SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
1986-ஆம் ஆண்டின் குளிர்கால நாட்கள் அவை. ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பாகிஸ்தானை ஒட்டிய இந்தியாவின் மேற்கு எல்லை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர்.
ராஜஸ்தானை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு சாலையிலும் ராணுவ வாகனங்களின் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இரயில்வே வேகன்கள் ஆயுதங்கள், டாங்கிகள் மற்றும் வாகனங்களை எல்லைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தன.
‘ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ்’ தொடங்கிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த அளவிலான இராணுவ நடவடிக்கையை இதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை.
புரோபல் தாஸ்குப்தா தனது அண்மையில் வெளியான ‘ஜெனரல் பிராஸ்டேக்ஸ், தி சுந்தர்ஜி ஸ்டோரி’ புத்தகத்தில் எழுதுகிறார்: “அதே நேரத்தில் பாகிஸ்தானும் ‘சஃப்-ஷிகன்’ மற்றும் ‘ஃபிளையிங் ஹார்ஸ்’ என இரண்டு வகையான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது. ‘சஃப்-ஷிகனில்’ பாகிஸ்தான் இராணுவத்தின் தெற்குப் பகுதியின் ரிசர்வ் வீரர்கள் பங்கேற்றனர், இது ராஜஸ்தான் எல்லையில் உள்ள பகவல்பூர்-மாரோட் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தது. ‘ஃபிளையிங் ஹார்ஸில்’ பாகிஸ்தானின் வடக்குப் பகுதியின் ரிசர்வ் வீரர்கள் பங்கேற்றனர்.”
“பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இந்திய வீரர்கள் எல்லை நோக்கி நகர்ந்தது அவர்களைக் கவலையடையச் செய்தது.”
பட மூலாதாரம், Penguin
சுந்தர்ஜி உருவாக்கிய திட்டம்
ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ் என்பது அன்றைய ராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜியின் சிந்தனையில் உருவானது. சுந்தர்ஜி அமெரிக்க ராணுவத்தின் FM 100-5 வான் மற்றும் நிலப் போர் கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அதை மனதில் வைத்தே அவர் ‘மெக்கானைஸ்டு இன்ஃபன்ட்ரி ரெஜிமென்ட்’ (Mechanized Infantry Regiment) உருவாக்கினார். அவர் இராணுவத்தின் சில தரைப்படை பிரிவுகளை மறுசீரமைக்கப்பட்ட சமவெளி தரைப்படை பிரிவுகளாக மாற்றினார்.
சுந்தர்ஜி இந்தப் பயிற்சி நேட்டோவின் (‘ஆட்டம் ஃபோர்ஸ்’) ராணுவப் பயிற்சியை விடப் பெரியதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஐரோப்பாவில் நடந்த அந்தப் பயிற்சியில் சுமார் பன்னிரண்டரை ஆயிரம் நேட்டோ வீரர்கள் பங்கேற்றனர். அவர் அதைவிட நான்கு மடங்கு வீரர்களை இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்த விரும்பினார்.
ராணுவ வரலாற்றாசிரியர் ஏர் வைஸ் மார்ஷல் அர்ஜுன் சுப்பிரமணியம் தனது ‘இந்தியாஸ் வார்ஸ் 2 (1972-2020)’ புத்தகத்தில் எழுதுகிறார்: “சுந்தர்ஜி ஒரு பெரிய அளவிலான வான்-நிலப் பயிற்சிக்குத் திட்டமிட்டிருந்தார், அது மூன்று கட்டங்களாக முடிக்கப்பட வேண்டும். அதன் இறுதி ராஜஸ்தான் செக்டரில் ராணுவத்தின் பிரமாண்டமான அணிவகுப்புடன் முடிவடைய வேண்டும். இந்தப் பயிற்சியில் ராணுவத்தின் 1 மற்றும் 2-வது கார்ப்ஸ் ஈடுபடுத்தப்பட்டன. இதன் மையப்புள்ளி ராஜஸ்தான் மற்றும் குஜராத் செக்டராக இருந்தது. இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம், இரவின் இருளில் சிறிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்திய ராணுவம் எவ்வளவு தூரம் மற்றும் எவ்வளவு வேகமாக முன்னேற முடியும் என்பதைக் கண்டறிவதாகும்.”
பட மூலாதாரம், Penguin
டி-72 டாங்கிகளின் வெற்றிகரமான சோதனை
லெப்டினன்ட் ஜெனரல் பிரவீன் பக்ஷி அக்காலத்தில் டி-72 டாங்கிகளின் ரெஜிமென்ட்டான ‘ஸ்கின்னர் ஹார்ஸில்’ மேஜராக இருந்தார்.
“எங்கள் டாங்கிகள் இரவில் 60 கிலோமீட்டர் தூரத்தை எளிதாகக் கடந்தன. சாலைகளில் அவை பகலில் 800 கிலோமீட்டர் வரை சென்றன. டி-72 டாங்கிகளின் திறனை அதிகபட்சமாகப் பயன்படுத்திய போதிலும் அவை எந்தத் தடையையும் சந்திக்கவில்லை. ‘நைட் விஷன்’ உபகரணங்களின் குறைபாடு மட்டுமே கண்டறியப்பட்டது. நாங்கள் டாங்கிகளில் உண்மையான ஆயுதங்களை நிரப்பவில்லை, எனவே போருக்குச் செல்லும் கேள்விக்கே இடமில்லை.”
“இதன் நோக்கம் எதிரிகளுக்கு நாம் எதிர்காலப் போருக்கு எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்டுவது மட்டுமே. இந்தியாவின் இந்த நடவடிக்கை ராவல்பிண்டி மற்றும் வாஷிங்டனில் அபாய எச்சரிக்கையை எழுப்பியது; பாகிஸ்தான் ராணுவம் இதற்குப் பதிலடியாக பஞ்சாப் மற்றும் ஜம்மு எல்லையை நோக்கித் தனது வீரர்களை நகர்த்தியது.”
பாகிஸ்தானின் தெற்குப் பகுதியின் ரிசர்வ் வீரர்கள் பகவல்பூரில் தங்கள் பயிற்சியை முடித்த பிறகும் தங்கள் முகாம்களுக்குத் திரும்பவில்லை என்றும் போருக்குத் தயாரான நிலையில் இருப்பதாகவும் இந்திய உளவுத்துறைக்குத் தகவல்கள் வரத் தொடங்கின.
பட மூலாதாரம், Getty Images
எல்லைக் கோட்டைத் தாண்டிய போர் விமானங்கள்
இந்தப் பயிற்சியில் 1986-இல் இந்திய விமானப்படையின் ஒரே மின்னணுப் போர்முறை ஸ்குவாட்ரனான 35-வது ஸ்குவாட்ரனும் பங்கேற்றது. இதில் கான்பெரா (Canberra) மற்றும் மிக்-21 போர் விமானங்கள் இருந்தன.
1986 தொடக்கத்தில் முழு ஸ்குவாட்ரனும் ஹரியானாவின் அம்பாலா மற்றும் ராஜஸ்தானின் பிகானேர் அருகிலுள்ள ‘நால்’ பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆபரேஷன் பிராஸ்டேக்ஸின் போது இந்த விமானங்கள் ஜாகுவார் மற்றும் மிக்-27 விமானங்களின் பயணங்களுக்குத் துணையாக இரு மாதங்களைச் செலவிட்டன.
“பலமுறை இந்த விமானங்கள் பாகிஸ்தான் வான் பாதுகாப்புத் தயார்நிலையைச் சோதிப்பதற்காக வேண்டுமென்றே எல்லைக் கோட்டைத் தாண்டின. ரேடார் எச்சரிக்கை ரிசீவர்களில் ‘பீப்’ சத்தம் கேட்டவுடனேயே அவை மீண்டும் இந்திய எல்லைக்குள் திரும்பிவிடும். இந்த எலி-பூனை விளையாட்டு சுமார் இரண்டு மாதங்கள் நீடித்தது.”
“ஜாகுவார் போர் விமானங்களின் இத்தகைய பல பயணங்களுக்கு ஃப்ளைட் லெப்டினன்ட் ஆர்.கே.பதௌரியா தலைமை தாங்கினார், அவர் பின்னாளில் இந்திய விமானப்படைத் தளபதியானார். அக்காலத்தில் அவர் ‘சோட்டு’ என்று பிரபலமாக இருந்தார் மற்றும் இத்தகைய பயணங்களில் பங்கேற்ற மிக இளைய அதிகாரி ஆவார். இந்தியா தன் மீது தாக்குதல் நடத்தப் போகிறது என்று பாகிஸ்தான் சந்தேகித்தது,” என ஏர் வைஸ் மார்ஷல் அர்ஜுன் சுப்பிரமணியம் எழுதுகிறார்.
பட மூலாதாரம், Harper Collins
காந்தி பாஜ்பாய் தனது ‘பிராஸ்டேக்ஸ் அண்ட் பியண்ட்’ புத்தகத்தில் எழுதுகிறார்: “1983-84 இல் பாகிஸ்தானின் அப்போதைய துணை ராணுவத் தளபதி ஜெனரல் கே.எம். ஆரிஃப் மற்றும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் வைத்யா இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இந்தியா அல்லது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பெரிய ராணுவப் பயிற்சி மேற்கொண்டால் அது பற்றி ஒருவருக்கொருவர் தகவல் தெரிவிக்க வேண்டும். ஜெனரல் சுந்தர்ஜிக்கு இந்த உடன்பாடு பற்றித் தெரியாது. இந்தக் காலகட்டத்தில் இரு நாடுகளின் மிலிட்டரி ஆபரேஷன் இயக்குநர்களுக்கு இடையேயான ‘ஹாட் லைன்’ (Hotline) வேலை செய்வதை நிறுத்தியது. இரு தரப்பிலிருந்தும் பல கேள்விகள் எழுந்தன, ஆனால் அவற்றைத் தீர்க்க எவருமில்லை.”
“ஒருமுறை பிரதமர் ராஜீவ் காந்தி அமைச்சரவைக் கூட்டத்திற்காக அமைச்சர்களை அழைக்க விமானத்தை அனுப்பியபோது, பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து ஆலோசிக்கவே அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டதாக பாகிஸ்தான் அதிபர் ஜியா கருதினார். ஏனெனில் அந்த நேரத்தில் இந்திய வீரர்கள் ஏற்கனவே பாகிஸ்தான் எல்லையில் இருந்தனர்,” என புரோபல் சென்குப்தா எழுதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானும் எல்லைக்கு வீரர்களை அனுப்பியது
பாகிஸ்தானும் இதற்குப் பதிலடியாகத் தன் வீரர்களை இந்தியப் பஞ்சாப் பகுதியை நோக்கி அனுப்பியது. சில நாட்களிலேயே இரு தரப்பும் போருக்குத் தயாராவது போலத் தெரிந்தது.
ஷுஜா நவாஸ் தனது ‘கிராஸ்டு ஸ்வார்ட்ஸ், பாகிஸ்தான் இட்ஸ் ஆர்மி அண்ட் தி வார் விதின்’ புத்தகத்தில் எழுதுகிறார்: ” பிராஸ்டேக்ஸ் மூலம் இந்தியா பாகிஸ்தானின் வடக்கே பகவல்பூர் மற்றும் தெற்கே கைர்பூர் நகரங்களைத் தனிமைப்படுத்தத் திட்டமிடுகிறது என்பதே ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தின் எண்ணமாக இருந்தது, இந்தியா சிந்து மாகாணத்திற்குள் நுழைந்து பாகிஸ்தானை இரண்டு துண்டுகளாகப் பிரிக்கவும், கஹூட்டாவில் உள்ள அதன் அணு உலையை அழிக்கவும் முயல்வதாக அச்சம் நிலவியது.”
பட மூலாதாரம், Getty Images
பயிற்சிக்காக ரெட் மற்றும் ப்ளூ குழுக்கள் உருவாக்கப்பட்டன
இந்த ராணுவப் பயிற்சிக்காக ராணுவப் பயிற்சியின் இயக்குநர் ஜெனரல் ரோட்ரிக்ஸ் மற்றும் அவரது குழுவினர் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். புரோபல் தாஸ்குப்தா எழுதுகிறார்: “ரெட் மற்றும் ப்ளூ என இரண்டு படைகள் உருவாக்கப்பட்டன. ரெட் குழு பாகிஸ்தான் ராணுவத்தின் பாத்திரத்தை ஏற்றது. இதன் தளபதியாக மஹு ராணுவக் கல்லூரியின் லெப்டினன்ட் ஜெனரல் வி.என். சர்மா நியமிக்கப்பட்டார். இந்தப் பயிற்சியில் இந்தியாவின் மொத்தம் 4 லட்சம் வீரர்கள், பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் பங்கேற்றன.”
1971 போருக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டு வீரர்களும் இவ்வளவு நெருக்கமாக வந்தது இதுவே முதல் முறை. உலகம் முழுவதும் பதற்றமும் அச்சமும் நிலவியது. பாகிஸ்தானின் பதிலடியை வைத்து இந்தியா அதன் மீது தாக்குதல் நடத்த ஒரு சாக்கைத் தேடுவதற்காகவே சுந்தர்ஜி பாகிஸ்தானைத் தூண்டிவிடுவதாக மேற்கத்திய ஆய்வாளர்கள் கருதினர்.
பட மூலாதாரம், Getty Images
ரயில் மற்றும் சாலைத் துறையின் பங்கு
சுந்தர்ஜி பிராஸ்டேக்ஸ் திட்டத்தை உருவாக்கியபோது, ரயில்வே மற்றும் சாலைகளின் அதிகப்படியான பயன்பாட்டால் இந்தச் சேவைகள் முடங்கிவிடும் என்று கவலை தெரிவிக்கப்பட்டது.
“ரயில்வே அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர் ஆகியோர் ராணுவத் தளவாடங்கள் மற்றும் வீரர்களைக் கொண்டு செல்வதால் தங்கள் அமைச்சகங்களுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பைக் கண்டு பிரதமர் ராஜீவ் காந்தி ராணுவத் திரட்டலின் அளவைச் சற்று குறைத்தார். ஆனால் பிராஸ்டேக்ஸின் ராணுவ மற்றும் அரசியல் நோக்கங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.”
பட மூலாதாரம், Getty Images
இந்தப் பயிற்சியைக் கண்காணிக்க ஜெனரல் சுந்தர்ஜி, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அருண் சிங்குடன் பிகானேர் அருகிலுள்ள சர்தார்ஷஹரில் பல வாரங்கள் தங்கியிருந்தார். லெப்டினன்ட் ஜெனரல் பிலிப் கம்போஸ் அப்போது அங்கு மேஜராகப் பணியாற்றினார்.
“ஒரு நாள் சுந்தர்ஜி நிலத்தடி ஆபரேஷன் அறைக்குத் தகவல் தெரிவிக்காமல் வந்துவிட்டார். நான் சுமார் 30 நிமிடங்கள் தளபதியிடம் நடவடிக்கைகள் குறித்து விளக்கினேன். திடீரென்று அவர் தலையை ஆட்டிவிட்டு வெளியே நின்ற ஹெலிகாப்டரில் ஏறச் சென்றுவிட்டார். அவருக்கு எனது விளக்கம் பிடித்ததா, இல்லையா என்று எனக்குப் புரியவில்லை. அவர் ஹெலிகாப்டரில் ஏறும்போது மேஜர் ஜெனரல் ஹர்வந்த் சிங்கிடம் கேட்டார், ‘விளக்கம் அளித்ததற்காக உங்கள் மேஜருக்கு நான் சபாஷ் (பாராட்டு) சொன்னேனா?” என கம்போஸ் கூறுகிறார்.
“ஹர்வந்த் ‘இல்லை சார்’ என்று பதிலளித்தார். சுந்தர்ஜி கூறினார், ‘அந்த இளம் அதிகாரியின் முதுகில் தட்டிக் கொடுக்காமல் செல்வது சரியாக இருக்காது.’
நான் அறைக்குள் சக ஊழியர்களிடம் எனது விளக்கம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். “நான் கொடுத்த விளக்கம் சரியாக இருந்ததா என எனது சக வீரர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது பின்னால் இருந்து ‘நிச்சயமாகச் சரியாக இருந்தது’ என்ற குரல் கேட்டது. எனக்குப் பின்னால் இருந்த கதவு திறந்தது, அனைவரும் ஜெனரல் சுந்தர்ஜியைப் பார்த்தோம்; அவர் ஹெலிகாப்டரிலிருந்து மீண்டும் ஆபரேஷன் அறைக்கு வந்து எங்கள் அனைவருக்கும் ‘சபாஷ்’ (பாராட்டு) கூறினார்.”
பட மூலாதாரம், Getty Images
ஜெனரல் சுந்தர்ஜி மற்றும் ஜெனரல் ஹூன் இடையே கருத்து வேறுபாடு
அப்போதைய மேற்கு கமாண்ட் தலைவர் மற்றும் ஆபரேஷன் பிராஸ்டேக்ஸின் முக்கியப் பகுதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் பி.என். ஹூன், பிராஸ்டேக்ஸின் நோக்கம் பாகிஸ்தானுக்கு எதிராகப் போரைத் தொடங்குவதுதான் என்று நம்புகிறார்.
சுந்தர்ஜியின் விமர்சகராக இருந்த ஹூன், தனது ‘அன்மாஸ்கிங் சீக்ரெட்ஸ் ஆஃப் டர்புலன்ஸ்’ புத்தகத்தில் “நாட்டின் போக்குவரத்து அமைப்பு திரட்டப்பட்ட விதம், போருக்கான தயாரிப்புகளில் மட்டுமே திரட்டப்படும் விதத்தில் இருந்தது. பிரதமர் மற்றும் இந்திய அரசுக்கு ராணுவப் பயிற்சியின் விவரங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று நான் சுந்தர்ஜியிடம் கேட்டபோது, அவர் எரிச்சலுடன் பதிலளித்தார்: ‘மேற்கு கமாண்ட் தளபதி என்ற முறையில், அரசு அல்லது பிரதமருக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று என்னிடம் கேட்பது உங்கள் வேலை அல்ல. அது என் வேலை. இது தொடர்பாகத் தேவையானவை அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன’.” என எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பிரதமர் ராஜீவ் காந்தியிடம் உண்மை தெரிவிக்கப்படவில்லை
இந்தப் பயிற்சி போர் போன்ற சூழலாக மாறியது பிரதமருக்குத் தெரியாது என்று ஹூன் தனது புத்தகத்தில் கூறுகிறார்.
ஹூன் எழுதுகிறார்: “நான் ஜனவரி 15-ஆம் தேதி டெல்லியில் நடந்த ராணுவ தின அணிவகுப்பில் இருந்தேன். அப்போது ராஜீவ் காந்தி என்னிடம் வந்து, ‘மேற்கு கமாண்ட் எப்படிச் செயல்படுகிறது?’ என்று கேட்டார். ‘எல்லாம் திட்டப்படி நடக்கிறது, வீரர்கள் போர்முனை நோக்கிச் செல்கின்றனர்’ என்றேன். ராஜீவ் என்னிடம், ‘போர்முனை என்றால் என்ன அர்த்தம்? நாம் எப்படிப் போருக்குச் செல்ல முடியும்?’ என்று கேட்டார். எங்கோ ஏதோ தவறு நடந்திருப்பதாக நான் கருதுகிறேன். பிரதமருக்கு இந்தப் பயிற்சி பற்றி முழுமையான தகவல் இல்லை.”
“நான் பாலைவனத்திற்குச் சென்றபோது, மிலிட்டரி ஆபரேஷன் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ரவி மகாஜனிடமிருந்து போன் வந்தது. சுந்தர்ஜி என்னைத் துரிதமாக டெல்லியில் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். நான் டெல்லி சென்றபோது, பயிற்சியின் திசையைக் கிழக்கிலிருந்து மேற்கிற்குப் பதிலாக வடக்கிலிருந்து தெற்கிற்கு மாற்றுமாறு சுந்தர்ஜி கூறினார். அதன் பிறகு வீரர்கள் பிகானேருக்குத் திரும்ப அழைக்கப்பட்டனர்.”
காந்தி பாஜ்பாய் எழுதுகிறார்: “ஆபரேஷன் பிராஸ்டேக்ஸுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் தனது ராணுவப் பயிற்சியைத் தொடர்ந்தபோது, ராஜீவ் காந்திக்குத் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று ராணுவத் தளபதிகளும் பாதுகாப்பு இணையமைச்சரும் கூட்டாக முடிவெடுத்தனர். ராஜீவ் காந்தி அந்தமானில் விடுமுறையில் இருந்ததே இதற்குக் காரணம். பிரதமருக்குத் தகவல் தெரிவித்து அவர் பாதியிலேயே டெல்லி திரும்பினால் நிலைமை தேவையில்லாமல் மோசமடையக்கூடும் என்று அவர்கள் கருதினர். பிரதமரிடம் இது பற்றிச் சொல்லாதது ஒருவகையில் முடிவெடுப்பதில் ஏற்பட்ட தவறு.”
பட மூலாதாரம், Getty Images
அருண் சிங் கொடுத்த விலை
ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்த நட்வர் சிங் தனது சுயசரிதையான ‘ஒன் லைஃப் இஸ் நாட் எனஃப்’ புத்தகத்தில் எழுதுகிறார், “ஒருமுறை கூட்டத்தில் பிரதமர், நான், வெளியுறவு அமைச்சர் நாராயண் தத் திவாரி ஆகியோர் இருந்தோம். கூட்டத்திற்குப் பிறகு என்னையும் திவாரியையும் இருக்குமாறு ராஜீவ் சைகை செய்தார். பின் திவாரியிடம் திரும்பி, ‘எனது பாதுகாப்பு இணையமைச்சரை நான் என்ன செய்வது?’ என்று கேட்டார். வெளியுறவு அமைச்சர் என்னை பார்த்து அமைதியாக இருந்தார்.”
“பின் ராஜீவ் என்னிடம் திரும்பினார். நான் சொன்னேன், ‘அவரை நீங்கள் நீக்க வேண்டும்.’ ராஜீவ் ‘அருண் சிங் என் நண்பர்’ என்றார். நான் சற்று கண்டிப்புடன் சொன்னேன், ‘சார், நீங்கள் டூன் பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் அல்ல. நீங்கள் இந்தியாவின் பிரதமர், பிரதமருக்கு நண்பர்கள் கிடையாது.’ சில நாட்களுக்குப் பிறகு அருண் சிங் நிதியமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார். சில நாட்களில் ராஜீவ் காந்தி அவர் ராஜினாமாவை வாங்கியது மட்டுமல்லாமல், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொன்னார்.” என நட்வர் சிங் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Bharatrakshak.com
இரு நாடுகளும் எல்லையிலிருந்து வீரர்களைத் திரும்பப் பெறச் சம்மதித்தன
மறுபுறம், பாகிஸ்தானில் நள்ளிரவில் இந்தியத் தூதர் எஸ்.கே. சிங்கின் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அவரை வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜைன் நூரானியைச் சந்திக்க வருமாறு அழைத்திருந்தது.
அந்தச் சந்திப்பில் ஜியாவின் செய்தியை நூரானி தெரிவித்தார்: “பாகிஸ்தானின் இறையாண்மை மீறப்பட்டால், இந்தியாவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் பாகிஸ்தானிடம் உள்ளது.”
மைக்கேல் கிரிப்பான் மற்றும் நெட் கான் தங்கள் ‘கிரைசிஸ் இன் சவுத் ஆசியா’ புத்தகத்தில் எழுதுகின்றனர்: “பாகிஸ்தான் தனது வீரர்களை இந்திய எல்லைக்கு அனுப்பியதற்குப் பதிலடியாக, சுந்தர்ஜி எல்லையில் இந்திய வீரர்களைப் பாதுகாப்பு நிலையில் நிறுத்தினார். இந்தியா தனது ரிசர்வ் வீரர்களையும் கூட அழைத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் நிலைமை மேலும் மோசமடைந்து, இரு நாட்டு வீரர்களும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில் ஏறத்தாழ நேருக்கு நேர் நின்றனர்.”
“ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி இந்தியாவின் இந்த நடவடிக்கையின் நியாயத்தை உலக ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பிரதமர் அலுவலகம் சுந்தர்ஜிக்கு உத்தரவிட்டது. ஜனவரி 18, 1987 அன்று பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அருண் சிங் மற்றும் ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் கூட்டாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றி, பாகிஸ்தான் அவ்வாறே செய்யும் பட்சத்தில், இந்தியா முன்னிலை எல்லையிலிருந்து தனது வீரர்களைத் திரும்பப் பெறத் தயார் என்று கூறினர்.”
பட மூலாதாரம், Getty Images
ஜெனரல் ஜியாவின் இந்தியப் பயணம்
இதற்குப் பிறகு துரிதமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் மிலிட்டரி ஆபரேஷன் இயக்குநர்களுக்கு இடையே ‘ஹாட்லைன்’ மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிராஸ்டேக்ஸ் பயிற்சியின் போது முழுமையாக 45 நாட்களுக்கு இந்த ஹாட்லைன் பயன்படுத்தப்படவில்லை.
காந்தி பாஜ்பாய் எழுதுகிறார்: “இந்தத் தகவல் தொடர்பு இடைவெளி, இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த விரும்புகிறது என்ற ஊகங்களுக்கு வலுசேர்த்தது. முழு நிகழ்வுகளையும் யதார்த்தமாக மதிப்பீடு செய்த பிறகு இதைச் சொல்ல முடியும்; இந்தியா வேண்டுமென்றே இது குறித்து வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்கவில்லை மற்றும் தனது வலிமையைக் காட்சிப்படுத்தி பாகிஸ்தானை எப்போதும் நிச்சயமற்ற மற்றும் பதற்றமான நிலையிலேயே வைத்திருந்தது.”
பிப்ரவரி 21, 1987 அன்று பாகிஸ்தான் விமானப்படையின் ஒரு விமானம் டெல்லியில் தரை இறங்கியது. அதில் ஜெய்ப்பூரில் நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்திருந்த பாகிஸ்தான் ஜெனரல் ஜியா இருந்தார், அவர் ராஜீவ் காந்தியிடம் ஒரு அமைதித் திட்டத்தை முன்வைத்தார், அதை ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டார்.
பட மூலாதாரம், Getty Images
ஊடகங்கள் இதை ‘கிரிக்கெட் தூதரக உறவு’ என்று அழைத்தன. ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ் நவம்பர் 1986-இல் தொடங்கி மார்ச் 1987-இல் முடிந்தது.
பாகிஸ்தானைத் தனது அணுசக்தித் திட்டத்தை வேகப்படுத்த நிர்பந்திக்கும் அளவு ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ் இந்தியாவின் ராணுவ வலிமையை துல்லியமாகக் காட்டியது என ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அப்போது இந்திய ராணுவத்தில் 11 லட்சம் வீரர்கள் இருந்தனர், அதன் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் எட்டு பில்லியன் டாலராக இருந்தது, இது மொத்த பட்ஜெட்டில் 20 சதவீதமாகும். இந்த இராணுவப் பயிற்சி கலவையான முடிவுகளை அளித்தது.
இது பாகிஸ்தானைப் பாதித்த அதே வேளையில், திபெத்தில் சீனா தனது ராணுவ வலிமையைப் பெருக்கவும் காரணமாக அமைந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



