Home தேசிய national tamil இந்தியாவில் ரயில்களில் ‘பயணிக்கும்’ ராஜநாகங்கள் – புதிய ஆபத்து பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

இந்தியாவில் ரயில்களில் ‘பயணிக்கும்’ ராஜநாகங்கள் – புதிய ஆபத்து பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

8
0

SOURCE :- BBC NEWS

இவரது ஆய்வின் மூலம் இந்தியாவில் ராஜநாகங்கள் ரயில்களில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் ராஜநாகத்தின் இயற்கையான வாழ்விடமாக உள்ளன. ராஜநாகம் பொதுவாகக் காடுகளில் வாழ்கிறது, ஏனெனில் அங்கு அதற்குத் தேவையான இரை, நீர் மற்றும் பாதுகாப்பான இடம் கிடைக்கிறது.

காடுகளில் வாழும் ராஜநாகங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூரத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், ஊர்வன ஆராய்ச்சியாளருமான திகான்ஷ் பார்மர் ஒரு தனித்துவமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். இவரது ஆய்வின் மூலம் இந்தியாவில் ராஜநாகங்கள் ரயில்களில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. காடுகளில் வாழும் ராஜநாகங்கள் எப்படி ரயில் தண்டவாளங்கள் அல்லது ரயில்களை வந்தடைகின்றன?

கோவா செல்லும் பல ரயில் பாதைகள் அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்கின்றன. ராஜநாகங்கள் சில நேரங்களில் உணவு அல்லது தங்குமிடம் தேடி தண்டவாளங்கள் அல்லது ரயில்களுக்கு அருகில் வருவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதன் மூலம், அவை இயற்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்குச் சென்றடைகின்றன, அங்கு அவற்றுக்கு உணவோ அல்லது பாதுகாப்பான தங்குமிடமோ இருப்பதில்லை.

இவரது ஆராய்ச்சி, அமெரிக்காவின் சூழலியல் மற்றும் அதன் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தலைப்புகள் குறித்த ஆராய்ச்சிகளை வெளியிடும் புகழ்பெற்ற ‘பயோட்ரோபிகா’ இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகின் மிக நீளமான விஷப்பாம்பான ராஜநாகம் (ஓபியோபாகஸ் காலிங்கா), தவறுதலாக நீண்ட தூர ரயில்களில் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த இதழில் ஆராய்ச்சி வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு விகிதம் 36 சதவீதம் மட்டுமே என்பதால், அதில் ஆராய்ச்சி வெளியிடப்படுவது விஞ்ஞானிகளுக்கு முக்கியமான ஒன்று.

ராஜநாகத்தின் பரவல் மாறிவரும் விதம், அந்தப் பாம்பு இனத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஒரு சவாலாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

திகான்ஷ் பார்மர், சர்வதேச விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து கோவாவில் 47 ராஜநாகங்கள் கண்டறியப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.

இதற்காக, அவர்கள் கோவாவின் விலங்குகள் மீட்புப் படையின் உதவியையும் பெற்றனர். இந்த மீட்புப் படை பல ஆண்டுகளாக பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

கோவாவில் 5 ரயில் நிலையங்களுக்கு அருகில் ராஜநாகம் கண்டுபிடிப்பு

 கோவா விலங்கு மீட்புப் படை உறுப்பினர் ரிங்கு

பட மூலாதாரம், Sourabh Yadav

கோவாவின் விலங்குகள் மீட்புப் படையினரால் ராஜநாகங்கள் மீட்கப்பட்ட 47 இடங்களை திகான்ஷ் பார்மர் ஆய்வு செய்தார். இதில் 18 இடங்கள் வட கோவாவிலும், 29 இடங்கள் தெற்கு கோவாவிலும் இருந்தன.

தனது ஆய்வு குறித்து பிபிசி குஜராத்தியிடம் திகான்ஷ் பர்மர் கூறுகையில், “ராஜநாகம் இந்தியாவின் தேசிய ஊர்வன இனமாக அறியப்படுகிறது. இந்தியா முழுவதும் காணப்படும் ராஜநாகங்களின் உடலில் உள்ள வரிகள் மாறுபட்டிருந்தாலும், அது ஒரே இனமாகவே கருதப்பட்டது. தனி இனமாகப் பார்க்கப்படவில்லை. அதில் வேறு இனங்களும் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். எனவே, குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் இந்த நாகத்தை ‘ஓபியோபேகஸ் காலிங்கா’ என்று அவர்கள் அங்கீகரித்தனர். இந்தப் பாம்பு பாதுகாக்கப்பட்ட பிரிவின் கீழ் வருகிறது”என்றார்.

இந்தப் பாம்பு ஒருவரைக் கடித்தால், அவர் தண்ணீர் கூட கேட்க முடியாது, உடனடியாக இறந்துவிடுவார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆய்வில், அந்த இடங்கள் அனைத்தும் ரயில் நிலையத்திற்கு அருகிலோ அல்லது ரயில் பாதைக்கு அருகிலோ இருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கோவா விலங்குகள் மீட்புப் படை 2002 முதல் 2024 வரை மொத்தம் 120 ராஜநாகங்களை மீட்டது. அந்த இடங்களை நாங்கள் ஆய்வு செய்தபோது, அவற்றில் 47 இடங்கள் ரயில்வேயை பகுதியைச் சுற்றியே இருந்தன. ஒரு பாம்பு கோவாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் தண்டவாளத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது” என்றார்.

திகான்ஷ் பார்மர், சர்வதேச விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து கோவாவில் 47 ராஜநாகங்கள் கண்டறியப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். இவை பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தொலைதூரக் காடுகளில் அமைந்திருந்தன.

பட மூலாதாரம், Mehul Thakur

கோவா விலங்குகள் மீட்புப் படையின் தலைவர் அம்ரித் சிங் பிபிசி குஜராத்திடம் கூறுகையில், “தெற்கு கோவாவில் உள்ள ‘சந்தோர்’ என்ற ரயில் நிலையத்தில் ராஜநாகம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. நாங்கள் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தோம். அது காயமடைந்த நிலையில் இருந்தது. பொதுவாக இதுபோன்ற பாம்புகள் காணப்படாத இடம் அது” என்றார்.

“சந்தோர் ரயில் நிலையத்தில் ராஜநாகம் கண்டறியப்பட்ட விவகாரம், இத்தகைய சூழலியல் ரீதியாகத் தொடர்பில்லாத இடத்திற்கு இந்தப் பாம்பு எப்படி வந்திருக்கக் கூடும் என்பதைத் தீவிரமாக ஆராய எங்களைத் தூண்டியது” என்று அந்த ஆராய்ச்சி விவரங்கள் குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘பயோட்ரோபிகா’ இதழில் வெளியாகியுள்ளது.

இந்த வகை ராஜநாகங்கள் கர்நாடகாவின் காசில் ராக் மற்றும் தண்டேலி புலிகள் காப்பகத்தில் காணப்படுகின்றன. இந்த ரயில்கள் கோவாவிற்குள் நுழையும் போது, பாம்புகள் இந்தப் பகுதியில் தங்கிவிடுகின்றன.

செப்டம்பர் 2021-ல், கோவா விலங்குகள் மீட்புப் படை வாஸ்கோடகாமா அருகே ஒரு ராஜநாகத்தை மீட்டது. அது ரயில் நிலையத்திலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. லோலிம், பாலோலெம் மற்றும் பெட்னே ரயில் நிலையங்களைச் சுற்றியும் மற்ற மூன்று ராஜநாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த ஐந்து இடங்களுமே ராஜநாகத்தின் இயற்கையான வாழ்விடங்கள் அல்ல. இதுவே பாம்பிற்கும் ரயில்வேக்கும் இடையே உள்ள இந்த ‘வியத்தகு தொடர்பை’ விஞ்ஞானிகள் கவனிக்கக் காரணமாக அமைந்தது என்கிறார் திகான்ஷ் பார்மர்.

‘இந்த ராஜ நாகம் ரயிலில் பயணித்திருக்க வேண்டும்’

கோவா விலங்கு மீட்புப் படையைச் சேர்ந்த அம்ரித் சிங்

பட மூலாதாரம், AMRUT SINGH

இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளரும் விஞ்ஞானியுமான திகான்ஷ் பார்மர், பிபிசி குஜராத்திடம் பேசுகையில், “அந்தப் பாம்பு எப்படி ரயில் நிலையத்திற்கு வந்தது என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். கர்நாடகாவிலிருந்து கோவாவிற்குச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் கர்நாடகாவின் காசில் ராக் பகுதியிலிருந்தே வருகின்றன. இந்தப் பகுதிகள் அடர்ந்த காடுகளைக் கொண்டவை. அங்கு ராஜநாகங்கள் அதிகளவில் காணப்படுகின்றன” என்றார்.

“ஆராய்ச்சியின் அடிப்படையில், எங்கள் குழு ஒரு புதிய ‘ரயில்வே பரவல் கருதுகோளை’ முன்மொழிந்துள்ளது. இதன்படி, காடுகள் நிறைந்த மலைப்பகுதி ரயில் நிலையங்களில் எலிகள் அல்லது பிற உயிரினங்களை வேட்டையாடும் போது, ராஜநாகங்கள் சில நேரங்களில் சரக்கு அல்லது பயணிகள் ரயில்களில் ஏறியிருக்க வேண்டும். பின்னர் என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே பல கிலோமீட்டர் தொலைவில், தங்களுக்கு முற்றிலும் ஒவ்வாத சூழல் உள்ள இடத்தில் இறங்கியிருக்க வேண்டும் என இது குறிப்பிடுகிறது”என்று திகான்ஷ் பர்மர் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சிக்கு இந்தியா முழுவதும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற செய்திகளில் வெளியான தகவல்கள் வலுசேர்ப்பதாக திகான்ஷ் கூறுகிறார். அதன்படி , ராஜநாகங்கள் உள்ளிட்ட பாம்புகள் ரயில்கள் அல்லது ரயில் நிலையங்களைச் சுற்றி காணப்படுகின்றன.

“நாங்கள் ஆராய்ச்சி செய்த இடங்கள் பொதுவாக பாம்புகளின் வாழ்விடம் இல்லை. ஆனால் வெகு தொலைவில் உள்ள கர்நாடகாவிற்கு அருகிலுள்ள காடுகளில் இந்த பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. நாங்கள் பார்த்த ராஜநாகங்கள் அனைத்தும் ரயில் நிலையங்களைச் சுற்றியே இருந்தன. எனவே, அவை ரயில் வழியாக இங்கு வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்யலாம்”என்றும் என்று திகான்ஷ் பர்மர் விவரிக்கிறார்.

இதற்கு முன்னதாக, 2017-ஆம் ஆண்டு வாக்கில், திகான்ஷ் பார்மர் சூரத் ரயில் நிலையத்தில் இதே போன்ற முறையில் ஒரு பாம்பை மீட்டிருந்தார்.

‘பாம்பின் பயணம்’ தற்செயலா அல்லது உணவுக்கான தேடலா?

இதற்கு முன்னதாக, 2017-ஆம் ஆண்டு வாக்கில், திகான்ஷ் பார்மர் சூரத் ரயில் நிலையத்திலிருந்து இதே போன்ற முறையில் ஒரு பாம்பை மீட்டிருந்தார்.

பட மூலாதாரம், DIKANSH PARMAR

ராஜநாகங்கள் ரயில் நிலையங்களைச் சுற்றி காணப்படுவதற்கான காரணம் நடைமுறை ரீதியானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு கூறுகிறது. தானியங்கள், பழங்கள் அல்லது இதர பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களின் கழிவுகள் காரணமாக, ரயில்வே பகுதிகளில் எலிகள் அதிகளவில் கூடுகின்றன. எலிகள் அங்கேயே தங்கள் வாழிடங்களை அமைத்து வாழ்கின்றன. இவை பாம்புகளுக்கு உணவாக அமைகின்றன.

மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது, பாதுகாப்பான தங்குமிடத்தைத் தேடி அவை ரயில்களில் தஞ்சம் புகக்கூடும்.

இந்த ஆராய்ச்சியில் கலிபோர்னியாவில் உள்ள விக்டர் வேலி கல்லூரியின் உயிரியல் பேராசிரியர் முனைவர் ஹென்ரிச் கைசர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் டென்னிஸ் ரோடர் (லீப்னிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் தி அனாலிசிஸ் ஆஃப் பயோடைவர்சிட்டி சேஞ்ச் (எல்ஐபி), பான், ஜெர்மனி) ஆகியோரும் ஈடுபட்டனர்.

முனைவர் ஹென்ரிச் பிபிசி குஜராத்திடம் கூறுகையில், “பொதுவாக சாலைகளையும் ரயில் பாதைகளையும் வனவிலங்குகளுக்கான தடைகளாகவோ அல்லது அவற்றிற்கான மரணப் பொறிகளாகவோ நாம் கருதுகிறோம், ஆனால் இந்த விரைவுப் பாதைகள் கவனக்குறைவாக அவற்றின் போக்குவரத்துப் பாதைகளாகச் செயல்படக்கூடும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது” என்றார்.

“இந்த ராஜநாகம் தற்செயலாக ரயிலுக்குள் சென்றிருக்கலாம் அல்லது உணவு தேடியோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ ரயில் பாதையை அணுகியிருக்கலாம்” என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, இணைப் பேராசிரியர் முனைவர் டென்னிஸ் ரோடர் பிபிசி குஜராத்திடம் பேசுகையில், “மனிதர்களின் இந்த உள்கட்டமைப்புகள், இந்த வேட்டையாடும் உயிரினத்தின் நடமாட்டத்தை எப்படித் தற்செயலாகப் பாதிக்கின்றன என்பதை இந்த ஆராய்ச்சி காட்டுகிறது” என்றார்.

இது அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி என்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறும் அவர்கள், “உண்மைகளும் தர்க்கங்களும் ஆதாரங்களுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டனர்.

ராஜநாகங்கள் ரயில்வேயைச் சுற்றி காணப்படுவதற்கான காரணம் நடைமுறை ரீதியானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு கூறுகிறது. தானியங்கள், பழங்கள் அல்லது இதர பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களின் கழிவுகள் காரணமாக, ரயில்வே பகுதிகளில் எலிகள் அதிகளவில் கூடுகின்றன. எலிகள் அங்கேயே தங்கள் வாழிடங்களை அமைத்து வாழ்கின்றன. இவை பாம்புகளுக்கு உணவாக அமைகின்றன.

பட மூலாதாரம், DIKANSH PARMAR

பாம்புகள் பற்றிய இந்த ஆராய்ச்சி ஏன் முக்கியமானது?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த முனைவர் ரோடர், “ராஜநாகத்தின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. அவை சரக்கு அல்லது பயணிகள் ரயில்கள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றால், அது மனித உயிருக்கும் அவற்றிற்கும் ஆபத்தானது. எனவே, இந்த ஆராய்ச்சியின் மூலம், மனித உயிருக்கு ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மற்றும் ராஜநாகத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

“ராஜநாகம் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு. அதனால் தான் மக்கள் அதைப் பார்த்தவுடன் பெரும்பாலும் கொன்றுவிடுகிறார்கள். அது மனித குடியிருப்புகளில் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டால், அது மனித உயிருக்கு ஆபத்தானது. எனவே, காட்டின் சமநிலையை பேணவும், பல்லுயிர் பெருக்கத்திற்காகவும் அதன் பாதுகாப்பு அவசியமானது. இந்த ஆராய்ச்சி அதை வலியுறுத்துகிறது” என்று திகான்ஷ் பர்மர் விளக்குகிறார்.

வனப்பகுதிகளில் தேவையில்லாமல் ரயில்களை நிறுத்தக் கூடாது என்றும், ரயில் பெட்டிகளில் மீதமுள்ள உணவுகளை வைக்கக் கூடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இது எலிகளைக் கவர்ந்திழுக்கக்கூடும். அத்துடன், பாம்புகள் போன்ற வன உயிரினங்கள் ரயில் தண்டவாளங்களுக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகாதபடி காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“ரயில்கள் அல்லது பிற வழிகள் மூலம் இதுபோன்ற மனித குடியிருப்புகளுக்கு அவை வந்தாலும், அவை உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. எனவே, அவை பாதுகாக்கப்பட வேண்டும்” என்கிறார் திகான்ஷ் .

அவரது கூற்றுப்படி, மனித குடியிருப்புகளில் ராஜநாகங்கள் இருப்பது மனித-பாம்பு மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இத்தகைய இடங்களை வந்தடையும் பாம்புகள் பசி, மன அழுத்தம் மற்றும் இறப்பு அபாயத்தை எதிர்கொள்கின்றன.

“இந்த ஆராய்ச்சி வெறும் சுவாரஸ்யமான சூழலியல் கதை மட்டுமல்ல, இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புக்கான எச்சரிக்கையும் கூட. ரயில்கள் தற்செயலாக விஷப்பாம்புகளை ஏற்றிச் செல்கின்றன என்றால், இந்த விஷயத்தில் விழிப்புணர்வும் தெளிவான வழிகாட்டுதல்களும் தேவை” என்கிறார் முனைவர் ரோடர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU