் தலைவர்களுடனும் கடந்த 24 மணிநேரத்தில் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால் இந்த விவகாரம் குறித்துக் கவலை அடைந்துள்ளார். மேலும் நிலவும் சூழலைக் கண்காணித்து வருகிறார்,” என்று குறிப்பிட்டார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU