Home தேசிய national tamil “ஆன்மிகம், அரசியலின் கலவையான ஆளுமை” – அரவிந்தர் கோஷ் புதுச்சேரிக்கு வந்தது ஏன்?

“ஆன்மிகம், அரசியலின் கலவையான ஆளுமை” – அரவிந்தர் கோஷ் புதுச்சேரிக்கு வந்தது ஏன்?

5
0

SOURCE :- BBC NEWS

ஸ்ரீ அரவிந்தர் கோஷ்

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

1872-ம் ஆண்டு வாக்கில், இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு அதன் உச்சத்தை எட்டியிருந்தது. 1857-ஆம் ஆண்டின் கிளர்ச்சி கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் ஆட்சி அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் முடியாட்சியிடம் மாறியிருந்தது.

இந்தச் சூழலில், ஆகஸ்ட் 15, 1872 அன்று அன்றைய இந்தியாவின் தலைநகரான கொல்கத்தாவில் அரவிந்தர் அக்ராய்ட் கோஷ் பிறந்தார். அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தன், தனது தோழி அனெட் அக்ராய்ட் என்பவரின் நினைவாக அரவிந்தருக்கு ‘அக்ராய்ட்’ என்ற நடுப் பெயரைச் சூட்டினார்.

1893-ல் அரவிந்தர் இந்தப் பெயரைத் தனது பெயரிலிருந்து நீக்கினார். 1879-இன் மத்தியில், கிருஷ்ண தன் தனது முழு குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்றார்.

அங்கு சென்ற மூன்று மாதங்களுக்குள் அவர் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. ஆனால் தனது மூன்று மகன்களையும் இங்கிலாந்தில் இருந்த தனது நண்பர் வில்லியம் ட்ரேவிட்டிடம் விட்டு வந்தார்.

அதுலிந்திரநாத் சதுர்வேதி தனது ‘மிஸ்டிக் ஃபயர்: தி லைஃப் ஆஃப் ஸ்ரீ அரவிந்தோ’ என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்

“தனது மகன்களின் வளர்ப்புக்காக ட்ரேவிட்டிற்கு ஆண்டுதோறும் 360 பவுண்டுகள் அனுப்புவதாக கிருஷ்ண தன் வாக்குறுதி அளித்தார். சிறுவர்களை இந்தியா, இந்தியர்கள் அல்லது இந்திய மதம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான எந்தவொரு அம்சத்திலிருந்தும் முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும் என்று அவர் கடுமையுடன் தெரிவித்திருந்தார்.”

“அவர்கள் எந்த மதத்தின்படி வளர்க்கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டபோது, சிறுவர்கள் பெரியவர்களாக ஆனதும் அவர்களே எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கட்டும் என்று பதிலளித்தார். ஆக்ஸ்போர்டு பட்டதாரியான ட்ரேவிட், ஆரம்பத்தில் அரவிந்தருக்கு வீட்டிலேயே லத்தீன் மற்றும் ஆங்கில வரலாற்றைக் கற்பித்தார். அவரது மனைவி அவருக்குப் பிரெஞ்சு, புவியியல் மற்றும் கணிதம் கற்பித்தார்.”

அரவிந்தர் கோஷ் மற்றும் இங்கிலாந்தில் கல்வி பயின்ற அவருடைய இரு சகோதரர்கள்

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

ஐசிஎஸ் தேர்ச்சி

1884-இல் லண்டனின் புகழ்பெற்ற செயின்ட் பால்ஸ் பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். விளையாட்டில் அரவிந்தருக்கு ஆர்வம் இல்லை, ஆனால் பள்ளியின் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு விவாதப் போட்டிகளில் அவர் பங்கேற்பார். அந்த நேரத்தில் ஷெல்லி அவருக்குப் பிடித்த கவிஞராக இருந்தார்.

1889-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரி உதவித்தொகைத் தேர்வில் பங்கேற்று முதலிடம் பெற்றார்.

அதன்பிறகு ஜூன் மாதம் 13 நாட்கள் நடந்த கடினமான இந்திய சிவில் சர்வீஸ் (ஐசிஎஸ்) தேர்வில் பங்கேற்றார். அந்தத் தேர்வின் பாடத்திட்டம் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சாதகமாக இருந்தது. மொத்தம் 250 போட்டியாளர்களில் அரவிந்தர் 11-வது இடத்தைப் பிடித்தார்.

கிரேக்க மொழியில் அவர் 600-க்கு 557 மதிப்பெண்கள் பெற்றார். லத்தீன் மொழியில் அனைத்துப் போட்டியாளர்களிலும் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஐசிஎஸ் பயிற்சியின் போது அவருக்குப் வங்காள மொழியை ஆர்.எம். டவர்ஸ் என்ற ஆங்கிலேயர் கற்பித்தார், அதே நேரத்தில் சமஸ்கிருதத்தை அவர் தானாகவே கற்றுக்கொண்டார்.

ஏ.பி. புரானி தனது ‘தி லைஃப் ஆஃப் ஸ்ரீ அரவிந்தோ’ புத்தகத்தில் குறிப்பிடுகையில், “ஐசிஎஸ் தேர்வில் கிரேக்க மொழியில் சார்லஸ் பீச்கிராஃப்ட்டை அரவிந்தர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளினார் என்பது ஒரு விசித்திரமான விஷயம். ஆனால் வங்காள மொழித் தேர்வில் பீச்கிராஃப்ட் பழிவாங்கும் விதமாக அரவிந்தரை விட அதிக மதிப்பெண்களைப் பெற்றார்.”

அரவிந்தர் கோஷ் மற்றும் அவரது குடும்பம்

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

குதிரையேற்றத்தில் தோல்வி

அரவிந்தர் ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவர் கடக்க வேண்டிய கடைசித் தடை ஒன்று இருந்தது. அது குதிரையேற்றத் தேர்வு. அரவிந்தர் இந்தத் தேர்வில் தோல்வியடைந்தார்.

இதன் விளைவாக, ஐசிஎஸ் மீதான அவரது ஆர்வம் குறையத் தொடங்கியது. அரவிந்தர் தனது சுயசரிதையில், “ஆரம்பத்திலிருந்தே எனது ஆர்வம் கவிதை மற்றும் இலக்கியத்தில் இருந்தது. ஐசிஎஸ் தேர்வில் எனது ஆர்வம் குறைந்ததற்குப் பெரிய ஆதாரம் என்னவென்றால், முதன்மைத் தேர்வில் 11-வது இடத்தைப் பிடித்த நான், முதல் பருவத் தேர்வில் 23-வது இடத்திற்குத் தள்ளப்பட்டேன்.”

“குதிரையேற்றத் தேர்வில் நான் இரண்டு முறை தோல்வியடைந்தேன். மூன்றாவது முறை நான் அதில் பங்கேற்கவே இல்லை. இதன் விளைவாக, நவம்பர் 17, 1892 அன்று நான் ஐசிஎஸ் உறுப்பினராக முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எப்படியும் ஐசிஎஸ் மீதான எனது ஆர்வம் முடிவுக்கு வந்திருந்தது, அதிலிருந்து தப்பிக்க நான் ஒரு சாக்கைத் தேடிக்கொண்டிருந்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்செயலாக அந்த நாட்களில் பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் லண்டன் வந்திருந்தார். அரவிந்தர் மன்னரைச் சந்தித்தார், அவர் அரவிந்தருக்கு பரோடா அரசுப் பணியில் மாதம் 200 ரூபாய் ஊதியத்தில் வேலை வழங்க முன்வந்தார். 14 ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கியிருந்த பிறகு, அரவிந்தர் பரோடாவுக்குப் புறப்பட்டார்.

அரவிந்தர் கோஷ் (மிகவும் வலதுபுறம் அமர்ந்திருப்பவர்) பரோடா மகாராஜாவுடன் (நடுவில் அமர்ந்திருப்பவர்).

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

புத்தக வாசிப்பு மீதான ஆர்வம்

பரோடா அரசுப் பணியின் போது அரவிந்தர் குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளையும் கற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், சமஸ்கிருதம், வங்காளம், குஜராத்தி, மராத்தி மற்றும் ஹிந்தி என மொத்தம் 12 மொழிகளை அறிந்தவராக இருந்தார் . பின்னர் புதுச்சேரி சென்றபோது அவர் தமிழையும் கற்றுக்கொண்டார். அரவிந்தருக்குப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.

ரோஷன் மற்றும் அபூர்வா தங்களது ‘ஸ்ரீ அரவிந்தோ இன் பரோடா’ புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளனர், “அவர் படிப்பதில் மும்முரமாக இருந்தபோது, அவரைச் சுற்றியுள்ள எதையும் அவர் கவனிப்பதில்லை. ஒரு நாள் அவரது பணியாளர் அவருக்கு உணவு பரிமாறினார். ஒரு மணி நேரம் கழித்து அவர் அறைக்குச் சென்றபோது, அவர் இன்னும் படிப்பதில் மும்முரமாக இருப்பதையும், உணவைத் தொடக்கூட இல்லை என்பதையும் கண்டார்.”

ஜே.சி. கோஷ் தனது ‘லைஃப் ஒர்க் ஆஃப் ஸ்ரீ அரபிந்தோ’ புத்தகத்தில் அவரது உறவினர் பாசந்தி கூறியதாக பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “அரவிந்தர் எங்களுடைய இடத்திற்கு வரும்போது, அவரிடம் இரண்டு அல்லது மூன்று டிரங்க்குகள் (பெட்டிகள்) இருக்கும். அதில் விலை உயர்ந்த உடைகள் மற்றும் பிற பொருட்கள் இருக்கும் என்று நாங்கள் எப்போதும் நினைப்போம். ஆனால் அவர் பெட்டியைத் திறந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். அதில் சில சாதாரண ஆடைகளைத் தவிர, புத்தகங்கள் மட்டுமே இருந்தன.”

அரவிந்தர் தூங்கும் முறையும் மிகவும் எளிமையாக இருந்தது. அவர் மெல்லிய மெத்தை விரிக்கப்பட்ட இரும்புக்கட்டிலில் தூங்கினார். அதிகக் குளிர் இருக்கும்போது மட்டுமே அவர் ஒரு மெல்லிய போர்வையைப் போர்த்திக் கொண்டார். அவரிடம் மற்றொரு பழக்கமும் இருந்தது. அவர் தனது பணத்தையெல்லாம் ஒரு பெரிய தட்டில் வைத்துவிடுவார். யாருக்குத் தேவையோ அவர்கள் அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம். அவர் தனது பணத்தை ஒருபோதும் பூட்டி வைக்கவில்லை அல்லது கணக்கு வைத்திருக்கவில்லை.

அரவிந்தர் கோஷ்

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

திலகருடன் ஏற்பட்ட நட்பு

28 வயதில் குடும்ப வற்புறுத்தல் காரணமாக அவர் திருமணம் செய்து கொண்டார். அந்த கால வழக்கப்படி செய்தித்தாள்களில் அவரது திருமண விளம்பரம் கொடுக்கப்பட்டது.

சுமார் 50 குடும்பங்கள் அவரைத் தங்களது மருமகனாக்க ஆர்வம் காட்டின. அவர் கல்கத்தா சென்று பூபால் சந்திர போஸின் மகள் மிருணாளினியைத் தனது மனைவியாகத் தேர்ந்தெடுத்தார். அப்போது மிருணாளினிக்கு வயது 14 தான். ஏப்ரல் 29, 1901 அன்று கல்கத்தாவில் நடந்த திருமணத்தில் லார்ட் சத்யேந்திரநாத் சின்ஹா மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் போன்ற பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

அரவிந்தர் பல ஆண்டுகள் வெளிநாட்டில் கழித்துத் திரும்பியதால், திருமணத்திற்கு முன் அவருக்குச் சடங்கு பூர்வமான ‘சுத்திகரிப்பு’ செய்ய வேண்டும் என்று பண்டிதர் கூறியபோது ஒரு வேடிக்கையான சூழல் உருவானது.

அரவிந்தர் பண்டிதரின் ஆலோசனையை மரியாதையுடன் மறுத்துவிட்டார். கடைசி நேரத்தில் சுத்திகரிப்பு செய்ய வற்புறுத்தாத மற்றொரு பண்டிதர் தேடி கண்டுபிடிக்கப்பட்டார்.

1919-இல் பரவிய ஃப்ளூ காய்ச்சல் பெருந்தொற்றினால் மிருணாளினி காலமானார். பரோடாவில் தங்கியிருந்த போதுதான் அரவிந்தர் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

அரவிந்தரின் சுயசரிதையில், 1902-இல் அகமதாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குதான் அவர் பால கங்காதர திலகரை முதன்முதலில் சந்தித்தார்.

திலகர் அவரை மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே அழைத்துச் சென்று ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார், மேலும் காங்கிரஸில் நடந்து வரும் சீர்திருத்தவாத இயக்கம் குறித்துத் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

அரவிந்தர் கோஷ் மற்றும் அவருடைய மனைவி மிருணாளினி

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

ஆங்கிலேயருக்கு எதிராக நெருப்பை கக்கிய வந்தே மாதரம் செய்தித்தாள்

ஆகஸ்ட் 15, 1906 அன்று அரவிந்தர் பரோடா வேலையை விட்டுவிட்டு கல்கத்தாவின் ‘பெங்கால் நேஷனல் காலேஜ்’ முதல்வராகப் பணியில் சேர்ந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு அவர் தனது சகோதரர் பரின் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து வங்காள மொழியில் ‘யுகாந்தர்’ என்ற செய்தித்தாளைத் தொடங்கினார். ஓராண்டிற்குள் இதன் 10,000 பிரதிகள் விற்கத் தொடங்கின.

மற்றொரு சுதந்திரப் போராட்ட வீரரான பிபின் சந்திர பால், தேசியவாதிகள் தங்கள் கருத்துக்களை ஆங்கிலேயர்களுக்குத் தெரிவிக்க ஓர் ஆங்கிலச் செய்தித்தாள் தேவை என்று கருதினார்.

அவர் அந்தப் பத்திரிகைக்கு ‘வந்தே மாதரம்’ என்று பெயரிட்டு, அரவிந்தரை அதில் எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.

அரவிந்தர் உடனே ஒப்புக்கொண்டார். அவர் துப்பாக்கியை விடத் தனது பேனாவைப் பயன்படுத்துவதை மேலானதாகக் கருதிய ஒரு வித்தியாசமான புரட்சியாளர்.

லூக் வெனெட் தனது ‘ஸ்ரீ அரபிந்தோ அண்ட் தி ரெவல்யூஷன் ஆஃப் இந்தியா’ புத்தகத்தில் குறிப்பிடுகையில், “வந்தே மாதரம் அந்த கால இந்தியாவின் மிகவும் ஆவேசமான செய்தித்தாளாக இருந்தது. வேறெந்த இந்தியச் செய்தித்தாளுமே ஆங்கிலேயர்கள் மீது இவ்வளவு கடுமையான தாக்குதலைத் தொடுத்ததில்லை. அதில் வெளியாகும் கட்டுரைகளில் எழுத்தாளரின் பெயர் இருக்காது. அரவிந்தர் ‘மாணிக்’ மற்றும் ‘காளி’ என்ற புனைப்பெயர்களில் எழுதி வந்தார்.”

“இந்தச் செய்தித்தாள் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரவிந்தரும் அவரது எழுத்தாளர்களும் ஆங்கிலேயர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்தனர். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் தவறான நிர்வாகம், நாட்டில் வறுமை அதிகரிப்பு மற்றும் வறட்சியை எதிர்கொள்ள முடியாத பிரிட்டிஷ் கொள்கைகளை இலக்காகக் கொண்டனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

கல்கத்தா வழக்கறிஞர் பரமதநாத் மித்ரா மற்றும் சதீஷ் சந்திர போஸ் இணைந்து ‘அனுசீலன் சமிதி’ என்ற ரகசியப் புரட்சி அமைப்பை உருவாக்கினர். அரவிந்தரும் அவரது சகோதரர் பரினும் இந்த அமைப்பிற்கு கணிசமாகப் பங்களித்தனர்.

கரண் சிங் தனது ‘ப்ராஃபெட் ஆஃப் இந்தியன் நேஷனலிசம்’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார், “உண்மை என்னவென்றால், சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய அரசியலின் அனைத்து அடிப்படை லட்சியங்களான – தேசியவாதம், தேசபக்தி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு போன்றவை, பின்னாளில் மகாத்மா காந்தியின் தலைமையிலான காங்கிரஸின் உத்வேகத்திற்கு ஆதாரமாக அமைந்தன; இவை அனைத்தும் ஸ்ரீ அரவிந்தரின் உன்னதமான ஆளுமையின் பங்களிப்பாகும்.”

“வங்கப் பிரிவினைக்கு எதிராக உருவெடுத்த இயக்கம், தனது அனைத்துக் கொள்கைகளையும் நோக்கங்களையும் ஸ்ரீ அரவிந்தரிடமிருந்தே பெற்றது; மேலும் இது மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெறவிருந்த மாபெரும் இயக்கங்களுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.”

வங்கப் பிரிவினைக்குப் பிறகு அவர் ‘நோ காம்ப்ரோமைஸ்’ (சமரசம் இல்லை) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார், அது பின்னர் ஒரு சிறு கையேடாக விநியோகிக்கப்பட்டது.

அரவிந்தர் கோஷ்

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

அலிப்பூர் சதி வழக்கு மற்றும் கைது

அரவிந்தரின் எழுத்துக்களால் எரிச்சலடைந்த பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. ஆனால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். ஏப்ரல் 1908-இல் முசாபர்பூர் கலெக்டர் கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக குதிராம் போஸ் மற்றும் பிரபுல்ல சாக்கி கைது செய்யப்பட்டனர். அவர்கள் கிங்ஸ்ஃபோர்ட் இருப்பதாக நம்பிய வண்டியின் மீது குண்டு வீசினர், ஆனால் அதில் திருமதி கென்னடியும் அவரது மகளும் இருந்தனர். இருவரும் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 1908-இல் குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார், 1908-ஆம் ஆண்டு ஆகஸ்டில் பிரபுல்ல சாக்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக நடந்த தீவிர விசாரணைக்குப் பிறகு ‘அலிப்பூர் சதி வழக்கு’ நடந்தது, இதில் அரவிந்தர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

மே 2, 1908 அதிகாலை 5 மணிக்குக் காவல்துறை அவரைத் தடுப்புக்காவலில் எடுத்தது. அவருக்குக் கைவிலங்கு போடப்பட்டு, இடுப்பில் கயிறு கட்டப்பட்டது. அவர் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சிறை அறை 9 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.

அரவிந்தர் கோஷ் தனது ‘டேல்ஸ் ஆஃப் பிரிசன் லைஃப்’ என்ற புத்தகத்தில், “எனக்கு ஒரு தட்டு மற்றும் ஒரு தகரக் கிண்ணம் மட்டுமே வழங்கப்பட்டது. அந்தக் கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பித்தான் நாங்கள் மலம் கழித்த இடத்தைக் கழுவினோம். அதே கிண்ணத்தைக் கொண்டுதான் நாங்கள் வாய் கொப்பளித்தோம், குளித்தோம், அதே கிண்ணத்தில்தான் எங்களுக்குப் பருப்பு சூப் குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரவில் எங்களுக்கு இரண்டு போர்வைகள் வழங்கப்பட்டன. ஒரு போர்வையை நாங்கள் தலையணையாகப் பயன்படுத்தினோம். உணவாக எங்களுக்குக் கற்கள் நிறைந்த சாதம், தண்ணீரைப் போன்ற பருப்பு சூப் மற்றும் இலைகளும் புற்களும் கலந்த காய்கறிகள் வழங்கப்பட்டன.” என்று எழுதியுள்ளார்.

அரவிந்தர் கோஷ் கைதியாக வைக்கப்பட்டிருந்த அலிப்பூர் சிறை

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

வங்காளத்தின் மிகவும் பிரபலமான தலைவர்

மனோஜ் தாஸ் தனது ‘ஸ்ரீ அரபிந்தோ இன் தி ஃபர்ஸ்ட் டிகேட் ஆஃப் ட்வென்டியத் செஞ்சுரி’ என்ற புத்தகத்தில் எழுதுகையில், “வங்காள ஆளுநர் ஆண்ட்ரூ பிரேசர், வைஸ்ராய் லார்ட் மிண்டோவுக்கு அரவிந்தரைப் பற்றி கடிதம் எழுதி இவ்வாறு கூறியிருந்தார்: ‘இந்த நபர் மிகவும் புத்திசாலி மற்றும் பிடிவாதமானவர். ஒவ்வொரு தேசத்துரோக எழுத்துக்கள் மற்றும் கொலைகளுக்கு உத்தரவிடுவதன் பின்னால் இந்த நபரின் கை உள்ளது. ஆனால் அவர் மிகவும் கவனமாகத் தன்னைத் நமது பார்வையில் இருந்து விலக்கி வைத்துள்ளார். நீதிமன்றத்தில் அவருடைய செயல்களை நிரூபிக்கும் அளவுக்கு போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால் அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு (நாடுகடத்த) அடிப்படையாக அமையக்கூடிய சில ஆதாரங்கள் எங்கள் கையில் கிடைத்துள்ளன’.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லாலா லஜபதி ராயை நாடுகடத்தும் முடிவுக்கு எதிராக வெடித்த பொதுமக்களின் உணர்ச்சிகளை நினைவுகூர்ந்த வைஸ்ராய், இத்தகைய முயற்சிக்குத் தனது ஆதரவை வழங்கவில்லை.

கைது செய்யப்படுவதற்கு முன்பு, அரவிந்தரை கல்கத்தாவில் மிகச் சிலரே அறிந்திருந்தனர். ஆனால் ‘வந்தே மாதரம்’ வழக்கு முடியும் தருவாயில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமானார். அவருடைய பழைய குடும்ப நண்பரான ரவீந்திரநாத் தாகூர் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு கவிதையை எழுதினார்.

சுபாஷ் சந்திர போஸ் தனது சுயசரிதையான ‘ஆன் இந்தியன் பில்கிரிம்’ இல், “நான் படித்துக்கொண்டிருந்த நாட்களில், 1909-இல் அவர் அரசியலில் இருந்து விலகிய போதிலும், அரவிந்தர் கோஷ் வங்காளத்தின் மிகவும் பிரபலமான தலைவராக இருந்தார். காங்கிரஸ் மேடையில் அவர் இடதுசாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், மேலும் பெரும்பாலான காங்கிரஸாரின் கோரிக்கை தன்னாட்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அவர் முழுமையான சுதந்திரத்தைக் கோரினார். ஆன்மீகம் மற்றும் அரசியலின் கலவையானது அவருடைய ஆளுமையில் ஒரு மாயவாததன்மையை நிறைத்திருந்தது.” எனக் குறிப்பிட்டிருந்தார்

அரவிந்தர் கோஷ்

பட மூலாதாரம், Jayshri Prakashan

புதுச்சேரிக்கு வருகை

அரவிந்தரின் ஐசிஎஸ் பயிற்சியின் போது அவருடன் இருந்த சார்லஸ் பீச்கிராஃப்ட் இந்த வழக்கின் நீதிபதியாக அமைந்தது அரவிந்தரின் அதிர்ஷ்டம். அரவிந்தருக்காகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் சித்தரஞ்சன் தாஸ் வாதிட்டார்.

அனுராக் பானர்ஜி தனது ‘ஸ்ரீ அரபிந்தோ: ஹிஸ் பொலிட்டிக்கல் லைஃப் அண்ட் ஆக்டிவிட்டிஸ்’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார், “சித்தரஞ்சன் தாஸ் வாதிடுகையில், இந்த விவாதம் மற்றும் வழக்கு முடிவுக்கு வந்த பிறகும், இதன் மறைவு மற்றும் அவர் சென்ற பிறகும், அரவிந்தர் தேசபக்திக் கவிஞராகவும், தேசியவாதத்தின் மீட்பராகவும் மனிதநேயத்தின் காதலராகவும் நினைவுகூரப்படுவார். அவர் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகும், அவருடைய வார்த்தைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஏழு கடல் தாண்டி உலகம் முழுவதும் எதிரொலிக்கும். எனவேதான் நான் சொல்கிறேன், கூண்டில் நிற்கிற இந்த நபர் இந்த நீதிமன்றத்தின் முன் மட்டும் நிற்கவில்லை, மாறாக வரலாற்றின் நீதிமன்றத்தின் முன்பும் நிற்கிறார் என்று கூறினார்.”

பீச்க்ராஃப்ட் (Beachcroft) தனது தீர்ப்பில் 50 பக்கங்களை அரவிந்தருக்காக ஒதுக்கினார், மேலும் அரவிந்தருக்கு எதிராக அளிக்கப்பட்ட ஆதாரங்கள் பலவீனமாக இருப்பதால் அவர் விடுதலை செய்யப்படுவதாகக் கூறினார்.

ஆனால் விடுதலையான பிறகும், அரசாங்கம் அவர் மீதான தனது கண்காணிப்பை விலக்கவில்லை. இதற்கிடையில் அவரைச் சந்திக்க ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பிரிட்டனின் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தவரும் பின்னர் இரண்டு முறை பிரிட்டனின் பிரதமரானாவருமான ராம்சே மெக்டொனால்ட் ஆகியோர் வந்தனர்.

ரோஷன் தலால் தனது ‘ஸ்ரீ அரபிந்தோ – தி லைஃப் அண்ட் டீச்சிங் ஆஃப் ஏ ரெவல்யூஷனரி ஃபிலாசஃபர்’ என்ற புத்தகத்தில், “பிப்ரவரி 1910-இல் அரவிந்தருக்குத் தான் மீண்டும் கைது செய்யப்படக்கூடும் என்ற அறிகுறிகள் கிடைத்தன. அவர் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி பிரெஞ்சு இந்தியாவுக்குச் செல்ல முடிவெடுத்தார். அவர் ரகசியமாக கல்கத்தாவிலிருந்து ஒரு படகில் ஏறி முதலில் பிரெஞ்சுப் பகுதியான சந்திரநாகூரை அடைந்தார். அங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்த பிறகு, அவர் நீராவி கப்பல் மூலம் ஏப்ரல் 4, 1910 அன்று பாண்டிச்சேரியை அடைந்தார். பாண்டிச்சேரியில் (தற்போது புதுச்சேரி) அவர் அடுத்த நான்கு தசாப்தங்கள் வரை வாழ்ந்தார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்தர் கோஷ்

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

78 வயதில் மரணம்

பாண்டிச்சேரி வாசத்தின் போது அரவிந்தர் அரசியலைக் கைவிட்டு ஆன்மீகத்தின் பக்கம் தனது மனதைச் செலுத்தினார். அவர் தன்னை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவரைச் சந்திக்க வந்த ஒரு சிலரில் புகழ்பெற்ற கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரும் இருந்தார். இதற்கிடையில் அவருக்கு பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்த மிரா அல்ஃபாசா அறிமுகமானார், அவர் அரவிந்தரின் வாழ்நாள் துணையாக மாறினார்.

அரவிந்தர் அவரை ‘மாதா’ (அம்மா) என்று அழைத்தார், எனவே அவரது ஆதரவாளர்களும் அவரை ‘ஸ்ரீமா’ என்று அழைக்கத் தொடங்கினர்.

1925-ஆம் ஆண்டில் லாலா லஜபதி ராய் மற்றும் புருஷோத்தம் தாஸ் டாண்டன் ஆகியோரும் அவரைச் சந்திக்கப் பாண்டிச்சேரிக்குச் சென்றனர். அவர் ‘ஆர்யா’ (Arya) என்ற தத்துவ இதழை வெளியிடத் தொடங்கினார்.

அரவிந்தர் இரண்டு முறை நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டில் அவரது ‘தி லைஃப் டிவைன்’ புத்தகத்தின் முதல் பாகம் வெளியானது.

அரவிந்தரின் வாழ்நாள் துணையான ஸ்ரீமா

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

1943-ஆம் ஆண்டில் ‘தி லைஃப் டிவைன்’ இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அந்த ஆண்டு அந்த விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.

1945-ஆம் ஆண்டில் அவர் மீண்டும் ஒருமுறை இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் அந்த ஆண்டு அந்த விருது சிலி நாட்டின் கவிஞர் காப்ரியலா மிஸ்ட்ரலுக்குக் கிடைத்தது.

ரோஷன் தலால் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார், 1949-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரவிந்தர் கோஷின் உடல்நிலை நலியத் தொடங்கியது. அவருக்கு புரோஸ்டேட் பாதிப்பு அதிகரித்தது. அவருக்கு சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயும் ஏற்பட்டது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. டிசம்பர் 4, 1950 அன்று இரவு அவர் அரை கிண்ணம் தக்காளிச் சாறு குடித்தார். டிசம்பர் 5 அன்று அதிகாலை 1:20 மணிக்கு அவர் உயிர் நீத்தார்.

அவருக்கு வெள்ளை நிறப் பட்டு வேட்டி அணிவிக்கப்பட்டது. சுமார் 60,000 மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரெஞ்சு அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி, அவர் ஆசிரமத்தின் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU