Home தேசிய national tamil அரிய கல்லீரல் நோய்க்கு பிறகு சுமார் ஓர் அடி உயரம் குறைந்த பெண்

அரிய கல்லீரல் நோய்க்கு பிறகு சுமார் ஓர் அடி உயரம் குறைந்த பெண்

2
0

SOURCE :- BBC NEWS

அரிய வகை கல்லீரல் நோயால் ஒரு அடி வரை உயரம் குறைந்த பெண்

பட மூலாதாரம், British Liver Trust

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர், மிகவும் அரிதான கல்லீரல் நோய் அவருக்கு இருப்பது கண்டறியப்பட்ட பிறகு கிட்டத்தட்ட ஓர் அடி உயரம் குறைந்துள்ளார்.

தன்னைப் பற்றிப் பேசிய அவர், பிறரை ஒருபோதும் நம்பிக்கையை இழக்காமல் இருக்க ஊக்குவிக்கும் வகையில் தனது கதையைப் பகிர்ந்துகொண்டார்.

வில்ட்ஷயரை சேர்ந்த 63 வயதான கேரோலின் கிங், கண்களில் அசௌகரியம் மற்றும் அரிப்பு இருந்ததால், கண் மருத்துவரிடம் சென்றார். அப்போது, அதுவொரு தீவிரமான, உயிருக்கு ஆபத்தான கல்லீரல் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமென்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அரிய நோய்கள் தினத்தை முன்னிட்டு, அரிதான கல்லீரல் நோய்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமக்கு ஏற்பட்ட கிரானுலோமாட்டஸ் ஹெபடைடிஸ் என்ற நோயுடன் இருப்பது பற்றிய வாழ்வனுபவத்தை கேரோலின் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

“வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கையில், நடந்தவற்றை என்னால் நம்பவே முடியவில்லை, நான் இன்னும் இருக்கிறேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு, அவரது அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருந்தன. மிகுந்த சோர்வு மற்றும் மனக் குழப்பத்தால் பாதிக்கப்பட்ட பிறகு அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருப்பினும், தான் இருந்த நிலையிலேயே இப்போது இருக்கும் பிறர் “ஒருபோதும் வாழ வேண்டுமென்ற எண்ணத்தைக் கைவிட்டு விடக்கூடாது” என்பதே தனது கதையைப் பகிர்ந்துகொள்வதன் நோக்கம் என்றார்.

‘ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு நோயாளி’

கடந்த 2018-ஆம் ஆண்டு, வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது கண் பார்வை மங்கலாகி, எதையும் தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

“அது மிகவும் விசித்திரமானது எனக் கருதினேன்” என்று அதை நினைவுகூர்கிறார் அவர். பின்னர் அவரது கண்ணின் ஒரு பகுதியைப் பாதிக்கும் அழற்சி நிலை இருப்பது கண் பார்வை நிபுணரால் கண்டறியப்பட்டது.

அரிய வகை கல்லீரல் நோயால் ஒரு அடி வரை உயரம் குறைந்த பெண்

பட மூலாதாரம், Caroline King

ஆனால், 2019ஆம் ஆண்டில், அவரது கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறின. அதன் பிறகு, கல்லீரல் பரிசோதனையில் அவருக்கு இருப்பது கிரானுலோமாட்டஸ் ஹெபடைடிஸ் என்ற நோய் எனக் கண்டறியப்பட்டது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, இது மிகவும் அரிதானது, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு நோயாளிக்கு மட்டுமே இந்தப் பாதிப்பு ஏற்படக்கூடும்.

கேரோலினுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆறு மாதங்கள் ஆனது. அந்த நேரத்தில் அவர் எடுத்துக்கொண்ட மருந்துகளால் அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட கடுமையான ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு வலுவிழப்பு) காரணமாக அவரது உயரம் 5 அடி 4 அங்குலம் (1.63மீட்டர்) என்பதில் இருந்து 4 அடி 6 அங்குலமாக (1.37மீட்டர்) குறைந்தது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கண்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடு இப்போது கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், அவரது உயரம் 5 அடி (1.52மீட்டர்) வரை உயர்ந்துள்ளது.

கேரோலின் கிங், “வாழ வேண்டுமென்ற எண்ணத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள்” என்பதே தனது கதை மூலம் பகிரும் செய்தி என்று பிபிசியிடம் கூறினார். மேலும், “மனித உடல் அற்புதமானது” என்றார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிரிட்டிஷ் கல்லீரல் அறக்கட்டளையின் கூற்றுப்படி, பிரிட்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் அரிய கல்லீரல் நோய்களுடன் வாழ்கின்றனர். அவற்றில் பல, போதிய விழிப்புணர்வு இல்லாதது, வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி போன்ற காரணங்களால் கண்டறியப்படுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.

பிரிட்டிஷ் கல்லீரல் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி பமீலா ஹீலி, “நோய்கள் குறைவாகவே இருக்கலாம்” என்றாலும், அவை “வாழ்க்கையையே மாற்றக்கூடிய” தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

மேலும், “பெரும்பாலும், விழிப்புணர்வு இல்லாதது தாமதமான நோயறிதலுக்கும் சிறப்பு சிகிச்சைகள் சமமாகக் கிடைக்காமல் போவதற்கும் வழிவகுப்பதாக” அவர் கூறினார்.

“அரிதான கல்லீரல் நோயுடன் வாழும் யாரும் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய, நமக்கு அதிகமான புரிதல், ஆரம்பக்கால நோயறிதல் மற்றும் ஆராய்ச்சிக்கான நீடித்த முதலீடு தேவை.”

உலகளவில் அரிதான நோயுடன் வாழும் 300 மில்லியன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள் அரிய நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU