SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
2 மணி நேரங்களுக்கு முன்னர்
“பிரம்மோஸ் வெறும் ஏவுகணை அல்ல. நமது ராணுவ வலிமையின் சின்னம், எல்லையைப் பாதுகாப்பதற்கான தீர்வு” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மே 11 அன்று லக்னோவில் நடந்த, பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதியின் தொடக்க விழாவில் கூறினார்.
இந்த சோதனை வசதி இந்தியாவின் திறன்களை மேலும் வலுப்படுத்தும் என்று ராஜ்நாத் கூறினார். இன்று உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் போது, சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல்களின் போது பிரம்மோஸ் பயன்படுத்தப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்தார்.
பாகிஸ்தான் கப்பலை குறிவைக்கப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை பிரம்மோஸ் என்றும், அவை தற்போது லக்னோவில் தயாரிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
“சமீபத்திய ஆபரேஷன் சிந்தூரில் பிரம்மோஸ் ஏவுகணையின் சக்தியை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அதைப் பார்க்கவில்லை என்றால், பாகிஸ்தானிடம் கேளுங்கள்” என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது கட்டுரையில், ‘பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிறுவல்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்ததாக’ தெரிவித்துள்ளது.
இருப்பினும், பாகிஸ்தானில் செயல்படுத்தப்பட்ட தாக்குதல்களில் எந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்பதை இந்திய ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் பிரம்மோஸ் ஏவுகணையின் பயன்பாடு குறித்து ஒரு விவாதம் உள்ளது.
இந்தச் சூழலில், பிரம்மோஸ் ஏவுகணை என்றால் என்ன? அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
பிரம்மோஸின் சிறப்பு என்ன?
பிரம்மோஸ், உலகின் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாகும்.
இது தரையிலிருந்து குறைந்த உயரத்தில், மிக அதிக வேகத்தில் பாய்கிறது.
அதனால் தான் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மூலம் இதை இடைமறிப்பது எளிதல்ல. இந்த ஏவுகணைகளால் குறுகிய நேரத்தில் நீண்ட தூரத்திற்கு ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும்.
ரேடார் மூலம் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளைக் கண்காணிப்பது எளிதானது அல்ல. ஏனென்றால் அவை நிலப்பரப்புக்கு மிக அருகில், மிகக் குறைந்த உயரத்தில் பறக்கின்றன.
பிரம்மோஸ் ஏவுகணைகளில் நான்கு வகைகள் உள்ளன. இவற்றில் தரையிலிருந்து தரைக்கு (surface-to-surface), வானிலிருந்து தரைக்கு, கடலிலிருந்து தரைக்கு, நீருக்கடியில் இருந்து தரைக்கு ஆகிய ஏவுதல்கள் அடங்கும்.
ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட, மிகவும் மேம்பட்ட சூப்பர்சோனிக் பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
பிரம்மோஸ் ஏவுகணைகளின் வேகம்
பிரம்மோஸ் ஏவுகணைகள் மேக் 2.8 வேகத்தில் பயணிக்கின்றன, இது ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு அதிகம். அதாவது அவை வினாடிக்கு சுமார் 900 மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கிறது. இந்த ஏவுகணை பாயக்கூடிய தூரம் என்பது 300 முதல் 800 கிலோமீட்டர் வரை இருக்கும். அவற்றால் 300 கிலோ வரையிலான ஆயுதங்களை சுமந்துச் செல்ல முடியும்.
சூப்பர்சோனிக் ஏவுகணைகளால் ஒலியை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்க முடியும். ஒரு ஏவுகணை அல்லது விமானம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது என்பதைக் கூற, அதன் வேகம் ஒலியின் வேகத்துடன் ஒப்பிடப்படுகிறது.
ஒலியின் வேகம் மேக் (Mach) என்ற அலகில் அளவிடப்படுகிறது . ஒரு மேக் என்பது தோராயமாக மணிக்கு 1,235 கிலோமீட்டர் ஆகும்.
இந்தியா- ரஷ்யா கூட்டணியின் தயாரிப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் என்பிஓஎம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவான ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்கி வருகிறது.
ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம், இந்தியாவில் 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.
1990களின் நடுப்பகுதியில், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் டாக்டர் சிவதாணு பிள்ளை போன்ற அவரது சகாக்கள் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளில், ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர்.
பிரம்மபுத்திரா மற்றும் மோஸ்க்வா நதிகள் சங்கமிக்கும் இடத்தின் பெயரால் இந்த ஏவுகணைக்கு பிரம்மோஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிப்பதற்காக இரு நாடுகளின் அரசுகளுக்கிடையில் 1998ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஜூலை 9, 1999 அன்று முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ டெல்லியை தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும், அதன் உற்பத்தி தொழிற்சாலைகள் ஹைதராபாத், நாக்பூர், பிலானி, திருவனந்தபுரம் மற்றும் லக்னோவில் அமைந்துள்ளன.
பிரம்மோஸ் தலைமையக வளாகத்தை அப்போதைய ரஷ்ய அதிபர் புதின் திறந்து வைத்தார்.
இந்தியா தனது முதல் பிரம்மோஸ் ஏவுகணையை ஜூன் 12, 2001 அன்று சோதித்தது.
இது 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கடற்படையில் உள்ளது. 2007இல், இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.
அனைத்து விதமான வானிலைகளிலும், பகல் மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்தப்படுவதற்கு பிரம்மோஸ் உருவாக்கப்பட்டது.
புவிசார் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, பிரம்மோஸை 21ஆம் நூற்றாண்டின் ‘பிரம்மாஸ்திரம்’ என்று ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின்’ நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ.எஸ். பிள்ளை, 2023ஆம் ஆண்டு பிரம்மோஸ் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் போது தெரிவித்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
தற்போது லக்னோவில் உள்ள இந்த மையம், சூப்பர்சோனிக் பிரம்மோஸ் கப்பல் ஏவுகணைகளை உருவாக்கி சோதிப்பது மட்டுமல்லாமல், இலகுவான, எதிர்கால பயன்பாட்டு ஏவுகணைகளையும் உருவாக்கி உற்பத்தி செய்யும்.
இது வருடத்திற்கு 80 முதல் 100 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வடிவமைத்து தயாரிக்கும். மேலும், இது 100 முதல் 150 அடுத்த தலைமுறை வகை ஏவுகணைகளையும் உற்பத்தி செய்யும்.
“இன்று, சிறிய பீரங்கிகள் முதல் பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணை அமைப்புகள் வரை மிகப்பெரிய ஏவுகணைகளை கூட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். நாம் நமது பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுடன் புதிய கூட்டாண்மைகளையும் மேம்படுத்தி வருகிறோம், இது சர்வதேச அரங்கில் இந்தியாவை பலப்படுத்துகிறது,” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
பிரம்மோஸ் ஏவுகணைக்கான முதல் வெளிநாட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா இந்த ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு வழங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பிரம்மோஸ் தொடர்பாக தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளுடன் கலந்துரையாடல்கள் நடந்ததாக செய்திகள் வந்துள்ளன. பிரம்மோஸ்.காம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அர்ஜென்டினா போன்ற சில நாடுகள் இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்தபோது, இந்தியா பிரம்மோஸை ஏவினால், பாகிஸ்தானால் அதைத் தடுக்க முடியாது என்ற கருத்துகள் எழுந்துள்ளன.
பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியா ஒருமுறை தனது பிரம்மோஸ் ஏவுகணைகளில் ஒன்றை பாகிஸ்தானை நோக்கி தவறுதலாக ஏவியதாக அறிவித்தது. இந்த சம்பவம் மார்ச் 2022 இல் நடந்தது.
“இந்தியாவிடம் போர்த்திறன் சார்ந்த மற்றும் மரபுசார் ஆயுதங்கள் (conventional variant) என இரண்டும் உள்ளன. உதாரணமாக, அக்னி ஏவுகணை மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை, மரபுசார் ஆயுத வகையாகும். பாகிஸ்தான் வைத்திருக்கும் கௌரி மற்றும் பாபர் ஏவுகணைகளுடன் ஒப்பிடும்போது, இந்திய ஏவுகணைகள் தாக்குதல் திறனில் மிகவும் மேம்பட்டவை. இந்தியாவின் தற்காப்பு அமைப்பும் இப்போது நிறைய மேம்பட்டுள்ளது,” என்று இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளரான ராகுல் பேடி கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU