Home தேசிய national tamil ஆர்டெமிஸ் 2: நாசாவின் நிலவுப் பயணம் எப்போது தொடங்கும்? விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள்?

ஆர்டெமிஸ் 2: நாசாவின் நிலவுப் பயணம் எப்போது தொடங்கும்? விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள்?

5
0

SOURCE :- BBC NEWS

ஆர்டெமிஸ் 2: நாசாவின் நிலவுப் பயணம் எப்போது தொடங்கும்? விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள்?

பட மூலாதாரம், NASA

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.

இந்தப் பயணம், ‘ஆர்டெமிஸ் 2’ என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 10 நாட்கள் நீடிக்கும். இதில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், இதற்கு முன் எந்தவொரு மனிதரும் சென்றிராத அளவுக்கு விண்வெளியின் ஆழத்துக்குப் பயணம் செய்வார்கள்.

அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிக்கு, இந்தப் பயணம் அடித்தளம் அமைக்கும்.

ஆர்டெமிஸ் 2 எப்போது விண்ணில் ஏவப்படும்?

ஏப்ரல் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாள் இந்தப் பயணம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த பயணங்கள் தாமதமாயின.

2024 டிசம்பரில், அந்த மாத இறுதிக்குள் ஏவ வேண்டும் என்று நாசா காலக்கெடு நிர்ணயித்தது.

‘வெட் டிரஸ் ஒத்திகை’ எனப்படும் ஒரு சோதனை பாதியிலேயே நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், பிப்ரவரி மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஏவுதல் ரத்து செய்யப்பட்டது.

ஏவுதள கோபுரத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடையிலான இணைப்பில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் கசிந்ததே இதற்குக் காரணமாக அமைந்தது.

அதேபோல, ஹீலியம் வாயுக் கசிவு கண்டறியப்பட்டதால், மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த முயற்சியும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, இந்தக் கோளாறுகளைச் சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாமதத்திற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு ஏற்ற வகையில், நிலவு விண்வெளியில் சரியான இடத்தில் அமைந்திருக்க வேண்டும்.

அதன் காரணமாக, ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சுமார் ஒரு வாரம் மட்டுமே ராக்கெட்டை ஏவுவதற்கான வாய்ப்பு அமைகிறது. அந்த ஒரு வார காலத்திற்குப் பிறகு, சுமார் மூன்று வாரங்களுக்கு ராக்கெட்டை ஏவுவதற்கான வாய்ப்புகள் ஏதும் அமைவதில்லை.

ஆர்டெமிஸ் -2: நாசாவின் நிலவுத் திட்டம் எப்போது ஏவப்படும்? அதில் யாரெல்லாம் செல்கிறார்கள்?

ஆர்டெமிஸ் குழு நிலவுப் பயணத்தின்போது என்ன செய்வார்கள்?

ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் பயணிக்கப் போகும் குழுவில் நான்கு பேர் உள்ளனர். அந்தக் குழுவில் நாசா தளபதி ரீட் வைஸ்மேன், விமானி விக்டர் க்ளோவர், திட்ட நிபுணர் கிறிஸ்டினா கோச் ஆகியோரும், கனேடிய விண்வெளி மையத்தைச் சேர்ந்த இரண்டாவது திட்ட நிபுணரான ஜெரிமி ஹன்செனும் இருப்பார்கள்.

நாசாவின் பிரமாண்டமான எஸ்.எல்.எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தில் மனிதர்கள் பயணிக்கும் முதல் பயணமாக இது அமைகிறது.

விண்கலம் பாதுகாப்பாக சுற்றுப்பாதையை அடைந்தவுடன், ஓரியன் விண்கலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விண்வெளி வீரர்கள் சோதிப்பார்கள். எதிர்கால நிலவு தரையிறக்கங்களுக்காக விண்கலத்தை வழிநடத்துவதற்கும் சீரமைப்பதற்கும் பயிற்சி செய்ய, விண்கலத்தை புவியின் சுற்றுப்பாதையில் குழுவினரே சுயமாக இயக்குவதும் இதில் அடங்கும்.

பின்னர் அவர்கள் ஓரியன் விண்கலத்தை பரிசோதிப்பதற்காக, நிலவையும் தாண்டி, விண்வெளியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு புள்ளிக்குப் பயணிப்பார்கள்.

எளிதாகக் கூறுவதெனில், விண்கலத்தில் உள்ள காற்றையும் நீரையும் வழங்கும் உயிர் ஆதரவு அமைப்பு, உந்துவிசை, மின்சாரத்தை வழங்கும் ஆற்றல் அமைப்பு, திசையை அறிந்து பாதுகாப்பாகப் பயணிக்க உதவும் வழிசெலுத்தல் அமைப்பு ஆகியவை சரியாக இயங்குகின்றனவா என்பதைச் சோதிப்பார்கள்.

விண்வெளி வீரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுபவர்களாகவும் செயல்பட்டு, விண்வெளியின் நெடுந்தூரப் பகுதியில் இருந்து தரவுகளையும் படங்களையும் பூமிக்கு அனுப்புவார்கள்.

மேலும் ஈர்ப்பு விசையற்ற நிலையில் ஒரு சிறிய அறையில் அவர்கள் பணிபுரிவார்கள். பூமியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் இருக்கும் பகுதியைவிட கதிர்வீச்சு அளவுகள் அதிகமாக இருந்தாலும், பாதுகாப்பான அளவிலேயே இருக்கும்.

பூமிக்குத் திரும்பும்போது, விண்வெளி வீரர்கள் வளிமண்டலத்தின் வழியே ஒரு சீரற்ற பயணத்தை மேற்கொண்டு, பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் தரையிறங்குவார்கள்.

ஆர்டெமிஸ் 2 நிலவில் தரையிறங்குமா?

இல்லை. 2028இல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ் 4 திட்டத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

அதற்கு முன்னதாக, நாசா 2027இல் ஆர்டெமிஸ் 3 என்ற மற்றொரு மனிதர்கள் பயணிக்கும் சோதனைப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம், ஓரியன் விண்கலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலவுத் தரையிறங்கிகளுடன் இணைவதை ஒத்திகை பார்க்கவும், புதிய விண்வெளி உடைகள் சரியான நேரத்தில் தயாராக இருந்தால் அவற்றைச் சோதித்துப் பார்க்கவும் முடியும்.

ஆர்டெமிஸ் திட்டத்திற்காக, ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் மற்றும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு விண்கலம் என இரண்டு வர்த்தகத் தரையிறங்கிகளை நாசா தேர்வு செய்துள்ளது. எந்தெந்த விண்கலங்கள் எந்தெந்த திட்டங்களில் பயன்படுத்தப்படும் என்பது திட்டம் தொடங்கும் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

ஆர்டெமிஸ் 4 இறுதியாக ஏவப்படும்போது, விண்வெளி வீரர்கள் நிலவின் தென் துருவத்தை நோக்கிச் செல்வார்கள்.

அதற்குப் பிறகு, நிலவில் மனிதர்கள் தொடர்ந்து தங்குவதற்கான திறனை மேம்படுத்தும் நோக்கில், 2028இன் பிற்பகுதியில் ஆர்டெமிஸ் 5 திட்டத்தின் மூலம் மற்றொரு நிலவுப் பயணத்தையும் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

அதோடு, ஆர்டெமிஸ் பயணங்கள், நிலவைச் சுற்றி வரக்கூடிய ஒரு சிறிய விண்வெளி நிலையமான கேட்வேவை உருவாக்கும். அதைத் தொடர்ந்து, பல நிலவுத் தரையிறக்கங்கள், கேட்வேவில் கூடுதல் தொகுதிகள் சேர்க்கப்படுதல், நிலவின் மேற்பரப்பை ஆராயப் புதிய ரோபோ ரோவர்கள் அனுப்பப்படுதல் ஆகிய செயல்பாடுகள் நடைபெறும்.

மேலும் பல்வேறு நாடுகள் இந்த முயற்சியில் இணையக்கூடும். இதன் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் நிலவிலும் அதைச் சுற்றியும் வாழ்ந்து பணியாற்றுவார்கள்.

ஆர்டெமிஸ் -2: நாசாவின் நிலவுத் திட்டம் எப்போது ஏவப்படும்? அதில் யாரெல்லாம் செல்கிறார்கள்?

கடைசி நிலவுப் பயணம் எப்போது நடைபெற்றது?

மனிதர்கள் கடைசியாக அப்பல்லோ 17 திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணித்தார்கள். அது 1972 டிசம்பரில் நிலவில் தரையிறங்கி, அதே மாதத்தின் பிற்பகுதியில் பூமிக்குத் திரும்பியது.

அப்பல்லோ திட்டத்தின்போது 24 விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 12 பேர் அதன் மேற்பரப்பில் நடந்துள்ளனர். நிலவுக்குச் சென்ற 24 பேரில், ஐந்து பேர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர்.

அமெரிக்கா முதன்முதலில், 1960களில் சோவியத் யூனியனை தோற்கடித்து தனது புவிசார் அரசியல் மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் நிலவுக்குச் சென்றது. அந்த இலக்கு அடையப்பட்டவுடன், எதிர்கால நிலவுப் பயணங்களுக்கான நிதி குறைந்ததோடு, அரசியல் ஆர்வமும் மக்களின் ஈடுபாடும் குறைந்தன.

ஆர்டெமிஸ் திட்டம், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப வேண்டுமென்ற விருப்பத்தில் இருந்து உருவானது. ஆனால் இந்த முறை, புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, நீண்ட கால இருப்புக்கு உகந்த வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப பிற நாடுகள் திட்டமிட்டுள்ளனவா?

நிலவில் 2030களில் மனிதர்களைத் தரையிறக்க வேண்டுமென்ற லட்சியத்தை வேறு பல நாடுகளும் கொண்டுள்ளன.

ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் பிற்கால ஆர்டெமிஸ் திட்டங்களில் இணையவுள்ளனர். அதோடு ஜப்பானும் தனக்கான இடங்களைப் பெற்றுள்ளது.

சீனா நிலவுக்கு வீரர்களை அனுப்பத் தனது சொந்த விண்கலத்தை உருவாக்கி வருகிறது. 2030க்குள் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் முதல் நாடாகத் தரையிறங்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

ரஷ்யா தனது விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி, 2030 முதல் 2035ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அங்கு ஒரு சிறிய தளத்தை அமைப்பது குறித்து தொடர்ந்து பேசிவருகிறது.

ஆனால் உண்மையில், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினமாக அமையலாம். ரஷ்யா தற்போது சர்வதேச தடைகள், போதிய நிதியின்மை, தொழில்நுட்ப சிக்கல்கள் போன்ற பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதே இதற்கு முக்கியக் காரணம்.

இந்தியாவும் ஒரு நாள் தனது சொந்த விண்வெளி வீரர்கள் நிலவில் நடப்பத்கைக் காண வேண்டுமென்ற லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இஸ்ரோ சுமார் 2040ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டுமென்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்தியா, பூமியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால், விண்வெளியின் தொலைதூரப் பகுதிகளுக்கு மனிதர்களை அனுப்பி, அதற்கு அடுத்தபடியாக நிலவையும் அடைய விரும்புகிறது.

கூடுதல் தகவல்கள்: கெவின் சர்ச் மற்றும் எமிலி செல்வதுரை

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU