Home தேசிய national tamil இந்தியாவை ஆதரிக்க ரஷ்யா தயங்கியது ஏன்? பாகிஸ்தானுடன் புதிய உறவு மலர்கிறதா?

இந்தியாவை ஆதரிக்க ரஷ்யா தயங்கியது ஏன்? பாகிஸ்தானுடன் புதிய உறவு மலர்கிறதா?

3
0

SOURCE :- BBC NEWS

பிரதமர் மோதி -ரஷ்ய அதிபர் புடின்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 14 மே 2025, 13:50 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் என்றாலே சோவியத் ஒன்றியத்தின் அரவணைத்துச் செல்லும் பாங்கும், இரு நாட்டு உறவுகளும் நினைவில் வருவதைத் தவிர்க்கமுடியாது.

1955 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் தலைவர் நிகிதா குருசேவ் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். தனது இந்தியப் பயணத்தின்போது அவர் சொன்னவை இன்றும் நினைவு கூரத்தக்கவை. “நாங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறிய அவர், “நீங்கள் மலை உச்சியிலிருந்து எங்களை அழைத்தாலும், அங்கும் உங்கள் பக்கம் நாங்கள் இருப்போம்” என்றார்.

1991இல் ‘சோவியத் யூனியன்’ என்ற சோவியத் சோசலிஸ்ட் குடியரசுகளின் ஒன்றியம் உடைந்து ரஷ்யா மட்டுமே எஞ்சியபோதும், இந்தியாவுடனான உறவுகள் முன்பிருந்ததைப்போலவே தொடர்ந்தது. காஷ்மீர் தொடர்பாக மேற்கத்திய நாடுகள் குழப்பமான நிலைப்பாட்டில் இருந்தபோது, சோவியத் யூனியன் மட்டுமே, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே காஷ்மீர் என்று உறுதிபடக் கூறியது.

பனிப்போரின் போது, காஷ்மீர் பிரச்னையை சர்வதேசமயமாக்கும் முயற்சியில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அப்படிக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை சோவியத் யூனியன் வீட்டோ அதிகாரம் கொண்டு பல முறை தோற்கடிக்கச் செய்தது. காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்புப் பிரச்னை என்ற இந்தியாவின் கூற்றுக்கு ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது.

காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்புப் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

‘வீட்டோ’ கொண்டு இந்தியாவைக் காத்த ரஷ்யா

1957, 1962 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நா தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களில் சோவியத் யூனியன் மட்டுமே தடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு எதிரான தீர்மானங்கள் வந்தபோது, ஆறு முறை ரஷ்யா வீட்டோ செய்துள்ளது. இந்த வீட்டோக்களில் பெரும்பாலானவை காஷ்மீர் தொடர்பானவை.

கோவாவில், 1961இல் போர்த்துகீசிய ஆட்சியை இந்திய ராணுவம் முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்த விவகாரத்திலும் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்தது. இந்தியாவின் செயலை கண்டித்த அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கண்டனத் தீர்மானத்தை முன்மொழிந்தது, ஆனால் சோவியத் ஒன்றியம் அதைத் தடுக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.

2019 ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தபோதும் ரஷ்யா ஆதரவு தெரிவித்தது.

ஆனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா வெளிப்படையாக ஆதரவளிக்கவில்லை. ரஷ்யாவின் எதிர்வினை சமநிலையானதாகவும் நடுநிலையானதுமாக இருக்கிறது.

இரு நாடுகளும் பதற்றங்களைக் குறைக்க வேண்டும் என்று ரஷ்யா இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்ததுடன் மத்தியஸ்தம் செய்யவும் முன்வந்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “இந்தியா எங்களது மூலோபாய கூட்டாளி, பாகிஸ்தானும் எங்கள் கூட்டாளி. டெல்லி, இஸ்லாமாபாத் ஆகிய இரு நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

இந்தியாவுக்கு ரஷ்யாவின் பதில்

மே 3 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்களை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது. “இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவருமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்” என்று அதில் ரஷ்ய தரப்பு கூறியிருந்தது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் இந்தக் கருத்தை சமூகவலைத்தளத்தில் மறுபதிவு செய்த சிந்தனைக் குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான தன்வி மதான், “12 ஆண்டுகளுக்குள், இரண்டு முறை யுக்ரேனைத் தாக்கிய ரஷ்யா, பாகிஸ்தானுடனான சர்ச்சையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்குமாறு இந்தியாவுக்கு அறிவுறுத்துகிறது” என்று எழுதியிருந்தார்.

தன்வி மதானின் இந்தப் பதிவில் மற்றொரு பயனர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்: “ரஷ்யாவுக்கு என்ன ஆயிற்று? யுக்ரேனுக்குச் சென்ற இந்தியப் பிரதமர், ரஷ்யாவும் யுக்ரேனும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் உண்மையில் ரஷ்யா போன்ற நீண்டகால நண்பருக்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். இதைத்தான் நியூட்டனின் மூன்றாவது விதி என்று சொல்வார்கள். அதாவது நமது செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர்வினை உண்டு.”

இதற்கு பதிலளிக்கும் தன்வி மதானின் கருத்து இது: “2022 இல் யுக்ரேனுடனான போரில் ரஷ்யாவை இந்தியா ஆதரிக்கவில்லை, எனவே ரஷ்யாவும் இந்தியாவை ஆதரிக்கவில்லை என்று சொல்வது முற்றிலும் சரியல்ல. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, 2019இலும் கூட, அமைதி காக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்த ரஷ்யா மத்தியஸ்தம் செய்யவும் தயாராகவே இருந்தது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

பட மூலாதாரம், Getty Images

தன்வி மதானின் இந்தப் பதிவுக்கு பதிலளித்த ORF என்ற சிந்தனைக் குழுவில் இந்தியா-ரஷ்யா உறவுகள் குறித்த நிபுணரான அலெக்ஸி ஜகாரோவ், இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்: “90களில் இருந்து இந்தியா மீதான ரஷ்யாவின் அணுகுமுறை கலவையானதாகவே உள்ளது. 2002இல், புதின் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முயன்றபோது இந்தியா அதை நிராகரித்தது. மாறிவரும் புவிசார் அரசியலைப் பொருட்படுத்தாமல், பதற்றங்களைக் குறைப்பதில் பங்கு வகிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்து உள்ளது.”

அலெக்ஸியின் கருத்துடன் ஒத்துப்போகும் மாஸ்கோவை தளமாகக் கொண்ட HSE பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் நிவேதிதா கபூர், இவ்வாறு கூறுகிறார்: “அணுசக்தி என்ற விசயத்தில் அலெக்ஸியுடன் உடன்படுகிறேன். ஒரு அணுசக்தி நாடாக, பதற்றங்களைக் குறைப்பதற்காக, சக்திவாய்ந்த நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய பொறுப்பு ரஷ்யாவிற்கு உள்ளது. இரண்டு அணுசக்தி நாடுகள் போரை நோக்கிச் செல்லும்போது, அமைதிக்கான வேண்டுகோள் வைக்கப்படுவது என்பது இயற்கையானது.”

இந்தியா-ரஷ்யா உறவுகள்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவிடம் இந்தியாவின் எதிர்பார்ப்புகள்

“மோதல் நேரத்தில் பாகிஸ்தானை வெளிப்படையாக சீனா ஆதரிக்கும்போது, ரஷ்யாவும் இந்தியாவை வெளிப்படையாக ஆதரிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தியாவின் தரப்பில் இருக்கிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மீண்டும் சமநிலையைப் பேணுவது மற்றும் இரு தரப்பினரும் கூட்டாண்மை குறித்து உறுதியளிப்பது பற்றி கவலைப்பட ரஷ்யா விரும்பவில்லை என்பது உண்மைதான். தனது இரண்டு முக்கிய கூட்டாளிகள், எதிரெதிர் தரப்பில் இருக்கும்போது அதில் எந்த பக்கசார்பையும் எடுக்கவும் ரஷ்யா தவிர்க்க முயற்சிக்கிறது” என்று நிவேதிதா கபூர் கருதுகிறார்.

பாகிஸ்தானுடனான இந்தியாவின் மோதலில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் ராஜன் குமாரிடம் கேட்டோம்.

டாக்டர் ராஜன் குமாரின் கருத்துப்படி, ” பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவிற்கு ஒருதலைப்பட்ச ஆதரவை வழங்குவது பற்றி இதுவரை ரஷ்யா பேசி வந்தது. ஆனால் இந்த முறை முழு விவகாரத்திலும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பற்றியும் மத்தியஸ்தம் தொடர்பாகவும் ரஷ்யா பேசியது. இந்தியாவிற்கு ஆதரவான ஒருதலைப்பட்ச நிலைப்பாடு காணப்படவில்லை”.

“இந்த முறையும் இந்தியாவுக்கு ஆதரவாகவே ரஷ்யா இருக்கும் எனத் தோன்றியது உண்மைதான், ஆனால் இந்த விசயத்தில் ரஷ்யாவின் அறிக்கை சமநிலையில் இருப்பதுடன், இந்தியாவிற்கு முற்றிலும் சாதகமானதாக இல்லை. இந்த முறை ரஷ்யா முழு விஷயத்திலும் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டதாகத் தோன்றியது” என்கிறார் டாக்டர் ராஜன் குமார்.

ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டிற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக டாக்டர் ராஜன் குமார் நம்புகிறார். “ரஷ்யா-யுக்ரேன் போரில் இந்தியா ரஷ்யாவின் பக்கம் இருந்தாலும், ரஷ்யா விரும்பியபடி அந்நாட்டை இந்தியா முழுமையாக ஆதரிக்கவில்லை. இந்தியப் பிரதமர் யுக்ரேனுக்கு சென்றபோது, யுக்ரேன் போரை ராஜ்ஜீய ரீதியில் தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். எந்தவொரு நாட்டின் இறையாண்மையும் மீறப்படக்கூடாது என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார்” என்று அவர் கூறுகிறார்.

”இரண்டாவது காரணம், இந்தியா அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது என்பதுடன் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக அதிகரித்துள்ளது”, ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு கூட்டு குறைந்துவருவதும், மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவு அதிகரித்துள்ளதும் முக்கிய காரணமாக இருக்கும்”.

மூன்றாவது காரணம் ரஷ்யாவின் சொந்த நிர்ப்பந்தம் என்று சொல்லலாம். தாலிபான்கள் மீதான தடையை ரஷ்யா நீக்கியுள்ளது. பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் கால் பதிக்க ரஷ்யா விரும்புகிறது. இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தானை முற்றிலுமாக ஓரங்கட்ட புதின் விரும்பவில்லை.

ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கு மூன்று காரணங்கள்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யா மற்றும் பாகிஸ்தான்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு டிசம்பர் 2021ஆம் ஆண்டில் தான் கடைசியாக பயணம் மேற்கொண்டிருந்தார். அதாவது, 2022 பிப்ரவரியில் யுக்ரேனுடனான போர் தொடங்கிய பிறகு புதின் இந்தியாவிற்கு வரவில்லை. மறுபுறம், அவர் இரண்டு முறை சீனாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்தக் காலகட்டத்தில், அவர் பிற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், 2023 செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் புதின் கலந்து கொள்ளவில்லை. கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யா இந்தியாவுடன் ஆண்டுதோறும் ஒரு உச்சிமாநாட்டை நடத்தும், அதுவும் இப்போது வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறுவதில்லை.

அண்மை ஆண்டுகளில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உட்பட ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கும் அமைப்புகளில் இந்தியா தனித்திருக்கிறது.

2024 ஜூலையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் நரேந்திர மோதி கலந்து கொள்ளவில்லை. 2023 இல் SCO இன் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்தபோது, அந்த உச்சிமாநாட்டை இந்தியா மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

மறுபுறம், இந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் உயர்மட்ட G-20 உச்சி மாநாடு நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே 68 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றபோதிலும், இந்தியா 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது.

2009 மற்றும் 2013 க்கு இடையில், இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 76 சதவீதம் ரஷ்யாவிலிருந்து வந்த நிலையில், 2019 மற்றும் 2020 க்கு இடையில், அது 36 சதவீதம் குறைந்துள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் சஞ்சய் குமார் பாண்டே கூறுகையில், யுக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரில் கூட, இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக இல்லை, ஆனால் ஒருதலைப்பட்சமாக ஆதரவும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கிய S-400

பட மூலாதாரம், Getty Images

பேராசிரியர் பாண்டே இவ்வாறு கூறுகிறார்: “பாகிஸ்தான் எப்போதும் ரஷ்யாவிற்கு வேண்டாத நாடாக இருந்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரில், ரஷ்யா நடுநிலை வகித்து மத்தியஸ்தம் செய்தது”.

தாஷ்கண்ட் ஒப்பந்தம் சோவியத் யூனியனின் மத்தியஸ்தத்தின் கீழ் கையெழுத்தானது, அது இந்தியாவிற்கு சாதகமாக இல்லை என்பதையும் மறந்துவிடக்கூடாது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்திய ராணுவம் பின்வாங்க வேண்டியிருந்தது. 1971 போரில் ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது என்றாலும், இப்போது உலகின் நிலை பெருமளவில் மாறிவிட்டது. எதுஎப்படியிருந்தாலும், ரஷ்யா இன்னும் இந்தியாவுடன் இருப்பதாகவே நம்புகிறேன். அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து S-400ஐ இந்தியா வாங்கியதை குறிப்பிட்டுச் சொல்லலாம். பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்துவதில் S-400முக்கிய பங்கு வகித்துள்ளது குறிபிடத்தக்கது.

மேற்கத்திய நாடுகளுடனான பாகிஸ்தானின் உறவுகள் பலவீனமடைந்து வருவதால், ரஷ்யாவுடனான அந்நாட்டின் நெருக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 2023இல், ரஷ்யாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 1 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் என்பதை கவனிக்கவேண்டும். மேலும், பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தானை சேர்ப்பதற்கு ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்ஸி ஓவர்சுக் கடந்த ஆண்டு ஆதரவளித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU