Home Latest news tamil சமீபத்திய செய்தி அறிமுகமானதும் அதிக கவனம் பெற்ற ‘நோட்டா’ என்ன ஆனது? நோக்கம் நிறைவேறியதா என்பது பற்றிய ஒரு...

அறிமுகமானதும் அதிக கவனம் பெற்ற ‘நோட்டா’ என்ன ஆனது? நோக்கம் நிறைவேறியதா என்பது பற்றிய ஒரு பார்வை

21
0

SOURCE :- BBC NEWS

தமிழ்நாடு, சட்டமன்ற தேர்தல், நோட்டா

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, இதுவரை மூன்று தேர்தல்களில் நோட்டாவுக்கே வாக்களித்துள்ளார்.

“நான் முதல்முறையாக வாக்களித்தபோது நோட்டாவை தேர்வு செய்தேன். ஆனால் காலப்போக்கில் அதனால் எந்த மாற்றமும் இல்லை என உணர்ந்து தேர்தலில் வாக்களிப்பதையே குறைத்துவிட்டேன். என் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சிறப்பானவர் எனத் தெரிந்தால் மட்டும் வாக்களிக்கும் முடிவில் இருக்கிறேன்,” என்கிறார் ராஜலக்‌ஷ்மி.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தேர்தல்களில் நோட்டாவின் செயல்பாட்டைப் பார்த்தால் ‘நோட்டா என்ன ஆனது’ என்கிற கேள்விதான் பலருக்கும் எழும். ஆனால் ‘நோட்டாவால் என்ன ஆகக்கூடும்?’ என்கிற கேள்வியையும் அனுபவம் வாய்ந்த வாக்காளர்களும், செயற்பாட்டாளர்களும் முன்வைக்கின்றனர்.

இந்தியா நோட்டாவின் முதல் கட்டத்தில்தான் இருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

நோட்டா வாக்குகள் தங்களுக்குப் பாதகமாக அமையலாம் என அரசியல் கட்சிகள் அதை எதிர்மறையாகவே பார்ப்பதாகக் கூறுகிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.

இந்தியாவில் தேர்தல் களத்தில் அறிமுகமான காலகட்டத்தில் அதிக கவனம் பெற்ற நோட்டா ஆர்வம் வாக்காளர்களிடையே குறைந்துவிட்டது என்பதை தேர்தலில் பதிவான வாக்கு புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது.

நோட்டாவின் கதை என்ன, நோட்டாவின் தற்போதைய நிலை என்ன என்பதை இந்தக் கட்டுரை திரும்பிப் பார்க்கிறது.

தமிழ்நாடு, சட்டமன்ற தேர்தல், நோட்டா

பட மூலாதாரம், X/ECISVEEP

49ஓ விதி நோட்டா ஆன கதை

நோட்டா என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அதற்கு முந்தைய 49ஓ விதி பற்றிப் பலரும் அறிந்திருக்கவில்லை.

நோட்டா அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக தேர்தல் ஆணைய விதிகளின் 49ஓ பிரிவு அமலில் இருந்தது.

அதன்படி வாக்காளர் ஒருவர் குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் அதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

அதன் பிறகு தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்காளரின் வரிசையில் ‘வாக்களிக்க மறுத்துவிட்டார்’ எனப் பதிவு செய்து அதில் வாக்காளரின் கையெழுத்தைப் பெறுவார்.

ஆனால் இந்த நடைமுறை ‘வாக்காளரின் தனியுரிமையைப் பாதிக்கிறது’ என அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 49ஓ பிரிவு வாக்களிப்பின் ரகசியத்தை மீறுவதாகக் கூறி ரத்து செய்தது. அதோடு நோட்டா என்கிற தேர்வை அனைத்து வாக்குச்சீட்டு மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டது. அப்போது முதல் நோட்டா அமலில் இருந்து வருகிறது.

‘நோட்டாவின் மூன்று நோக்கங்கள்’

தமிழ்நாடு, சட்டமன்ற தேர்தல், நோட்டா

பட மூலாதாரம், X/ECISVEEP

“இது தேர்தல் நடைமுறையின் தூய்மையை மேம்படுத்துவதோடு, அதன் நோக்கங்களில் ஒன்றான மக்களின் பரந்துபட்ட பங்கேற்பை நிவர்த்தி செய்யும்” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

“போட்டியிடும் வேட்பாளர்களின் தரத்தை உயர்த்துவது, போலி வாக்குப் பதிவைத் தவிர்ப்பது மற்றும் வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்களை ஊக்குவித்து வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பது என்கிற மூன்று நோக்கங்களுக்காகத்தான் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. நாம் தற்போது முதல் கட்டத்தில்தான் உள்ளோம்,” என்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

நோட்டா வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரித்ததா?

தமிழ்நாடு, சட்டமன்ற தேர்தல், நோட்டா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்தான் நோட்டா முதல் முறையாக அறிமுகமானது. அப்போது நோட்டா அதிக கவனம் பெற்றது. அந்த தேர்தலில் நோட்டாவை 5.82 வாக்காளர்களை தேர்வு செய்திருந்தனர். தற்போது வரை நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவானது இந்தத் தேர்தலில்தான்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 46,559 வாக்குகள் (பதிவான வாக்குகளில் 4.99%) நோட்டாவுக்கு பதிவானது. தமிழ்நாட்டிலேயே நீலகிரியில்தான் நோட்டா வாக்கு சதவிகிதம் அதிகமாக இருந்தது.

தமிழ்நாட்டில் தொடக்கத்தில் வாக்காளர் அதிருப்தியின் வெளிப்பாடாக நோட்டா இருந்தது என்றாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் அது சரிந்துவிட்டது என்று கூறுகிறார் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பான ஏடிஆர்-இன் (Association for Democratic Reforms) தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ்.

அப்போது முதல் ஒவ்வொரு தேர்தல்களிலும் நோட்டா சராசரியாக 1-1.5% வாக்குகளைப் பெற்று வந்துள்ளது.

ஆனால் வாக்குப்பதிவு விகிதத்தைப் பார்க்கையில் அவை அடுத்தடுத்த தேர்தல்களில் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. எனவே நோட்டாவின் அறிமுகம் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தை நிவர்த்தி செய்துள்ளதா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

அதிகாரம் இல்லாத எதுவும் மக்களை பரவலாகச் சென்றடைய முடியாது என்கிறார் மக்களின் குரல் (Voice of People) அமைப்பைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான சாரு கோவிந்தன்.

“வாக்காளர் நோட்டா மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் வாக்களிக்காமலே இருந்துவிடலாமே என யோசிக்கின்றனர். இது ஒரு கருவியாக இருந்தாலும் அதற்கு அதிகாரம் இல்லாததால் அதைப் பற்றிய பிரசாரமும் காலப்போக்கில் குறைந்துவிட்டது,” என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு, சட்டமன்ற தேர்தல், நோட்டா

நோட்டா குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நோட்டா பற்றி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், 10 ஆண்டுகளில் நோட்டா எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என கருத்து தெரிவித்திருந்தது.

தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

“நாம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நோட்டாவை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் வேட்பாளர்களின் தரம் உயர்ந்துவிட்டதா? அவர்கள் தார்மீக அடிப்படையில் அல்லாமல் வெற்றி வாய்ப்பின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள்,” என தலைமை நீதிபதி சூர்யா கன்ட் மற்றும் நீதிபதி ஜொய்மால்யா பக்சி அமர்வு தெரிவித்திருந்தது.

தேர்தல் முடிவுகளில் நோட்டா தாக்கம் செலுத்தியுள்ளதா?

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளர்கள் இடையே 4,379 வாக்கு வித்தியாசம் இருந்தது. அந்தத் தொகுதியில் நோட்டா 9,408 வாக்குகளைப் பெற்றிருந்தது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் சில தொகுதிகளில் வாக்குப் பதிவு வித்தியாசத்தை விடவும் நோட்டா அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் நோட்டா தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானித்தது எனக் கூறிவிட முடியுமா என்கிற கேள்வியும் இங்கு முன்வைக்கப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, “அதை மட்டுமே முழுமையான காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் அதைப் புறந்தள்ளிவிட முடியாது. வாக்குப் பதிவு வித்தியாசத்திற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம், ஆனால் நோட்டா வாக்குகளுக்கும் அதில் பங்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நோட்டாவுக்கு அதிகாரம் இருந்தால் வாக்குப்பதிவு விகிதம் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

தேர்தல்களில் சுத்தமான, மேலும் ஏற்றுக்கொள்ளத்தக்க வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தை நோட்டா முழுமையாக அடையவில்லை என்கிறார் ஜோசப் விக்டர் ராஜ்.

“நோட்டா தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்த முடியாது என்பதால் அது வெறும் குறியீடாக மட்டுமே உள்ளது. அதனால் பலரும் அதைத் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மட்டுமே பார்க்கிறார்களே தவிர தேர்தல் சீர்திருத்தத்திற்கான அர்த்தமுள்ள கருவியாக யாரும் நோட்டாவை கருதுவதில்லை. முதல் இரண்டு தேர்தல்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அதிக அளவில் பதிவான நோட்டா வாக்குகள் அதன் பின் படிப்படியாகக் குறைந்துவிட்டன,” என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு, சட்டமன்ற தேர்தல், நோட்டா

பட மூலாதாரம், X/Jayaram Venkatesan

நோட்டாவுக்கான தேவை தற்போதும் இருக்கிறது எனக் கூறும் ஜெயராம் வெங்கடேசன், அவை குறைவான அளவில் இருந்தாலும் மக்களுக்கு வேறு வாய்ப்பு இல்லாததால் அதை முக்கியமாகக் கருத வேண்டும் எனத் தெரிவிக்கிறார்.

நோட்டா வாக்கு சதவிகிதம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், “தேர்தல்களில் மக்கள் தங்களின் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்த இருக்கும் ஒரே வாய்ப்பு நோட்டாதான். 1.5% என்பது பல அரசியல் கட்சிகள் பெறும் வாக்குகளைவிட அதிகம். ஆனால் அதற்கென தனி அதிகாரம் கொடுக்கப்படவில்லை.”

“போட்டியிட்ட வேட்பாளர்களைவிட நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றாலும் அதற்கு அடுத்த நிலையில் அதிக வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுவார். நோட்டா வாக்குகள் குறைவாக இருக்கிறது எனக் கூறும் அதே வேளையில் நோட்டாவுக்கு அதிகாரம் இல்லாததால்தான் அது குறைவாக இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்” என்றார்.

‘சட்டப்பூர்வ அங்கீகாரம் தேவை’

தமிழ்நாடு, சட்டமன்ற தேர்தல், நோட்டா

நோட்டாவுக்கு என தனிச் சட்டம் தேவை எனக் கூறும் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, “நான் தேர்தல் ஆணையராக இருந்தபோது நோட்டாவை அறிமுகப்படுத்த சட்டம் கொண்டு வருமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினேன். ஆனால் அரசாங்கம் அதற்கு இசைவு காட்டவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் நோட்டாவை ஆதரித்தது.”

“நீதிமன்ற உத்தரவின் மூலம்தான் நோட்டா அறிமுகமானது. தற்போது வரை அதற்கான தனிச் சட்டம் எதுவும் இல்லை. உரிய சட்ட அங்கீகாரம் மற்றும் அதிகாரங்களை வரையறுத்து சட்டம் இயற்றினால் மட்டுமே நோட்டாவை மேம்படுத்த முடியும்” என்றும் தெரிவித்தார்.

காலப்போக்கில் வாக்காளர்களே நோட்டாவை கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டதாகக் கூறும் அவர், அரசியல் கட்சிகள் தேர்தல் சீர்திருத்தங்களுக்குத் தயாராக இல்லை என்கிறார்.

“உதாரணத்திற்கு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவருக்கும் தோல்வி அடைந்தவருக்குமான வாக்கு வித்தியாசத்தைவிட நோட்டா அதிகமான வாக்குகளைப் பெற்றால் அங்கு மறுதேர்தல் நடத்தலாம். இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வந்தால்தான் நோட்டா பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

தமிழ்நாடு, சட்டமன்ற தேர்தல், நோட்டா

பட மூலாதாரம், Joseph Victor Raj

நோட்டா அதிகமான வாக்குகளைப் பெற்றால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள் உடனடியாக மீண்டும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்றும் ஏடிஆர் அமைப்பு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகக் கூறுகிறார் ஜோசப் விக்டர் ராஜ்.

“நோட்டாவுக்கு அதிகாரம் இருந்தால்தான் அதிருப்தி வாக்காளர்கள், வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள்கூட முன்வருவார்கள். இது வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகளை பொறுப்புக்கு உள்ளாக்குவதோடு, வேட்பாளர்களை மறுக்கும் வாக்காளர்களின் உரிமை மீது நம்பிக்கையைக் கொண்டு வரும்,” என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

“உள்ளாட்சித் தேர்தல்களில் இருந்து தொடங்கலாம்”

“சில மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் நோட்டாவுக்கு அதிகாரம் வழங்குவதற்கான முன்னெடுப்புகள் உள்ளன. எனவே நோட்டா வாக்குகளுக்கு அதிகாரம் இருந்தால் வாக்குப்பதிவு விகிதம் அதிகரிக்கும். அதை உள்ளாட்சித் தேர்தல்களில் இருந்து தொடங்கலாம்” என்கிறார் ஜெயராம் வெங்கடேசன்.

நோட்டா பற்றிய விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும் எனக் கூறும் அவர், “நோட்டா பற்றிய விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஆனால் காலப்போக்கில் அத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. குறைவான வாக்கு வித்தியாசம் போன்ற கடுமையான போட்டிகள் நிலவும் தொகுதிகளில் நோட்டா வாக்குகள் தங்களுக்குப் பாதகமாக அமையலாம் என அரசியல் கட்சிகள் அதை எதிர்மறையாகவே பார்க்கின்றன” எனத் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC