SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
இந்திய இளைஞர்களின் நிலை பல முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது. ஒரு புறம் அதிகமான மனித வளம்; மறுபுறம் பற்றாக்குறை. ஒரு புறம் நம்பிக்கை; மறுபுறம் திசைதவறல்.
பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜோன் ராபின்சன் ஒருமுறை கூறியதைப் போல, “இந்தியாவை பற்றி நீங்கள் எதைச் சரியாகக் கூறினாலும், அதற்கு நேர்மாறான கருத்தும் உண்மையானதாகவே இருக்கும்.”
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய “பணியாற்றும் இந்தியாவின் நிலை” குறித்த அறிக்கையைப் போல, மிகச் சில ஆய்வுகளே இந்த முரண்பாட்டை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.
முதலாவதாக, ஒரு முக்கியமான புள்ளிவிவரத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட 367 மில்லியன் இளைஞர்கள் உள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகையாகும். மேலும், இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இவர்களாகவே உள்ளனர்.
நாட்டிலுள்ள 367 மில்லியன் இளைஞர்களில், 263 மில்லியன் பேர் தற்போது பள்ளி அல்லது கல்லூரிகளில் பயிலவில்லை. எனவே, இவர்கள் தற்போது பணிகளில் ஈடுபடக்கூடிய அல்லது விரைவில் வேலைவாய்ப்புகளில் இணையக்கூடிய குழுவினராக உள்ளனர். இதனாலேயே இவர்கள் “சாத்தியமான பணியாளர் வளம்” (potential workforce) என்று அழைக்கப்படுகிறார்கள்.
இது மிகவும் மதிப்புமிக்க ஒரு மக்கள்தொகையியல் சார்ந்த சாதகமான நிலையாகும். கிழக்கு ஆசிய நாடுகள் பெரும் பொருளாதார வெற்றியை அடைய உதவியதைப் போன்றதொரு சாதக நிலை இது. ஆனால், இந்தப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால், மிகவும் கவலைக்குரிய ஓர் எதார்த்தமும் மறைந்துள்ளது.
மேலோட்டமாகப் பார்க்கையில், நம்பிக்கை கொள்வதற்கான சில காரணங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக, இந்தியா தனது கல்வி அமைப்பில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கு, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி நிலைக்கு இணையாகவே பெரும்பாலும் நகர்ந்து வந்துள்ளது. ஆண், பெண் என இருபாலர் இடையிலுமான இடைவெளி குறைந்துள்ளது. சாதி சார்ந்த தடைகளும் குறைந்துள்ளன. இருப்பினும் அவை முழுமையாக மறைந்துவிடவில்லை.
கடந்த 2007 மற்றும் 2017க்கு இடையே, மிகவு ஏழ்மையான குடும்பங்களில் இருந்து உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் சதவிகிதம் 8%இல் இருந்து 17 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இதன் பொருள், மிகவும் படித்த, சிறந்த தொடர்புகளைக் கொண்ட ஓர் இளம் தலைமுறை இப்போது வேலைவாய்ப்பு சந்தையில் நுழைகிறது என்பதாகும். முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடுகையில், இளம் தொழிலாளர்கள் நீண்டகால அடிப்படையில் விவசாயத்தை வேகமாகக் கைவிட்டு, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பணி வாய்ப்புகளைக் கண்டறிகின்றனர்.
இதைப் பார்க்கையில், இது இந்தியாவுக்கு ஒரு பெரிய மக்கள்தொகை சாதகத்தை தரக்கூடிய ஒரு சூழ்நிலையாகத் தெரிகிறது.
பட மூலாதாரம், Hindustan Times via Getty Image
“இவ்வளவு அதிகமான இளம் இந்தியர்கள் இதற்கு முன்பு ஒருபோதும் இவ்வளவு படித்தவர்களாகவும், இவ்வளவு தொடர்புகளைக் கொண்டவர்களாகவும் இருந்ததில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால், கல்விக்குப் பிறகு வேலை கிடைப்பது இன்னமும் சுமூகமாக நடக்கவில்லை என்பதே இதிலுள்ள வருத்தமான செய்தி.
மேன்மேலும் கடினமானதாக மாறிவரும் வேலை சந்தையில், பட்டதாரிகளிடையே வேலையின்மை மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் போதுமான வேலைகள் உருவாக்கப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அறிக்கைப்படி, 15-25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளில், கிட்டத்தட்ட 40% பேருக்கும், 25-29 வயதுக்கு உட்பட்டவர்களில் 20% பேருக்கும் வேலை இல்லை. இது குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்களில் இருக்கும் அளவைவிட மிக அதிகம். ஓர் ஆண்டுக்குள் மிகச் சிலருக்கே நிலையான, சம்பளத்துடன் கூடிய வேலைகள் கிடைக்கின்றன.
மக்களுகு வயதாகும்போது அவர்களின் வேலை சந்தை மாறும் விதமும் இதற்கொரு காரணம். பொருளாதார நிபுணரும், இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியருமான ரோசா ஆபிரகாம், “பலரும் படிப்பை முடித்த பிறகு, ஒரு சிறந்த வேலைக்காகவோ, நிலையான வேலைக்காகவோ அல்லது தாங்கள் உண்மையில் விரும்பும் வேலைக்காகவோ காத்திருக்கிறார்கள். அந்தக் காத்திருப்பு காலத்திலும் அவர்கள் வேலையற்றவர்களாகவே கணக்கிடப்படுகிறார்கள்,” என்கிறார்.
ஒரே குழுவினரை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து கண்காணித்தால், அந்தக் குழுவில் வேலையின்மை விகிதம் குறைவதைக் காணலாம். அவர்கள் தங்கள் 20களின் பிற்பகுதியை எட்டுபோது, அவர்களில் பலர் பணியில் இருப்பார்கள் என்று ஆபிரகாம் கூறினார்.
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
காத்திருப்புத் திறனுடன் சேர்ந்து, “விருப்பத்திற்கும் கிடைக்கும் வாய்ப்புக்கும் இடையே உள்ள பொருத்தமின்மை” காரணமாகவே ஆரம்பக்கால வேலையின்மை ஏற்படுவதாக ஆபிரகாம் வாதிடுகிறார்.
எளிதாகக் கூறுவதெனில், இளைஞர்கள் பெரும்பாலும் சிறந்த வேலைகளையே விரும்புகிறார்கள். ஆனால், அந்த வேலைகள் எளிதில் கிடைப்பதில்லை. அவர்களில் சிலரால் அது கிடைக்கும் வரை காத்திருக்க முடியும் என்பதால், அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் முதல் வேலையை ஏற்றுக்கொள்வதில்லை. காலப்போக்கில், “பக்குவமடைந்து தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, முடிந்ததை, பெரும்பாலும் தனியார் துறையில், ஏற்றுக்கொள்ளும் நிலையை அடைவார்கள்.”
இது புதிய பிரச்னை இல்லை. கடந்த 1969இல் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் மார்க் ப்ளாவ், ‘இந்தியாவில் பட்டதாரி வேலையின்மைக்கான காரணங்கள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்த நூலில், இந்தியாவில் கல்விக்கும் வேலைக்கும் இடையே ஓர் இடைவெளி இருப்பதாகவும், இந்தப் பிரச்னை 1950களில் இருந்தே காணப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கியுள்ளார். மேலும், 1983க்கும் 2023க்கும் இடையில், பட்டதாரி வேலையின்மை விகிதம் சுமார் 35-40% என்ற அளவில் தொடர்ந்து அதிகமாகவே இருந்தது.
மாற்றம் ஏற்பட்டிருப்பது அதன் அளவில்தான். இந்தியா இப்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐம்பது லட்சம் பட்டதாரிகளை உருவாக்குகிறது. ஆனால், 2004-05 முதல் ஆண்டுக்கு சுமார் 28 லட்சம் பேர் மட்டுமே வேலைகளைப் பெற்றுள்ளனர். மேலும் மிகக் குறைவானவர்களே சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெற்றுள்ளனர்.
பெரிய தொழிலாளர் சந்தையும் இதேபோன்றதொரு கலவையான சித்திரத்தையே காட்டுகிறது.
பெருந்தொற்றுக்குப் பிந்தைய இரண்டு ஆண்டுகளில், இந்தியா 8.3 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது மொத்த வேலைவாய்ப்பை 490 மில்லியன்களில் இருந்து 572 மில்லியனாக உயர்த்தியது. இதில் ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
இருப்பினும், இந்தப் பணிவாய்ப்புகளில் ஏறக்குறைய பாதி விவசாய்த் துறையில் இருந்தன. இந்தத் துறையில் பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். மேலும் இது பொதுவாகக் குறைந்த உற்பத்தித் திறன் மற்றும் மறைமுக வேலையின்மையுடன் தொடர்பிடையது.
எளிமையாகச் சொல்வதானால், பொருளாதாரம் வேலைகளை உருவாக்கி வருகிறது. ஆனால், அவை மக்களின் வாழ்வையும் வருமானத்தையும் உண்மையாகவே மேம்படுத்தும் வகையிலான வேலைவாய்ப்புகளாக இல்லை.
பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் இங்கும் நிலைமை பிளவுபட்டுள்ளது.
ஒருபுறம், படித்த மற்றும் திறமையான பெண்களின் ஒரு சிறிய ஆனால் வளர்ந்து வரும் குழுவினர், தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, வணிக சேவைகள் போன்ற துறைகளில் சம்பளத்துடன் கூடிய வேலைகளைப் பெறுகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த மாற்றம் தெளிவாகத் தெரிவதாக ரோசா ஆபிரகாம் கூறுகிறார்.
மறுபுறம், மிகப்பெரிய அளவில், இந்த அதிகரிப்பில் பெரும்பாலானவை சுயதொழில் மற்றும் ஊதியம் பெறாத அல்லது வீட்டிலிருந்து செய்யப்படும் வேலைகளில் உள்ளன. இவை பெரும்பாலும் வீடுகளுக்கு உள்ளோ அல்லது குடும்பத் தொழில்களுக்கு உள்ளேயோ செய்யப்படுகின்றன. இது வாய்ப்பைவிட தேவையையே காட்டுகிறது.
இதன் விளைவாக, புள்ளிவிவரங்களில் சிறப்பாகத் தோன்றக்கூடிய எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன. ஆனால், அதன் தரத்திலுள்ள ஒரு முக்கியமான வேறுபாட்டை அது மறைக்கிறது. அதாவது, மேல்மட்டத்தில் உள்ள ஒரு சிறிய குழுவினருக்கு நல்ல வாய்ப்புகளும் கீழ்மட்டத்தில் உள்ள பலருக்குக் கட்டாயத்தின் பேரில் செய்யப்படும் வேலையும் என நிலவும் வேறுபாட்டை மறைக்கிறது.
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
கல்வி, குறிப்பாக உயர்கல்வி, மிக வேகமாக வளர்ந்துள்ளது. மேலும் இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி தனியார் நிறுவனங்களால் வழிநடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி சில விலைகளையும் கொண்டு வந்துள்ளது.
கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 1991இல் சுமார் 1,600களில் இருந்தது. அது கிட்டத்த 70,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்களில் சுமார் 80% இப்போது தனியார் நிறுவனங்களாகும். 1950-80 வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறையில் அந்த எண்ணிக்கை சமமாகப் பிரிக்கப்பட்டு இருந்ததுடன் ஒப்பிடுகையில், இதுவொரு பெரிய மாற்றமாகும்.
ஆகவே, கல்விக்கான அணுகல் மேம்பட்டுள்ளது, ஆனால் தரம் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் பெரிய பிராந்திய வேறுபாடுகளும் உள்ளன. ஏழை குடும்பங்களில் இருந்து அதிக மாணவர்கள் இப்போது இணைகிறார்கள். ஆனால் பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகள் இன்னும் விலை உயர்ந்தவையாகவே இருக்கின்றன. பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் மூலம் தொழிற்பயிற்சியும் வளர்ந்துள்ளது. ஆனால் அதற்கும் உண்மையான வேலைகளுக்கும் இடையிலான தொடர்பு இன்னும் பலவீனமாகவே இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
வெளிப்படையாகத் தெரியாத அழுத்தங்களுக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.
கடந்த 2017ஆம் ஆண்டில் 38 சதவிகிதமாக இருந்த உயர்கல்வியில் இருந்த இளைஞர்களின் பங்கு, 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 34 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக அறிக்கை கண்டறிந்துள்ளது. அவர்களில் பலர் தங்கள் குடும்பத்தின் வருமானத்திற்கு உதவ வேண்டும் என்று கூறுவதே இதற்குக் காரணம்.
“பட்டதாரிகளையும் உள்ளடக்கி, இந்த ஆண்களில் அதிகரித்து வரும் ஒரு பகுதியினர், குடும்பப் பண்ணைகள் அல்லது தொழில்களில் வேலை செய்வதன் மூலம் குடும்ப வருமானத்திற்கு ஆதரவளிக்கின்றனர். இது முன்பு பெரும்பாலும் பெண்களின் வேலையாக இருந்தது. இதுவொரு கவலைக்குரிய மாற்றம்,” என்கிறார் ஆபிரகாம்.
பட மூலாதாரம், Getty Images
இதைச் சமாளிப்பதற்கான மற்றொரு முக்கியமான வழியாக இடப்பெயர்வு மாறியுள்ளது.
பிகார், உத்தர பிரதேசம் போன்ற ஏழ்மையான மாநிலங்களில் இருந்து இளம் தொழிலாளர்கள், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற பணக்கார, ஆனால் மூப்படைந்த மாநிலங்களுக்கு, வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களைத் தேடி இடம்பெயர்கின்றனர்.
இந்த இடப்பெயர்வு, சில வேறுபாடுகளைக் குறைக்க உதவுகிறது. ஆனால், அந்த வேறுபாடுகள் எவ்வளவு சமமற்றவை என்பதையும் இது காட்டுகிறது. இந்தியாவின் தொழிலாளர் சந்தையில் இன்னும் வாய்ப்புகள் சீரற்ற முறையில் பரவியுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஆக, ஒட்டுமொத்தமாக, இந்தியா கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தியுள்ளது, மேம்படுத்தியுள்ளது, திறனை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த ஆதாயங்களுக்கு ஈடாகப் போதுமான அளவிலான உற்பத்தித் திறன்மிக்க, நல்ல ஊதியம் தரும் வேலைவாய்ப்புகளைப் பெரிய அளவில் இன்னும் உருவாக்கவில்லை.
இந்தியாவின் வளர்ச்சி மாதிரி இந்தப் பிரச்னையை விளக்க உதவுவதாக பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பல நாடுகள் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மூலம் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கின. அதாவது, அவர்கள் பொருட்களைத் தயாரித்து பிற நாடுகளுக்கு விற்றனர். ஆனால், இந்தியாவில், வளர்ச்சி முக்கியமாக திறன் சார்ந்த சேவைத் துறைகளில் இருந்து, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு துறையில் இருந்து வந்துள்ளது. இதனுடம் ஒப்பிடுகையில், ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் துறை பலவீனமாகவே உள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவின் தொழிலாளர் சந்தை சீரற்றதாகிவிட்டது. படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மற்ற அனைவருக்கும் மிகக் குறைவான வழிகளே உள்ளன. அதோடு, காலம் முழுமையாக இந்தியாவுக்கு சாதகமாக இல்லை.
இந்திய மக்கள்தொகையின் சராசரி வயது 28 ஆக இருப்பதாலும், மக்களில் ஏறக்குறைய 70% பேர் உழைக்கும் வயதுடைய பிரிவில் இருப்பதாலும், இந்தியா இன்றும் மிக இளமையான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
ஆனால், இந்தச் சாதகம் அதன் உச்சத்தை எட்டுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

சுமார் 2030ஆம் ஆண்டில் இருந்து மக்கள்தொகை வயதாகும்போது, வேலை செய்யும் வயதுடையோரின் குழுவிலுள்ள இந்தியர்களின் பங்கு குறையத் தொடங்கும். அதாவது, மக்கள்தொகை நம்பிக்கையை அளித்த காலம் முடிவுக்கு வரத் தொடங்கும்.
ஆகவே, வேலைகளை உருவாக்குவது மட்டுமே சவால் இல்லை. சரியான வகையான வேலைகளை, அதிக எண்ணிக்கையிலும் விரைவாகவும் உருவாக்குவதே ஆகும். செயற்கை நுண்ணறிவு, தொடக்க நிலை அலுவலகம் வேலைகளையும் மாற்றக்கூடும். இது பள்ளிப் படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் இந்தியாவின் ஏற்கெனவே பலவீனமான பாதையில் புதிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும்.
“அதிகரித்து வரும் கல்வியறிவு பெற்ற, லட்சியம் கொண்ட இந்தப் பெரிய மக்கள் குழு, தொழிலாளர் சந்தையில் எந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக உள்வாங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே, இந்த மாபெரும், தொடர்ச்சியான மக்கள்தொகை சாதகம் ஒரு பொருளாதார சாதகமாக மாறுமா என்பது தீர்மானிக்கப்படும்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அதற்கான கொள்கைத் தீர்வுகள் ஏற்கெனவே நன்கு அறியப்பட்டவையே. அவை, அதிக சம்பளத்துடன் கூடிய வேலைகள், கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே சிறந்த இணைப்பு, பள்ளிப் படிப்பில் இருந்து வேலைக்குச் செல்லும் வரையிலான தடையற்ற பயணம் மற்றும் தொழிலாளர்களுக்கு வலுவான சமூகப் பாதுகாப்பு.
ஆனால் ஆழமான கேள்வி ஒன்று இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா எத்தகைய பொருளாதாரத்தைக் கட்டமைக்கிறது, அதிகரித்து வரும் லட்சியங்களுக்கு உண்மையான வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒன்றையா? அல்லது லட்சக்கணக்கான மக்களைக் குறைவேலைவாய்ப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மையில் தவிக்க விடக்கூடிய ஒன்றையா?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



